செவ்வாய், 3 ஜூலை, 2012

சில நேரங்களில் சில நினைவுகள்



"ஏல ராமகிருஷ்ணன் பெப்ஸி வச்சிருக்கானாம்ல. தினமும் மத்யானம் வ்ளாட போம்போது பெப்சி குடிச்சிட்டு தாம்ல வாரான்". சங்கர் ரிப்போர்ட் செய்வது போல் ஒப்பித்தான்.
"பெப்ஸினா என்னல" - இது கணேசன். அவனும் எங்க செட் தான்.
"யோல் டொரினோ மாரி கலர்ல‌. புதுசா வந்திருக்காம் வெளிநாட்டுல இருந்து" என்றான் சங்கர்.
"பெப்ஸி அவனே தயாரிக்கானாம்ல" கண்ணனின் வார்த்தைகளில் ஆச்சர்யமும் குழப்பமும் கலந்து இருந்தது.
"கோட்டி மாரி பேசாதல. அவனே எப்படில பெப்ஸி தயாரிக்க முடியும்" என்றேன் நான்.
"டெய்லி தண்ணி பாட்டில்ல மதியம் பெப்ஸி இருக்குல. ஆனா காலைல வெறும் தண்ணி தான் வெச்சிருக்கான். எப்படில பெப்ஸினு கேட்டதுக்கு தான் நானே தயாரிக்கேம்லனான்".

"யோல் அவன் ரொம்ப பந்தா பண்ணுதான். அவன் எப்படி பெப்ஸி தயாரிக்கான்னு கண்டுபிடிப்போம்". ரகசிய திட்டம் தீட்டினோம் எங்கள் கேங்கில். இதுவரை யாருமே பெப்ஸி குடித்திராததால் ராமகிருஷ்ணனின் பானத்தை பெப்ஸி என்றே நம்பினோம்.

------ ----------- ------------- --------------- ------------------- ------------------ ---------------------


"சார் விழுப்புரம் எப்போ வரும்?"  நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெவேலியில் இருந்து கிளம்பி 10 நிமிடங்கள் இருக்கும்.

"சரியா தெரில சார். அதிகாலைல வரும் . நீங்க வேற யார்கிட்டயாவது கேளுங்க". மறுபடியும் ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டேன்.


தனிமையான ரயில் பயணங்கள் மிகவும் இனிமையானவை. ஆனால் இந்த தடவை தனிமை சுகமில்லை. சுமை தான். காரணம் அவள். பர்ஸில் இருந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன். இதுவரை 100 தடவைக்கு மேலேயாவது அதைப் படித்திருப்பேன்.

டேய் புருஷா,
இன்னையோட நீ என்னை விட்டு டெல்லி போய் 3 நாள் ஆச்சு. என்னை தனியா விட்டிட்டு போய்ட்டேல :( பாரு வீட்டுக்கு வந்து உன்ட பேசமாட்டேன் :(

ஆஹா இம்சை ஒழிஞ்சதுனு சந்தோஷப்படுவியே, தெரியும்டா உன்னை பத்தி. கேடி.

டேய் நான் என்ன தான் இங்க அப்பா, அம்மா கூட இருந்தாலும் ரொம்ப தனியா இருக்கற மாதிரி இருக்கு. சீக்கிரம் அங்க வேலையை முடிச்சிட்டு வந்திடு. செல்லம்ல :)

உனக்கு ஒரு நல்ல செய்தி கெட்ட செய்தி :)

இங்க கோயில்ல ஒரு விசேஷம்னு நான் புடவை கட்டினேனே. அதுவும் உனக்குப் பிடிச்ச கலர்ல. தலை நிறைய பூ வச்சிருந்தேன். இதான் நல்ல செய்தி. உனக்கு தான் நான் சேலை கட்டினா ரொம்ப பிடிக்குமே. பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கேன்னு அம்மா சொன்னங்களே :)

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுடினு தான மனசுக்குள்ள நினைச்ச. எப்புடி கண்டுபிடிச்சேன். ஒத்துக்க மாட்டியே. தெரியும்டா. அதான் உனக்கு கெட்ட செய்தி.

போட்டோ எடுத்திருக்கேன் நான் புடவைல இருக்கறத. ஆனா உனக்கு காண்பிக்க மாட்டேனே.

அடுத்த தடவை வேலை விஷயமா வெளியூர் போன என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லு. நான் காண்பிக்கறேன். டீலா? :)

சீக்கிரம் வந்திடுடா. நம்ம வீட்டுக்கே போய்டலாம். 2 புது டிஷ் கத்துருக்கேன் உனக்கு சமைச்சு போட. உடனே நான் என்ன  experiment எலியானு சீன் போடாத. அப்புறம் எதுவும் செய்ய மாட்டேன் :)


-------- ------------- ------------------- ------------------- ---------------- ----------


"சார் விழுப்புரம் வந்திருச்சா", தூக்கத்தில் இருந்து எழுந்து கேட்டான்.
"இல்ல சார். இப்போ தான் மதுரை தாண்டி 1 மணி நேரம் ஆகுது".

"இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்"?

"தெரில சார்".

"வந்தா கொஞ்சம் சொல்றீங்களா", இந்த தடவை வெட்கத்தை விட்டே கேட்டு விட்டார்.

"சரி சார்".

"சார் கொஞ்சம் லைட்ட அணைச்சிருங்களேன்."

மறுபடியும் லெட்டரைத் தொடர மனமில்லை. லைட்டை அணைத்தேன். இவ்ளோ பாசமா இருக்கா, அப்புறம் ஏன் கோவிச்சுகிட்டு போனா.
சண்டை எப்போது எதில் ஆரம்பித்தது. இந்த தடவையும் நினைவில்லை. கடைசியாக வியாழக்கிழமை  பேசின‌து. இப்போது சித்தி வீட்டில் இருக்கா.

நான் ஏன் அவள பத்தி யோசிக்கனும்? அவளே என்னைப் பத்தி யோசிக்கல. இனிமேல் அவள பத்தி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ண கூடாது. அவளுக்கு தோணினா அவளா வந்து பேசட்டும். நானும் விட்டுக் கொடுக்கறதா இல்ல..

வேற எதை பத்தியாவது யோசிப்போம். கடைசியா எத பத்தி யோசிச்சோம்....
.....
....
....
---------------------------------------------------------------------------------------------

"இன்னைக்கு மத்தியானம் நாம லேட்டா சாப்பிடுவோம்ல. மறஞ்சிருந்து அவன் பின்னாடியே போய் என்ன பண்ணுதான்னு பாப்போம்". திட்டத்தை நான் சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.

மதியம் பெல் அடித்ததும் ராமகிருஷ்ணன் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு தனியாக போனான்.
சுத்தி முத்தி பாத்து விட்டு, நேராக மிட்டாய் பாட்டியிடம் போனான்.

"சாப்பிடதுக்கு முன்னாலயே ஏம்ல அவன் அங்க நிக்கான்"?

"சத்தம் போடதல அவன் காதுல கேட்டுற போவுது".

"ஆச்சி 10 பாக்கு முட்டாய் கொடுங்க" - ராமகிருஷ்ணன் 50 பைசாவை நீட்டினான்.

யாரும் பார்க்கும் முன்னரே 10 பாக்கு முட்டாயையும் பாட்டிலில் போட்டு குலுக்கினான். பின் யாருக்கும் தெரியாதவாறு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினான்.
மிட்டாய் கரைந்து தண்ணீர் சிவப்பு நிறமாக காட்சியளிக்க துவங்கியது.

"பாக்கு முட்டாய தண்ணில போட்டு பெப்ஸினு ஊர ஏமாத்துதாம்ல, இன்னைக்கி எல்லார்ட்டயும் சொல்லிருவோம்". எங்கள் கேங்க் ஓடியது.

விளையாடிவிட்டு பந்தா பண்ணுவதற்கென்றே பெப்ஸியை எடுத்தான். உடனே நான் பெஞ்ச் மீதேறி, "பாக்கு முட்டாய தண்ணில போட்டு பெப்ஸினு ஏமாத்துதாம்ல, ஏமாத்து பையன் ராமா, ஏமாத்து பையன் ராமா". கூடவே எங்கள கேங்கும் கோரஸ் பாடியது.

"ஏமாத்து பையன் ராமா , ஏமாத்து பையன் ராமா"

----------------------------------------------------------------------------------------------


சார் விழுப்புரம் வந்திருச்சா?

டேய்ய்ய்ய்ய்ய்!!! வெளியில் கத்த முடியவில்லை. இப்போ தான் திருச்சி வந்திருக்கு. தூங்குங்க.

மெசேஜ் வந்ததற்கு அறிகுறியாக வைப்ரேட் ஆகியது செல்போன். ஒரு வேளை அவளாக இருக்குமோ. அவளா தான் இருக்கும். எவ்ளோ பாசமா இருப்பா என் மேல. சாரி கேட்க மெஸேஜ் பண்ணிருப்பாளா இல்ல மிஸ் யூ அனுப்பிருப்பாளா

ஆர்வத்துடன் திற‌ந்து பார்த்தால் லவ் பெயிலியர் நண்பனிடம் இருந்து வழக்கமான ஃபீலிங் மெசேஜ். ஏமாற்றம் - கடுப்பு facebook, twitter, cinema song  எங்க பாத்தாலும் இவனுக தொல்ல தாங்க முடியல.
அவ மெஸேஜ் அனுப்பினா என்ன அனுப்பலேனா என்ன, நான் எதுக்கு இப்போ அவள பத்தி யோசிச்சேன். அவளே மெசேஜ் பண்ணிருந்தாலும் ரிப்ளை பண்ண கூடாது.

முதல்ல அவள பத்தியே யோசிக்க கூடாது. அவளா வந்து பேசற வரைக்கும் அவள பத்தியே நினைக்க கூடாது.


------------------------------------------------------------------------------------

"ராமகிருஷ்ணன் ரொம்ப அழுதாம்ல. உன்கூட சண்டையாம். எதுக்குல அப்படி பண்ண‌"

"போல, அவன் நடிக்கான். அவன் பேசலேனா எனக்கு என்ன."

2 ஆம் வகுப்பில் நடந்த சம்பவம். அதன் பிறகு 4 ஆம் வகுப்பு வரை ராமகிருஷ்ணன் என்னிடம் பேசவில்லை. நான் வேறு ஸ்கூலுக்கு வந்து விட்டேன்.

இப்போ அந்த பெப்ஸி ராமகிருஷ்ணனும் ஏதோ ஒரு இடத்துல சாப்ட்வேர் இஞ்சினியராகத்தான் இருப்பான்.

--------------------------------------------------------------------------------------

"சார் விழுப்புரம் வந்திடுச்சா"?

இந்த தடவை நான் பதிலளிக்கும் முன்பே, சென்னை எக்மோரே வந்திடுச்சு சார் என்றார் இன்னொருவர்.

அந்த ஆள் என்னை பரிதாபமாக பார்த்தான். நான் எவ்வளவு வேகமாக பையை எடுத்து கீழே இறங்க முடியுமோ, அவ்வளவு வேகமாக இறங்கி கொண்டிருந்தேன்.

இனிமேல் பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் பிடிச்சு விழுப்புரம் போகனும். சார் பஸ் ஸ்டாண்ட்க்கு எப்படி போகனும்? புலம்பிக் கொண்டிருந்த அவர் இந்த தடவை என்னிடம் கேட்க வில்லை.

ஒரு சாரியாவது கேட்டிருக்கலாமோ? சரி விடு, தப்பு அந்த ஆள் மேல தான். அவர் தான விழுப்புரம் போகனும், நானா போகனும். எப்போ தூங்கினேன்னே தெரிலயே நைட்.

கால் வருவதன் அறிகுறியாக செல்போன் வைப்ரேட் செய்ய ஆரம்பித்தது.

ஒரு வேளை அவளா இருக்குமோ?


(படமளித்து உதவிய அபினவ்க்கு நன்றி)

வியாழன், 22 மார்ச், 2012

கூ(ஊ)டல்




எதுக்கு இப்போ தேவை இல்லாம கத்துற மல்லிகா?
யாரு, நான் கத்துறேனா? நான் பேசினாலே உனக்கு கத்துற மாதிரி தான இருக்கும்.
மறுபடியும் இன்னொரு சண்டை வேணாம். நாளைக்கு காலைல பேசிக்கலாம் மல்லிகா.
இங்க பாரு மஹா, நான் சண்டைலாம் போடல,  நார்மலாத்தான் பேசறேன், நீ தான் பிரச்சனைய பெரிசு பண்ற.
சரி பெரிசு பண்ணல. நான் போய் தூங்கறேன் போதுமா. வார்த்தைகள் வாக்குவாதமாய் மாறுவதற்குள் முடிக்கப் பார்த்தான் மஹாதேவன்.
ஏன் இப்படி ஹார்ஷா பேசற, கொஞ்சமாவது என்னை மதிக்கறயா, பொண்ணுங்கனாலே ஆம்பிளைங்களுக்கு இளக்காரம் தானே
ஆமா உன்னை மதிக்காம தான் பெண்கள் தினம் அன்னைக்கு உனக்கு புடவை வாங்கி கொடுத்தேனாக்கும்.
ஒண்ணு செஞ்சா அதையேதான் சொல்லிக்கிட்டு இருப்பீங்க இந்த ஆம்பிளைங்க,அது என்ன பெண்கள் தினம்னு நீங்க எங்களுக்கு ஒதுக்கறது, பெண்கள் தினம்ங்கறதே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான்.
அம்மா தாயே என்னை விட்டுரு, நாளைக்கு நான் ஆபீஸ் போகனும், தூங்கறேன். கடுப்புடன் தூங்கப் போனான் மஹாதேவன். மல்லிகாவும் கோபத்தில் படுத்திருந்தாள். எதற்காக சண்டை ஆரம்பித்தது என்று இருவருக்குமே நினைவில் இல்லை.

புரண்டு புரண்டு படுத்தாலும் மல்லிகாவிற்கு தூக்கம் வரவில்லை. கல்யாணத்திற்கு முந்தைய காதலிலும் தான் சண்டை போட்டோம். ஆனா அது எவ்வளோ நல்லா இருந்தது. இப்போ ஏன் இவ்ளோ வித்தியாசமா இருக்கு, மஹா மாறிட்டானா, இல்லை எல்லா ஆம்பிளைங்களும் இப்படியா?
அவனுக்காக நான் எவ்வளோ செய்யறேன். ஏன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குறான், குடும்பத்துக்காக எவ்வளோ கஷ்டப்பட்டு உழைக்கிறேன். இவனை நல்லா பாத்துக்கனும், இவனுக்கு நல்லா சமைச்சு போடனும்னு தானே நான் வேலைக்கு கூட போகலை. வீட்ல எல்லார் எதிர்ப்பையும் மீறி கட்டினா இவனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நின்னேன். போன மாசம் உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல இருந்தப்போ எப்படி பாத்துக்கிட்டேன். கொஞ்சமாவது யோசிச்சு பாக்கறனா. எப்போ பாத்தாலும் சண்டை போடுற மாதிரியே பேசுறான். மல்லிகாவின் தலையணை நனைந்திருந்தது. எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. விழித்து பார்த்தால் மணி 6.45 காட்டியது. மஹா அப்போது தான் எழுந்திருந்திருக்க வேண்டும். பல் துலக்கிக் கொண்டிருந்தான்.

7.30 மணிக்குள் ரவை உப்புமா செய்து வைத்திருந்தாள். எதுவுமே சொல்லாமல் சாப்பிடாமல் 8 மணிக்கு ஆபீஸ் கிளம்பி விட்டான் மஹாதேவன்.

எவ்வளவு திமிரு இவனுக்கு கோவம் கோவமாய் வந்தது மல்லிகாவிற்கு.

மஹா ஆபீஸ் போய் சேர 9 ஆகி இருந்தது. அன்று அவனுக்கு வேலை அவ்வளவாக இல்லை ஆபீஸில். வேறு வேலை எதுவும் இல்லாத சமயங்களில் தான் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க ஆரம்பிப்பார்கள் ஆண்கள் பலர்.

எவ்வளோ திமிர் அவளுக்கு, எவ்வளோ கஷ்டப்பட்டு உழைக்கிறேன் குடும்பத்திற்காக, கொஞ்சமாவது மதிக்கிறாளா. எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்கா. ஆபீஸ்ல தான் டென்ஷன், வீட்லயாவது கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாம்னா முடியுதா?

கல்யாணத்திற்கு முந்தைய காதலிலும் தான் சண்டை போடுவோம், ஆனா அது எவ்வளோ நல்லா இருக்கும்.  கல்யாணத்துக்கு அப்புறம் மல்லிகா மாறிட்டாளா, இல்லை எல்லா பெண்களும் இப்படித்தானா.  வீட்ல எவ்வளோ எதிர்ப்பையும் மீறி இவளை கட்டிக்கிட்டேன், கொஞ்சமாவது யோசிக்கிறளா. நிச்சயத்தன்மை இல்லாத வரைக்கும் தான் ஒரு உறவு நல்லா இருக்குமா?


இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே மதிய உணவு இடைவேள வந்தது. ஆபீஸ் கேபிடேரியாவிற்கு கிளம்பினான் மஹா.

வீட்டில் மல்லிகாவிற்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. திருமணத்திற்கு முன் அவன் அவளுக்கு  எழுதிய கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தாள். இருவருக்கு உள்ள மிக சில ஒற்றுமையான விஷயங்களில் இதுவும் ஒன்று. எப்போது சண்டை வந்தாலும் ஒருவர் மற்றவருக்கு எழுதிய கடிதங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். உங்களுக்கும் காதலனோ காதலியோ இருந்தால் போனில் பேசுவதை விட கடிதம் எழுதிப் பாருங்கள். சில வருடங்கள் கழித்துப் படிக்க நன்றாக இருக்கும். (மனைவிக்கும் கடிதம் எழுதலாம் அது உங்கள் மனைவியாய் இருந்தால் :)). கடிதம் படிக்க படிக்க மல்லிகாவின் கோவம் தணிந்தது.



நான் நேத்து அப்படி கோவமா பேசி இருக்க கூடாது. பாவம் மஹா, நமக்காகத்தானே கஷ்டப்பட்டு உழைக்கிறான். ஆபீஸ் டென்ஷன்ல வீட்டுக்கு வர்றான். நாமளும் ஏன் அவன்கிட்ட சண்டை போடுற மாதிரி பேசனும். காலைல வேற சாப்பிடாம கிளம்பிட்டான். பசி தாங்க மாட்டான்.என் தப்பு தான். வந்ததும் சாரி கேட்கனும். இனிமேல் சண்டையே போடக்கூடது. சாயந்திரம் அவன் வரும் போது அவனுக்கு பிடிச்ச ப்ளூ கலர் புடவை கட்டி, அவனுக்குப் பிடிச்ச சின்ன செயின் போட்டுக்கனும். முடிஞ்சா கோவிலுக்கு போவோம். நைட் டின்னர்க்கு அவனுக்குப் பிடிச்ச இடியாப்பம் பண்ணுவோம். யோசித்துக் கொண்டே மணியைப் பார்த்தாள், மணி 3.30 காட்டியது. ஐயயோ லேட் ஆயிடுச்சு, கிளம்பனும் எனப் பறந்தாள் மல்லிகா பழைய கோவம் அனைத்தையும் மறந்தவளாக.

சாப்பிட்டு விட்டு கேபினுக்கு வந்தான் மஹாதேவன். எப்போதும் அவன் ஷெல்பில் மல்லிகா அவனுக்கு எழுதிய கடிதங்கள் சில இருக்கும். எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.மஹா யோசிக்க ஆரம்பித்தான். நாள் பூரா வீட்ல தனியா இருக்கறா. எனக்காக வாய்க்கு ருசியா சமைச்சு போடறா. கொஞ்ச நேரம் தான் அவ கூட ஒரு நாள்ல நேரம் செலவழிக்கறேன். அதுல கூட நான் ஏன் கோவப்படனும்.காலைல வேற சாப்பிடாம வந்துட்டேன். பாவம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அவளை சந்தோஷமா வச்சிக்கனும்.போய்ட்டு அவகிட்ட சாரி கேட்கனும். இன்னைக்கு சீக்கிரமே கிளம்பிடலாம். போகும் போது புக் வாங்கிட்டு போகனும்.அப்படியே அவளை வெளில எங்கேயாவது கூட்டிட்டிப் போகனும்.

சண்டை முடிந்து சமாதானம் ஆகும் போது ஒரு புக் வாங்கி தரனும். இது அவர்களுக்குள் இருக்கும் எழுதப்படாத விதி. வீட்டில் ஒரு லைப்ரரி அளவுக்கு புத்தகங்கள் இருக்கு இப்போ அவர்களிடம். மணி 4.30 காட்டியது. கிளம்பினான் மஹா.

மஹா சீக்கிரமே வந்தது மல்லிகாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதை விட ஆச்சர்யம் மஹாவுக்கு மல்லிகா கட்டியிருந்த ப்ளூ புடவை. கழுத்தில் தொங்கிய சின்ன செயின் அவளை இன்னும் அழகாக காட்டியது. இருவருக்குமே சாரி கேட்கனும் என்று தோணியது. ஆனாலும் மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்த ஈகோ தடுத்தது. இருவரும் ஒரே நேரத்தில் சாரி என்றனர் , அன்பு ஈகோவை சுத்தமாகத் துடைத்துப் போட்டது. சிரித்துக் கொண்டே மல்லிகா அவன் தோளில் சாய்ந்தாள். காலேஜ் படிக்கிறப்போ அடிக்கடி போவோமே அந்த பிள்ளையார் கோவிலுக்குப் போலாமா? மஹா கேட்டான்.
சந்தோஷமாக தலையசைத்தாள் மல்லிகா.

பழைய நினைவுகளை அசை போட்டபடி வந்தனர். .Life is Short d மல்லிகா, இருக்கற இந்த சின்ன gapலயாவது நாம சந்தோஷமா இருப்போமே. இனிமேல் நமக்குள்ள சண்டை வேணாம். அதை ஆமோதிக்கும் விதமாக புன்னகைத்தாள் மல்லிகா.

இன்னைக்கு நைட் உனக்குப் பிடிச்ச இடியாப்பம்,
 Soo sweet d நீ. இப்படியே உன்னை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குடி
Sight அடிச்சதெல்லாம் போதும், முதல்ல சாப்பிடுங்க சார்
ஊட்டி விடு சாப்பிடறேன்
ஆசைய பார்றா. இருவரும் ஊட்டி விட்டு பழைய கதைகளை பேசி முடிக்க 10 மணி ஆகி இருந்தது.

ரொம்ப தூக்கம் வருதுடா. நான் படுக்கறேன்.
எனக்கும் தான், டி வாசல் கதவு பூட்டினேனானு மறந்துட்டேன். போய் பாத்திட்டு வந்திடேன்.
செம டையர்ட் டா, படுத்திட்டேன். நீயே போய் பாத்திடேன்.
என்னால முடியலனு தானே உன்ன சொல்றேன் மல்லிகா. போயேன்.
வீட்ல தினமும் எல்லா வேலையும் நான் தானே செய்யறேன்.  கதவு தானே, நீயே பூட்டிடேன்
நான் மட்டும் என்ன ஆபீஸ்ல சும்மாவா இருக்கேன். சின்ன வேலை தானே. செஞ்சா என்னவாம்?
ஏன் மஹா இப்படி என்னைப் படுத்துற, குரலை உயர்த்தினாள் மல்லிகா,

எதுக்கு இப்போ தேவை இல்லாம கத்துற மல்லிகா?
யாரு, நான் கத்துறேனா? நான் பேசினாலே உனக்கு கத்துற மாதிரி தான இருக்கும்.
மறுபடியும் இன்னொரு சண்டை வேணாம். நாளைக்கு காலைல பேசிக்கலாம் மல்லிகா.
இங்க பாரு மஹா, நான் சண்டைலாம் போடல,  நார்மலாத்தான் பேசறேன், நீ தான் பிரச்சனைய பெரிசு பண்ற.................................................................................................


மீண்டும் முதல் பத்தியில் இருந்து கதையைப் படிக்கவும்.

(சுஜாதா எழுதிய 'மன்னிக்கவும் இது கதையின் ஆரம்பம் அல்ல' என்ற cyclic கதையை உள்ளூக்கமாகக் கொண்டு, என்னாலான ஒரு சாதாரண சிறிய முயற்சி. படித்து பின்னூட்டம் அளித்தால் மகிழ்வேன் )

திங்கள், 6 பிப்ரவரி, 2012

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்



"எழுந்திரு மஹா, மணி 7 ஆயிடுச்சு."
 மல்லிகா படுக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தாள். நான் மஹாதேவன், மல்லிகாவின் நண்பன், காதலன், கணவன்...இன்னும் எல்லாம்.
"ஒரே ஒரு முத்தம் கொடு, எழுந்திருக்கேன். "
"ஆமா சாருக்கு இளமை திரும்புது, முத்தம்லாம் கேட்குறார். இன்னையோட நமக்கு கல்யாணம் ஆகி 32 வருஷம் ஆகுது. தெரியும்ல,சீக்கிரம் எழுந்திரு, இன்னைக்கு ஆசிரமத்துக்கு போகணும் நியாபகம் இருக்குல்ல. "
"வயசுங்கறது உடம்புக்கு தான்டி, மனசுக்கு இல்ல.சரி முத்தம்லாம் வேண்டாம் என்னை ஒரு தடவ கொஞ்சு, நான் எழுந்திருக்கேன். "

எனக்கு மல்லிகா என்னை கொஞ்சுவது ரொம்ப பிடிக்கும். ஆனா சரியான கல்நெஞ்சக்காரி, அவ்வளவு லேசில் கொஞ்சிவிட மாட்டாள். நான் எதிர்பார்க்காத சமயம் திடீரென்று கொஞ்சுவாள். இந்த 36 வருஷத்தில் (காதலித்த 4 வருஷங்களையும் சேர்த்த்து) இந்த கொஞ்சல் விளையாட்டு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இருவருக்குமே அது பிடித்தும் இருந்தது.

"கொஞ்சலாம் முடியாது. நீ தூங்கிக்கிட்டே இரு, நான் ஆசிரமத்திற்கு போறேன். "
சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

மல்லிகா, சின்ன வயதிலிருந்தே தெரியும். பக்கத்து வீடு தான். பி.யூ.சி முடித்து விட்டு ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். என்னதான் சின்ன வயதிலிருந்தே தெரியும் என்றாலும் எங்களுக்குள் ஒத்து போகாது. நாங்கள் இருவரும் அப்போதைய சோவியத்- அமெரிக்கா போலத்தான். ஒரே வகுப்பு, அடுத்தடுத்த வரிசை எண் கல்லூரியில். கேட்கவா வேணும். எப்போதும் எங்களுக்குள் பிரச்சனை தான். ஆனால் இந்த சண்டையிலும் மெலிதான ஒரு நட்பு இருந்தது. எங்கள் இருவருக்கும் பிடித்த பொதுவான ஒரே விஷயம் தமிழ் மட்டும் தான். இருவருக்குமே அதன் மேல் ஒரு ஈர்ப்பு. தமிழில் கூட எங்கள் ரசனை வேறு வேறு. அவள் தீவிர இடதுசாரி. பெரும்பாலான நேரங்களில் கம்யூனிஸ்ட் புத்தகங்கள் தான் படிப்பாள்.  ஆம் என் மல்லிகா வித்தியாசமானவள். 70 களில் ஒரு பெண் கல்லூரிக்கு வருவதே அரிது, அதிலும் இவள் இடதுசாரி, அதனினும் அரிது. எனக்கு புதுமைப்பித்தனும் மௌனியுமே போதுமானதாய் இருந்தது வாசிப்பதற்கு. இப்பொழுதும் கூட சீனா செய்வதெல்லாம் சரி என்று வாதாடுபவள்.

"மகா, ப்ரீத்தி பேசறா, கல்யாண வாழ்த்து சொல்றா."
 போனுடன் அருகில் வந்தாள். நான் படுக்கையில் இருந்து எழுந்திருந்தேன். ப்ரீத்தி என் மகள், மல்லிகாவுக்கு உயிர். அவளுடனும் பேரனுடனும் அரை மணி நேரம் கதைத்து விட்டு எழுந்தேன்.
"டி என்னோட துண்டு எங்க? காணோம்"
"எத்தனை தடவ சொல்றது டி சொல்லி கூப்பிடாத, இனிமேல் கூப்பிட்ட உதை விழும்"
"டி க்கு அர்த்தம் டியர், டார்லிங் தெரியுமா, வெறும் பெண்பாலை குறிப்பிடற‌து மட்டும் இல்ல"
"ஆமா இதுக்கு ஒரு விளக்கம் வேற,இந்த வாய் மட்டும் இல்லேனா உன்னை நாய் தூக்கிட்டுப் போய்டும். "கையில் துண்டை திணித்தாள்.

மேலே குறிப்பிட்ட உரையாடல் 32 வருஷ வாழ்க்கையில் பல தடவை நடந்திருக்கிறது.அவளுக்கு நான் அப்படி கூப்பிடுவது பிடிக்கும், ஆனாலும் வெளிக்காட்டுவதில்லை. இது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்பவர்களுக்கு என் பதில், கல்யாணத்திற்க்குப் பிறகும் காதலித்துப்பார் தெரியும் (உன் மனைவியை மட்டும் ;))

"மஹா டிபன் ரெடி, சீக்கிரம் வா, ஏற்கனவே லேட்."
"வந்தாச்சு, மஹாராணி இன்னைக்கு என்ன சமைச்சிருக்கீங்க, பொங்கலா"
சாப்பிட ஆரம்பித்தேன்.
"எப்படி இருக்கு என் பொங்கல்?"
"பொங்கல்ல, 'பொங்' இல்ல ஆனா கல் மட்டும் நிறைய இருக்கு"
"அப்போ ஏன் இன்னும் சாப்பிடுக்கிட்டு இருக்க, கைகழுவ வேண்டியது தானே. என் சாப்பாட குறை சொல்லலேனா பொழுது போகாதே."

நாங்கள் இப்படித்தான்.அவள் சமையலை நான் கேலி பண்ணாத நாளில்லை. அவளும் பொய்க்கோபம் காட்டாத நாளில்லை. என் அம்மா சமையலுக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்தது அவள் சமையல் தான். இது அவளுக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு தடவையாவது அதை என் வாயால் சொல்லி விட வேண்டும் என்று முயன்று கொண்டிருப்பவள். பொய் சண்டைகளும் நிறைய வரும். எல்லா முறையும் இதில் ஜெயிப்பது நான் தான். (பின்குறிப்பு : இதில் மட்டும் தான் ).
"இப்படியே கடைசி வரைக்கும் உன் கூட வாழனும்டி."
"சார் ரொமான்ஸ்லாம் போதும். உன்கூட தான் கடைசி வரைக்கும் இருப்பேன். முதல்ல‌ கிளம்புங்க."

திடீரென்று கதவு திறக்கும் சத்தம்.
"மஹா யாரோ வந்திருக்காங்க, யாருனு பாரு, "
உள்ளேயிருந்து அவள் குரல்.எட்டிப்பார்த்தேன்,
"உன் தம்பி தான்டி வந்திருக்கான்."
கைகழுவி விட்டு எழுந்தேன்.
"வா துரை, சாப்பிடுறியா"
"இல்லை இருக்கட்டும் அத்தான்."
"சொல்லு என்ன விஷயம்"
"மல்லிகாவுக்கு 16ஆம் நாள் காரியம் அடுத்த வாரம், அதைப்பத்தி பேசலாம்னு......" என்று இழுத்தான்.
நான் உள்ளே மல்லிகாவைப் பார்த்தேன், எனக்கு மட்டும் கேட்கும் குரலில் அவள் என்னைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.








திங்கள், 16 ஜனவரி, 2012

எல்லாம் 'என்' நேரம் பகுதி - 3


இதுவரை : விதிப்புத்தகம் என் கையில் கிடைக்கிறது, ஒரே நாளில் முடியப்போகும் என் விதியை எதிர்கொண்டு அந்த நாளைக் கடக்கிறேன். விதியை வென்றுவிட்டதாக நினைக்கிறேன்.

இனி :
மரணத்தை வென்ற மகிழ்ச்சியில் டேபிளுக்கு அடியில் இருந்து விதிப்புத்தகத்தோடு வெளியில் வந்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன். ஜூலை 13 03.55 என்று காட்டியது. இப்போது மனதில் இன்னொரு சந்தேகம். மரணத்தை வென்று விட்டேன், ஆனால் என் இளமை இப்படியே இருக்குமா? ஆசை யாரை விட்டது ? வருங்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஃபேர் அண்ட் லவ்லி கம்பெனிக்காரர்கள் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்காமலா போய்விடுவார்கள் என என் மனதை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
சாவை வென்ற மிதப்பில் கத்தி குதிக்க வேண்டும் போல இருந்தது. "நான் வென்றுட்டன் டாக்டர்" என்று தெனாலி கடைசி சீனில் கமல் கத்துவாரே அதைப் போல.


கையில் புத்தகத்தோடு, மரணத்தை வென்ற முதல் மனிதன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்று குதித்தேன்.அம்மாஆஆஆ என்ற அலறல். என் சத்தம் தான். குதித்த கால்கள் மார்பிள் தரையில் சிந்தி இருந்த தண்ணீரில் பட்டு வழுக்கி எனது நிலை தடுமாறியது. பின்னந்தலை டேபிளின் கூரான முனையில் மோதியது.கண்கள் சொருக ஆரம்பித்தது. என் பின்னந்தலையில் ரத்தம் வழிந்தோடுவதை உணர முடிந்தது . கத்தக்கூட முடியவில்லை. ஆம் நான் சாகப்போகிறேன்.அதுவும் இது சாதரணமான சாவு இல்லை. மிகவும் கேவலமான சாவு. ஆங்கிலப் படங்களில் கூட இதைப் போல வந்திருக்காது.  மரணத்தை வென்ற மனிதன் நான் இல்லை. வேதனை, சாவு பயம்,  இதையெல்லாம் தாண்டி கோபம். அந்த விதிப்புத்தகத்தின் மீது கோபம். அதுவும் மனிதனைப் போல என்னை ஏமாற்றி விட்டிருந்தது.
அதிகமான வலியில்லாமல் என் உயிர் 2 நிமிடங்களில் பிரிந்தது. இதோ என் உடலை என்னால் பார்க்க முடிகிறது. பின்னந்தலை முழுதும் இரத்தம்,காலுக்கு அடியில் தண்ணீர். அழுகையாக வந்தது எனக்கு, ஆனால் அழ முடியவில்லை. நான் மேலே மேலே பறப்பதைப்போல உணர்ந்தேன்.
அதோ எமலோகம் என் கண்ணுக்குத் தெரிகிறது.

"எமலோகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது"

என்று சுத்தத் தமிழில் எழுதி இருந்தது.
ஒருவேளை இங்கேயும் வரிவிலக்கு ஏதேனும் உண்டு போல என நினைத்தேன். இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, என்னை நானே நொந்து கொண்டேன்.

ஆனால் கோபம் இன்னும் அடங்கவில்லை.என்னை அந்த விதிப்புத்தகம் நன்றாக ஏமாற்றி விட்டது. இதைப்பற்றி எமன் இருந்தால் கண்டிப்பாக சண்டை போட வேண்டும் என மனதிற்குள் தீர்மானம் போட்டுக்கொண்டேன்.
நான் நினைப்பதைப் போல எமன் கவுண்டமணி போலவும் இல்லை. அங்கே எருமையும் இல்லை.

ஒரே ஒரு ஒளி மட்டுமே தெரிந்தது. வா மானுடா என்று அந்த ஒளி அழைத்தது.என் பெயர் மானுடன் இல்லை என்று என்று கோபத்தோடு என் பெயரைச் சொன்னேன்.அதற்கு அந்த ஒளி "பெயர் என்பது உடலுக்குத் தானே தவிர உயிருக்கு இல்லை" என்றது.இந்த வியாக்கியானம்லாம் இருக்கட்டும். என்னை ஏன் ஏமாற்றினீர்கள் என்று கத்தினேன். எதற்காக அந்த விதிப்புத்தகத்தை எனக்கு காண்பித்து ஜூலை 12 2011 உடன் விதி முற்றியது என் என்னை நம்ப வைத்து ஜூலை 13 அன்று என்னைக் கொன்றீர்கள்? நீங்களும் மனிதனைப் போல..இல்லை இல்லை மனிதனை விட மோசமானவர்கள். என்னை ஏமாற்றி விட்டீர்கள்,You Cheat!! என்று கத்தினேன்.

அந்த ஒளி பேசியது, அந்த புத்தகம் உன் கையில் கிடைக்க வேண்டும் என்பது விதி, அதை நீ படிக்க வேண்டும் என்பது விதி. அந்த புத்தகம் கிடைத்த அன்றே உன் உயிர் உடலை விட்டுப் பிரிய வேண்டும் என்பதும் விதி. எல்லாமே விதிப்படி தானே நடந்துள்ளது என்றது.
இல்லை பொய்!!! நான் இறந்தது  ஜூலை 13 அன்று அதிகாலை 4 மணி அளவில். எனவே உங்கள் விதிப்புத்தகம் தப்பு, என்னை மீண்டும் வாழ பூமிக்கு அனுப்ப வேண்டும் என்றேன்.

அந்த ஒளி சிரித்துக்கொண்டே "மானுடா! உன் உயிர் உடலைப் பிரிந்தது ஜூலை 13 அதிகாலை 4 மணி அளவில், இன்னும் சரியாக சொல்லப் போனால் 3 மணி 59 நிமிடங்கள் இந்திய நேரப்படி. அதாவது உன் நேரப்படி. IST(Indian Standard Time) என்று சொல்லலாம். இங்கு நாங்கள் பின்பற்றுவது எமலோக நேரம். அதாவது YST (Yamalogam Standard Time) என்று சொல்லலாம். இரண்டிற்கும் 4 மணி நேர வித்தியாசம். எனவே உன் உயிர் உடலை விட்டு பிரிந்த நேரம் எமலோக நேரப்படி ஜூலை 12 இரவு 11:59 க்கு. எனவே விதிப்புத்தகம் சரிதான்" என்றது.

எனக்கு இன்னொரு முறை செத்து விடலாம் போலத்தோன்றியது

பின் குறிப்பு :
இந்த கதை US மற்றும் UK Clients யிடம் சிக்கி அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து IT உள்ளங்களுக்கும் சமர்ப்பணம்.
கதையின் முடிவைப் படித்து விட்டு யாரும் என்னைத் தேடி அலைய வேண்டாம்.
கமெண்டுகளில் கண்ணியமான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தவும்.  :)