திங்கள், 16 ஜனவரி, 2012

எல்லாம் 'என்' நேரம் பகுதி - 3


இதுவரை : விதிப்புத்தகம் என் கையில் கிடைக்கிறது, ஒரே நாளில் முடியப்போகும் என் விதியை எதிர்கொண்டு அந்த நாளைக் கடக்கிறேன். விதியை வென்றுவிட்டதாக நினைக்கிறேன்.

இனி :
மரணத்தை வென்ற மகிழ்ச்சியில் டேபிளுக்கு அடியில் இருந்து விதிப்புத்தகத்தோடு வெளியில் வந்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன். ஜூலை 13 03.55 என்று காட்டியது. இப்போது மனதில் இன்னொரு சந்தேகம். மரணத்தை வென்று விட்டேன், ஆனால் என் இளமை இப்படியே இருக்குமா? ஆசை யாரை விட்டது ? வருங்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஃபேர் அண்ட் லவ்லி கம்பெனிக்காரர்கள் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்காமலா போய்விடுவார்கள் என என் மனதை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
சாவை வென்ற மிதப்பில் கத்தி குதிக்க வேண்டும் போல இருந்தது. "நான் வென்றுட்டன் டாக்டர்" என்று தெனாலி கடைசி சீனில் கமல் கத்துவாரே அதைப் போல.


கையில் புத்தகத்தோடு, மரணத்தை வென்ற முதல் மனிதன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்று குதித்தேன்.அம்மாஆஆஆ என்ற அலறல். என் சத்தம் தான். குதித்த கால்கள் மார்பிள் தரையில் சிந்தி இருந்த தண்ணீரில் பட்டு வழுக்கி எனது நிலை தடுமாறியது. பின்னந்தலை டேபிளின் கூரான முனையில் மோதியது.கண்கள் சொருக ஆரம்பித்தது. என் பின்னந்தலையில் ரத்தம் வழிந்தோடுவதை உணர முடிந்தது . கத்தக்கூட முடியவில்லை. ஆம் நான் சாகப்போகிறேன்.அதுவும் இது சாதரணமான சாவு இல்லை. மிகவும் கேவலமான சாவு. ஆங்கிலப் படங்களில் கூட இதைப் போல வந்திருக்காது.  மரணத்தை வென்ற மனிதன் நான் இல்லை. வேதனை, சாவு பயம்,  இதையெல்லாம் தாண்டி கோபம். அந்த விதிப்புத்தகத்தின் மீது கோபம். அதுவும் மனிதனைப் போல என்னை ஏமாற்றி விட்டிருந்தது.
அதிகமான வலியில்லாமல் என் உயிர் 2 நிமிடங்களில் பிரிந்தது. இதோ என் உடலை என்னால் பார்க்க முடிகிறது. பின்னந்தலை முழுதும் இரத்தம்,காலுக்கு அடியில் தண்ணீர். அழுகையாக வந்தது எனக்கு, ஆனால் அழ முடியவில்லை. நான் மேலே மேலே பறப்பதைப்போல உணர்ந்தேன்.
அதோ எமலோகம் என் கண்ணுக்குத் தெரிகிறது.

"எமலோகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது"

என்று சுத்தத் தமிழில் எழுதி இருந்தது.
ஒருவேளை இங்கேயும் வரிவிலக்கு ஏதேனும் உண்டு போல என நினைத்தேன். இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, என்னை நானே நொந்து கொண்டேன்.

ஆனால் கோபம் இன்னும் அடங்கவில்லை.என்னை அந்த விதிப்புத்தகம் நன்றாக ஏமாற்றி விட்டது. இதைப்பற்றி எமன் இருந்தால் கண்டிப்பாக சண்டை போட வேண்டும் என மனதிற்குள் தீர்மானம் போட்டுக்கொண்டேன்.
நான் நினைப்பதைப் போல எமன் கவுண்டமணி போலவும் இல்லை. அங்கே எருமையும் இல்லை.

ஒரே ஒரு ஒளி மட்டுமே தெரிந்தது. வா மானுடா என்று அந்த ஒளி அழைத்தது.என் பெயர் மானுடன் இல்லை என்று என்று கோபத்தோடு என் பெயரைச் சொன்னேன்.அதற்கு அந்த ஒளி "பெயர் என்பது உடலுக்குத் தானே தவிர உயிருக்கு இல்லை" என்றது.இந்த வியாக்கியானம்லாம் இருக்கட்டும். என்னை ஏன் ஏமாற்றினீர்கள் என்று கத்தினேன். எதற்காக அந்த விதிப்புத்தகத்தை எனக்கு காண்பித்து ஜூலை 12 2011 உடன் விதி முற்றியது என் என்னை நம்ப வைத்து ஜூலை 13 அன்று என்னைக் கொன்றீர்கள்? நீங்களும் மனிதனைப் போல..இல்லை இல்லை மனிதனை விட மோசமானவர்கள். என்னை ஏமாற்றி விட்டீர்கள்,You Cheat!! என்று கத்தினேன்.

அந்த ஒளி பேசியது, அந்த புத்தகம் உன் கையில் கிடைக்க வேண்டும் என்பது விதி, அதை நீ படிக்க வேண்டும் என்பது விதி. அந்த புத்தகம் கிடைத்த அன்றே உன் உயிர் உடலை விட்டுப் பிரிய வேண்டும் என்பதும் விதி. எல்லாமே விதிப்படி தானே நடந்துள்ளது என்றது.
இல்லை பொய்!!! நான் இறந்தது  ஜூலை 13 அன்று அதிகாலை 4 மணி அளவில். எனவே உங்கள் விதிப்புத்தகம் தப்பு, என்னை மீண்டும் வாழ பூமிக்கு அனுப்ப வேண்டும் என்றேன்.

அந்த ஒளி சிரித்துக்கொண்டே "மானுடா! உன் உயிர் உடலைப் பிரிந்தது ஜூலை 13 அதிகாலை 4 மணி அளவில், இன்னும் சரியாக சொல்லப் போனால் 3 மணி 59 நிமிடங்கள் இந்திய நேரப்படி. அதாவது உன் நேரப்படி. IST(Indian Standard Time) என்று சொல்லலாம். இங்கு நாங்கள் பின்பற்றுவது எமலோக நேரம். அதாவது YST (Yamalogam Standard Time) என்று சொல்லலாம். இரண்டிற்கும் 4 மணி நேர வித்தியாசம். எனவே உன் உயிர் உடலை விட்டு பிரிந்த நேரம் எமலோக நேரப்படி ஜூலை 12 இரவு 11:59 க்கு. எனவே விதிப்புத்தகம் சரிதான்" என்றது.

எனக்கு இன்னொரு முறை செத்து விடலாம் போலத்தோன்றியது

பின் குறிப்பு :
இந்த கதை US மற்றும் UK Clients யிடம் சிக்கி அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து IT உள்ளங்களுக்கும் சமர்ப்பணம்.
கதையின் முடிவைப் படித்து விட்டு யாரும் என்னைத் தேடி அலைய வேண்டாம்.
கமெண்டுகளில் கண்ணியமான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தவும்.  :)