செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

முலாம் பழ ஜீஸா? சாத்துக்குடி ஜூஸா?

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் நான்காவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

எல்லா வகுப்புகளிலும் பின்வரும் வகையில் மாணவர்கள் இருப்பார்கள். முதல் வகை கடலை, காதல், குடும்பம் என ஏகபோகமாக வாழ்பவர்கள். இரண்டாவது வகை விக்கிரமாதித்தன்கள் வகை, எப்படியும் நம்மளிடமும் ஒரு பெண் பேசி விடுவாள் என்ற நம்பிக்கையில் நடமாடும் இதயம் முரளிகளாக இருப்பார்கள். மூன்றாவது வகை, சீ சீ இந்த பழம் புளிக்கும் என எந்த பெண்களிடமும் பேச மாட்டோம் என விரதம் இருப்பார்கள். இதில் முதல் மற்றும் இரண்டாவது வகையைக் கூட நம்பி விடலாம். ஆனால் இந்த மூன்றாவது வகை இருக்கிறார்களே எமகாதகர்கள். நாங்களாம் பொண்ணுங்க கூடயே பேச மாட்டோம், மாஸ்டா நாங்க என்று கம்பு சுற்றுவார்கள். ஆனால் உண்மையில் "பொண்ணுங்க கூட பேசவே மாட்டோம் (வாய்ப்பு கிடைக்கும் வரை)" என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் நாம். அப்படிபட்ட கதை தான் இன்று நான் உங்களுக்கு சொல்லப் போவது.

எல்லா வகுப்பையும் போலவே எங்கள் வகுப்பிலும் ஒரு குழு இருந்தார்கள். பொண்ணுங்க கூடவே பேச மாட்டோம் என்பது தான் அவர்களது கொள்கை. அவர்களாகவே அவர்களுக்கு கெத்து கேங் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நானெல்லாம் இதயம் முரளி குழு என்பதால் அவர்களோடு பெரிய ஒட்டுதல் இல்லை. என்னுடைய எதிரிகளெல்லாம் நான் முதல் வகையைச் சார்ந்தவன் என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள் மக்களே, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டும். கடமை, கண்ணியம், தட்டுப்பாடு கட்டுப்பாடு என்று வாழ்ந்தவன் நான். நானுண்டு, என் வேலையுண்டு என்று வாழ்ந்து உலக மாணாக்கர்களுக்கெல்லாம் ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவன் என்பதை இந்த இடத்திலே மிகுந்த தன்னடக்கத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். (இந்த எபிசோடுக்கு இந்த பில்டப் போதும்னு நினைக்கிறேன். இனிமேல் கதைக்குள்ள போயிடலாம்)

மூன்றாம் ஆண்டு பருவத் தேர்வு நெருங்கி வரும் சமயம் அது. வழக்கம் போல நாங்களெல்லாம் படிப்போம் என்று நம்பி ஸ்டடி ஹாலிடேஸ் அறிவித்திருந்தார்கள். ஸ்டடிக்கு ஹாலிடேஸ் விடுவது தாம்லே ஸ்டடி ஹாலிடேஸ் என்ற முன்னோர்களின் மொக்கைக்கு இணங்க விடுதியில் இருக்கும் விட்டத்தைப் பார்த்து, ஊர் கதை பேசி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட ஒரு மங்களகரமான நன்னாளில், திடீரென்று எனது அறைக்கு மூன்று நான்கு தடிமாட்டு நண்பர்கள் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் கையில் ஒரு கைப்பேசி.

"டேய் சிவா, சீக்கிரம் இந்த போனை வாங்கி பொண்ணு குரல்ல பேசுடா."

"எதுக்குடா, புரியல.."

"டேய் அதெல்லாம் அப்புறம் சொல்றோம். அவன் லைன்ல இருக்கான். நீ பொண்ணு குரல்ல மட்டும் பேசு, மிச்ச கதையை நாங்க அப்புறம் சொல்கிறோம்."

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு முன்கதை சுருக்கம் (அதாம்பா பிளாஷ் பேக்)  சொல்லியாக வேண்டும் மக்களே, இரண்டாம் ஆண்டு படிக்கும் போது நண்பன் ஒருவனை பெண் குரலில் பேசி ஏமாற்றி இருக்கிறேன். அதுவும் ஒன்றிரண்டு நாட்கள் அல்ல, 2-3 மாதங்கள். அதைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவு எழுத இருப்பதால், இப்போதைக்கு அந்த கதைக்குள் முழுதாக செல்ல வேண்டாம்.

சரி பெண் குரலில் தானே பேச வேண்டும் என நான் போனை வாங்கி, ஹலோ என்றேன் பெண் குரலில். அந்த முனையில் ஒரு ஆண் குரல்.

"ஹலோ, ரஞ்சனாவா?"

(நாம எந்த கேரக்டர்னே தெரியலயே, சும்மா போனை கொடுத்திட்டானுங்க தடிமாட்டு பசங்க, சரி சமாளிப்போம்)

"ஹலோ, யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க. இனிமேல்லாம் எனக்கு போன் பண்ணாதீங்க" என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

அந்த தடிமாட்டு நண்பர் கூட்டம், தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

"டேய், நல்லா மாட்டி விடலாம்னு நினைச்சோம், இப்படி சொதப்பிட்டியேடா" என்றார்கள்.

"அடேய்களா, முதல்ல இந்த கதையில் நான் யாரு, ரஞ்சனா யாருனு சொல்லுங்க. அப்புறம் தான் தெளிவா பேச முடியும்" என்றேன்.

"டேய் நம்ம சுந்தரம் இருக்கான்ல, அதாண்ட அந்த கெத்து கேங்ல இருப்பான்ல, அவன் ரொம்ப ஓவரா போறான்னு, நாங்க தான் அவன் போனல இவன் நம்பர நம்ம கிளாஸ் ரஞ்சனானு பேர் மாத்தி வெச்சிட்டோம். அப்புறம் அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினொம். அவனும் ரஞ்சனா தான் மெசேஜ் பண்றானு நினைச்சு ரிப்ளை பண்ண ஆரம்பிச்சுட்டான். சரி நமக்கு தான் ஸ்டடி ஹாலிடேஸ்ல பொழுது போக மாட்டேங்குதுல, அதான் இவன் கூட ரஞ்சனா பேர்ல கடலை போட ஆரம்பிச்சோம். சும்ம சொல்ல கூடாது, பய வறு வறுனு வறுத்து கடலையே தீஞ்சு போற அளவுக்கு பண்ணிட்டான். இது இப்படியே ஒரு வாரமா ஓடிட்டு இருந்ததா, இன்னைக்கு பயபுள்ள தீடீர்னு கால் பண்ணிட்டான். எங்களுக்கு என்ன பண்றதுனு தெரில. உன்னோட செகண்ட் இயர் மேட்டர் நியாபகம் வந்துச்சு, அதான் ஓடி வந்து போனை உங்கிட்ட கொடுத்தோம், இப்படி சொதப்பிட்டியேடா, இனிமே எப்படிடா நம்புவான் அவன்" என்று இவர்கள் ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னார்கள்.

நான் எனது கண்ணாடியை கழற்றி துடைத்துக்கொண்டே, "கொஞ்சம் கிரிட்டிக்கலான கேஸ் தான். ஆனா புராஜெக்ட் இண்டெரெஸ்டிங்கா இருக்கதால நான் எடுத்து பண்றேன்" என்றேன்

"ஆமா. பெரியா இஸ்ரோ சயிண்டிஸ்ட் இவரு, நாயே மூடிட்டு இப்போ என்ன பண்றதுனு" சொல்லு என்று ரொம்ப கெஞ்சி கேட்டுக் கொண்டார்கள்.

"மக்களே, நம்மள மாதிரி பசங்கள பத்தி எனக்கு தெரியும். எவ்வளோ பெரிய முட்டாளுங்க நாமனு, பொண்ணு பேசுதுனு சொன்னா, மெஸ் உப்புமாவை கூட ருசியா இருக்குதேனு திம்போம். அதானால கூல் டவுன். அந்த பயலுக்கு மறுபடியும் போன் போட்டுக் கொடுங்க, இந்த புராஜெக்ட கண்டினியூ பண்ணுவோம்" என்றேன். பெண் குரலில் பேசலாம் என்று முடிவு எடுத்து விட்டேன். கிட்டதட்ட ஒரு வருடத்துக்கு பிறகு, பழைய சிவாவா பேக்ரவுண்ட் மியூசிக்லாம் போட்டு,

"ஹலோ சுந்தரமா?"

"ஆமா, நீங்க ரஞ்சனா தான?"

"ஹேய் ஆமாபா, சாரி, அப்போ போன் என் பிரெண்டு கைல இருந்துச்சா, அப்போ போன்ல வித்தியாசமா ஒரு பேர்ல கால் வந்த உடனே, என்னை கலாய்க்கிறேன்னு அவ அப்படி பேசிட்டா, சாரிப்பா" என்றேன்.

"அது பரவாயில்ல, விடு, என்ன பேர்ல ஸ்டோர் பண்ணிருக்க என் பேர?"

(மீன் கொக்கிக்குள் மாட்டி விட்டது மக்களே. இனி பயபுள்ள என்ன சொன்னாலும் கேட்கும். இப்போது போய் அவன்கிட்ட கைமாற்றாக 100 ரூபாய் கேட்டு பாருங்களேன், உடனே கிடைத்து விடும்)

"ஆங், அஸ்கு புஸ்கு, அதெல்லாம் சொல்ல முடியாது, போ"

"ஏய், சொல்லுபா, பிளீஸ்"

"போ, அதெல்லாம் சொல்ல முடியாது"

... இப்படியே ஒரு 5 நிமிடங்கள் கடலை வறுத்து தீய்வதற்குள் முடித்து விட்டேன். போனை வைத்து விட்டு திரும்பி பார்த்தால், போனை என்னிடம் கொண்டு வந்து கொடுத்த நண்பர் கூட்டத்தில் ஒருவனையும் காணோம். குருநாதா என்று காலுக்கு கீழிருந்து ஒரு குரல். எழுப்பி விட்டு பார்த்தால், எல்லாரும் கண்ணில் தண்ணி வச்சுண்டா. டேய், இதுக்கெல்லாமா கலங்குவீங்க, கிறுக்கு பயபுள்ளகளா ,போங்க போய் புராஜெக்ட கண்டினியூ பண்ணுங்க என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. 

அதன் பிறகு இதுவே வாடிக்கையாகிப் போனது. மெசேஜில் கடலை போடுவதெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அழைப்பு வந்தால் மட்டும் ஓடி வந்து என்னிடம் கொடுத்து விடுவார்கள். நானும் சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா என்று அவனோடு ஆராய்ந்து கொண்டிருந்தேன் இரவெல்லாம்.

இந்த மெசேஜ் கடலை ஒருவரிடமும், கால் பண்ணும் கடலை டிப்பார்ட்மெண்ட் என்னிடமும் இருப்பதால் சில சிக்கல்களை சந்தித்தோம். சுந்தரமோ பேசும் போது, "ஹேய் இன்னைக்கு காலைல நான் அந்த மெசேஜ் பண்ணேன்ல, நீ ஏன் அதுக்கு அப்படி ரிப்ளை பண்ண" என்பான். அடப்பாவிகளா, என்னத்தடா மெசேஜ்ல கடலை போட்டு தொலச்சீங்க, வரலாறாவது சொல்லிட்டுப் போங்களேண்டா என்று அவர்களை மனதிற்குள் திட்டி விட்டு நானும் பொதுவாகவே அந்த கேள்விக்கு பதிலளிப்பேன். கொஞ்சம் கோவம் கலந்த குரலோடு "ஏன் நான் அப்படி ரிப்ளை பண்ண கூடாதா, எனக்கு அந்த உரிமை இல்லையா" என்பேன். நமக்கு தான் பெண்களின் கோபமோ அழுகையோ பொறுக்க முடியாது அல்லவா, அவன் பம்மிவிடுவான். "ஹேய் விடுப்பா, சும்மா தான் கேட்டேன்" என்று வேறு டாபிக் போய்விடுவான். நானும் தப்பிச்சோம்டா சாமி என்று பெருமூச்சு விடுவேன்.

ஒருநாள் கல்லூரிக்கு அருகிலுள்ள கடையில் ஜீஸ் குடிக்கலாம் என்று சுந்தரத்தையும் அழைத்தோம். அப்போதும் அவன் ரொம்ப பிஸியாக ரஞ்சனாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தான். (அதாவது ரஞ்சனா என்று அவன் நம்பிக் கொண்டிருந்த எண்ணிடம் அல்லது என்னிடம்)

"டேய் படிச்சுகிட்டு இருக்கேன், இப்போ போய் டிஸ்டர்ப் பண்றீங்களேடா"

சுற்றி இருந்த எங்கள் எல்லோர் காதிலும் புகை என்று நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் அதையெல்லாம் அடக்கிக் கொண்டு, அவனை தாஜா செய்து அழைத்துச் சென்றோம். அப்போதும் அவன் கையில் போனோடு தான் கடைக்கு வந்தான். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு தேவையான ஜீஸ் சொல்லி வாங்கி குடிக்க ஆரம்பித்து விட்டோம். இவன் மட்டும் எதுவும் சொல்லவில்லை. அப்போது தான் எங்களுக்கு உரைத்தது. சில மணித்துளிகளாக நாங்கள் ரஞ்சனாவின் போனை பார்க்க மறந்து விட்டிருந்தோம். அவனுக்கு தெரியாமல் எடுத்து பார்த்தோம். எதிர்பார்த்தது போலவே அவனுடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.

"ஹேய், ஜீஸ் கடைக்கு வந்திருக்கேன். முலாம் பழ ஜீஸ் குடிக்காவா, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவா?" என்றொரு குறுஞ்செய்தி.

கூட இருந்த நண்பன் ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு "தக்காளி, இன்னைக்கு அவன் செத்தாண்டா, கடைக்கு கூட்டி வந்தது நாம, இங்க இவன் அவகிட்ட கேக்குறானா", என்று பாய்ந்தான். கதை இப்படி முடியக் கூடாது அல்லவா, அதனால் அவனை அடக்கி வைத்து, அவனுக்கு புரிய வைத்தோம். 

சரி பதில் அனுப்பலாம் என்று யோசித்து, "ஹேய் அந்த கடைல முலாம் பழம், சாத்துக்குடி ரெண்டுமே நல்லா இருக்காது, ஷார்ஜா ஜீஸ்னு ஒண்ணு ஒருக்கும். அது செமயா இருக்கும். உடம்புக்கும் ரொம்ப நல்லது" என்ற பதிலை தட்டி விட்டோம். உண்மையில் அந்த கடையில் இருப்பதிலேயே மகா மட்டமான ஜீஸ் இந்த ஷார்ஜா ஜீஸ் தான். விலையும் அதிகம். மற்ற ஜீஸ் எல்லாம் 15-20 ரூபாய் என்றால், ஷார்ஜா 45 ரூபாய். இது எங்கள் எல்லோருக்குமே தெரியும். ஏன் நம்ம சுந்தரத்திற்கும் தெரியும். ஆனால் கன்னி ஒருத்தி சொல்லி விட்டாள் கண்டதையும் தின்பவர்கள் அல்லவா நம் இனம், அதனால் அவன் ஷார்ஜா ஜீஸ் தான் வாங்கி குடித்தான்.

"just had sharjaha juice. Really nice pa. Thanks for the suggestion :)" என்று குறுஞ்செய்தி வேறு. இந்த கதையைப் படிக்கும் பெண்களே, உண்மையாக சொல்கிறேன்.  ஒரு பெண்ணாக இருப்பதன் பெரும் கஷ்டத்தை அன்று தான் உணர்ந்தேன். (சில நிமிடங்கள் விக்கி விக்கி அழுகிறேன். மூக்கைத் துடைத்துக் கொண்டு..) உங்கள் எல்லோருக்கும் என் சார்பாக வீர வணக்கம் தோழிகளே!

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த கண்றாவி கடலை வளர்ந்து வந்தது. கூடவே அந்த பருவத்திற்கான தேர்வுகள் ஒவ்வொன்றாக வந்து சென்று கொண்டிருந்தது. இதற்கு மேல் இதை வளரவிட்டால் எனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதி இறுதித் தேர்வு அன்று கதைக்கு சுபம் போட்டு விடலாம் என்று பஞ்சாயத்தில் தீர்மானம் ஆனது.

உண்மையை ஒரு நல்ல ஹோட்டலில் வைத்து சொல்லலாம், அப்படியே நாங்களும் அன்றைய பாடு கழித்த மாதிரி ஆயிற்று என்று, இறுதித் தேர்வு முடிந்த அன்று சந்திக்கலாமா என்று கேட்டேன். ஓரளவுக்கு நல்ல விலையுயர்ந்த ஹோட்டலில் மதிய உணவுக்கு சந்திக்கலாம் என்றேன். (ஏனென்றால் இந்த மாதிரி ஹோட்டலில் நாங்கள் இப்படி சாப்பிட்டால் தான் உண்டு.)  பயலுக்கு ஏக குஷி. "வரும் போது நீ நம்ம காலேஜ் டூர் அப்போ போட்டிருந்தியே அந்த கருப்பு டிரெஸ், அதுல நீ நல்லா இருந்த, அதுல வரணும்" என்று மெசேஜ் வேறு. சனீஸ்வரா! 

கலர் கலர் கனவுகளோடு இறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டு அந்த ஹோட்டலுக்கு வந்து விட்டான். நாங்களும் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்து தயாராக இருந்தோம் வேட்டைக்கு. எல்லோரும் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தோம். எங்களை அவன் எதிர்பார்க்கவில்லை. சிவ பூஜையில் இந்த கரடிகள் எதற்கு என்று அவன் நினைத்திருக்கக் கூடும். ஏற்கனவே சொல்லி வைத்திருந்த படி நான் முதலில் செல்லவில்லை. மற்ற நண்பர்கள் சென்றிருந்தார்கள்.

"என்னடா இந்த பக்கம்? எங்க கிட்ட வேற எங்கயோ போறேனு சொன்ன"

"இல்லடா, இன்னையோட பரீட்சை முடியுதுல்ல, அதான் அப்படியே பிரெண்ட பார்த்துட்டு போலாம்னு..." என்று நெளிந்தான்.

ரஞ்சனாவாகிய நான் அவனை அலைவேசியில் அழைத்தேன்.

"ஏய் எங்க இருக்க, சாரிப்பா, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, வந்துட்டே இருக்கேன்".

"பரவாயில்லை, பொறுமையாவே வா, நாம நிச்சயமா இந்த ஹோட்டல்ல தான் சாப்பிடணுமா?" என்றான்.

"ஏய், அது என் பேவரிட் ஹோட்டல்பா, அங்க தான் சாப்பிடணும், ஏன்?"

"இல்லை நம்ம கிளாஸ் பசங்களாம் இங்க இருக்காங்க, அதான்" என்று இழுத்தான்.

அப்படியே நான் போன் பேசிக்கொண்டே ஹோட்டலுக்குள் நுழைந்தேன் அவன் அமர்ந்திருந்த டேபிள் அருகில் சென்றேன்.

"ஏன், தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது, என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் தெரியப் போறது தானே. சர்வர் அண்ணா ஒரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க" என்று இந்த வாக்கியத்தை சொல்லி விட்டு அப்படியே அவன் முன்னால் போய் அமர்ந்தேன். ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்தில் மிக சந்தோஷமான செய்தியும், மிக சோகமான செய்தியும் சொன்னால், எப்படி இருக்கும் என்று அன்று தான் கண்டு கொண்டேன். பயலுக்கு ஒரு நிமிஷம் தலை கால புரியவில்லை. லேசா சிரிக்க ஆரம்பித்தவன், நான் அவன் டேபிளில் கருப்பு சட்டையோடும் போனோடும் போய் உட்கார்ந்ததைப் பார்த்ததும் புரிந்து கொண்டான். ஹோட்டலில் இருந்த நண்பர்கள் எல்லோரும் இந்த சமயத்தில் ஹே! என்று கத்திக் கொண்டே எங்கள் டேபிள் அருகில் வந்து விட்டார்கள். ஒட்டு மொத்த ஹோட்டலும் எங்களையே பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவனை கலாய்க்க ஆரம்பித்து விட்டோம். அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

"தக்காளி டேய், இன்னைக்கு நீ தான் எங்க எல்லாருக்கும் பில் கட்டுற, அண்ணா ஒரு மட்டன் பிரியாணி" என்று ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். முதலில் அதிர்ச்சியானவன், பின்பு அவனும் எங்களைப் போல சூடு சொரணை இல்லாத ஜந்து என்பதால் அவனும் அசடு வழிய சிரிக்க ஆரம்பித்து விட்டான். இந்த ஒட்டு மொத்த நிகழ்வையும் பிற்கால சந்ததியருக்காக வீடியோ வேறு எடுத்து வைத்தோம். 

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, சுந்தரத்தின் நெருங்கிய நண்பன், "டேய் எத வேணாலும் பொறுத்துப்பேண்டா, ஆன நாங்க கடைக்கு கூட்டி போனப்புறம் முலாம் பழ ஜீஸா, சாத்துக்குடி ஜீஸானு கேட்ட பாரு, அத மட்டும் மன்னிக்கவே மாட்டேண்டா, இதுக்காகவே, இரு... சர்வர் அண்னா இன்னொரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க. தின்னே இவன் சொத்த அழிச்சிடறோம்" என்றான். கலாய்த்து சிரித்து சாப்பிட்டு முடித்து பில் வந்தது. பயல் கிட்டதட்ட 2000 ரூபாய் தண்டம் அழுதான் அன்று மட்டும். இந்த சம்பவம் உண்மையான ரஞ்சனாவிற்கு தெரிந்து, ஏற்கனவே பெண்கள் மத்தியில் என் தலைக்கு பல லட்சங்களாக இருந்த எனது Bounty, மேலும் கூடியது. ஆனால் பொது வாழ்வு என்று வந்து விட்டால், இதையெல்லாம் பார்க்க முடியுமா.

இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்து விட்டன. கல்லூரி முடித்து நாங்கள் வேலைக்கு சேர்ந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போதும் அந்த கெத்து கேங்கில் சிலர் கெத்தாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தி அவளுக்கு கல்யாணம் என எல்லோருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள். அப்படியே கெத்து கேங்கில் உள்ள அபிலாஷ்க்கும் போன் செய்தாள். அவன் போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

10 நிமிடங்கள் கழித்து அறைக்குள் வந்து "மாப்ள, ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனுஷன கடிச்ச கதையா இந்த சிவா நம்ம கிட்டயே வாலாட்டுறான். தக்காளி 10 நிமிஷம் எனக்கு தெரிஞ்ச எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு திட்டிட்டேன். இனிமே நம்ம வழிக்கே வரமாட்டான்" என்றான் பெருமிதம் பொங்க. அவனது அறைத் தோழர்கள் எல்லா ம் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்கள். "டேய், அது உண்மையாவே நம்ம கிளாஸ் பொண்ணு தாண்டா" என்று அவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. அதன் பிறகு அவளுடைய கல்யா ண விஷயத்தை சொல்லி, உண்மையாகவே அவள் தான் போன் செய்தாள் என்று இவனை நம்ப வைத்து, அதன் பிறகு இவன் அசடு வழிந்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு, என அந்தக் கதை மிக சுவாரசியாமாக சென்றது. 

ஆக இந்த கதை சொல்லும் நீதி என்னவென்றால், ஒரு பெண் நமக்கு போன் செய்தால் அது பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அது உண்மையாக ஒரு பெண்ணாகக் கூட இருக்கலாம் :)


புதன், 14 பிப்ரவரி, 2018

நான் தான்டா குமார்.exe

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் மூன்றாவது பகுதி இது. முதல் பகுதி இங்கே, இரண்டாம் பகுதி இங்கே. இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே உயிரியல் (பயாலஜி) பிடிக்காது. எனவே பதினொன்றாம் வகுப்பிலேயே பொறியியல் தான் என முடிவெடுத்து கணினி பிரிவை தேர்ந்தெடுத்தேன். சில பேர் உயிரியல் எடுத்தால் மருத்துவத்திற்கும் போகலாம், பொறியியலுக்கும் போகலாம் என்பார்கள். கூடவே நாசமாகவும் போகலாம் என்பதை வாகாக மறைத்து விடுவார்கள். எனவே தம்பிரான் புண்ணியத்தில் அவர்களிடம் சிக்காமல் கணினி பிரிவைத் தேர்ந்தெடுத்து பின்னர் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றில் தகவல் தொழில்நுட்பத் துறை பயில ஆரம்பித்தேன். நண்பனின் சகோதரன் ஒருவரிடம் இந்த கல்லூரியில் சேர முடிவு செய்து விட்டேன் என்றேன். அவர் உடனே, அந்த காலேஜா, அதுவும் ஐ.டி. டிப்பார்மெண்டா? அது ரொம்ப ஸ்டிரிக்ட் ஆன டிப்பார்ட்மெண்ட் ஆச்சேபா. சாயந்திரம் குரூப் ஸ்டடிலாம் வெக்கிறாங்கனு என் பிரெண்டு சொன்னான் என்றார். என்னடா அது, பொறியியல் கல்லூரி, அதுவும் அரசு கல்லூரியில் இப்படியெல்லாமா இருக்கும் என வியந்து கொண்டே சேர்ந்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல மாலை சிறப்பு வகுப்புகள் எதுவும் இல்லை. என்ன காரணம் என சீனியர் ஒருவரிடம் கேட்டபோது, அதுவா, போன வருஷம் வரைக்கும் அந்த கருமம்லாம் இருந்துச்சு. நம்ம டிப்பார்ட்மெண்ட்ல ஒரு மேடம் இருகாங்க. பயங்கர டெரர் அவங்க. அரியர் கொடுக்கறதுல ஸ்பெஷலிஸ்ட். (நாட்டுல எதுலலாமோ ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார்கள், இப்படியும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் என நினைத்துக் கொண்டேன்.) அவங்க தான் இத ஆரம்பிசாங்க. நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா, கடுப்பாகி ஸ்பெஷல் கிளாஸ் கம்ப்யூட்டர் லேப்ல நடக்கும் போது ஹார்ட் டிஸ்க திருடிட்டாங்க. அதுவே 1 ஜி.பி ஹார்ட் டிஸ்க்தான். அதுக்கே அந்த அம்மா அந்த குதி குதிச்சு, ஸ்பெஷல்  கிளாஸ்லாம் கேன்சல் பண்ணி கிளாஸ்ல எல்லாரையும் பெயில் பண்ணி விட்டிருச்சி என ரத்தின சுருக்கமாக கதையை சொன்னார். என்னடா இது ரொம்ப பயங்கராமான துறையா இருக்குமோ என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் போகப் போக தான் வேடிக்கையே.

ஜி.டி நாயுடுவுக்கு பிறகு அறிவாளிகளே பிறக்கவில்லை எனும் குறையை போக்க எங்கள் துறையில் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். (கவனிக்க எல்லோரும் அல்ல). என்னடா இவன் ஆசிரியரையே குறை சொல்கிறான் என எண்ண வேண்டாம். பின்வரும் சம்பவத்தை படித்தால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். எங்கள் கல்லூரி பேராசிரியர்களை முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக பல்வேறு மாணவர்கள் தங்கள் வழிகாட்டியாக தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் எல்லாம் எங்களை விட பெரும்பாலும் 10-15 வயது மூத்தவர்களாக இருப்பர்கள். ஏற்கனவே ஆசிரிய அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். சில பருவங்களில் எங்களுக்கு இவர்களே பாடம் எடுப்பார்கள். எங்கள் இறுதி ஆண்டு செயல் திட்டத்திற்கு (புராஜெக்ட்) இவர்களில் சிலர் வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள். அப்படி ஒருவர் தான் எங்கள் குழுவிற்கு வழிகாட்டியாக வந்தார். சரி முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்கிறவர், இவர் நமக்கு வழிகாட்டியாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எண்ணினோம். முதல் நாள் எங்கள் குழுவை அழைத்து பேச ஆரம்பித்தார். 

இப்போ பாத்துகிட்டீ ங்கனா தம்பி, நம்ம சுத்தி நிறைய டேட்டா இருக்கு, அது எல்லாத்தையும் ஸ்டோர் பண்ற அளவுக்கு நம்மளுக்கு இடம் இல்லை. அதனால டேட்டா கம்பிரஷென்ல நீங்க பிராஜெக்ட் பண்ணீங்கனா நல்லா இருக்கும்.

சரி சார். (ஆஹா, ஆரம்பம் நல்லா இருக்கே)

இந்த மாதிரி டேட்டா கம்பிரெஷன்ல நான் நிறைய பிராஜெக்ட் பண்ணிருக்கேன். இப்போ உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா கூகிளையே நாம கம்பிரெஸ் பண்ணலாம்.

என்னது! கூகிளையே கம்பிரெஸ் பண்ண போறோமா, அப்படினா இந்த தடவ பெஸ்ட் ப்ரஜெக்ட் அவார்டு நமக்கு தான். அப்புறம் அப்படியே மைக்ரோசாப்ட்ல வேலை, ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு டஃப் கொடுக்கறோம் என நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் போதே

இந்த G-O-O-G-L-E இருக்குல, இத G-O^2-G-L-E அப்படினு எழுதினா அவ்ளோ தான், கூகிள கம்பிரெஸ் பண்ணியாச்சு என்றார்.

கனவு கோட்டைகள் எல்லாம் தவிடு பொடியாகி, ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது பாடல் பிண்னணியில் ஒலிக்க ஆரம்பித்தது வேறு கதை. இதை சொல்ல வந்தது எதற்கு என்றால் இப்படியாகத் தான் இருந்தது லட்சணம் எங்கள் துறையில். சந்தை தேவைகளுக்கும் நாங்கள் படிக்கும் பாடங்களும் இடையே ஒரு பசிபிக் பெருங்கடலே இருந்தது. எனவே நாங்கள் கற்றுக்கொண்ட வித்தைகள் எல்லாம் சீனியர்கள் புண்ணியத்திலும் மற்றும் வகுப்பில் இருந்த சில நல்லுள்ளங்களாலும் தான். அப்படிப்பட்ட நல்லுள்ளங்களில் ஒன்று தான் விஜயேந்திர குமார். கல்லூரிக்குத் தான் அவன் விஜயேந்திர குமார். எங்களுக்கு வெறும் குமார். இன்னும் சொல்லப் போனால் கொக்கி குமார்.

கொக்கி குமார் - பெயர் மட்டும் தான் இவ்வளவு பயங்கரமாக இருக்கும். ஆள் பரம சாது. விளக்குமாறில் இருக்கும் ஒற்றை குச்சியை விட ஒல்லியானவன் (இதெல்லாம் நீ சொல்ற பார்த்தியா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது). டார்வினின் பரிணாம வரலாற்றில் ஏற்பட்ட பிழை என்று இவனை சொல்லலாம். மனிதனா வேறு ஏதேனும் ஜந்துவா என்று எங்களுக்கே பல சமயங்களில் யோசனை வந்ததுண்டு. ஏன் என்றால் இவ்வளவு ஒல்லியாக இருந்தாலும் பேய் தீனி தின்பான். அதுவும் எங்கள் விடுதி உணவை. நாங்களெல்லாம் டேய் இன்னைக்கு மெஸ்ல தோசை, எப்படியும் கண்றாவியா தான் இருக்கும், வெளிய போய் சாப்பிடலாம் என்றால், அப்படியா சொல்றீங்க, 5 தோ சை சாப்பிட்டேன் ஒண்ணும் தெரில. சரி எப்படியும் நீங்க வெளில சாப்பிட போறீங்கல துணைக்கு வரேன் என்பான்.

மேலும் ஒவ்வொரு வகுப்பிலும் பஞ்சிங் பேக் என்று ஒரு கதாபாத்திரம் இருக்கும். வடிவேலுவைப் போல எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அந்த கதாப்பாத்திரம். எங்களுக்கு அந்த கதாபாத்திரம் இந்த கொக்கி குமார். வாத்தியர்கள் மேல் கடுப்பு என்றால் இவனை கூப்பிட்டு அடிப்போம், நாங்கள் பரீட்சை சரியாக எழுதவில்லை என்றாலும் இவனுக்கு தான் அடி விழும். ஒரு கட்டத்தில் போர் அடிக்குது என்றால் இவனை கூப்பிட்டு அடிப்போம். அவ்வளவு அடியையும் சிரித்துக் கொண்டே வாங்கிக்கொண்டு, டேய் அடிக்காதீங்கடா, வலிக்குது என்பான். வலிச்சா ஏன் நாயே சிரிக்குற என்றால், அது என்னமோ தெரிலடா நீங்க அடிச்சா ஒரே சிரிப்பா வருது என்பான். அதற்கும் சேர்த்து அடி விழும்.

ஆள் வெகுளியும் கூட. கல்லூரி இரண்டாம் ஆண்டில் அப்போது தான் கணினி விடுதி அறைகளுக்குள் வர ஆரம்பித்தது. எங்கள் அறையிலும் ஒரு கணினி இருந்தது. இவன் ஒரு முறை வந்து, டேய் கம்ப்யூட்டர் யூஸ் பண்ணனும், பாஸ்வேர்ட் சொல்லுங்க என்றான். நான் சொல்லமுடியாது என்றேன். சோகமாக சென்று விட்டான். இப்படியே பல தடவை வந்து கேட்டிருக்கிறான், நானும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் சொல்லமுடியாது என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மிகவும் நொந்து போய், டேய் நீங்களும் யூஸ் பண்ணல, ஆஃப் ஆகி தான இருக்கு, நான் யூஸ் பண்ண பாஸ்வேர்ட் சொன்னா என்னடா எனக் கேட்டான். சரி பயலை ரொம்ப அலைய விட்டோம், இனிமேலும் அலைய விட வேண்டாம் என்று, இம்முறையும் பாஸ்வேர்ட் சொல்லமுடியாது என்றோம். கடுப்பாகி விட்டான். அப்புறம் அவனைக் கூப்பிட்டு பாஸ்வேர்டே 'சொல்லமுடியாது' தான். 'sollamudiyathu'. இப்படி எவனாவது கேப்பான், அவனை வெறுப்பேத்தலாம்னு தான் அந்த பாஸ்வேர்ட் வெச்சிருந்தோம், வசமா நீயே சிக்குன என்று மேலும் இரண்டு அடி போட்டோம். சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டேன்.

ஆள் இவ்வளவு வெகுளி என்றாலும் கோட் அடிப்பதில் புலி. எவ்வளவு கடினமா ன கான்செப்ட்டாக இருந்தாலும் அநாயசமாக கோட் அடித்து விடுவான். மூன்றாம் நான்காம் ஆண்டுகளில் கோட் சம்பந்தமாக எந்த குழப்பம் என்றாலும் இவனிடம் கேட்கலாம் என்ற நிலைமை இருந்தது. ஒரு நாள் யூட்யூபில் கவுண்டமனி செந்தில் வீடியோ ஒன்று பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் கவுண்டமனியை ஒவ்வொருவராக அடித்து விட்டு, நான் நாயர், நான் அடிச்சா இரத்தம் வருதானு பார்த்தேன், நான் தேவர் நான் அடிச்சா இரத்தம் வருதானு பார்த்தேன் என ஒவ்வொருவராக அடித்து விட்டு போவார்கள். இதைப் பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு கேள்வி, இந்த குமார் பயல நாம அடிச்சா மட்டும் தான் வலிக்க மாட்டேங்குதா, இல்லை ஊரே சேர்ந்து அடிச்சாலும் வலிக்காதா என்று யோசித்தோம். சரி ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தால் கோர்த்து விட்டு பார்ப்போம் என்று இருந்தோம்.

மூன்றாம் ஆண்டு கல்லூரி விடுதியில் கிட்டதட்ட எல்லோர் அறையிலும் ஒரு கணினியாவது இருந்தது. பெரும்பாலும் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன்படுத்தி வந்தார்கள். அதனால் வைரசும் எக்கச்சக்கமாக இருந்தது. நாங்கள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் என இரண்டையுமே பயன்படுத்தி வந்ததால் முடிந்த அளவு எங்கள் கணினியைக் காப்பாற்றி வந்தோம். அப்போது வந்த வைரஸ்களுள் மிகப் பிரபலமானது New Folder.exe என்ற வைரஸ். இது கணினியில் சென்றவுடன் எல்லா கோப்புறைகளிலும்(Folders)  சென்று அதே பெயரில் உட்கார்ந்து கொள்ளும். உங்கள் கணினியில் 1000 கோப்புறைகள் இருந்தால், இந்த வைரஸ் அதே பெயரில் மேலும் ஒரு 1000 காலியான கோப்புறைகளை உருவாக்கி விடும். வெகு சீக்கிரமே உங்கள் கணினி மெதுவாக வேலை செய்யும். ஹார்ட் டிஸ்க் முழுவதையும் அழித்துவிட்டு முதலிலிருந்து ஆரம்பிப்பது மட்டுமே ஒரே வழி.

அந்த New folder.exe வைரைஸை லினக்ஸ் மெஷினில் போட்டு ஆராய்ந்து பார்த்தோம். பெரிய சிக்கல் இல்லாத கோட் தான். அதையே கொஞ்சம் மாற்றி, கோப்புறையின் பெயருக்கு பதிலாக 'நான் தான்டா குமார்' (Naan thaanda kumar) என எல்லா கோப்புறைகளிலும் வருமாறு செய்து விட்டோம். பின்பு வழக்கம் போல பல பென் டிரைவ்கள் மூலம் அந்த வைரஸ் விடுதியின் சகல கணினிகளும் பரவி விட்டது. எல்லா கணினிகளிலும் Naan thaanda kumar என்ற பெயரில் ஏகப்பட்ட கோப்புறைகள் இருக்கவே அனைவருக்கும் ஏக கடுப்பு. முகம் தெரியாத ஒருவன் நம்மை ஏமாற்றினால் பெரிய கோபம் வராது. அதே நமக்கு தெரிந்த எவனோ ஒருவன் என்றால் செம கடுப்பு வரும் இல்லையா, அதே போல தான் ஆயிற்று. ஒட்டு மொத்த விடுதியும் எவன்டா அந்த குமார் என்று சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை யதே ச்சையாக வேறு ஒரு அறையின் செல்லும் போது உள்ளிருந்து மிகுந்த கோபத்துடன் ஒரு குரல், எந்த நாய்டா அந்த குமாரு, காலைல கண்ண தொறந்தாலே அவன் பேர்ல இருக்கற ஃபோல்டர தான் பாக்க வேண்டி இருக்கும், தக்காளி அவன் மட்டும் என் கைல கிடைச்சான்..... எங்கள் ஆபரேஷன் வெற்றியடைந்த திருப்தி எங்களுக்கு. 

இந்த தகவல் குமாருக்கும் தெரிய வர அவன் நேரே எங்கள் அறைக்கு தான் வந்தான். டேய், உண்மைய சொல்லுங்க, நீங்க தான இந்த வேலை பார்த்தது என்றான். என்னங்க சிவாஜி இப்படி பண்ணிட்டாங்க படு பாவி பசங்க போன்ற ஒரு ரியாக்‌ஷனை கொடுத்தோம். கண்டுபிடித்து விட்டான். டேய், நடிக்காதீங்கடா, நீங்க தானு தெரியும். ஏன்டா இப்படி பண்ணீங்க என்றான். அந்த கவுண்டமனி வீடியோ வரலாறை சொல்லி, நம்ம டிப்பார்ம்ணட் பசங்க அடிச்சா மட்டும் தான் உனக்கு வலிக்காதா, இல்லை மத்த எல்லா டிப்பார்ட்மெண்ட் பசங்க அடிச்சாலும் வலிக்காதானு கண்டுபிடிக்க தான் என்றோம். அடப்பாவிகளா, ஒரு அப்பாவி உசுர வெச்சு விளையாடிட்டு இருக்கீங்களே என்றான். ஆனாலும் அப்பவும் பெரிய கவலை எல்லாம் இல்லை. சிரித்துக் கொண்டே தான் இருந்தான்.

ஒரு வழியாக எல்லா விடுதி மாணவர்களுக்கும் அந்த குமார் யார் என தெரிந்து விட்டது. கொலை வெறியோடு எல்லோரும் இருக்கையில், சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவான் என்று பரிதாபப்பட்டு நடுவில் புகுந்து சமாதானம் பேச சென்றோம். இந்த பாருங்கபா, ஏதோ ஆர்வக்கோளாறுல நம்ம பையன் இப்படி பண்ணிட்டான். உங்க வீட்டு பிள்ளையா அவன மன்னிச்சு அடிக்காம விடுங்க. இதுக்கு பதிலா, அவனே உங்க எல்லா சிஸ்டத்தையும் பார்மேட் பண்ணி, புது விண்டோஸ் ஓஸ் அவனே இன்ஸ்டால் பண்ணி கொடுப்பான், என்ன சரி தான என அவனை கேட்காமலே பஞ்சாயத்தில் வாக்கு கொடுத்து விட்டோம். மற்றவர்களும், சரி எப்படியும் பார்மேட் பண்ண வேண்டிய சிஸ்டம், இவனே பண்ணிக் கொடுக்கறான், நல்லது தானே என சரியென்றார்கள். குமார் மட்டும் எங்களையே மிகத் தீவிரமாக முறைத்து கொண்டிருந்தான். விடு மச்சி, இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும், உனக்கு நம்ம ஹாஸ்டல்லயே சிலை வெப்பாங்க என்றோம். மயிரு, குறைஞ்சது 100 சிஸ்டத்துக்காவது ஃபார்மேட் அடிக்கனும். அரைமணி நேரம்னு வெச்சாகூட 1 மாசம் ஓடிடும்டா என்றான் பாவமாக. விடுறா, வீரர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம், தியாகம் தான் உன்னை உயர்த்தும் குமாரு என்று இரண்டு அடி போட்டு அனுப்பி வைத்தோம்.

ஒன்றரை மாதங்கள் கழிந்து ஒரு வழியாக விடுதியில் உள்ள அனைத்து கணினிகளையும் சரி செய்து விட்டான். ஒரு நாள் எங்களது அறைக்குள் எதற்காகவோ வந்தான். அவன் வந்ததை கவனிக்காதது போல நான் எனது அறைத் தோழனிடம், மச்சி, குமார் தான்டா கெத்து.exe அப்படினு ஒரு புது வைரஸ் ஹாஸ்டல்ல பரவுதாமே கேள்விப்பட்டியா என்றேன். அடேய்களா நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்ல, உங்களை கொன்னுட்டு தான்டா மறு வேலை என மிக ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து கொண்டிருந்தான். வழக்கம் போல இரண்டு அடி போட்டு அவனை அனுப்பி வைத்தோம் என நான் சொல்லி தான் உங்களுக்குப் புரிய வேண்டுமா என்ன :)


வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ஆர்குட் கணக்கு

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் இரண்டாவது பகுதி இது. முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இப்போது முகநூல் எவ்வளவு பிரபலமோ அதே அளவு ஆர்குட் வலைதளம் பிரபலம் நான் கல்லூரி படிக்கையில். முகநூல் வந்து மற்ற நாடுகளில் மிகப் பிரபலமாக ஆன பின்னும் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் ஆர்குட்டைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருந்தன. கல்லூரியின் முதலாம் ஆண்டில் கணிணியும் கிடையாது, இணையதள வசதியும் கிடையாது. எப்போ தாவது கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்று கொஞ்ச நேரம் இணையத்தில் மேய்ந்து விட்டு வருவோம். அப்படி மேயும் போது பெரும்பாலான நேரம் ஆர்குட்டில் தான் இருப்போம்.

ஆர்குட்டில் முகநூலை விட சில நல்ல விஷயங்கள் இருந்தன. இப்போது போல அப்போது எல்லோரிடமும் புகைப்பட வசதி கூடிய கைப்பேசியோ, ஏன் ஒரு நல்ல புகைப்படக் கருவியோ கூட இருக்காது. மேலும் இப்போது நாம் எடுக்கும் புகைப்படங்களை வடிகட்டிகள் இல்லாமல் (ஃபில்டர்ஸ்) நம்மால் கூட பார்க்க சகிக்காது. அப்போது புகைப்படம் எடுத்து அதை போட்டோஷாப் போன்ற கிடைத்தற்கரிய மென்பொருள் கொண்டு வடிகட்டி, கைப்பேசியோ அல்லது கருவியையோ கணினியுடன் இணைத்து வடிகட்டிய புகைப்படத்தை மாற்றி..... படிக்கும் உங்களுக்கே மூச்சு வாங்குகிறதா? அப்படியானால் யோசித்து பாருங்கள் ஒரு புகைப்படம் மாற்றுவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிடும். எனவே பெரும்பாலும் யாரும் தங்கள் புகைப்படத்தை வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் அதை அடிக்கடி மாற்றுவதில்லை. நல்ல விஷயம் தானே முகநூலோடு ஒப்பிடும் போது? மேலும் சதா தோள்பட்டையை தூக்கிக்கொண்டு இணையத்திலேயே புரட்சி நடத்தும் விசைப்பலகை வீரர்களும் இல்லை ஆர்குட்டில். இது போக நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை  குழு கூட அங்கு இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அளவான வசதிகளோடு போதுமான முறையில் ஒரு நல்ல வலைதளமாக இயங்கி வந்தது.

ஆனால் இது எல்லாவற்றையும் விட, ஆர்குட்டில் இருக்கும் ஒரு மிக மிக முக்கியமான வசதி இப்போது வரைக்கும் கூட முகநூலில் கிடையாது. ஒவ்வொரு முறை ஆர்குட்டில் நீங்கள் உள்நுழையும் போதும் உங்களுடைய சுயவிவரத்தை (புரொபைல்) யார் யாரெல்லாம் பார்வையிட்டுள்ளார்கள் என்ற விவரம் இருக்கும். அதில் ஒரே ஒரு பெண்ணின் பெயர் வந்து விட்டால் கூட ஒரே கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் சோகம் என்னவென்றால் அப்படியொன்றும் நடந்து விடாது. கூடவே இருக்கும் செவ்வாழைகள் தான் நமது சுய விவரத்தை சுற்றி சுற்றி வந்தார்கள் என்று ஆர்குட்டே கழுவி ஊத்தும். நம்மள பார்க்கும் பொண்ண விட, நாமளே ஒரு பொண்ண பார்க்குறது தான் சிறந்தது என்ற கொள்கை முடிவோடு ஒரு சுயவிவரம் விடாமல் எல்லா பெண்களின் சுயவிவரத்தையும் பார்த்து விடுவோம். ஏனென்றால் அவர்கள் அடுத்த முறை ஆர்குட்டில் உள்நுழையும் போது நமது பேர் அவர்கள் முன் வருமல்லவா, அப்போதாவது யார் இந்த பையன், நம்மளையே சுத்தி சுத்தி வர்ரான் என்ற கேள்வியோடு நமது சுயவிவரத்தை பார்த்து விட மாட்டார்களா என்ற நப்பாசை தான். ஆனால் பாருங்கள் மகாஜனங்களே, இந்த விதி தான் எத்தனை வலியது. சொல்லி வைத்தாற் போல ஒரு பெண்ணும் யார் இவன் என்று தெரிந்து கொள்ளகூட நமது சுயவிவரத்தில் எட்டி பார்க்க மாட்டார்கள். எங்கிருந்து தான் இவ்வளவு மன உறுதியோ! ஆனால் அதற்காக நமது முயற்சியைக் கைவிட முடியுமா, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்களாக நாங்களும் சீனியர், ஜூனியர் என்ற பாரபட்சம் கூட இல்லாமல் ஒவ்வொரு சுயவிவரத்திலும் எங்கள் முத்திரையை இட்டு விட்டு வருவோம்.

இப்படியாக ஆர்குட் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. முதலாம் ஆண்டு கடைகளுக்கு சென்று இணையத்தை மேய்ந்த நாங்கள், இந்திய தொழில்தொடர்புத் துறையின் அபார வளர்ச்சியினால் கல்லூரியின் இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் விடுதியில் இருந்தே சொந்தக் கணினி மூலம் கன்னியரின் சுயவிவரத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். 

எங்கள் வகுப்பில் முத்து ராமன் என்றொருவன் இருந்தான். கல்லூரியில் சேரும் பொழுது மிக அமைதியாக இருந்தான். பருவத்தேர்வுக்கு முதல் நாள் நாங்கெளல்லாம் உருண்டு புரண்டு படித்துக் கொண்டு இருப்போம். அவனிடம் கேட்டால் எல்லாத்தையும் படிச்சுட்டேன் மச்சி, கடைசியா ஒரு தடவ ரிவைஸ் பண்ணிட்டு இருக்கேன் என்று வயித்தெரிச்சலைக் கிளப்புவான் .முதல் இரண்டு ஆண்டுகள் வரை இப்படி தான் இருந்தான். மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் எங்களிடம் வந்து, மச்சி இந்த வருஷம் நான் உங்ககூட ரூம் எடுத்துகிடட்டா என்றான். சரி நாம தான் படிக்காம சுத்திக்கிட்டு இருக்கோம், நம்ம கூட படிக்கிற பையன் ஒருத்தன் இருந்தா நல்லது தானே என்று நாங்களும் சரி என்றோம். ஆனால் பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமல்லவா, அது போல மூன்றாம் ஆண்டு பருவத்தேர்வுக்கு முதல் நாள் அவனிடம் படிச்சிட்டியா என்றால், 5 யூனிட்ல 4 படிச்சிட்டேன், அநேகமா 1 ஐ சாய்ஸ்ல விட்டிருவேனு நினைக்கிறேன் என்றான். நல்ல முன்னேற்றம். இதே கேள்வியை நான்காம் ஆண்டு பருவத்தேர்வுக்கு முன்னால் கேட்ட போது, என்னது நாளைக்கு பரீட்சையா என்றான். இப்படியாக வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருந்தோம்.

ஒரு நாள் அவன் அறையில் உட்கார்ந்து ஆர்குட்டில் உலவிக் கொண்டிருந்தான். திடீரென்று இயற்கை அழைத்தது போல, அதை அப்படியே விட்டு விட்டு வெளியில் சென்று விட்டான். உடனே நாங்கள் இது தான் சாக்கு என்று அவனது கணக்கினுள் நுழைந்து அவன் இது வரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத எங்கள் வகுப்பு பெண் ஒருத்தியின் ஆர்குட் ஸ்கிரேப்புக் இல் சென்று (முகநூலில் உங்கள் நண்பரின் சுவரில் இடுகை இடுவது போல) பின் வரும் இடுகையை இட்டோம்

"வாழ்க்கையில் பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணம் 'ஆம்' என சீக்கிரமே சொல்லி விடுவது அல்லது 'இல்லை' என மிக தாமதமாக சொல்லி விடுவது. நீ இல்லை என ஒரு தடவை சொல்வதற்கு முன் ஒரு முறை என்னைப் பற்றியும் யோசி". 

கீழே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் வரும் என்ன சொல்லப் போகிறாய் பாடலின் வீடியோ சுட்டி, இவற்றை இணைத்து விட்டோம். 

இவன் வந்து இதைப் பார்த்து விட்டால் அழித்து விடக்கூடும் என எண்ணி அதை அப்படியே திரைச்சொட்டு எடுத்து (ஸ்கீரீன் ஷாட்) வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் அனுப்பி, பாருங்க முத்து ராமன் என்ன வேலையெல்லாம் பாக்குறான் என்று பரப்பி விட்டாயிற்று. எங்களோடு சேர்ந்து இருந்ததால் இவனுக்கு சூடு சொரணை எதுவும் இல்லை. அவன் இதை கண்டு கொண்டது போல தெரியவில்லை. ஆனால் அந்த பெண் அப்படி இருக்க மாட்டாள் அல்லவா, அவளுக்கு ஒரே குழப்பம். இவன் கூட நாம ஒரு தடவை கூட பேசினது இல்ல, எதுக்கு இவன் லூசு மாதிரி இப்படி நம்மளுக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கான் என்ற குழப்பத்தில் இவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். நாங்கள் எது நடக்க கூடாது என எதிர்பார்த்தோமோ அது நடந்து விட்டது. பதிலுக்கு இவனும் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப, ஏர்டெல் நிறுவனம் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்தி கொடுக்க, இவன் அந்த 100 ஐயும் அவளுக்கே அனுப்ப, கடைசி வரை யில் நாங்கள் பெண்களின் ஆர்குட் சுயவிவரத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். என்னடா இது இவனை கோர்த்து விட பார்த்தா இவன் வாழ்க்கைய அனுபவிச்சு வாழ்ந்திட்டு இருக்கான் என்று எங்கள் எல்லோர் காதிலும் புகை.

ஆனால் ஏற்கனவே கூறியது போல விதி வலியது அல்லவா, மீண்டும் ஒரு முறை இவன் ஆர்குட்டில் உள்நுழைந்து விட்டு அப்படியே விட்டு விட்டு ஊர் மேய சென்று விட்டான். இந்த சந்தர்ப்பத்தை விடக் கூடாது என எண்ணி இருந்தோம். இம்முறை இவன் தப்ப முடியாத படி கோர்த்து விட வேண்டும் என எண்ணினோம். அதனால் இம்முறை வேறொரு பெண்ணின் சுய விவரத்திற்கு சென்றோம். அங்கு சென்று,

பெண்ணே,
பொங்கலுக்கு மட்டும் தானே வெள்ளை அடிப்பார்கள்,
நீ என்ன
தினம் தினம் வெள்ளை அடிக்கிறாய்
உன் முகத்திற்கு!

என பதிவிட்டு வழக்கம் போல அதை திரைச்சொட்டு எடுத்து எல்லோருக்கும் அனுப்பியாற்று. இம்முறையும் அவன் இந்த பெண்ணிடம் பேசியது கூட இல்லை. இந்த முறை நாங்கள் எதிர்பார்த்த வெற்றிக்கும் மேலே கிடைத்தது. குறுஞ்செய்தியெல்லாம் இல்லை, அவனுக்கு நேரே அழைப்பே வந்தது. எடுத்து காதில் வைத்து ஹலோ சொன்னது தான் தாமதம், அந்த முனையில் இருந்து அந்த பெண் கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்தாள், முதலில் ஹி ஹி என்று சிரித்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல இவனின் சிரிப்பைக் கேட்டு அந்த பெண் உக்கிரமடைந்திருப்பாள் போல, நிறுத்தவே இல்லை. இவன் காதிலிருந்து அலைபேசியை எடுத்து கீழே வைத்து விட்டான்.

அப்பப்பா எந்த ஊர்காரிடா இவ, என்னா கிழி கிழிக்கிறா, காதுல இரத்தம் வருது. அப்படி என்னடா எழுதினீங்க?

என்ன எழுதினோம்னு கூட தெரியாதா?

தெரிலடா, வழக்கம் போல எதாவது எழுதி இருப்பீங்க, அந்த பொண்ணு மெசேஜ் பண்ணுவானு நினைச்சேன், இப்படி திட்டுறா, பாரு நான் போனை கீழ வெச்சு 5 நிமிஷம் ஆச்சு, எதிர் சைட்ல இருக்கிறவன் என்ன ஆனானு தெரியாம கூட திட்டிட்டு இருக்கா. 

யாராவது போன் வாங்கி அப்பபோ ஒரு உம் மட்டும் கொட்ட முடியுமா என்று போனை கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தான். அந்த பெண் இன்னும் திட்டி முடிக்கவில்லை. இருப்பு தீர்ந்து விட்டதோ அல்லது அலுத்து விட்டதோ தெரியவில்லை, புயலடித்து ஓய்ந்தது போல அந்தப் பெண் கடைசியாக நிறுத்தினாள். இவனும் மன்னிப்பு கேட்டு விட்டு போனை வைத்து விட்டான். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் முதலில் குறிப்பிட்ட பெண்ணும் இவனுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தி விட்டாள். அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு என்று நாங்கள் எல்லோரும் பெருமூச்சு விட்டோம். ஆனால் இத்தனை நடந்த பிறகும் அவன் அந்தப் பதிவை எழுதியது நான் இல்லை, எனது நண்பர்கள் தான் என்று ஒரு வார்த்தை கூட அந்தப் பெண்ணிடம் சொல்லவில்லை. முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்தகநக நட்பதல்லவா நட்பு :)

இந்த இரு சம்பவங்களும் அரசல் புரசலாக மற்ற துறை மாணவர்களிடம் பரவியது. ஒருவர் மாற்றி ஒருவரிடம் சென்று கடைசியில், "டேய் ஐ.டி டிப்பார்ட்மெண்ட் பசங்க ஆர்குட் அக்கவுண்டையே ஹேக் பண்றாங்களாமாடா" என்று முடிந்தது. ஒரு நாள் மின்னியல் துறையில் இருந்து ஒருவன் வந்து முத்து ராமனிடமே, மச்சி உங்க கிளாஸ் பசங்க ஆர்குட் அக்கவுண்ட ஹேக் பண்றாங்களாமா, அது எப்படினு சொல்ல முடியுமா என்று கேட்டான். இவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே என்னிடம் அனுப்பி வைத்தான்.  அவனிடம் விபரங்களையெல்லாம் கேட்ட பிறகு, யார் அக்கவுண்ட ஹேக் பண்ணனும் என்றேன். அவனுடைய ரூம் மேட் அக்கவுண்ட் தான் என்றான். அப்படியென்றால் இன்னும் வசதியாக போயிற்று எனக் கூறி அவனோடு அவனது அறைக்கு சென்றேன். அப்போது அவனது ரூம் மேட் ஆர்குட்டில் மேய்ந்து கொண்டிருந்தான். நான் அப்படியே எதேச்சையாக இவனிடம் பேசுவது போல, டேய் இந்த வாரத்துல இருந்து திங்கட்கிழமைக்கு பதிலா, இன்னைக்கே மெஸ்ல வடை போடுறாங்களாம் என்றேன். இதைக் கேட்ட அவனது ரூம் மேட், தட்டை தூக்கிக்கொண்டு மெஸ் நோக்கி ஓடினான். நான் உடனே, சீக்கிரம் சீக்கிரம் கதவை பூட்டு என்றேன். எதுக்குடா என்று அவன் குழப்பமாக கேட்க, இந்தா அவசரத்துல ஆர்குட்ல லாக் அவுட் பண்ணாம அவன் போயிருக்கானா, நாம உடனே கபால்னு அந்த அக்கவுண்ட்குள்ள நுழைஞ்சிடனும். அவ்வளவு தான் ஹேக்கிங் என்றேன். அவன் கீழே ஏதோ விழுந்தது போல சுற்றி சுற்றி தேடிக் கொண்டிருந்தான். காறி துப்ப தான் அப்படி பார்க்கிறான் எனப் புரிந்து கொண்டேன். இவர்களாகவும் சொந்தமாக யோசிக்க மாட்டார்கள், நாம் புத்திசாலித்தனமாக யோசித்தாலும் மதிக்க மாட்டார்கள் என்ற கவலையோடு அந்த அறைய விட்டு வெளியே வந்தேன். கவனிக்க - நடந்து தான் வந்தேன், ஓடி வரவில்லை :)

வியாழன், 8 பிப்ரவரி, 2018

உண்மையான முருகனும், ஒரு ஹட்ச் சிம்மும்


(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் முதல் பகுதி இது. இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இந்த சம்பவம் நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பொழுது நடந்தது. (இதற்கு பிறகு அடுத்த வரியை இளம்பெண்கள் படிக்காமல் அதற்கு அடுத்த வரிக்கு சென்று விடவும். மற்றவர்கள் தசாவதாரம் கமல் குரலில் தொடரவும்) இந்த கதையைச் சுருங்க சொல்வதானால் சுமார் 12 ஆண்டுகளாவது பின்னோக்கிப் போக வேண்டி இருக்கும். ஜியோவும் 4ஜியும் கல்லூரிக்குள்ளும் அதன் விடுதிக்குள்ளும் புகாத காலம். ஏர்டெல்லும் ஹட்ச் உம் மோதி விளையாட வேறொருவர் இன்றி தள்ளுபடிகள் மூலம் தம்முள் மோதிக் கொண்ட காலம். அப்போது என்னிடம் கைப்பேசி இல்லை. என்னிடம் மட்டுமில்லை கல்லூரியில் பெரும்பாலானோரிடம் கைப்பேசி கிடையாது. விடுதிக்கு அருகில் ஒரே ஒரு தொலைபேசி சாவடி இருக்கும். அதுவும் எப்பொழுதும் நிரம்பி வழியும்.

இந்நிலையில் தான் ஹட்ச் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கல்லூரிக்குள்ளேயே கடை விரித்தார்கள். அடையாள அட்டை மட்டும் கொடுத்தால் போதும், 50 ரூபாய்க்கு ஒரு சிம் கிடைக்கும். அதில் 120 ரூபாய் வரை பேசிக் கொள்ளலாம். மேலும் எதேனும் 2 ஹட்ச் எண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நிமிடத்திற்கு 10 பைசாவிற்கு பேசிக்கொள்ளலாம். சரி எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு சிம் வாங்கிக் கொண்டேன். நண்பன் ஒருவனிடம் கைப்பேசி இருந்தது. அவ்வப்பொழுது அந்த கைப்பேசியில் இந்த ஹட்ச் சிம்மை போட்டு வீட்டிற்கு பேசி விட்டு பின் சிம்மை கழட்டி விடுவேன். ஆனால் இந்த 10 பைசா திட்டத்திற்கு என்ன செய்வது? எனது வீட்டிலும் கைப்பேசி கிடையாது. சோஷலிஸ முறையில் தீவிர நம்பிக்கையுள்ள எனது தந்தை பி.எஸ்.என்.எல் தொலைபேசி தவிர வேறெந்த நிறுவனத்தையும் நம்பாதவர். கடலை போட கன்னியரோ காதலிகளோ இல்லாத காலம். எப்படி தான் அந்த 10 பைசா திட்டத்தை பயன்படுத்த என யோசித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் படித்தது அரசு கல்லூரி என்றாலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். வீட்டில் சொல்வது போல விளக்கு வெச்ச பொறவு ஆரும் விடுதிய விட்டு வெளிய போக முடியாது. கிட்டதட்ட யாரிடமுமே கணிணி கூட கிடையாது. 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே ஒரு தொலைக்காட்சி பெட்டி உண்டு. அதையும் சனிக்கிழமை இரவு பக்தி படங்களுக்குப் பிறகு சீண்டுவாரில்லை. அதனால் பொழுது போகாமல் இருக்கும் எங்களுக்காக வராது வந்த மாமணி போல திகழ்ந்தது இந்த ஹட்ச் சிம்.

நண்பர்களின் நண்பர்களுக்கு போன் போட்டு அவர்களை கலாய்க்க ஆரம்பித்தேன். உங்களுக்கு எல்லாம் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி சொல்லப் போகிறேன். கிராஸ் டாக்கை கண்டுபிடித்தது புரட்சியாளர் அண்ணல் ஆர். ஜே. பாலாஜி அல்ல. அதற்கு முன்பே எங்கள் கல்லூரி விடுதியில் அந்நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இப்படி நண்பர்களின் நண்பர்களை கலாய்க்கும் போது பின்வரும் 4 விதிகளை பின்பற்றினால் எந்த தொல்லையும் இருக்காது

1) சூடு சொரணை அறவே கூடாது. எதிராளி எவ்வளவு கெட்ட வார்த்தைகள் பேசினாலும் கோபப்படக் கூடாது. எதிராளி பேசும் ஒவ்வொரு கெட்ட வார்த்தையும் அவன் கடுப்பாகி விட்டான் என்பதை உணர்த்துகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு கெட்ட வார்த்தையும் உங்களுக்கு கிடைக்கும் ஒரு பேட்ஜ் போல.

2) நாம் யார் என்பதை கடைசி வரை சொல்லக் கூடாது. தெரிந்து விட்டால் நமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

3) ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக கலா ய்க்க வேண்டும். இல்லையென்றால் நமக்கே போரடித்து விடும்.

4) முக்கியமாக சொதப்பி விட்டால் கூச்சமே படமால் போனை வைத்து விட வேண்டும். திருப்பி அந்த எண்ணுக்கு பேசவே கூடாது

இப்படியாக எங்கள் விடுதியில் ஒவ்வொருவரும் யாரையாவது வம்புக்கு இழுத்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். இதில் முக்கியமாக குறிப்பிடக் கூடியவர்களுள் இயந்திரவியல் துறையைச் சேர்ந்த எனது நண்பனும் இருந்தான். பெயர் தமிழ்செல்வன். மங்களகரமான பெயர். ஆனால் அவன் என்னைப் போல சாத்வீகம் இல்லை. எடுத்த எடுப்பிலேயே கெட்ட வார்த்தையில் தான் ஆரம்பிப்பான். ஒரு முறை ஒரு கிராஸ்டாக்கில் விடாமல் தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு கெட்ட வார்த்தையாக பேசிக் கொண்டிருந்தான். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒரு கெட்ட வார்த்தை கூட மறுபடியும் அவன் பயன்படுத்தவில்லை. தமிழில் அத்தனை கெட்ட வார்த்தைகள் இருப்பது 'கெட்ட வார்த்தை பேசுவோம்' புத்தகம் எழுதிய பெருமாள் முருகனுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு முறை எனது ஹட்ச் சிம்மில் இருந்த 120 ரூபாயில் 119.20 பைசாவுக்கு பேசி தீர்த்து விட்டேன். மீதி 80 பைசா இருந்தது. ஹட்ச் அல்லாத வேறு ஒரு எண்ணுக்கு பேசினால் நிமிடத்திற்கு 1 ரூபாயாவது ஆகும். அதனால் பேச முடியாது. ஆனாலும் அந்த 80 பைசாவை விட மனமில்லை. ஒற்றைப் புல்லை வைத்து ஆராய்ச்சி செய்யும் செந்தில் போல ஆராய்ச்சி செய்ததில் ஒரு யோசனை தோன்றியது. நண்பனின் நண்பன் ஒருவன் ஹட்ச் சிம் வைத்திருந்தான். அவனுடைய எண்ணிற்கு என்னுடைய சிம் மூலம் 10 பைசா திட்டத்தை செயல்படுத்தி அவனுக்கு அழைத்தேன். அநேகமாக அது நள்ளிரவாக இருக்கும் என எண்ணுகிறேன். நன்றாக தூங்கி கொண்டிருந்தான் போல.

"ஹலோ ராஜ்குமாரா?"

"ஆமா, நீங்க யாரு, இந்த நேரத்துல போன் பண்ணிருக்கீங்க"

"நான் யாருங்கறது முக்கியம் இல்லை, ஆனா நான் சொல்லப் போற விஷயம் தான் ரொம்ப முக்கியம்."

"......."

"எங்க காலேஜ் பக்கத்துல ஹட்ச் சிம் கடை போட்டாங்க, 50 ரூபாய்க்கு சிம் வாங்குனா 120 ரூ வா டாக்டைமா, அதனால ஒரு சிம் வாங்கினேன்."

"இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லறீங்க?"

"இருப்பா, முழுசா கேளு. 120 ரூவால 119 ரூவாய் 20 காசுக்கு நான் பேசி தீர்த்துட்டேன். இன்னும் 80 காசு தான் இருக்கு. ஆனா ஒரு கால் பண்ணணும்னா குறைஞ்சது 1 ரூவாயாவது வேணும். ஆனா வேற ஒரு ஹட்ச் சிம்முக்கு 10 பைசா ஸ்கீம ஆக்டிவேட் பண்ணா 8 நிமிஷம் பேசலாம். அதனால தான் உன் நம்பருக்கு ஆக்டிவேட் பண்ணிட்டேன். அதனால நீ என்கூட ஒரு 8 நிமிஷம் பேசிட்டு இரு."

"அடிங்..... நாயே, யாருடா நீ, என்ன கலாய்க்கிறியா?" (1 பேட்ஜ் சம்பாதித்தாயிற்று)

"மிஸ்டர் ராஜ்குமார் நான் எவ்வளோ டீசண்டா உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க என்னடானா இப்படி பேசறீங்க. இங்க பாருங்க நமக்கு இன்னும் 5 நிமிஷம் தான் இருக்கு. அதுக்கு அப்புறம் நான் இந்த சிம்மை தூக்கி போட்டிருவேன். ஏன்னா பாருங்க ரீசார்ஜ் பண்றதுக்கு பதிலா புது சிம் வாங்கினா 50 ரூவாய்க்கு 120 ரூவா டாக்டைம் கிடைக்குது."

"டேய் எந்த .....டா நீ?" (மற்றுமொரு பேட்ஜ்)

"மிஸ்டர் ராஜ்குமார் நமக்கு இன்னும் 4 நிமிஷம் தான் இருக்கு, அதுல நாம் இப்படி சண்டை போட்டுக்கணுமா? உலகம் ரொம்ப பெரிசு ராஜ்குமார், வாங்க எதாவது சந்தோஷமா பேசலாம்."

"டேய் எவனோ என் பிரெண்டுனு தெரியுது, எவன்னு சொல்லுங்கடா, ஒண்ணும் பண்ண மாட்டேன், மிட்நைட்ல இப்படி கால் பண்ணி சாவடிக்காதீங்கடா."

"என்ன பண்றது ராஜ்குமார், காலம் அப்படி கெட்டு கிடக்குது. இந்த மாதிரிலாம் சிம் கொடுத்தா என்ன பண்றது நீங்களெ சொல்லுங்க."

"டேய் பிளீஸ்டா, முடியல மொக்க போடாதீங்க"

"முடி இல்லைனா மொட்டை தான போட முடியும், எப்படி மொக்க போட முடியும்?"

"......"

"இதோ கடைசி நிமிஷத்துக்கு வந்துட்டோம் ராஜ்குமார். வேற ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?"

"டேய் யார்டா நீ? உண்மைய சொல்லு. குமார் தான?"

"ஒகே ராஜ்குமார், உங்க கூட பேசினது ஒரு நல்ல அனுபவமா இருந்துச்சு, என்னோட கடைசி 80 பைசாவ நல்லபடியா உபயோகிச்சேனு ஒரு மனதிருப்தி இருக்கு. திருப்பி இந்த நம்பருக்கெல்லாம் டிரை பண்ணாதீங்க, ஏன்னா நாளைக்கு நான் வேற சிம் வாங்கிடுவேன். 50 ரூவா சிம், 120 ரூவா டாக்டைம். பை பை!"

அறையில் இருந்த எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ராஜ்குமாரின் நண்பன், அதாவது அவனது எண்ணை எனக்கு கொடுத்த எனது நண்பன் என்னிடம், டேய் அவன் ரொம்ப பாவம்டா, அவன் கெட்ட வார்த்தை பேசி நானே பார்த்ததில்லைடா என்றான். இதெல்லாம் என்ன பெருமையா, நம்மளோட கடமை.

அதன் பிறகு எனது நண்பன் அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது ராஜ்குமார் அவனிடம் சோகம் கலந்த கோபத்தோடு,

"எந்த நாய்னே தெரிலடா, ஒரு நாள் நைட்டு போன் போட்டு கலாய்ச்சுவிட்டான். ஒரு ஹட்ச் சிம்முக்கு 2 நம்பரோட தான் 10 பைசா ஸ்கீம் போட முடியும், ஏற்கனவே அம்மா நம்பருக்கு போட்டிருந்தேன், இன்னொன்னு என் ஆள் நம்பருக்கு போடறதுக்குள்ள இவன் குறுக்க புகுந்திட்டான். அதானால இப்போ என் நம்பரையே மாத்திட்டேன். இவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்..."

"சரி விடு மச்சி. உன் புது நம்பர் சொல்லு, நோட் பண்ணிக்கறேன்"

"9841....."

"என்ன மச்சி பி.எஸ்.என்.எல் நம்பரா?"

"ஆமாடா, பி.எஸ்.என்.எல் தான் எந்த காலேஜ் பையனும் வெச்சிருக்க மாட்டான். அதான்."

"சரிடா."

அதன்பிறகு எனது நண்பன் விடுதிக்கு வந்தவுடன் முதல் வேலையாக என்னிடம் ராஜ்குமாரின் புது எண்ணைக் கொடுத்தான். நானும் வேறொரு ஹட்ச் சிம் வாங்கி அவனை கலாய்க்க ஆரம்பித்துவிடேன். முதலில் கோ பமாக பேசியவன், நாளாக நாளாக கெஞ்ச ஆரம்பித்து விட்டான். அதன் உச்சகட்டமாக ஒரு நாள் அவனாகவே போன் செய்து பேச ஆரம்பித்தான். நானும் அவனை கலாய்த்துக் கொண்டே இருந்தேன்.

"டேய் இங்க பாரு உன்னை எதுவும் பண்ண மாட்டேன். யாரோ நீ என் பிரெண்டு தான். உன் பேரு மட்டும் சொல்லு."

"பேருல என்ன இருக்கு ராஜ்குமார். எல்லாம் நாம பண்ற செயல்ல தான இருக்கு,"

"டேய் மொக்க போடாதடா. இங்க பாரு எனக்கு ஒரு காலுக்கு ஒரு ருவா."

"அப்போ உன் ரெண்டு காலுக்கும் மொத்த மதிப்பே 2 ரூவாதானா, ஹே ஹே ஹே"

"டேய் எரிச்சல கிளப்பாத, உன்கூட 45 நிமிஷம் பேசி 45 ரூவா செலவழிச்சிருக்கேன். பேரு மட்டுமாவது சொல்லுடா"

"உனக்கு என்ன, என் பேர் தானா வேணும், முருகன்னு வெச்சுக்கோ."

"டேய் உண்மையான பேர் சொல்லுடா"

"உண்மையான முருகன்னு வெச்சுக்கோ, ஹா ஹா ஹா"

டக்!

அதன் பிறகு அவன் பேசவே இல்லை. ஹட்ச் சிம் தள்ளுபடியும் முடிந்து விட்டது. முதலாம் ஆண்டும் முடிந்தது. இரண்டாம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் வெளியில் சென்று வர சுதந்திரம் இருந்ததால், அதன் பிறகு இந்த போன் விளையாட்டுகளில் ஈடுபடவில்லை.

ஒரு நாள் எனது நண்பன் தலைதெறிக்க எனது அறைக்கு ஓடி வந்தான்.

"டேய் சீக்கிரமா உன் கடைசி ஆச என்னனு சொல்லு!"

"எதுக்குடா?"

"நம்ம ராஜ்குமார் இருக்கான்ல,"

"எந்த ராஜ்குமார்?"

"அதான ஒருத்தன் ரெண்டு பேர கலாய்ச்சா ஞாபகம் இருக்கும். ஊருல இருக்கற எல்லார் கிட்டயும் ஒரண்டை இழுத்தா எப்படி ஞாபகம் இருக்கும், அதாண்டா, என் பிரெண்டு, நான் கூட நம்பர் வாங்கி கொடுத்தேன்ல, ஹட்ச் சிம், அந்த 80 பைசா, அப்புறம் அந்த உண்மையான முருகன்... அவன்"

"ஆமா ஆமா, அவனுக்கு என்ன இப்போ?"

"அவன் இப்போ டிரான்ஸ்பர் வாங்கி நம்ம காலேஜுக்கே வந்துட்டான். அதுவும் நம்ம டிபார்மெண்ட். நீ செத்த, ஹே ஹே ஹே"

எனக்கு ஒரு நிமிடம் திடுக்கென்றது. (அரசு கல்லூரிகளுக்குள் முதலாமாண்டு முடிந்தவுடன் இரண்டாம் ஆண்டில் மாணவர்களும் மாற்றல் வாங்கி வரலாம்)

"சொல்றா உன் கடைசி ஆச என்ன, எப்படியும் நீ இன்னைக்கு சாகப் போற."

இந்த இடத்தில் என்னைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். வாய் இருக்கும் அளவுக்கு எனக்கு உடம்பு கிடையாது. மிகவும் ஒல்லியாக இருப்பேன். வகுப்பில் கூட என் பட்ட பெயர் கொசு. அறையில் ஆல் அவுட் வாங்கி வைத்தால் கண்டிப்பாக இவனைக் கொன்று விட்டு இவன் தொல்லையில் இருந்து தப்பி விடலாம் என மிகத் தீவிரமாக நம்பிக் கொண்டிருந்த நண்பன் ஒருவனைத் தெரியும் எனக்கு. உடம்புக்கேற்ற வாய் இருந்திருக்கலாம். ஆனால் விதி வலியது.

மேலும் என்னைப் போல பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் சகஜம் என்பதால் அவன் என்னைக் கண்டறிவதற்கு முன்னால் நானே அவனிடம் நேரடியாக சென்று பேசலாம் என முடிவெடுத்தேன்.

"இப்போ எங்கடா இருக்கன் அவன்?"

"மெஸ்ல சாப்பிட்டுட்டு இருக்காண்டா, ஏன், போய் கால்ல விழப் போறியா?"

நான் மிகுந்த மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெஸ் பக்கம் சென்றேன். தனியாக உட்கார்ந்து ஒருவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தான் ராஜ்குமாராக இருக்க வேண்டும். தூரத்தில் இருந்தேன் அவனை நோட்டம் விட்டேன். சாதரணமாகத் தான் இருந்தான். என்னை விட பலசாலி தான். என்னை ஒப்பிடும் போது எல்லோருமே பலசாலி தான். ஆனால் தப்பி ஓடி விடக் கூடிய அளவுள்ள பலசாலி என்பது மனதுக்கு சற்று ஆறுதல் தந்தது.

"ராஜ்குமாரா?"

"ஆமா!" (குரலில் லேசான பதற்றம் தெரிந்தது. ஏனென்றால் நேரடியாக இரண்டாம் ஆண்டில் வருவதால் அவ்வளவாக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். மேலும் யார் சீனியர், யார் நம் வகுப்பு என்பதிலும் குழப்பம் இருக்கும்)

"என்ன தெரியலையா?"

"சாரி, தெரியல, நீங்க யாரு?"

"நான் தாம்பா உண்மையான முருகன்!"

ஓரிரு நொடிகள் அவன் கண்களில் கொலை வெறி தெரிந்ததை கவனித்து விட்டேன். ஷெர்லாக் திரைப்படத்தில் வில்லனை அடிக்கும் முன்பு, அவனை எவ்வாறெல்லாம் அடிக்கலாம் என்று ஷெர்லாக் ஒரு முறை மனதில் ஒத்திகை நடத்துவதுண்டு. அது போ ல ஏதேனும் ஒத்திகையை நடத்திக் கொண்டிருக்கிறானோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக அவன் கண்களில் இருந்த கொலை வெறி மறைந்து குழப்பம் பரவியது. புதிய கல்லூரி, புதிய இடம், எதற்கு பிரச்சனை என்று எண்ணக்கூடிய என்னைப் போன்று ஒரு அப்பாவி என்று நினைக்கிறேன். ஆனால் அதன் பிறகு அவன் என்னிடம் பேசியதே இல்லை. நானும் அவனிடம் பேசியதே இல்லை. சண்டை என்றெல்லாம் இல்லை. இருவருக்குமே பேச தேவை இருக்கவில்லை. கல்லூரியில் உங்களோடு படித்த எல்லோரிடமுமா நீங்கள் பேசியிருப்பீர்கள், அதே போலத் தான் :)

சனி, 25 ஏப்ரல், 2015

இணைய போராளி (Internet Rebel) ஆவது எப்படி ?

இணைய போராளி ஆவது எப்படி ?

இணைய போராளி ஆவதற்கு முன்னால், இணைய போராளியின் விளக்கத்தை தெரிந்து கொள்வோம். இணைய போராளி என்பவன்(ள்) எல்லா விஷயத்திற்கும் கருத்து சொல்பவராகவும், கலாச்சாராத்தைக் காப்பவராகவும், கிரிக்கெட் மேட்சில் மட்டும் மிக தீவிர தேசியவாதியாகவும் (கவனிக்க ஐ.பி.எல் அல்ல), அவ்வப்பொழுது திராவிடனாகவும், அவ்வப்பொழுது பச்சை தமிழனாகவும் மாறக்கூடியவராகவும் இருக்க வேண்டும். வாங்கும் சம்பளத்தில் அரசாங்கத்தை ஏமாற்றி வீட்டு வாடகையை ஏற்றி போடுபவராகவும், மெடிக்கல் பில் கொடுப்பவராகவும், தான் மட்டும், பஸ்ஸில் வாங்கிய டிக்கட்டை பஸ்ஸின் உள்ளேயோ அல்லது ரோட்டிலோ வீசி எறிந்து விட்டு, ஸ்வச் பாரத் திட்டத்தை கிழித்து தொங்க விடுபவராகவும் இருக்க வேண்டும். இன்னும் பல "வேண்டும்"கள் இருக்கின்றன. எனவே அனைவரும் நினைப்பது போல் அவ்வளவு சாதாரணமாக ஒரு இணைய போராளி ஆகி விட முடியாது. இதற்கு தேவை குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும். ஆனாலும் பின்வரும் செய்முறையை தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றினால் நீங்களும் ஆகலாம் இணைய போராளி.

தேவையான பொருட்கள் :

1) பிட் வீடியோ டவுன்லோட் செய்யும் அளவிற்கு இண்டெர்நெட் வசதி
2) ஒரு பேஸ்புக் கணக்கு
3) ஒரு வாட்ஸாப் கணக்கு
4) ஒரு ட்விட்டர் கணக்கு

முதலில் அரசியல் :

இணைய போராளிக்கு கிஞ்சித்தும் அரசியல் ஞானம் இருக்க கூடாது. அரசியல் ஒரு சாக்கடைபா என்ற பொதுவான எண்ணம் இருக்க வேண்டும். தப்பி தவறியும் ஓட்டு போடக் கூடாது. தேர்தல் அன்னைக்கு மேனேஜர் லீவு தரலபா என்று சமாளிக்க வேண்டும். ஊரே சேர்ந்து ஏதாவது அரசியல்வாதியை இணையத்தில் திட்டிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தோடு கோவிந்தாவாக நாமும் திட்ட வேண்டும். மோடி வெளிநாடு போனாலும் திட்ட வேண்டும், மன்மோகன் சிங் போகவில்லை என்றாலும் திட்ட வேண்டும். நமக்கு விளைவுகளா முக்கியம் ? புரட்சி தான் முக்கியம்.

இலவசம் தரும் அரசாங்கத்தை சரமாரியாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் திட்ட வேண்டும். ஆனால் நமது வீட்டில் அரசாங்கம் தரும் அனைத்து இலவச பொருட்களும் இருக்க வேண்டும். யாராவது கேட்டால், நம்ம பணம் தானேபா என்று வியாக்கியானம் பேச போராளிகள் மறக்க கூடாது. சில பல ஒன் லைன் ஜோக்குகள் அரசியல்வாதிகளை வைத்து வைத்து எழுதி கூட்டம் சேர்க்க மறக்க கூடாது.

அடுத்ததாக சினிமா :


பேஸ்புக்கில் அஜித்- விஜய் வெறியர்கள் போன்ற‌ ஏதாவது ஒரு குழுவில் மெம்பராக இருத்தல் அவசியம். லைக் ஃபார் அஜித் கமெண்ட் ஃபார் விஜய் போன்ற நாட்டுக்கு தேவையான போஸ்ட்களில், கமெண்ட் அல்லது லைக் போடும் பூரா பயலுகளும் நாமாக இருத்தல் அவசியம். எந்த சினிமா வந்தாலும் விமர்சனம் எழுத வேண்டும். படம் பார்த்தாலும் சரி பார்க்காவிட்டலும் சரி. முக்கியமான விஷயம், படத்தை பற்றி டெக்னிக்கலாகவோ அல்லது வேறு ஏதும் தளங்களிலோ அலசுதல் நம்மைப் போன்ற போராளிகளுக்கு அழகல்ல. நமக்கு பிடிக்காத நடிகர் படம் என்றால் "காட்டு மொக்கை ஜீ" என்றும் பிடித்த நடிகர் படம் என்றால் "தா... செம மாஸ், இப்போ வாங்கடா" என்று விமர்சனம் போட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும்.

கூட்டம் சேர்க்க இன்னொரு முக்கியமான விஷயம், நம்மைப் போன்ற சக போராளிகளின் போஸ்ட்களில் லைக் போட்டு அவர்களுக்கு சொறிந்து விடுதல் அவசியம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

அப்புறம் இலக்கியம் :

இது ஒவ்வொரு இணைய போராளிக்கும் முக்கியமான கட்டம். இங்கு தான் நாம் அனவரும் ஒரு இண்டெலெக்சுவல் என்பதை ஊருக்கு அறிவிக்கும் நேரம். எந்த புத்தக கண்காட்சி வந்தாலும், அங்கு நிற்கும் முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும். புத்தகம் வாங்குவது போல 4-5 செல்பி எடுத்து போட்டு லைக்குகள் அள்ள வேண்டும். இணைய போராளிக்கு முக்கியமான பண்பே எந்த புத்தகத்தையும் படிக்காமல் இருப்பது தான், அதுல தான் மச்சி கெத்து. நாங்கள்லாம் ஸ்கூல்  புஸ்தகத்தையே படிக்காதவங்க என்று காலர் தூக்கி விட்டு ஆதித்யா டிவி பார்க்க சென்று விட வேண்டும். மேலும் எந்த இலக்கியவாதி காலம் ஆனாலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் முதல் ஆளாகவும் நாம் தான் இருக்க வேண்டும். சில அட்வான்ஸ்ட் இணைய போராளிகள், உயிரோடு இருக்கும் சில இலக்கியாவாதிகளுக்கு அஞ்சலி எழுதி வைத்து இருப்பாதாக கேள்வி. கவனிக்க.

இந்தியா :

இதில் 2 வகையான இணைய போராளிகள் உண்டு. 2 ஐயும் பார்த்து விட்டு எந்த குழுவில் சேர்வது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

குரூப் 1 - ரட்சகன் குரூப் :

இந்தியா மீது வெறித்தனமான பற்று ஆன்லைனில் மட்டும் இருக்க வேண்டும். உலகத்தில் எந்த மூலையில் எவன் எதை கண்டு பிடித்தாலும், கி.மு 4000 லேயே இந்தியாக்காரன் இதை கண்டு பிடித்து விட்டான் என மகாபாரதம் மேற்கோள் காட்ட வேண்டும். நேதாஜி, பகத் சிங் என்று எவர் பிறந்த நாள் வந்தாலும் ( அது உண்மையான பிறந்த நாளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எவனோ ஒரு சக போராளி ஆரம்பித்து வைப்பான் இன்று இவர் பிறந்த நாள் என்று), ரத்தம் தெறிக்கும் அளவுக்கு ஸ்ட்டேடஸ் இருக்க வேண்டும். முக்கியமாக காந்தியை கிழித்து தொங்க விட வேண்டும். அப்போ தான் மச்சி திரும்பி பார்ப்பாங்க. அதற்கு காந்தி சுயசரிதையோ அல்லது இந்திய வரலாறோ படிக்க‌ வேண்டிய அவசியம் இல்லை.

குரூப் 2 - என்னத்த கண்ணையா குரூப் :

எப்போதும் இந்தியா மீது ஒரு வெறுப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழ் நாடு தனி ஆனால் தான் உருப்படுவோம் என்று சில பல மேற்கோள்கள் காட்ட வேண்டும் , என்னது புது நாட்டிற்கு ஏற்றுமதி இறக்குமதி, பொருளாதாரம், பாதுகாப்பு இவற்றுக்கான தீர்வா ? போராளிகளான நமக்கு புரட்சி தான் முக்கியம். தனித்தமிழ்நாடு தான் அதற்கு தீர்வு. அப்புறம், பேசாம வெள்ளைக்காரனே நம்மை ஆண்டிருக்கலாம் என சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் அன்று ஸ்டேட்டஸ் போட வேண்டும். சர்ச்சையை கிளப்புனாதான் பாஸ் பிரபலம் ஆவோம்.

தமில் சாரி தமிழ் :

தமிழ் மீது வெறி இருக்க வேண்டும். பைசா நகர் கோபுரத்தையும் பெரிய கோவிலையும் கம்பேர் பண்ணி பாத்தியாடா எங்க கெத்து அப்படினு ஸ்ட்டேட்டஸ் போடனும். ரட்சகன் குரூப் போல எவன் எதை கண்டுபிடித்தாலும் அதற்கு தமிழன் தான் முன்னோடி என்று எவன் மெசேஜ் பார்வார்டு பண்ணாலும், அதை அப்படியே ஒரு நொடி கூட சிந்திக்காமல் 10-15 குரூப்பிற்கு பார்வார்டு பண்ண வேண்டும். முக்கியமான விஷயம், மனித இனத்திலேயே, தமிழர் இனம் தான் அறிவார்ந்த இனம் என்கிற திமிர் நமக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தமிழை யாரும் காப்பாத்த மாட்டேங்கிறாங்க மச்சி என்று சொல்லிக்கொண்டே ஹாரிபாட்டர் இந்த சாப்டரில் என்ன சொல்றார் என கேட்க வேண்டும். முக்கியமாக தமிழர் புத்தாண்டு அன்று தமிழ் வெறி அளவுக்கு அதிகமாக பொங்கி வழிய வேண்டும். டைனோஸர அழிச்சதே தமிழ் இனம் தான்டா என கூச்சப்படாமல் அளந்து விட வேண்டும். அதற்கு ரெபரன்ஸாக புறநானூற்றில் உள்ள பாடலை காண்பிக்க வேண்டும். அரசாங்க பள்ளியில் ஆங்கில மீடியம் வந்தால் எதிர்க்க வேண்டும், ஆனால் நமது பையனை இண்டர்னேஷனல் ஸ்கூலில் சேர்க்க மறக்க கூடாது. நமக்கு புரட்சி தான் முக்கியம் மச்சி.

சமூகம் :
சமீபத்தில் இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், இணைய போராளிகளுக்கு தான் சமூகம் சார்ந்த அக்கறை அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்னது, இந்த நியூஸ்க்கு சோர்ஸ் வேணுமா ? பாஸ், இணையத்துல சோர்ஸ் கேட்குறவன் இணைய போராளியா இருக்க முடியாது. வந்த நியூஸை பார்வேர்ட் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்.

டாஸ்மாக் பத்தி தமிழ் ஹிந்து எழுதியதை விட பக்கம் பக்கமாக நாம் எழுத வேண்டும். ஆனால் நண்பன் பிறந்த நாள், பிரேக் அப் என்று எது வந்தாலும் டாஸ்மாக்கில் தான் கழிக்க வேண்டும். குடிச்சா தான் மச்சி இப்போலாம் கெத்து.


சமூகத்தின் மீதான உச்சபட்ச கருணை நமக்கு தான் இருக்க வேண்டும். எனவே பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், இந்த குழந்தையின் போட்டோவை ஷேர் செய்தால் பேஸ்புக் ஒரு டாலர் கொடுக்கும் என்று இருக்கும் எல்லா போட்டோவையும் ஷேர் செய்ய வேண்டும். சேகுவேரா சொன்னது போல அன்பின் மீது கட்டமைக்கப்படுவது தான் புரட்சி.

விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு என அந்தந்த சீசனில் எந்த செய்தி வருகிறதோ அதற்கு சப்போர்ட் பண்ணுவது முக்கியம். ஆனால் நாம் மட்டும் எப்படியவாது ஒரு லோன் போட்டு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி விட வேண்டும்.

கலாச்சாரம் :

கமல் போல கலாச்சாரம் காப்பது இன்றைய இணைய போராளியின் இன்றியமையாத கடமை. தமிழ் கலாச்சாரம் தான்டா என் உயிரு மத்தெதெல்லாம் என் ம..  என ஸ்டேட்டஸ் போட வேண்டும். ('ம' எழுத்துக்கு பிறகு கடைசியில் இருக்கும் அந்த 2 புள்ளிகளை மறவாதீர். ஏனென்றால் நம்மைப் போன்ற போராளிகள் ஆன்லைனில் மட்டும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது ). இப்படி பேசிக்கொண்டே டீச்சர் வீடியோ, போட்டோ, கௌரி வீடியோ போன்றவகளை ஷேர் செய்தல் அவசியம். யாம் பெற்ற இன்பம்.....அந்த போட்டோவில், வீடியோவில் இருக்கும் பெண்களை பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. சோர்ஸ் பார்க்காமல் ஷேர் பண்ணுபவன் தான் இணையப் போராளி.

பெண்ணியம் :

பெண்களுக்கான சுதந்திரத்திற்காக நாம் ஒவ்வொருவரும் ஆன்லைன் காந்திகளாக மாறுவது காலத்தின் கட்டாயம். ஆனால் நமக்கு, வீட்டில் பார்க்கும் அடக்க ஒடுக்கமான ஒரு 40-50 பவுன் நகை போட்டு வரக்கூடிய பெண் தான் வேண்டும். ஏனென்றால் வெளியில் ஊர் சுற்றும் பெண்கள், அல்லது காதலில் தோல்வி அடைந்த பெண்களெல்லாம் நம்மைப் பொறுத்த வரை தேவி..யா மச்சி. தாலிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், ஆனால் நமது மனைவி கண்டிப்பாக அணிய வேண்டும். ஏனென்றால் அதில் தானே நமது உயிர் அடங்கி இருக்கிறது, நாம் இல்லாவிட்டால், இந்த புரட்சியை யார் வழிநடத்த ? அதற்காகவேனும் நமது மனைவி தாலி அணிய வேண்டும். அதற்கு மேலும் யாராவது கேள்வி கேட்டால், இருக்கவே இருக்கிறது அறிவியல். அறிவியல் ரீதியாக பெண்களுக்கு தாலி அணிவது நல்லது என டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுளதை வெளிக்கொணருங்கள்.

அப்பாடா over... தொழில்நுட்பம், உலக அரசியல், கம்யூனிசம் என முக்கியமான டாபிக்குகளை விட்டு விட்டேன். ஆனால் மேற்சொன்ன டெம்ப்ளேட்டுகளை வைத்து இதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். மேலும் ஒரு முறை அழுத்தி கூறுகிறேன், சோர்ஸ் பார்க்காமல் ஷேர் பண்ணுபவன் தான் இணைய போராளி. விளைவுகளை விட புரட்சி தான் முக்கியம் என நினைப்பவன் தான் இணைய போராளி. நம்மைப் பற்றி பாராதியாரே பாடி இருக்கிறார். தேடி சோறு நிதம் தின்று என்று பாடல் வருகிறது அல்லவா, அதில் வரும் வேடிக்கை மனிதர்கள் சாட்சாத் நாமே தான். பாரதியாரே பாடிய புரட்சி போராளிகள் நாம் என காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.இணைய போராளிகள் என்பதில் பெருமிதம் கொள்வோம் !
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம் !


வெள்ளி, 27 டிசம்பர், 2013

அன்பின் அலகு


இன்றோடு அப்பா எங்களை விட்டுப் பிரிந்து 3 மாதங்கள் ஓடி விட்டன. அம்மா இறக்கும் வரை அப்பா நன்றாக தான் இருந்தார். அதன் பின்பு மிகவும் தளர்ந்து விட்டார். வயதும் காரணமாய் இருக்கலாம். 72 வயதில் துணையை இழப்பது கடினம் தான். அம்மா இறக்கும் வரை, தன் அறையிலேயே எப்போதும் ஒரு நீல நிற ட்ரங் பெட்டி வைத்திருப்பாள். அதில் என்ன இருக்கிறது என்று இதுவரை எங்களுக்கு தெரிந்ததில்லை. அம்மாவிற்கு பிறகு அப்பா அந்த பெட்டியை தன்னோடு வைத்துக் கொண்டார். அப்பாவின் நினைவுகளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விற்கவோ அல்லது குப்பையில் போட அப்புறப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அப்போது தான் கண்ணில் பட்டது அந்த நீல நிற ட்ரங் பெட்டி. உள்ளே சில கடிதங்கள் மட்டும் இருந்தன. ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்பா, அம்மாவிற்கு எப்போதோ எழுதியது.

கண்ணம்மா,
இன்றோடு உன்னைப் பிரிந்து 3 வாரங்கள் ஆகிவிட்டன. ஒளியின் வேகத்தில் சென்றால் காலம் நின்று விடும் என்கிறது அறிவியல். ஒளியின் வேகத்தில் செல்லும் உன் நினைவுகளாலோ என்னவோ, இந்த 3 வார காலம், எனக்கு பல யுகங்கள் கடந்தது போல் உள்ளது.

என்னை நீ வழியனுப்ப வந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. அப்பா, அம்மா, அண்ணன், மதினி, பெரியப்பா என் ஒவ்வொருவரிடமும் விடைபெற்று வந்தால் மிட்டாய்க்காக ஏங்கி நிற்கும் குழந்தை போல வரிசையின் கடைசியில் எனக்கு பிடித்த ஆடையில் நீ. அவ்வளவு தான், தாயைக் கண்ட குழந்தை போல சிலிர்த்துக் கொண்டது மனது. நிலவில்லா தெளிந்த இரவில் ஒளி உமிழும் ஒற்றை நட்சத்திரம் போல உன் நெற்றிப் பொட்டு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. இமைகளுக்குள் கண்ணீரை விடுத்து உன்னை கண்ட கணத்தினை பதிவு செய்து கொண்டேன். அன்பினைக் காட்டும் கருவி இல்லை என உலகம் ஏமாந்து கொண்டிருக்கிறது. உன் விழியோரத்தில் வழிந்த இரு சொட்டு கண்ணீரை அவர்கள் கண்டதில்லை போலும்.

நாம் இருவரும் முதன் முதலில் வெளியே சென்றது நினைவு இருக்கிறதா ? மிகச்சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய ஞாயிறு அது. உன்னால் நினைவு பெட்டகத்தில் தனி இடம் பிடித்துக் கொண்டது. சுற்றி இருக்கும் உலகமெல்லாம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, நீயும் நானும் உறைந்து போன தருணங்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டது போல இருந்தது. தனியாக சாப்பிட்டால் வயிறு மட்டும் நிறையும். உன்னுடன் சேர்ந்து சாப்பிடும் போதெல்லாம் மனதும் சேர்ந்து நிறைகிறது. ஒரு சொட்டு அமிர்தம் கலந்தாலும் ஒட்டு மொத்த உணவும் அமிர்தம் ஆகி விடுமாம். அது போல மிகசாதாரண தருணங்களைக் கூட அசாதாரண தருணங்களாக மாற்றி விடுகிறது உன்னுடன் அருந்தும் தேநீரும் உன் வெட்கம் கலந்த புன்னகையும். உன்னோடு குடிக்கும் போது மட்டுமே தேநீர் குடிப்பது அனுபவமாகி விடுகிறது. தேநீரா இல்லை தேன் நீரா என குழம்பி விடுகிறது மனம். கடற்கரை ஓரத்தில் குடித்த தேநீர், பெருமழைக்காலம் ஒன்றில் வீட்டு முற்றத்தில் நீயும் நானும் அருந்திய தேநீர், யதேச்சையாக சாலை ஓரத்தில் சந்தித்த பொழுது அருந்திய தேநீர்.. இன்னும் இன்னும்…. உலகில் உள்ள எல்லா வகை தேநீரையும் ருசி பார்க்கவாது நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும்.

அன்பை செலவழித்து நீ எனக்கு கொடுத்திருக்கும் பிறந்த நாள் பரிசு எல்லாம் என்னைச் சுற்றிக் கிடக்க, கண நேரம் ஊமை ஆனது போல் உணர்வு. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். நிஜம் தான்? ஒற்றைப் படகில், வானம் பருகி கிடக்கும் கடலின் நடுவில் இருப்பதைப் போல உன் அன்பெனும் கடலின் நடுவில் நான். திரும்பி வர மனமில்லை. வரவும் தேவையில்லை. இங்கே தொலைவது தான் சுகம். எனக்கு எழுதும் பேனாவில் மை ஊற்றி நீ எழுதுவதில்லை. அன்பு ஊற்றி தானே எழுதுகிறாய்? நீ பரிசாக எனக்கு கொடுத்த பொருள் ஒவ்வொன்றும் ஒரு அட்சய பாத்திரம். அள்ள அள்ளக் குறையாமல் உன் அன்பை பெற்றுக் கொண்டே இருக்கிறேன். காலடியில் இருக்கும் மணலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் அலைகள் போல, காலம் என்னிடமிருந்து எல்லா நினைவுகளை எடுத்துச் சென்றாலும் உன் அன்பின் நினைவலைகள் எப்போதும் என் மனதின் அடியில் பத்திரமாக இருக்கும்.

கண்ணம்மாவைப் பற்றி கவிதைகள் எழுதலாம். கண்ணம்மாவே கவிதைகள் எழுதினால், அதுவும் எனக்காக… அதை விட இன்பம் வேறேதும் இல்லை. பாத்திரத்தின் குளிர்ச்சியை வெளியில் காட்டும் நீர்த்திவலைகள் போல, உன் அன்பை உன் எழுத்துக்கள் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. உன் கடிதங்களையும் கவிதைகளையும் வாசிக்கும் பொழுதெல்லாம், நிகழ்காலத்தில் துளையிட்டு, உன் நினைவுகள் இருக்கும் கடந்தகாலமும், உனக்கான என் கனவுகள் இருக்கும் எதிர்காலமும் சந்திக்கும் வெளியில் மிதப்பது போன்ற உணர்வு. தொடர்ந்து எழுது நமக்காக. ‘கண்ணம்மா பாரதி’ என்று உன் கனவுகள் அனைத்தையும் சுருக்கி கையெழுத்தென இரண்டு பெயர்களில் அடைத்து விட்டாய். கனவுகளின் கதிர்வீச்சில் மீளமுடியாமல் சொக்கிக் கிடக்கிறேன் நான்.

அன்பை அளக்க அலகுகள் இல்லை. ஆனால் அதன் வீரியத்தை உணர்த்த கடிதங்கள் போதுமான‌தாய் இருக்கிறது. இந்த கடிதமும் அப்படித்தான். என் கண்ணம்மாவுக்காக‌

கண்ணம்மாவின் துணைவன்,
பாரதி

கடிதத்தின் பாரம் தாங்காமால் இதயம் கசிந்த துளிகள் கண்ணில் வெளிப்பட்டது. அப்பா நல்ல மனிதர் மட்டும் இல்லை, நல்ல ரசிகரும் கூட. முதல் முறையாக கதறி அழுதேன் அப்பா இறந்ததற்காக‌…………..