திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஏகலைவர்கள்

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஐந்தாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

என்னதான் நாங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தாலும் அது என்னவோ வண்ண ஆடைகள் போட்டு பள்ளிக்கு செல்லும் பதிமூன்றாம் வகுப்பு போல தான் இருந்தது. அவ்வளவு கட்டுப்பாடுகள் முதலாம் ஆண்டில். ஆனால் இரண்டாம் ஆண்டில் எல்லோரும் அவிழ்த்து விட்ட கழுதைகள் தான். எப்போது வேண்டுமானாலும் கல்லூரிக்கோ விடுதிக்கோ வரலாம், போகலாம். பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை (ஆண்களுக்கு மட்டும்). ஆனால் என்ன செய்ய முதலாம் ஆண்டு முடித்து விட்டு தான் இரண்டாம் ஆண்டு போக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அதனால் அந்த வித்தியாசமான பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தோம். 

பிப்ரவரி மார்ச் மாதங்களில் கல்லூரியே களை கட்டி விடும். ஏனென்றால் அந்த மாதங்களில் தான் ஒவ்வொரு துறையும் தங்கள் துறை சார்பாக தேசிய அளவிலான பல்தொழில்நுட்ப கருத்தரங்களும் போட்டிகளும் நடத்துவார்கள். ஆனால் உண்மையில் அவற்றில் தேசியமும், பல்தொழில்நுட்பமும் போனால் போகிறதென்று பேரளவுக்கு தான் இருக்கும். இரண்டும் நாட்கள் நடக்கும் இந்த விழாவில், இரண்டு நாளும் மதியம் 3 மணிக்கு மேல் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்வு தான் மிக முக்கியமான நிகழ்வாக எல்லோராலும் பார்க்கப்படும். கிட்டதட்ட 2-3 மாதங்களுக்கு முன்பாகவே அதற்கான வேலையை ஒவ்வொரு துறையும் தொடங்கி விடுவார்கள். ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இத்தகைய விழாக்களை நடத்துவதால், பிப்ரவரி மார்ச் மாதம் முழுதுமே கல்லூரி வண்ணமயமாக இருக்கும். நிற்க, இது எல்லாமே இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் தான். முதலாம் ஆண்டு மாணவர்களால் இந்நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராகக் கூட செல்ல முடியாது. அதனால் நாங்கள் எல்லோரும் கெஞ்சி கேட்டதற்கு இணங்க, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஒரு அறிவியல் கருத்தரங்க விழாவை நடத்தினார்கள் கல்லூரியில் இருந்து. வழக்கம் போல இதில் அறிவியலும் கிடையாது, கருத்தரங்கமும் கிடையாது. முழுக்க முழுக்க ஆடல் பாடல் தான்.

ஒரு நாள் மட்டுமே இந்த விழா நடத்த வேண்டும். 6 மணிக்குள் முடிக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட வேண்டும்கள். எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டோம். ஒவ்வொரு வகுப்பும் ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும். அது ஆடலோ அல்லது பாடலோ அல்லது நாடகமாகவோ இருக்கலாம். எங்கள் வகுப்புக்கான பஞ்சாயத்து கூடியது. பெண்கள் சார்பாக ஒரு நடனம் ஆடுவதென முடிவெடுத்தார்கள். மற்ற எல்லா வகுப்புகளிலும் நடனம் மட்டுமே இருந்தது. நமக்கு தான் மூக்கு புடைப்பாக இருக்குமல்லவா, அதானால் எங்கள் வகுப்பு ஆண்கள் சார்பாக நாடகம் போடலாம் என்று முடிவெடுத்தோம். அதுவும் வகுப்பில் உள்ள 35 பசங்களும் சேர்ந்து நடிப்பதென.

இந்த இடத்தில் என்னை பற்றிய ஒரு சுய விளம்பரம் அவசியமாகிறது. பள்ளியில் நடந்த 'ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்' என்ற நாடகத்தில் ஏழு குள்ளர்களின் தலைமைக் குள்ளனாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு, உதடு ஒட்டி வசனம் பேசினால் லிப்ஸ்டிக் அழிந்து விடுமென உதடு ஒட்டாமலேயே பேசி நடித்தவன் நான். ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்லலாமா, "மாப்ள! நான்லாம் ஸ்கூல்லயே நெறைய நாடகம் நடிச்சிருக்கேன். ப்ரைஸ்லாம் கூட வாங்கிருகேன். நாம நாடகம் கெத்தா பண்றோம்" என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டேன். அப்பாவிகள் நம்பி விட்டார்கள்.

முதலில் நாடகத்திற்கான கதை வேண்டும். அதற்காக ஒரு சிறு குழு ஒன்று கதையும் வசனமும் தயாரிப்பது என்றும், அவை முடிவான பின் எல்லோரும் சேர்ந்து ஒத்திகை பார்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. சரி கதை எழுத யாரை தேர்ந்தெடுப்பது? இங்கிலீஷ்காரன் படத்தில் வடிவேலு கிரிக்கெட் விளையாட ஆள் எடுத்தது போல, "மாப்ள, இவன் போன டெஸ்ட்ல 20 பக்கமும் நிரப்பி 4 மார்க் தாண்டா வாங்கிருந்தான். செமயா கதை எழுதுவான் போல, இவன எடுத்துக்கலாம்" என்று ஒருவனையும், "இவன் ரொம்ப நேரம் பொண்ணுங்க கூட கடலை போடுறாண்டா, இவனையும் எடுத்துக்கலாம்" (உண்மையில் அவன் பெண்களோடு பேசுவதால் எங்களுக்கு ஏற்பட்ட புகைச்சல். எங்களோடு வந்தால் அந்த சமயத்தில் பெண்களோடு பேச முடியாது அல்லவா) என்றும் ஆட்களை சல்லடை போட்டு எடுத்துக் கொண்டிருந்தோம்.

விடுதியின் மற்ற அறைகளிலெல்லாம் குத்துப்பாட்டு போட்டு அதற்கு நடன அசைவுகளை பழகிக்கொண்டிருந்தார்கள் மற்ற துறை மாணவர்கள். நாங்கள் மட்டும் அமைதியாக ஒரு அறையில் அமர்ந்து மிகத் தீவிரமாக கதை யோசித்துக் கொண்டிருந்தோம். "வாத்தியாரே பசிக்குது, சாப்டு சாயந்திரமா யோசிப்போமா" என்ற மண்ட கசாயங்களின் நப்பாசையைத் தாண்டி யோசித்துக் கொண்டிருந்தோம். நாங்களெல்லாம் அப்போது மிகப் பெரிய புரட்சியாளர்கள் அல்லவா அதனால் நாடகத்தில் தெறிக்க தெறிக்க புரட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

"மச்சி, நம்ம காலேஜ்லயே ஏகப்பட்ட தப்பு நடக்குது, நாம அத வெச்சு ஒரு நாடகம் போடுவோமா?"

"வேணாம் மச்சி, அரியர் போட்ருவாங்க. நாம ஏன் நம்ம நாட்டை சீரழிச்சுகிட்டு இருக்கிற மத்திய அரச கலாய்ச்சு ஒரு நாடகம் போடக்கூடாது" (பாருங்களேன் இந்த ஸ்டேட்மென்ட் எந்த கவர்மெண்ட் ஆட்சி பண்ணாலும் ஒத்து போகுது, நாங்க இந்த ஸ்டேட்மெண்ட் சொன்னது 12 வருஷத்துக்கு முன்னால)

"வேணாம்டா, ஆளும் கட்சி புரபொசர் யாராவது இருந்தா அரியர் வெச்சிடுவாங்க"

"அதுவும் சரி தான், எதிர்கட்சிய கலாய்ச்சாலும் அரியர் விழலாம். அப்போ என்ன தாண்டா பண்றது? பேசாம நாமளும் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டத்தை போட்ருக்கலாமோ"

"முன் வெச்ச கால பின் வாங்க கூடாதுடா. அரியர் போட முடியாதபடி ஒரு கான்செப்ட் ரெடி பண்ணுவோம்"

இப்படியாக எங்களது புரட்சி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. கடைசியாக கடவுள் பூமிக்கு வந்து இந்த உலகத்தை பார்த்து பின்பு வெறுத்து திரும்பி போவதாக ஒரு நாடகத்தை தயார் செய்தோம். அதிலேயே அரசியல், விளையாட்டு, கல்வி, மருத்துவம், இலவசங்கள் என்று அந்த காலத்தில் நடந்த சூடான கருப்பொருள்களை வைத்து ஒரு மாதிரியாக கலந்து கட்டி தயார் செய்து விட்டோம். கடவுளை கேலி செய்வது போல வந்தால் அரியர் விழுமா என்று யோசிக்க தனியாக ஒருவனை நியமித்திருந்தோம்.

நாடகம் தயார். நாடகத்திற்கு தலைப்பு என்ன வைக்கலாம் என்று ஆளாளுக்கு விட்டத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தோம். இந்த இடத்தில் கோவிந்தனைப் பற்றி சொல்ல வேண்டும். கோவிந்தன் - ஆள் கோட் அடிப்பதில் புலி. ஆனால் வாத்சாயனாரின் ஒன்று விட்ட பேரன் போலவே இருப்பான். எந்த விஷயம் எடுத்தாலும் அதை ஒரு காமக் கலைக் கண்ணோடு தான் அணுகுவான். எங்களுக்கெல்லாம் தமிழில் கிடைத்தற்கரிய புத்தகங்களை கொடுத்து (அப்போது கணினி பரவலாக இல்லை) எங்களை வாழ வைத்துக் கொண்டிருந்தான். ஆனால் விதி பாருங்கள், அவனும் இந்த நாடகத் தயாரிப்பு குழுவில் இருந்தான்.

"சிம்பிளா கடவுள்னு பேர் வைக்கலாமா". இது நான்.

"வேணாம்டா, ஏதாவது catchy யா இருக்கனும்" என்றான் குமார்.

பங்க் பெட்டின் இரண்டாவது அடுக்கில் விட்டதைப் பார்த்து மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நமது திருவாளர் கோவிந்தனார், திடீரென்று புரண்டு எழுந்து

"ஓடி வந்த சாமிக்கு மூடு ஏத்துன பூமி - எப்படி இருக்கு இந்த டைட்டில்" என்றான் வாயெல்லாம் பல்லாக.

"டேய் காண்டு ஏத்தாதடா கண்......." என்றான் முருகேஷ்.

"போங்கடா!"என்று திரும்பவும் தனது சயன நிலைக்கு சென்று விட்டான்.

வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டது, எனவே சீக்கிரம் தலைப்பை முடிவு பண்ணியாக வேண்டும் என்று வேகமாக யோசித்து ஒவ்வொரு தலைப்பாக சொல்லிக் கொண்டிருந்தோம்.

"கும்முனு சாமி, ஜம்முனு காமி" இது எப்டிறா இருக்கு. கடவுளுக்கு பூமிய காட்டுறோம்ல கதைப்படி, செட் ஆகும்டா, வைங்கடா" என்றான் அதே கோவிந்தன்.

அரியர் விழுமா என்று யோசிக்க ஒருவனை இரண்டு பத்திக்கு முன்னால் நியமித்திருந்தோம் அல்லவா, அவன் வந்து - "டேய் கான்செப்டுக்காகலாம் அரியர் விழாதுடா. ஆனா இவன் சொல்ற டைட்டில வெச்சா கண்டிப்பா விழும்" என்றான். இது சரிப்படாது என்று பூமிக்கு வந்த சாமி என்று தலைப்பை முடிவு பண்ணி, ஒத்திகை ஆரம்பித்து விட்டோம்.

35 மாணவர்கள். சமத்துவத்தை நிலை நாட்டுவதாய்க் கூறிக் கொண்டு, எல்லோருக்கும் ஒரு வரியாவது வசனம் வருமாறு செய்தோம். ஒத்திகை எல்லாம் ஒரு மாதிரியாக முடிந்து நாடகம் அரங்கேற்றும் அந்த பொன்னாளும் வந்தது. ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா நண்பர்களே, அது தன் வேலையைக் காட்ட துவங்கியது. வழக்கம் போல நிகழ்ச்சி தாமதமாய் துவங்க ஒவ்வொருவரும் வந்து அவசர அவசராமாக கையை காலை அசைத்து நடனம் என பெயரிட்டு சென்று கொண்டிருந்தார்கள். கூட்டமோ தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கை தட்டி விசிலடிப்பதும் மற்ற துறை மாணவர்கள் நடனம் ஆடும் பொழுது சத்தம் போட்டு கேலி கிண்டல் செய்து கொண்டும் இருந்தார்கள். முதலில் நடனங்கள் முடியட்டும். நாடகம் கடைசியாக இருக்கட்டும் என்று ஏதோ ஒரு அதி புத்திசாலி ஆசிரியர் முடிவு எடுத்து எல்லோரையும் அவசர அவசரமாக மேடையேற்றிக் கொண்டிருந்தார். ஏற்கனவே மணி 7 ஆகி விட்டது. 6 மணி வரை தான் பிரின்சிபாலிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம், அதனால் நாடகம் வேண்டாம் என்று ஆசிரியர்கள் மத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி 10 நிமிடங்கள் மட்டும் கொடுங்கள் என்று கேட்டு மேடை ஏறி விட்டோம்.

முதலில் எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. சில இடங்களில் எல்லாம் கைதட்டு கூட கிடைத்தது. ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் என்பது போல நாங்களும் நடித்துக் கொண்டிருந்தோம். 10 நிமிடங்கள் தான் கேட்டோம். ஆனால் நாடகம் 20 நிமிடங்களைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்து விட்டார்கள். ஆசிரியர்கள் முகமும் மாற ஆரம்பித்து விட்டது. அப்போது தான் ஒரு பிச்சைக்காரன் எவ்வித உழைப்பும் இன்றி அரசு கொடுக்கு இலவசங்களை வைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாய் ஒரு காட்சி நடந்து கொண்டிருந்தது.ஆசிரியர் ஒருவர் அமைதி இழந்து "சைலன்ஸ்! எல்லாம் போதும்" என்று சொல்ல மொத்த அரங்கமுமே அமைதி ஆகி விட்டது. ஆனால் நாங்கள் தான் சிவாஜியின் ஒன்று விட்ட பேரன்கள் அல்லவா, தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தோம். மொத்த அரங்கமும் அமைதி ஆன பொழுது அந்த பிச்சைக்கார கதாபாத்திரம்

"சும்மா இருக்கற நேரத்துல அவளை அம்மா ஆக்கிட்டேனு வைங்க அதுக்கும் காசு கிடைக்கும்" என்று கடவுளிடம் சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தான். ஆசிரியருக்கோ கனகோபம். மொத்த அரங்கமும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசிரியர் மேடைக்கே ஏறி வந்து, வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா என்று வாஞ்சையுடன் கேட்டுக் கொண்டார்.

முதல் நாடகமே தோல்வி அடைந்ததை எண்ணி வருந்திக் கொண்டிருந்தோம். பின்பு விடுதி அறையில் அமர்ந்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

"அந்த டயலாக் யாருடா எழுதுனா, அதுனால தாண்டா பிரச்சனை" என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது

"டேய், ஹாரிபாட்டரும் ஹெர்மாயினின் இன்பவெறியும் அப்படினு ஒரு செம புக் வந்திருக்கு பார்த்தீங்களா!" என்றபடி உள்ளே நுழைந்தான் கோவிந்தன். இவன் தாண்டா எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்லி எங்கள் கோபத்தை எல்லாம் கோவிந்தன் மீது தணித்துக் கொண்டோம். பயலுக்கு அன்று செம அடி. 

முதல் நாடகம் தோல்வி அடைந்தாலும் நாடகம் போடும் ஆசை மட்டும் அடங்கவில்லை. இரண்டாம் ஆண்டு எங்கள் துறையின் சார்பாக தேசிய அளவிலான பல்தொழில்நுட்ப கருத்தரங்கில், மாலை கலை நிகழ்ச்சிகளில் நாடகம் போடுவதென முடிவெடுத்தோம். இந்த முறை சென்ற தவறுகளை எல்லாம் களைந்து விட்டு, இந்த புரட்சி வெங்காயத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மொத்தமே 10 நிமிடங்களுக்குள் இருக்குமாறும், பத்தே பத்து மாணவர்களைக் கொண்டு கல்லூரி வாழ்வை மையமாக வைத்து ஒரு நாடகம் தயாரித்தோம். இந்த முறை வசனங்களை மேடையில் பேசாமல், முன்பே பதிவு செய்து ஒலிக்கவிட்டு மேடையில் அதற்கேற்றவாறு நடிக்கலாம் என முடிவு எடுத்தோம். பதிவு செய்யப்பட்ட வசனங்களோடு கலை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் நான்காம் ஆண்டு சீனியர் அண்ணாவின் அறைக்கு சென்றோம். ஏற்கனவே முதலாம் ஆண்டில் நாங்கள் செய்த வீர தீர ப்ரஸ்தாபங்களை அவரும் கேள்விப்பட்டு இருந்ததால் ஒரு சந்தேகத்தோடே தான் எங்களை அணுகினார். வசனங்களை கேட்டு விட்டு இந்த நாடகம் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லையே என்று இழுத்தார். நாங்களும் வழக்கம் போல கெஞ்சி கூத்தாடி அவரை ஒப்புகொள்ள செய்தோம். இந்த முறையும் இரண்டு நாட்கள் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு நாடகம் மட்டுமே. எங்களுடையது தான். கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

நாடகம் தொடங்கியதில் இருந்து கைதட்டல். வழக்கமாக பின்வரிசையில் இருந்து கிண்டல் அடிக்கும் குழுவும் இம்முறை கைதட்டியது. நாடகம் முடியும் போது அரங்கத்தில் ஒரு பகுதியினர் 'ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்' என்று கத்தினர். எங்கள் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. சீனியர்கள் மத்தியில் ஓவர் நைட்டில் ஒபாமாக்கள் ஆகி விட்டோம். "அந்த நாடகம் போட்ட பசங்கள கூப்பிடு பேசணும்" என்று சீனியர் ஒருவர் எங்கள் எல்லோரயும் கூப்பிட்டு தனியே பாராட்டினார். எங்கள் யாரையும் கையில் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் பாருங்கள் மகாஜனங்களே பெண்கள் மத்தியிலும் இந்த நாடகத்துக்கு வரவேற்பு இருந்தாலும் அதன் பிறகும் இதயம் முரளிகளாத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம். அது ஒரு சோக கிளைக் கதை.

ஒரு நாடகத்தை வெற்றியடையச் செய்யும் சூட்சமம் ஓரளவு புலப்பட ஆரம்பித்தது. அதன் பிறகு கல்லூரிக்குள் நடக்கும் மற்ற கலை நிகழ்ச்சிகளிலும் சென்று நாடகம் போட ஆரம்பித்தோம். மூன்றாம் ஆண்டு கலை நிகழ்ச்சிக்கு 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை தழுவி கல்லூரியைக் கழுவி ஊற்றும் ஒரு புரட்சி நாடகம் போட்டோம். 

விடுதி குழாயைத் திறந்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும் A) தண்ணீர்  B) காற்று C) பல்பு D) பிம்பிளிக்கி பிளாப்பி போன்ற கேள்விகள். இப்போது இந்த கேள்விகள் மிக சுமாராக தெரியலாம். ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்கின்ற எங்களைப் போன்ற விடுதி மாணவர்கள் மத்தியில் பலத்த ஆராவாரம். கல்லூரிக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி நாடகம் முடியும் முன்னரே மீண்டும் மேடையில் இருந்து இறக்கி விடப்பட்டோம். ஆனால் இந்த முறை இதை தோல்வியாக கருதவில்லை. மாணவர்கள் மத்தியில் எங்களுக்கு பலத்த கைதட்டல்கள்.

அதன் பிறகு எங்களைப் போலவே மற்ற துறையில் நாடகம் போடும் மற்ற மாணவர்களோடு இணைந்து நாடகம் போட ஆரம்பித்தோம். ஏகலைவர்கள் என்று எங்கள் குழுவிற்கு பெயர் வைத்தோம். எங்கள் சீனியர்களின் உதவியோடு மற்ற கல்லூரிகளுக்கும் சென்று நாடகம் போட ஆரம்பித்தோம். அங்கேயும் தோல்விகளும், அவமானங்களும் தாராளமாக கிடைத்தன. அவ்வப்போது வெற்றியும் :) தொடர்ந்து ஏகலைவர்கள் குழுவை வளர்க்க ஆரம்பித்தோம். எங்கள் ஜீனியர்களையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களிடமும் கற்றுக் கொண்டு என ஏகலைவர்கள் ஒரு தனி பிராண்டாக வளர ஆரம்பித்தது கல்லூரியில். கல்லூரிக் காலம் நான்கு ஆண்டுகள் தானே. அதனால் நாங்கள் வெளி வந்து விட்டோம். பல்வேறு வேலைகளில் இருந்தாலும் சென்னையில் ஒரு நாடகக் குழு ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து ஒரு சில நாடகங்களும் போட்டோம். ஆனால் நாடகம் சோறு போடாது, கோட் அடித்தால் சோறு கிடைக்கும் என்பதை வெகு சீக்கிரமாக உணர்ந்ததால் அதனைத் தொடர முடியவில்லை. ஆனால் கல்லூரியில் ஏகலைவர்கள் குழு சிறப்பாக செயல்பட்டு வந்தது நாங்கள் வெளியே வந்த பிறகும். கிட்டதட்ட 10 வருடங்கள் ஓடி விட்டன. இன்று ஏகலைவர்கள் குழு அடைந்திருக்கும் இடம் மிக முக்கியமானது. திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை ஐஐடி போன்ற மிகப் பெரிய கல்லூரிகளில் எல்லாம் சென்று தங்கள் முத்திரையை பதித்து விட்டு வந்தார்கள். இப்போதும் தமிழக அளவிலான கல்லூரிப் போட்டிகளில் ஏகலைவர்கள் கலந்து கொண்டால் ஒரு பரிசாவது வாங்காமல் வரமாட்டார்கள் எனலாம். கோவையில் அரசு சார்பாக நடக்கும் விழாக்களிலும் கூட ஒரு சில விழிப்புணர்வு நாடகங்களும் போட்டுள்ளனர். ஆனால் இந்த வளர்ச்சி எதையும் அருகில் இருந்து பார்க்க நாங்கள் யாரும் இல்லை. ஆனால் விதை....... :)





செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

முலாம் பழ ஜீஸா? சாத்துக்குடி ஜூஸா?

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் நான்காவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

எல்லா வகுப்புகளிலும் பின்வரும் வகையில் மாணவர்கள் இருப்பார்கள். முதல் வகை கடலை, காதல், குடும்பம் என ஏகபோகமாக வாழ்பவர்கள். இரண்டாவது வகை விக்கிரமாதித்தன்கள் வகை, எப்படியும் நம்மளிடமும் ஒரு பெண் பேசி விடுவாள் என்ற நம்பிக்கையில் நடமாடும் இதயம் முரளிகளாக இருப்பார்கள். மூன்றாவது வகை, சீ சீ இந்த பழம் புளிக்கும் என எந்த பெண்களிடமும் பேச மாட்டோம் என விரதம் இருப்பார்கள். இதில் முதல் மற்றும் இரண்டாவது வகையைக் கூட நம்பி விடலாம். ஆனால் இந்த மூன்றாவது வகை இருக்கிறார்களே எமகாதகர்கள். நாங்களாம் பொண்ணுங்க கூடயே பேச மாட்டோம், மாஸ்டா நாங்க என்று கம்பு சுற்றுவார்கள். ஆனால் உண்மையில் "பொண்ணுங்க கூட பேசவே மாட்டோம் (வாய்ப்பு கிடைக்கும் வரை)" என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் நாம். அப்படிபட்ட கதை தான் இன்று நான் உங்களுக்கு சொல்லப் போவது.

எல்லா வகுப்பையும் போலவே எங்கள் வகுப்பிலும் ஒரு குழு இருந்தார்கள். பொண்ணுங்க கூடவே பேச மாட்டோம் என்பது தான் அவர்களது கொள்கை. அவர்களாகவே அவர்களுக்கு கெத்து கேங் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நானெல்லாம் இதயம் முரளி குழு என்பதால் அவர்களோடு பெரிய ஒட்டுதல் இல்லை. என்னுடைய எதிரிகளெல்லாம் நான் முதல் வகையைச் சார்ந்தவன் என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள் மக்களே, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டும். கடமை, கண்ணியம், தட்டுப்பாடு கட்டுப்பாடு என்று வாழ்ந்தவன் நான். நானுண்டு, என் வேலையுண்டு என்று வாழ்ந்து உலக மாணாக்கர்களுக்கெல்லாம் ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவன் என்பதை இந்த இடத்திலே மிகுந்த தன்னடக்கத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். (இந்த எபிசோடுக்கு இந்த பில்டப் போதும்னு நினைக்கிறேன். இனிமேல் கதைக்குள்ள போயிடலாம்)

மூன்றாம் ஆண்டு பருவத் தேர்வு நெருங்கி வரும் சமயம் அது. வழக்கம் போல நாங்களெல்லாம் படிப்போம் என்று நம்பி ஸ்டடி ஹாலிடேஸ் அறிவித்திருந்தார்கள். ஸ்டடிக்கு ஹாலிடேஸ் விடுவது தாம்லே ஸ்டடி ஹாலிடேஸ் என்ற முன்னோர்களின் மொக்கைக்கு இணங்க விடுதியில் இருக்கும் விட்டத்தைப் பார்த்து, ஊர் கதை பேசி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட ஒரு மங்களகரமான நன்னாளில், திடீரென்று எனது அறைக்கு மூன்று நான்கு தடிமாட்டு நண்பர்கள் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் கையில் ஒரு கைப்பேசி.

"டேய் சிவா, சீக்கிரம் இந்த போனை வாங்கி பொண்ணு குரல்ல பேசுடா."

"எதுக்குடா, புரியல.."

"டேய் அதெல்லாம் அப்புறம் சொல்றோம். அவன் லைன்ல இருக்கான். நீ பொண்ணு குரல்ல மட்டும் பேசு, மிச்ச கதையை நாங்க அப்புறம் சொல்கிறோம்."

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு முன்கதை சுருக்கம் (அதாம்பா பிளாஷ் பேக்)  சொல்லியாக வேண்டும் மக்களே, இரண்டாம் ஆண்டு படிக்கும் போது நண்பன் ஒருவனை பெண் குரலில் பேசி ஏமாற்றி இருக்கிறேன். அதுவும் ஒன்றிரண்டு நாட்கள் அல்ல, 2-3 மாதங்கள். அதைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவு எழுத இருப்பதால், இப்போதைக்கு அந்த கதைக்குள் முழுதாக செல்ல வேண்டாம்.

சரி பெண் குரலில் தானே பேச வேண்டும் என நான் போனை வாங்கி, ஹலோ என்றேன் பெண் குரலில். அந்த முனையில் ஒரு ஆண் குரல்.

"ஹலோ, ரஞ்சனாவா?"

(நாம எந்த கேரக்டர்னே தெரியலயே, சும்மா போனை கொடுத்திட்டானுங்க தடிமாட்டு பசங்க, சரி சமாளிப்போம்)

"ஹலோ, யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க. இனிமேல்லாம் எனக்கு போன் பண்ணாதீங்க" என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

அந்த தடிமாட்டு நண்பர் கூட்டம், தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

"டேய், நல்லா மாட்டி விடலாம்னு நினைச்சோம், இப்படி சொதப்பிட்டியேடா" என்றார்கள்.

"அடேய்களா, முதல்ல இந்த கதையில் நான் யாரு, ரஞ்சனா யாருனு சொல்லுங்க. அப்புறம் தான் தெளிவா பேச முடியும்" என்றேன்.

"டேய் நம்ம சுந்தரம் இருக்கான்ல, அதாண்ட அந்த கெத்து கேங்ல இருப்பான்ல, அவன் ரொம்ப ஓவரா போறான்னு, நாங்க தான் அவன் போனல இவன் நம்பர நம்ம கிளாஸ் ரஞ்சனானு பேர் மாத்தி வெச்சிட்டோம். அப்புறம் அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினொம். அவனும் ரஞ்சனா தான் மெசேஜ் பண்றானு நினைச்சு ரிப்ளை பண்ண ஆரம்பிச்சுட்டான். சரி நமக்கு தான் ஸ்டடி ஹாலிடேஸ்ல பொழுது போக மாட்டேங்குதுல, அதான் இவன் கூட ரஞ்சனா பேர்ல கடலை போட ஆரம்பிச்சோம். சும்ம சொல்ல கூடாது, பய வறு வறுனு வறுத்து கடலையே தீஞ்சு போற அளவுக்கு பண்ணிட்டான். இது இப்படியே ஒரு வாரமா ஓடிட்டு இருந்ததா, இன்னைக்கு பயபுள்ள தீடீர்னு கால் பண்ணிட்டான். எங்களுக்கு என்ன பண்றதுனு தெரில. உன்னோட செகண்ட் இயர் மேட்டர் நியாபகம் வந்துச்சு, அதான் ஓடி வந்து போனை உங்கிட்ட கொடுத்தோம், இப்படி சொதப்பிட்டியேடா, இனிமே எப்படிடா நம்புவான் அவன்" என்று இவர்கள் ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னார்கள்.

நான் எனது கண்ணாடியை கழற்றி துடைத்துக்கொண்டே, "கொஞ்சம் கிரிட்டிக்கலான கேஸ் தான். ஆனா புராஜெக்ட் இண்டெரெஸ்டிங்கா இருக்கதால நான் எடுத்து பண்றேன்" என்றேன்

"ஆமா. பெரியா இஸ்ரோ சயிண்டிஸ்ட் இவரு, நாயே மூடிட்டு இப்போ என்ன பண்றதுனு" சொல்லு என்று ரொம்ப கெஞ்சி கேட்டுக் கொண்டார்கள்.

"மக்களே, நம்மள மாதிரி பசங்கள பத்தி எனக்கு தெரியும். எவ்வளோ பெரிய முட்டாளுங்க நாமனு, பொண்ணு பேசுதுனு சொன்னா, மெஸ் உப்புமாவை கூட ருசியா இருக்குதேனு திம்போம். அதானால கூல் டவுன். அந்த பயலுக்கு மறுபடியும் போன் போட்டுக் கொடுங்க, இந்த புராஜெக்ட கண்டினியூ பண்ணுவோம்" என்றேன். பெண் குரலில் பேசலாம் என்று முடிவு எடுத்து விட்டேன். கிட்டதட்ட ஒரு வருடத்துக்கு பிறகு, பழைய சிவாவா பேக்ரவுண்ட் மியூசிக்லாம் போட்டு,

"ஹலோ சுந்தரமா?"

"ஆமா, நீங்க ரஞ்சனா தான?"

"ஹேய் ஆமாபா, சாரி, அப்போ போன் என் பிரெண்டு கைல இருந்துச்சா, அப்போ போன்ல வித்தியாசமா ஒரு பேர்ல கால் வந்த உடனே, என்னை கலாய்க்கிறேன்னு அவ அப்படி பேசிட்டா, சாரிப்பா" என்றேன்.

"அது பரவாயில்ல, விடு, என்ன பேர்ல ஸ்டோர் பண்ணிருக்க என் பேர?"

(மீன் கொக்கிக்குள் மாட்டி விட்டது மக்களே. இனி பயபுள்ள என்ன சொன்னாலும் கேட்கும். இப்போது போய் அவன்கிட்ட கைமாற்றாக 100 ரூபாய் கேட்டு பாருங்களேன், உடனே கிடைத்து விடும்)

"ஆங், அஸ்கு புஸ்கு, அதெல்லாம் சொல்ல முடியாது, போ"

"ஏய், சொல்லுபா, பிளீஸ்"

"போ, அதெல்லாம் சொல்ல முடியாது"

... இப்படியே ஒரு 5 நிமிடங்கள் கடலை வறுத்து தீய்வதற்குள் முடித்து விட்டேன். போனை வைத்து விட்டு திரும்பி பார்த்தால், போனை என்னிடம் கொண்டு வந்து கொடுத்த நண்பர் கூட்டத்தில் ஒருவனையும் காணோம். குருநாதா என்று காலுக்கு கீழிருந்து ஒரு குரல். எழுப்பி விட்டு பார்த்தால், எல்லாரும் கண்ணில் தண்ணி வச்சுண்டா. டேய், இதுக்கெல்லாமா கலங்குவீங்க, கிறுக்கு பயபுள்ளகளா ,போங்க போய் புராஜெக்ட கண்டினியூ பண்ணுங்க என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. 

அதன் பிறகு இதுவே வாடிக்கையாகிப் போனது. மெசேஜில் கடலை போடுவதெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அழைப்பு வந்தால் மட்டும் ஓடி வந்து என்னிடம் கொடுத்து விடுவார்கள். நானும் சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா என்று அவனோடு ஆராய்ந்து கொண்டிருந்தேன் இரவெல்லாம்.

இந்த மெசேஜ் கடலை ஒருவரிடமும், கால் பண்ணும் கடலை டிப்பார்ட்மெண்ட் என்னிடமும் இருப்பதால் சில சிக்கல்களை சந்தித்தோம். சுந்தரமோ பேசும் போது, "ஹேய் இன்னைக்கு காலைல நான் அந்த மெசேஜ் பண்ணேன்ல, நீ ஏன் அதுக்கு அப்படி ரிப்ளை பண்ண" என்பான். அடப்பாவிகளா, என்னத்தடா மெசேஜ்ல கடலை போட்டு தொலச்சீங்க, வரலாறாவது சொல்லிட்டுப் போங்களேண்டா என்று அவர்களை மனதிற்குள் திட்டி விட்டு நானும் பொதுவாகவே அந்த கேள்விக்கு பதிலளிப்பேன். கொஞ்சம் கோவம் கலந்த குரலோடு "ஏன் நான் அப்படி ரிப்ளை பண்ண கூடாதா, எனக்கு அந்த உரிமை இல்லையா" என்பேன். நமக்கு தான் பெண்களின் கோபமோ அழுகையோ பொறுக்க முடியாது அல்லவா, அவன் பம்மிவிடுவான். "ஹேய் விடுப்பா, சும்மா தான் கேட்டேன்" என்று வேறு டாபிக் போய்விடுவான். நானும் தப்பிச்சோம்டா சாமி என்று பெருமூச்சு விடுவேன்.

ஒருநாள் கல்லூரிக்கு அருகிலுள்ள கடையில் ஜீஸ் குடிக்கலாம் என்று சுந்தரத்தையும் அழைத்தோம். அப்போதும் அவன் ரொம்ப பிஸியாக ரஞ்சனாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தான். (அதாவது ரஞ்சனா என்று அவன் நம்பிக் கொண்டிருந்த எண்ணிடம் அல்லது என்னிடம்)

"டேய் படிச்சுகிட்டு இருக்கேன், இப்போ போய் டிஸ்டர்ப் பண்றீங்களேடா"

சுற்றி இருந்த எங்கள் எல்லோர் காதிலும் புகை என்று நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் அதையெல்லாம் அடக்கிக் கொண்டு, அவனை தாஜா செய்து அழைத்துச் சென்றோம். அப்போதும் அவன் கையில் போனோடு தான் கடைக்கு வந்தான். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு தேவையான ஜீஸ் சொல்லி வாங்கி குடிக்க ஆரம்பித்து விட்டோம். இவன் மட்டும் எதுவும் சொல்லவில்லை. அப்போது தான் எங்களுக்கு உரைத்தது. சில மணித்துளிகளாக நாங்கள் ரஞ்சனாவின் போனை பார்க்க மறந்து விட்டிருந்தோம். அவனுக்கு தெரியாமல் எடுத்து பார்த்தோம். எதிர்பார்த்தது போலவே அவனுடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.

"ஹேய், ஜீஸ் கடைக்கு வந்திருக்கேன். முலாம் பழ ஜீஸ் குடிக்காவா, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவா?" என்றொரு குறுஞ்செய்தி.

கூட இருந்த நண்பன் ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு "தக்காளி, இன்னைக்கு அவன் செத்தாண்டா, கடைக்கு கூட்டி வந்தது நாம, இங்க இவன் அவகிட்ட கேக்குறானா", என்று பாய்ந்தான். கதை இப்படி முடியக் கூடாது அல்லவா, அதனால் அவனை அடக்கி வைத்து, அவனுக்கு புரிய வைத்தோம். 

சரி பதில் அனுப்பலாம் என்று யோசித்து, "ஹேய் அந்த கடைல முலாம் பழம், சாத்துக்குடி ரெண்டுமே நல்லா இருக்காது, ஷார்ஜா ஜீஸ்னு ஒண்ணு ஒருக்கும். அது செமயா இருக்கும். உடம்புக்கும் ரொம்ப நல்லது" என்ற பதிலை தட்டி விட்டோம். உண்மையில் அந்த கடையில் இருப்பதிலேயே மகா மட்டமான ஜீஸ் இந்த ஷார்ஜா ஜீஸ் தான். விலையும் அதிகம். மற்ற ஜீஸ் எல்லாம் 15-20 ரூபாய் என்றால், ஷார்ஜா 45 ரூபாய். இது எங்கள் எல்லோருக்குமே தெரியும். ஏன் நம்ம சுந்தரத்திற்கும் தெரியும். ஆனால் கன்னி ஒருத்தி சொல்லி விட்டாள் கண்டதையும் தின்பவர்கள் அல்லவா நம் இனம், அதனால் அவன் ஷார்ஜா ஜீஸ் தான் வாங்கி குடித்தான்.

"just had sharjaha juice. Really nice pa. Thanks for the suggestion :)" என்று குறுஞ்செய்தி வேறு. இந்த கதையைப் படிக்கும் பெண்களே, உண்மையாக சொல்கிறேன்.  ஒரு பெண்ணாக இருப்பதன் பெரும் கஷ்டத்தை அன்று தான் உணர்ந்தேன். (சில நிமிடங்கள் விக்கி விக்கி அழுகிறேன். மூக்கைத் துடைத்துக் கொண்டு..) உங்கள் எல்லோருக்கும் என் சார்பாக வீர வணக்கம் தோழிகளே!

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த கண்றாவி கடலை வளர்ந்து வந்தது. கூடவே அந்த பருவத்திற்கான தேர்வுகள் ஒவ்வொன்றாக வந்து சென்று கொண்டிருந்தது. இதற்கு மேல் இதை வளரவிட்டால் எனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதி இறுதித் தேர்வு அன்று கதைக்கு சுபம் போட்டு விடலாம் என்று பஞ்சாயத்தில் தீர்மானம் ஆனது.

உண்மையை ஒரு நல்ல ஹோட்டலில் வைத்து சொல்லலாம், அப்படியே நாங்களும் அன்றைய பாடு கழித்த மாதிரி ஆயிற்று என்று, இறுதித் தேர்வு முடிந்த அன்று சந்திக்கலாமா என்று கேட்டேன். ஓரளவுக்கு நல்ல விலையுயர்ந்த ஹோட்டலில் மதிய உணவுக்கு சந்திக்கலாம் என்றேன். (ஏனென்றால் இந்த மாதிரி ஹோட்டலில் நாங்கள் இப்படி சாப்பிட்டால் தான் உண்டு.)  பயலுக்கு ஏக குஷி. "வரும் போது நீ நம்ம காலேஜ் டூர் அப்போ போட்டிருந்தியே அந்த கருப்பு டிரெஸ், அதுல நீ நல்லா இருந்த, அதுல வரணும்" என்று மெசேஜ் வேறு. சனீஸ்வரா! 

கலர் கலர் கனவுகளோடு இறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டு அந்த ஹோட்டலுக்கு வந்து விட்டான். நாங்களும் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்து தயாராக இருந்தோம் வேட்டைக்கு. எல்லோரும் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தோம். எங்களை அவன் எதிர்பார்க்கவில்லை. சிவ பூஜையில் இந்த கரடிகள் எதற்கு என்று அவன் நினைத்திருக்கக் கூடும். ஏற்கனவே சொல்லி வைத்திருந்த படி நான் முதலில் செல்லவில்லை. மற்ற நண்பர்கள் சென்றிருந்தார்கள்.

"என்னடா இந்த பக்கம்? எங்க கிட்ட வேற எங்கயோ போறேனு சொன்ன"

"இல்லடா, இன்னையோட பரீட்சை முடியுதுல்ல, அதான் அப்படியே பிரெண்ட பார்த்துட்டு போலாம்னு..." என்று நெளிந்தான்.

ரஞ்சனாவாகிய நான் அவனை அலைவேசியில் அழைத்தேன்.

"ஏய் எங்க இருக்க, சாரிப்பா, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, வந்துட்டே இருக்கேன்".

"பரவாயில்லை, பொறுமையாவே வா, நாம நிச்சயமா இந்த ஹோட்டல்ல தான் சாப்பிடணுமா?" என்றான்.

"ஏய், அது என் பேவரிட் ஹோட்டல்பா, அங்க தான் சாப்பிடணும், ஏன்?"

"இல்லை நம்ம கிளாஸ் பசங்களாம் இங்க இருக்காங்க, அதான்" என்று இழுத்தான்.

அப்படியே நான் போன் பேசிக்கொண்டே ஹோட்டலுக்குள் நுழைந்தேன் அவன் அமர்ந்திருந்த டேபிள் அருகில் சென்றேன்.

"ஏன், தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது, என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் தெரியப் போறது தானே. சர்வர் அண்ணா ஒரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க" என்று இந்த வாக்கியத்தை சொல்லி விட்டு அப்படியே அவன் முன்னால் போய் அமர்ந்தேன். ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்தில் மிக சந்தோஷமான செய்தியும், மிக சோகமான செய்தியும் சொன்னால், எப்படி இருக்கும் என்று அன்று தான் கண்டு கொண்டேன். பயலுக்கு ஒரு நிமிஷம் தலை கால புரியவில்லை. லேசா சிரிக்க ஆரம்பித்தவன், நான் அவன் டேபிளில் கருப்பு சட்டையோடும் போனோடும் போய் உட்கார்ந்ததைப் பார்த்ததும் புரிந்து கொண்டான். ஹோட்டலில் இருந்த நண்பர்கள் எல்லோரும் இந்த சமயத்தில் ஹே! என்று கத்திக் கொண்டே எங்கள் டேபிள் அருகில் வந்து விட்டார்கள். ஒட்டு மொத்த ஹோட்டலும் எங்களையே பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவனை கலாய்க்க ஆரம்பித்து விட்டோம். அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

"தக்காளி டேய், இன்னைக்கு நீ தான் எங்க எல்லாருக்கும் பில் கட்டுற, அண்ணா ஒரு மட்டன் பிரியாணி" என்று ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். முதலில் அதிர்ச்சியானவன், பின்பு அவனும் எங்களைப் போல சூடு சொரணை இல்லாத ஜந்து என்பதால் அவனும் அசடு வழிய சிரிக்க ஆரம்பித்து விட்டான். இந்த ஒட்டு மொத்த நிகழ்வையும் பிற்கால சந்ததியருக்காக வீடியோ வேறு எடுத்து வைத்தோம். 

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, சுந்தரத்தின் நெருங்கிய நண்பன், "டேய் எத வேணாலும் பொறுத்துப்பேண்டா, ஆன நாங்க கடைக்கு கூட்டி போனப்புறம் முலாம் பழ ஜீஸா, சாத்துக்குடி ஜீஸானு கேட்ட பாரு, அத மட்டும் மன்னிக்கவே மாட்டேண்டா, இதுக்காகவே, இரு... சர்வர் அண்னா இன்னொரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க. தின்னே இவன் சொத்த அழிச்சிடறோம்" என்றான். கலாய்த்து சிரித்து சாப்பிட்டு முடித்து பில் வந்தது. பயல் கிட்டதட்ட 2000 ரூபாய் தண்டம் அழுதான் அன்று மட்டும். இந்த சம்பவம் உண்மையான ரஞ்சனாவிற்கு தெரிந்து, ஏற்கனவே பெண்கள் மத்தியில் என் தலைக்கு பல லட்சங்களாக இருந்த எனது Bounty, மேலும் கூடியது. ஆனால் பொது வாழ்வு என்று வந்து விட்டால், இதையெல்லாம் பார்க்க முடியுமா.

இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்து விட்டன. கல்லூரி முடித்து நாங்கள் வேலைக்கு சேர்ந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போதும் அந்த கெத்து கேங்கில் சிலர் கெத்தாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தி அவளுக்கு கல்யாணம் என எல்லோருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள். அப்படியே கெத்து கேங்கில் உள்ள அபிலாஷ்க்கும் போன் செய்தாள். அவன் போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

10 நிமிடங்கள் கழித்து அறைக்குள் வந்து "மாப்ள, ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனுஷன கடிச்ச கதையா இந்த சிவா நம்ம கிட்டயே வாலாட்டுறான். தக்காளி 10 நிமிஷம் எனக்கு தெரிஞ்ச எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு திட்டிட்டேன். இனிமே நம்ம வழிக்கே வரமாட்டான்" என்றான் பெருமிதம் பொங்க. அவனது அறைத் தோழர்கள் எல்லா ம் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்கள். "டேய், அது உண்மையாவே நம்ம கிளாஸ் பொண்ணு தாண்டா" என்று அவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. அதன் பிறகு அவளுடைய கல்யா ண விஷயத்தை சொல்லி, உண்மையாகவே அவள் தான் போன் செய்தாள் என்று இவனை நம்ப வைத்து, அதன் பிறகு இவன் அசடு வழிந்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு, என அந்தக் கதை மிக சுவாரசியாமாக சென்றது. 

ஆக இந்த கதை சொல்லும் நீதி என்னவென்றால், ஒரு பெண் நமக்கு போன் செய்தால் அது பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அது உண்மையாக ஒரு பெண்ணாகக் கூட இருக்கலாம் :)


புதன், 14 பிப்ரவரி, 2018

நான் தான்டா குமார்.exe

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் மூன்றாவது பகுதி இது. முதல் பகுதி இங்கே, இரண்டாம் பகுதி இங்கே. இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே உயிரியல் (பயாலஜி) பிடிக்காது. எனவே பதினொன்றாம் வகுப்பிலேயே பொறியியல் தான் என முடிவெடுத்து கணினி பிரிவை தேர்ந்தெடுத்தேன். சில பேர் உயிரியல் எடுத்தால் மருத்துவத்திற்கும் போகலாம், பொறியியலுக்கும் போகலாம் என்பார்கள். கூடவே நாசமாகவும் போகலாம் என்பதை வாகாக மறைத்து விடுவார்கள். எனவே தம்பிரான் புண்ணியத்தில் அவர்களிடம் சிக்காமல் கணினி பிரிவைத் தேர்ந்தெடுத்து பின்னர் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றில் தகவல் தொழில்நுட்பத் துறை பயில ஆரம்பித்தேன். நண்பனின் சகோதரன் ஒருவரிடம் இந்த கல்லூரியில் சேர முடிவு செய்து விட்டேன் என்றேன். அவர் உடனே, அந்த காலேஜா, அதுவும் ஐ.டி. டிப்பார்மெண்டா? அது ரொம்ப ஸ்டிரிக்ட் ஆன டிப்பார்ட்மெண்ட் ஆச்சேபா. சாயந்திரம் குரூப் ஸ்டடிலாம் வெக்கிறாங்கனு என் பிரெண்டு சொன்னான் என்றார். என்னடா அது, பொறியியல் கல்லூரி, அதுவும் அரசு கல்லூரியில் இப்படியெல்லாமா இருக்கும் என வியந்து கொண்டே சேர்ந்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல மாலை சிறப்பு வகுப்புகள் எதுவும் இல்லை. என்ன காரணம் என சீனியர் ஒருவரிடம் கேட்டபோது, அதுவா, போன வருஷம் வரைக்கும் அந்த கருமம்லாம் இருந்துச்சு. நம்ம டிப்பார்ட்மெண்ட்ல ஒரு மேடம் இருகாங்க. பயங்கர டெரர் அவங்க. அரியர் கொடுக்கறதுல ஸ்பெஷலிஸ்ட். (நாட்டுல எதுலலாமோ ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார்கள், இப்படியும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் என நினைத்துக் கொண்டேன்.) அவங்க தான் இத ஆரம்பிசாங்க. நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா, கடுப்பாகி ஸ்பெஷல் கிளாஸ் கம்ப்யூட்டர் லேப்ல நடக்கும் போது ஹார்ட் டிஸ்க திருடிட்டாங்க. அதுவே 1 ஜி.பி ஹார்ட் டிஸ்க்தான். அதுக்கே அந்த அம்மா அந்த குதி குதிச்சு, ஸ்பெஷல்  கிளாஸ்லாம் கேன்சல் பண்ணி கிளாஸ்ல எல்லாரையும் பெயில் பண்ணி விட்டிருச்சி என ரத்தின சுருக்கமாக கதையை சொன்னார். என்னடா இது ரொம்ப பயங்கராமான துறையா இருக்குமோ என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் போகப் போக தான் வேடிக்கையே.

ஜி.டி நாயுடுவுக்கு பிறகு அறிவாளிகளே பிறக்கவில்லை எனும் குறையை போக்க எங்கள் துறையில் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். (கவனிக்க எல்லோரும் அல்ல). என்னடா இவன் ஆசிரியரையே குறை சொல்கிறான் என எண்ண வேண்டாம். பின்வரும் சம்பவத்தை படித்தால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். எங்கள் கல்லூரி பேராசிரியர்களை முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக பல்வேறு மாணவர்கள் தங்கள் வழிகாட்டியாக தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் எல்லாம் எங்களை விட பெரும்பாலும் 10-15 வயது மூத்தவர்களாக இருப்பர்கள். ஏற்கனவே ஆசிரிய அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். சில பருவங்களில் எங்களுக்கு இவர்களே பாடம் எடுப்பார்கள். எங்கள் இறுதி ஆண்டு செயல் திட்டத்திற்கு (புராஜெக்ட்) இவர்களில் சிலர் வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள். அப்படி ஒருவர் தான் எங்கள் குழுவிற்கு வழிகாட்டியாக வந்தார். சரி முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்கிறவர், இவர் நமக்கு வழிகாட்டியாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எண்ணினோம். முதல் நாள் எங்கள் குழுவை அழைத்து பேச ஆரம்பித்தார். 

இப்போ பாத்துகிட்டீ ங்கனா தம்பி, நம்ம சுத்தி நிறைய டேட்டா இருக்கு, அது எல்லாத்தையும் ஸ்டோர் பண்ற அளவுக்கு நம்மளுக்கு இடம் இல்லை. அதனால டேட்டா கம்பிரஷென்ல நீங்க பிராஜெக்ட் பண்ணீங்கனா நல்லா இருக்கும்.

சரி சார். (ஆஹா, ஆரம்பம் நல்லா இருக்கே)

இந்த மாதிரி டேட்டா கம்பிரெஷன்ல நான் நிறைய பிராஜெக்ட் பண்ணிருக்கேன். இப்போ உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா கூகிளையே நாம கம்பிரெஸ் பண்ணலாம்.

என்னது! கூகிளையே கம்பிரெஸ் பண்ண போறோமா, அப்படினா இந்த தடவ பெஸ்ட் ப்ரஜெக்ட் அவார்டு நமக்கு தான். அப்புறம் அப்படியே மைக்ரோசாப்ட்ல வேலை, ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு டஃப் கொடுக்கறோம் என நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் போதே

இந்த G-O-O-G-L-E இருக்குல, இத G-O^2-G-L-E அப்படினு எழுதினா அவ்ளோ தான், கூகிள கம்பிரெஸ் பண்ணியாச்சு என்றார்.

கனவு கோட்டைகள் எல்லாம் தவிடு பொடியாகி, ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது பாடல் பிண்னணியில் ஒலிக்க ஆரம்பித்தது வேறு கதை. இதை சொல்ல வந்தது எதற்கு என்றால் இப்படியாகத் தான் இருந்தது லட்சணம் எங்கள் துறையில். சந்தை தேவைகளுக்கும் நாங்கள் படிக்கும் பாடங்களும் இடையே ஒரு பசிபிக் பெருங்கடலே இருந்தது. எனவே நாங்கள் கற்றுக்கொண்ட வித்தைகள் எல்லாம் சீனியர்கள் புண்ணியத்திலும் மற்றும் வகுப்பில் இருந்த சில நல்லுள்ளங்களாலும் தான். அப்படிப்பட்ட நல்லுள்ளங்களில் ஒன்று தான் விஜயேந்திர குமார். கல்லூரிக்குத் தான் அவன் விஜயேந்திர குமார். எங்களுக்கு வெறும் குமார். இன்னும் சொல்லப் போனால் கொக்கி குமார்.

கொக்கி குமார் - பெயர் மட்டும் தான் இவ்வளவு பயங்கரமாக இருக்கும். ஆள் பரம சாது. விளக்குமாறில் இருக்கும் ஒற்றை குச்சியை விட ஒல்லியானவன் (இதெல்லாம் நீ சொல்ற பார்த்தியா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது). டார்வினின் பரிணாம வரலாற்றில் ஏற்பட்ட பிழை என்று இவனை சொல்லலாம். மனிதனா வேறு ஏதேனும் ஜந்துவா என்று எங்களுக்கே பல சமயங்களில் யோசனை வந்ததுண்டு. ஏன் என்றால் இவ்வளவு ஒல்லியாக இருந்தாலும் பேய் தீனி தின்பான். அதுவும் எங்கள் விடுதி உணவை. நாங்களெல்லாம் டேய் இன்னைக்கு மெஸ்ல தோசை, எப்படியும் கண்றாவியா தான் இருக்கும், வெளிய போய் சாப்பிடலாம் என்றால், அப்படியா சொல்றீங்க, 5 தோ சை சாப்பிட்டேன் ஒண்ணும் தெரில. சரி எப்படியும் நீங்க வெளில சாப்பிட போறீங்கல துணைக்கு வரேன் என்பான்.

மேலும் ஒவ்வொரு வகுப்பிலும் பஞ்சிங் பேக் என்று ஒரு கதாபாத்திரம் இருக்கும். வடிவேலுவைப் போல எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அந்த கதாப்பாத்திரம். எங்களுக்கு அந்த கதாபாத்திரம் இந்த கொக்கி குமார். வாத்தியர்கள் மேல் கடுப்பு என்றால் இவனை கூப்பிட்டு அடிப்போம், நாங்கள் பரீட்சை சரியாக எழுதவில்லை என்றாலும் இவனுக்கு தான் அடி விழும். ஒரு கட்டத்தில் போர் அடிக்குது என்றால் இவனை கூப்பிட்டு அடிப்போம். அவ்வளவு அடியையும் சிரித்துக் கொண்டே வாங்கிக்கொண்டு, டேய் அடிக்காதீங்கடா, வலிக்குது என்பான். வலிச்சா ஏன் நாயே சிரிக்குற என்றால், அது என்னமோ தெரிலடா நீங்க அடிச்சா ஒரே சிரிப்பா வருது என்பான். அதற்கும் சேர்த்து அடி விழும்.

ஆள் வெகுளியும் கூட. கல்லூரி இரண்டாம் ஆண்டில் அப்போது தான் கணினி விடுதி அறைகளுக்குள் வர ஆரம்பித்தது. எங்கள் அறையிலும் ஒரு கணினி இருந்தது. இவன் ஒரு முறை வந்து, டேய் கம்ப்யூட்டர் யூஸ் பண்ணனும், பாஸ்வேர்ட் சொல்லுங்க என்றான். நான் சொல்லமுடியாது என்றேன். சோகமாக சென்று விட்டான். இப்படியே பல தடவை வந்து கேட்டிருக்கிறான், நானும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் சொல்லமுடியாது என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மிகவும் நொந்து போய், டேய் நீங்களும் யூஸ் பண்ணல, ஆஃப் ஆகி தான இருக்கு, நான் யூஸ் பண்ண பாஸ்வேர்ட் சொன்னா என்னடா எனக் கேட்டான். சரி பயலை ரொம்ப அலைய விட்டோம், இனிமேலும் அலைய விட வேண்டாம் என்று, இம்முறையும் பாஸ்வேர்ட் சொல்லமுடியாது என்றோம். கடுப்பாகி விட்டான். அப்புறம் அவனைக் கூப்பிட்டு பாஸ்வேர்டே 'சொல்லமுடியாது' தான். 'sollamudiyathu'. இப்படி எவனாவது கேப்பான், அவனை வெறுப்பேத்தலாம்னு தான் அந்த பாஸ்வேர்ட் வெச்சிருந்தோம், வசமா நீயே சிக்குன என்று மேலும் இரண்டு அடி போட்டோம். சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டேன்.

ஆள் இவ்வளவு வெகுளி என்றாலும் கோட் அடிப்பதில் புலி. எவ்வளவு கடினமா ன கான்செப்ட்டாக இருந்தாலும் அநாயசமாக கோட் அடித்து விடுவான். மூன்றாம் நான்காம் ஆண்டுகளில் கோட் சம்பந்தமாக எந்த குழப்பம் என்றாலும் இவனிடம் கேட்கலாம் என்ற நிலைமை இருந்தது. ஒரு நாள் யூட்யூபில் கவுண்டமனி செந்தில் வீடியோ ஒன்று பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் கவுண்டமனியை ஒவ்வொருவராக அடித்து விட்டு, நான் நாயர், நான் அடிச்சா இரத்தம் வருதானு பார்த்தேன், நான் தேவர் நான் அடிச்சா இரத்தம் வருதானு பார்த்தேன் என ஒவ்வொருவராக அடித்து விட்டு போவார்கள். இதைப் பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு கேள்வி, இந்த குமார் பயல நாம அடிச்சா மட்டும் தான் வலிக்க மாட்டேங்குதா, இல்லை ஊரே சேர்ந்து அடிச்சாலும் வலிக்காதா என்று யோசித்தோம். சரி ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தால் கோர்த்து விட்டு பார்ப்போம் என்று இருந்தோம்.

மூன்றாம் ஆண்டு கல்லூரி விடுதியில் கிட்டதட்ட எல்லோர் அறையிலும் ஒரு கணினியாவது இருந்தது. பெரும்பாலும் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன்படுத்தி வந்தார்கள். அதனால் வைரசும் எக்கச்சக்கமாக இருந்தது. நாங்கள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் என இரண்டையுமே பயன்படுத்தி வந்ததால் முடிந்த அளவு எங்கள் கணினியைக் காப்பாற்றி வந்தோம். அப்போது வந்த வைரஸ்களுள் மிகப் பிரபலமானது New Folder.exe என்ற வைரஸ். இது கணினியில் சென்றவுடன் எல்லா கோப்புறைகளிலும்(Folders)  சென்று அதே பெயரில் உட்கார்ந்து கொள்ளும். உங்கள் கணினியில் 1000 கோப்புறைகள் இருந்தால், இந்த வைரஸ் அதே பெயரில் மேலும் ஒரு 1000 காலியான கோப்புறைகளை உருவாக்கி விடும். வெகு சீக்கிரமே உங்கள் கணினி மெதுவாக வேலை செய்யும். ஹார்ட் டிஸ்க் முழுவதையும் அழித்துவிட்டு முதலிலிருந்து ஆரம்பிப்பது மட்டுமே ஒரே வழி.

அந்த New folder.exe வைரைஸை லினக்ஸ் மெஷினில் போட்டு ஆராய்ந்து பார்த்தோம். பெரிய சிக்கல் இல்லாத கோட் தான். அதையே கொஞ்சம் மாற்றி, கோப்புறையின் பெயருக்கு பதிலாக 'நான் தான்டா குமார்' (Naan thaanda kumar) என எல்லா கோப்புறைகளிலும் வருமாறு செய்து விட்டோம். பின்பு வழக்கம் போல பல பென் டிரைவ்கள் மூலம் அந்த வைரஸ் விடுதியின் சகல கணினிகளும் பரவி விட்டது. எல்லா கணினிகளிலும் Naan thaanda kumar என்ற பெயரில் ஏகப்பட்ட கோப்புறைகள் இருக்கவே அனைவருக்கும் ஏக கடுப்பு. முகம் தெரியாத ஒருவன் நம்மை ஏமாற்றினால் பெரிய கோபம் வராது. அதே நமக்கு தெரிந்த எவனோ ஒருவன் என்றால் செம கடுப்பு வரும் இல்லையா, அதே போல தான் ஆயிற்று. ஒட்டு மொத்த விடுதியும் எவன்டா அந்த குமார் என்று சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை யதே ச்சையாக வேறு ஒரு அறையின் செல்லும் போது உள்ளிருந்து மிகுந்த கோபத்துடன் ஒரு குரல், எந்த நாய்டா அந்த குமாரு, காலைல கண்ண தொறந்தாலே அவன் பேர்ல இருக்கற ஃபோல்டர தான் பாக்க வேண்டி இருக்கும், தக்காளி அவன் மட்டும் என் கைல கிடைச்சான்..... எங்கள் ஆபரேஷன் வெற்றியடைந்த திருப்தி எங்களுக்கு. 

இந்த தகவல் குமாருக்கும் தெரிய வர அவன் நேரே எங்கள் அறைக்கு தான் வந்தான். டேய், உண்மைய சொல்லுங்க, நீங்க தான இந்த வேலை பார்த்தது என்றான். என்னங்க சிவாஜி இப்படி பண்ணிட்டாங்க படு பாவி பசங்க போன்ற ஒரு ரியாக்‌ஷனை கொடுத்தோம். கண்டுபிடித்து விட்டான். டேய், நடிக்காதீங்கடா, நீங்க தானு தெரியும். ஏன்டா இப்படி பண்ணீங்க என்றான். அந்த கவுண்டமனி வீடியோ வரலாறை சொல்லி, நம்ம டிப்பார்ம்ணட் பசங்க அடிச்சா மட்டும் தான் உனக்கு வலிக்காதா, இல்லை மத்த எல்லா டிப்பார்ட்மெண்ட் பசங்க அடிச்சாலும் வலிக்காதானு கண்டுபிடிக்க தான் என்றோம். அடப்பாவிகளா, ஒரு அப்பாவி உசுர வெச்சு விளையாடிட்டு இருக்கீங்களே என்றான். ஆனாலும் அப்பவும் பெரிய கவலை எல்லாம் இல்லை. சிரித்துக் கொண்டே தான் இருந்தான்.

ஒரு வழியாக எல்லா விடுதி மாணவர்களுக்கும் அந்த குமார் யார் என தெரிந்து விட்டது. கொலை வெறியோடு எல்லோரும் இருக்கையில், சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவான் என்று பரிதாபப்பட்டு நடுவில் புகுந்து சமாதானம் பேச சென்றோம். இந்த பாருங்கபா, ஏதோ ஆர்வக்கோளாறுல நம்ம பையன் இப்படி பண்ணிட்டான். உங்க வீட்டு பிள்ளையா அவன மன்னிச்சு அடிக்காம விடுங்க. இதுக்கு பதிலா, அவனே உங்க எல்லா சிஸ்டத்தையும் பார்மேட் பண்ணி, புது விண்டோஸ் ஓஸ் அவனே இன்ஸ்டால் பண்ணி கொடுப்பான், என்ன சரி தான என அவனை கேட்காமலே பஞ்சாயத்தில் வாக்கு கொடுத்து விட்டோம். மற்றவர்களும், சரி எப்படியும் பார்மேட் பண்ண வேண்டிய சிஸ்டம், இவனே பண்ணிக் கொடுக்கறான், நல்லது தானே என சரியென்றார்கள். குமார் மட்டும் எங்களையே மிகத் தீவிரமாக முறைத்து கொண்டிருந்தான். விடு மச்சி, இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும், உனக்கு நம்ம ஹாஸ்டல்லயே சிலை வெப்பாங்க என்றோம். மயிரு, குறைஞ்சது 100 சிஸ்டத்துக்காவது ஃபார்மேட் அடிக்கனும். அரைமணி நேரம்னு வெச்சாகூட 1 மாசம் ஓடிடும்டா என்றான் பாவமாக. விடுறா, வீரர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம், தியாகம் தான் உன்னை உயர்த்தும் குமாரு என்று இரண்டு அடி போட்டு அனுப்பி வைத்தோம்.

ஒன்றரை மாதங்கள் கழிந்து ஒரு வழியாக விடுதியில் உள்ள அனைத்து கணினிகளையும் சரி செய்து விட்டான். ஒரு நாள் எங்களது அறைக்குள் எதற்காகவோ வந்தான். அவன் வந்ததை கவனிக்காதது போல நான் எனது அறைத் தோழனிடம், மச்சி, குமார் தான்டா கெத்து.exe அப்படினு ஒரு புது வைரஸ் ஹாஸ்டல்ல பரவுதாமே கேள்விப்பட்டியா என்றேன். அடேய்களா நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்ல, உங்களை கொன்னுட்டு தான்டா மறு வேலை என மிக ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து கொண்டிருந்தான். வழக்கம் போல இரண்டு அடி போட்டு அவனை அனுப்பி வைத்தோம் என நான் சொல்லி தான் உங்களுக்குப் புரிய வேண்டுமா என்ன :)


வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ஆர்குட் கணக்கு

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் இரண்டாவது பகுதி இது. முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இப்போது முகநூல் எவ்வளவு பிரபலமோ அதே அளவு ஆர்குட் வலைதளம் பிரபலம் நான் கல்லூரி படிக்கையில். முகநூல் வந்து மற்ற நாடுகளில் மிகப் பிரபலமாக ஆன பின்னும் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் ஆர்குட்டைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருந்தன. கல்லூரியின் முதலாம் ஆண்டில் கணிணியும் கிடையாது, இணையதள வசதியும் கிடையாது. எப்போ தாவது கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்று கொஞ்ச நேரம் இணையத்தில் மேய்ந்து விட்டு வருவோம். அப்படி மேயும் போது பெரும்பாலான நேரம் ஆர்குட்டில் தான் இருப்போம்.

ஆர்குட்டில் முகநூலை விட சில நல்ல விஷயங்கள் இருந்தன. இப்போது போல அப்போது எல்லோரிடமும் புகைப்பட வசதி கூடிய கைப்பேசியோ, ஏன் ஒரு நல்ல புகைப்படக் கருவியோ கூட இருக்காது. மேலும் இப்போது நாம் எடுக்கும் புகைப்படங்களை வடிகட்டிகள் இல்லாமல் (ஃபில்டர்ஸ்) நம்மால் கூட பார்க்க சகிக்காது. அப்போது புகைப்படம் எடுத்து அதை போட்டோஷாப் போன்ற கிடைத்தற்கரிய மென்பொருள் கொண்டு வடிகட்டி, கைப்பேசியோ அல்லது கருவியையோ கணினியுடன் இணைத்து வடிகட்டிய புகைப்படத்தை மாற்றி..... படிக்கும் உங்களுக்கே மூச்சு வாங்குகிறதா? அப்படியானால் யோசித்து பாருங்கள் ஒரு புகைப்படம் மாற்றுவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிடும். எனவே பெரும்பாலும் யாரும் தங்கள் புகைப்படத்தை வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் அதை அடிக்கடி மாற்றுவதில்லை. நல்ல விஷயம் தானே முகநூலோடு ஒப்பிடும் போது? மேலும் சதா தோள்பட்டையை தூக்கிக்கொண்டு இணையத்திலேயே புரட்சி நடத்தும் விசைப்பலகை வீரர்களும் இல்லை ஆர்குட்டில். இது போக நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை  குழு கூட அங்கு இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அளவான வசதிகளோடு போதுமான முறையில் ஒரு நல்ல வலைதளமாக இயங்கி வந்தது.

ஆனால் இது எல்லாவற்றையும் விட, ஆர்குட்டில் இருக்கும் ஒரு மிக மிக முக்கியமான வசதி இப்போது வரைக்கும் கூட முகநூலில் கிடையாது. ஒவ்வொரு முறை ஆர்குட்டில் நீங்கள் உள்நுழையும் போதும் உங்களுடைய சுயவிவரத்தை (புரொபைல்) யார் யாரெல்லாம் பார்வையிட்டுள்ளார்கள் என்ற விவரம் இருக்கும். அதில் ஒரே ஒரு பெண்ணின் பெயர் வந்து விட்டால் கூட ஒரே கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் சோகம் என்னவென்றால் அப்படியொன்றும் நடந்து விடாது. கூடவே இருக்கும் செவ்வாழைகள் தான் நமது சுய விவரத்தை சுற்றி சுற்றி வந்தார்கள் என்று ஆர்குட்டே கழுவி ஊத்தும். நம்மள பார்க்கும் பொண்ண விட, நாமளே ஒரு பொண்ண பார்க்குறது தான் சிறந்தது என்ற கொள்கை முடிவோடு ஒரு சுயவிவரம் விடாமல் எல்லா பெண்களின் சுயவிவரத்தையும் பார்த்து விடுவோம். ஏனென்றால் அவர்கள் அடுத்த முறை ஆர்குட்டில் உள்நுழையும் போது நமது பேர் அவர்கள் முன் வருமல்லவா, அப்போதாவது யார் இந்த பையன், நம்மளையே சுத்தி சுத்தி வர்ரான் என்ற கேள்வியோடு நமது சுயவிவரத்தை பார்த்து விட மாட்டார்களா என்ற நப்பாசை தான். ஆனால் பாருங்கள் மகாஜனங்களே, இந்த விதி தான் எத்தனை வலியது. சொல்லி வைத்தாற் போல ஒரு பெண்ணும் யார் இவன் என்று தெரிந்து கொள்ளகூட நமது சுயவிவரத்தில் எட்டி பார்க்க மாட்டார்கள். எங்கிருந்து தான் இவ்வளவு மன உறுதியோ! ஆனால் அதற்காக நமது முயற்சியைக் கைவிட முடியுமா, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்களாக நாங்களும் சீனியர், ஜூனியர் என்ற பாரபட்சம் கூட இல்லாமல் ஒவ்வொரு சுயவிவரத்திலும் எங்கள் முத்திரையை இட்டு விட்டு வருவோம்.

இப்படியாக ஆர்குட் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. முதலாம் ஆண்டு கடைகளுக்கு சென்று இணையத்தை மேய்ந்த நாங்கள், இந்திய தொழில்தொடர்புத் துறையின் அபார வளர்ச்சியினால் கல்லூரியின் இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் விடுதியில் இருந்தே சொந்தக் கணினி மூலம் கன்னியரின் சுயவிவரத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். 

எங்கள் வகுப்பில் முத்து ராமன் என்றொருவன் இருந்தான். கல்லூரியில் சேரும் பொழுது மிக அமைதியாக இருந்தான். பருவத்தேர்வுக்கு முதல் நாள் நாங்கெளல்லாம் உருண்டு புரண்டு படித்துக் கொண்டு இருப்போம். அவனிடம் கேட்டால் எல்லாத்தையும் படிச்சுட்டேன் மச்சி, கடைசியா ஒரு தடவ ரிவைஸ் பண்ணிட்டு இருக்கேன் என்று வயித்தெரிச்சலைக் கிளப்புவான் .முதல் இரண்டு ஆண்டுகள் வரை இப்படி தான் இருந்தான். மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் எங்களிடம் வந்து, மச்சி இந்த வருஷம் நான் உங்ககூட ரூம் எடுத்துகிடட்டா என்றான். சரி நாம தான் படிக்காம சுத்திக்கிட்டு இருக்கோம், நம்ம கூட படிக்கிற பையன் ஒருத்தன் இருந்தா நல்லது தானே என்று நாங்களும் சரி என்றோம். ஆனால் பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமல்லவா, அது போல மூன்றாம் ஆண்டு பருவத்தேர்வுக்கு முதல் நாள் அவனிடம் படிச்சிட்டியா என்றால், 5 யூனிட்ல 4 படிச்சிட்டேன், அநேகமா 1 ஐ சாய்ஸ்ல விட்டிருவேனு நினைக்கிறேன் என்றான். நல்ல முன்னேற்றம். இதே கேள்வியை நான்காம் ஆண்டு பருவத்தேர்வுக்கு முன்னால் கேட்ட போது, என்னது நாளைக்கு பரீட்சையா என்றான். இப்படியாக வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருந்தோம்.

ஒரு நாள் அவன் அறையில் உட்கார்ந்து ஆர்குட்டில் உலவிக் கொண்டிருந்தான். திடீரென்று இயற்கை அழைத்தது போல, அதை அப்படியே விட்டு விட்டு வெளியில் சென்று விட்டான். உடனே நாங்கள் இது தான் சாக்கு என்று அவனது கணக்கினுள் நுழைந்து அவன் இது வரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத எங்கள் வகுப்பு பெண் ஒருத்தியின் ஆர்குட் ஸ்கிரேப்புக் இல் சென்று (முகநூலில் உங்கள் நண்பரின் சுவரில் இடுகை இடுவது போல) பின் வரும் இடுகையை இட்டோம்

"வாழ்க்கையில் பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணம் 'ஆம்' என சீக்கிரமே சொல்லி விடுவது அல்லது 'இல்லை' என மிக தாமதமாக சொல்லி விடுவது. நீ இல்லை என ஒரு தடவை சொல்வதற்கு முன் ஒரு முறை என்னைப் பற்றியும் யோசி". 

கீழே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் வரும் என்ன சொல்லப் போகிறாய் பாடலின் வீடியோ சுட்டி, இவற்றை இணைத்து விட்டோம். 

இவன் வந்து இதைப் பார்த்து விட்டால் அழித்து விடக்கூடும் என எண்ணி அதை அப்படியே திரைச்சொட்டு எடுத்து (ஸ்கீரீன் ஷாட்) வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் அனுப்பி, பாருங்க முத்து ராமன் என்ன வேலையெல்லாம் பாக்குறான் என்று பரப்பி விட்டாயிற்று. எங்களோடு சேர்ந்து இருந்ததால் இவனுக்கு சூடு சொரணை எதுவும் இல்லை. அவன் இதை கண்டு கொண்டது போல தெரியவில்லை. ஆனால் அந்த பெண் அப்படி இருக்க மாட்டாள் அல்லவா, அவளுக்கு ஒரே குழப்பம். இவன் கூட நாம ஒரு தடவை கூட பேசினது இல்ல, எதுக்கு இவன் லூசு மாதிரி இப்படி நம்மளுக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கான் என்ற குழப்பத்தில் இவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். நாங்கள் எது நடக்க கூடாது என எதிர்பார்த்தோமோ அது நடந்து விட்டது. பதிலுக்கு இவனும் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப, ஏர்டெல் நிறுவனம் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்தி கொடுக்க, இவன் அந்த 100 ஐயும் அவளுக்கே அனுப்ப, கடைசி வரை யில் நாங்கள் பெண்களின் ஆர்குட் சுயவிவரத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். என்னடா இது இவனை கோர்த்து விட பார்த்தா இவன் வாழ்க்கைய அனுபவிச்சு வாழ்ந்திட்டு இருக்கான் என்று எங்கள் எல்லோர் காதிலும் புகை.

ஆனால் ஏற்கனவே கூறியது போல விதி வலியது அல்லவா, மீண்டும் ஒரு முறை இவன் ஆர்குட்டில் உள்நுழைந்து விட்டு அப்படியே விட்டு விட்டு ஊர் மேய சென்று விட்டான். இந்த சந்தர்ப்பத்தை விடக் கூடாது என எண்ணி இருந்தோம். இம்முறை இவன் தப்ப முடியாத படி கோர்த்து விட வேண்டும் என எண்ணினோம். அதனால் இம்முறை வேறொரு பெண்ணின் சுய விவரத்திற்கு சென்றோம். அங்கு சென்று,

பெண்ணே,
பொங்கலுக்கு மட்டும் தானே வெள்ளை அடிப்பார்கள்,
நீ என்ன
தினம் தினம் வெள்ளை அடிக்கிறாய்
உன் முகத்திற்கு!

என பதிவிட்டு வழக்கம் போல அதை திரைச்சொட்டு எடுத்து எல்லோருக்கும் அனுப்பியாற்று. இம்முறையும் அவன் இந்த பெண்ணிடம் பேசியது கூட இல்லை. இந்த முறை நாங்கள் எதிர்பார்த்த வெற்றிக்கும் மேலே கிடைத்தது. குறுஞ்செய்தியெல்லாம் இல்லை, அவனுக்கு நேரே அழைப்பே வந்தது. எடுத்து காதில் வைத்து ஹலோ சொன்னது தான் தாமதம், அந்த முனையில் இருந்து அந்த பெண் கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்தாள், முதலில் ஹி ஹி என்று சிரித்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல இவனின் சிரிப்பைக் கேட்டு அந்த பெண் உக்கிரமடைந்திருப்பாள் போல, நிறுத்தவே இல்லை. இவன் காதிலிருந்து அலைபேசியை எடுத்து கீழே வைத்து விட்டான்.

அப்பப்பா எந்த ஊர்காரிடா இவ, என்னா கிழி கிழிக்கிறா, காதுல இரத்தம் வருது. அப்படி என்னடா எழுதினீங்க?

என்ன எழுதினோம்னு கூட தெரியாதா?

தெரிலடா, வழக்கம் போல எதாவது எழுதி இருப்பீங்க, அந்த பொண்ணு மெசேஜ் பண்ணுவானு நினைச்சேன், இப்படி திட்டுறா, பாரு நான் போனை கீழ வெச்சு 5 நிமிஷம் ஆச்சு, எதிர் சைட்ல இருக்கிறவன் என்ன ஆனானு தெரியாம கூட திட்டிட்டு இருக்கா. 

யாராவது போன் வாங்கி அப்பபோ ஒரு உம் மட்டும் கொட்ட முடியுமா என்று போனை கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தான். அந்த பெண் இன்னும் திட்டி முடிக்கவில்லை. இருப்பு தீர்ந்து விட்டதோ அல்லது அலுத்து விட்டதோ தெரியவில்லை, புயலடித்து ஓய்ந்தது போல அந்தப் பெண் கடைசியாக நிறுத்தினாள். இவனும் மன்னிப்பு கேட்டு விட்டு போனை வைத்து விட்டான். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் முதலில் குறிப்பிட்ட பெண்ணும் இவனுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தி விட்டாள். அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு என்று நாங்கள் எல்லோரும் பெருமூச்சு விட்டோம். ஆனால் இத்தனை நடந்த பிறகும் அவன் அந்தப் பதிவை எழுதியது நான் இல்லை, எனது நண்பர்கள் தான் என்று ஒரு வார்த்தை கூட அந்தப் பெண்ணிடம் சொல்லவில்லை. முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்தகநக நட்பதல்லவா நட்பு :)

இந்த இரு சம்பவங்களும் அரசல் புரசலாக மற்ற துறை மாணவர்களிடம் பரவியது. ஒருவர் மாற்றி ஒருவரிடம் சென்று கடைசியில், "டேய் ஐ.டி டிப்பார்ட்மெண்ட் பசங்க ஆர்குட் அக்கவுண்டையே ஹேக் பண்றாங்களாமாடா" என்று முடிந்தது. ஒரு நாள் மின்னியல் துறையில் இருந்து ஒருவன் வந்து முத்து ராமனிடமே, மச்சி உங்க கிளாஸ் பசங்க ஆர்குட் அக்கவுண்ட ஹேக் பண்றாங்களாமா, அது எப்படினு சொல்ல முடியுமா என்று கேட்டான். இவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே என்னிடம் அனுப்பி வைத்தான்.  அவனிடம் விபரங்களையெல்லாம் கேட்ட பிறகு, யார் அக்கவுண்ட ஹேக் பண்ணனும் என்றேன். அவனுடைய ரூம் மேட் அக்கவுண்ட் தான் என்றான். அப்படியென்றால் இன்னும் வசதியாக போயிற்று எனக் கூறி அவனோடு அவனது அறைக்கு சென்றேன். அப்போது அவனது ரூம் மேட் ஆர்குட்டில் மேய்ந்து கொண்டிருந்தான். நான் அப்படியே எதேச்சையாக இவனிடம் பேசுவது போல, டேய் இந்த வாரத்துல இருந்து திங்கட்கிழமைக்கு பதிலா, இன்னைக்கே மெஸ்ல வடை போடுறாங்களாம் என்றேன். இதைக் கேட்ட அவனது ரூம் மேட், தட்டை தூக்கிக்கொண்டு மெஸ் நோக்கி ஓடினான். நான் உடனே, சீக்கிரம் சீக்கிரம் கதவை பூட்டு என்றேன். எதுக்குடா என்று அவன் குழப்பமாக கேட்க, இந்தா அவசரத்துல ஆர்குட்ல லாக் அவுட் பண்ணாம அவன் போயிருக்கானா, நாம உடனே கபால்னு அந்த அக்கவுண்ட்குள்ள நுழைஞ்சிடனும். அவ்வளவு தான் ஹேக்கிங் என்றேன். அவன் கீழே ஏதோ விழுந்தது போல சுற்றி சுற்றி தேடிக் கொண்டிருந்தான். காறி துப்ப தான் அப்படி பார்க்கிறான் எனப் புரிந்து கொண்டேன். இவர்களாகவும் சொந்தமாக யோசிக்க மாட்டார்கள், நாம் புத்திசாலித்தனமாக யோசித்தாலும் மதிக்க மாட்டார்கள் என்ற கவலையோடு அந்த அறைய விட்டு வெளியே வந்தேன். கவனிக்க - நடந்து தான் வந்தேன், ஓடி வரவில்லை :)