திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஏகலைவர்கள்

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஐந்தாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

என்னதான் நாங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தாலும் அது என்னவோ வண்ண ஆடைகள் போட்டு பள்ளிக்கு செல்லும் பதிமூன்றாம் வகுப்பு போல தான் இருந்தது. அவ்வளவு கட்டுப்பாடுகள் முதலாம் ஆண்டில். ஆனால் இரண்டாம் ஆண்டில் எல்லோரும் அவிழ்த்து விட்ட கழுதைகள் தான். எப்போது வேண்டுமானாலும் கல்லூரிக்கோ விடுதிக்கோ வரலாம், போகலாம். பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை (ஆண்களுக்கு மட்டும்). ஆனால் என்ன செய்ய முதலாம் ஆண்டு முடித்து விட்டு தான் இரண்டாம் ஆண்டு போக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அதனால் அந்த வித்தியாசமான பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தோம். 

பிப்ரவரி மார்ச் மாதங்களில் கல்லூரியே களை கட்டி விடும். ஏனென்றால் அந்த மாதங்களில் தான் ஒவ்வொரு துறையும் தங்கள் துறை சார்பாக தேசிய அளவிலான பல்தொழில்நுட்ப கருத்தரங்களும் போட்டிகளும் நடத்துவார்கள். ஆனால் உண்மையில் அவற்றில் தேசியமும், பல்தொழில்நுட்பமும் போனால் போகிறதென்று பேரளவுக்கு தான் இருக்கும். இரண்டும் நாட்கள் நடக்கும் இந்த விழாவில், இரண்டு நாளும் மதியம் 3 மணிக்கு மேல் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்வு தான் மிக முக்கியமான நிகழ்வாக எல்லோராலும் பார்க்கப்படும். கிட்டதட்ட 2-3 மாதங்களுக்கு முன்பாகவே அதற்கான வேலையை ஒவ்வொரு துறையும் தொடங்கி விடுவார்கள். ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இத்தகைய விழாக்களை நடத்துவதால், பிப்ரவரி மார்ச் மாதம் முழுதுமே கல்லூரி வண்ணமயமாக இருக்கும். நிற்க, இது எல்லாமே இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் தான். முதலாம் ஆண்டு மாணவர்களால் இந்நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராகக் கூட செல்ல முடியாது. அதனால் நாங்கள் எல்லோரும் கெஞ்சி கேட்டதற்கு இணங்க, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஒரு அறிவியல் கருத்தரங்க விழாவை நடத்தினார்கள் கல்லூரியில் இருந்து. வழக்கம் போல இதில் அறிவியலும் கிடையாது, கருத்தரங்கமும் கிடையாது. முழுக்க முழுக்க ஆடல் பாடல் தான்.

ஒரு நாள் மட்டுமே இந்த விழா நடத்த வேண்டும். 6 மணிக்குள் முடிக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட வேண்டும்கள். எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டோம். ஒவ்வொரு வகுப்பும் ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும். அது ஆடலோ அல்லது பாடலோ அல்லது நாடகமாகவோ இருக்கலாம். எங்கள் வகுப்புக்கான பஞ்சாயத்து கூடியது. பெண்கள் சார்பாக ஒரு நடனம் ஆடுவதென முடிவெடுத்தார்கள். மற்ற எல்லா வகுப்புகளிலும் நடனம் மட்டுமே இருந்தது. நமக்கு தான் மூக்கு புடைப்பாக இருக்குமல்லவா, அதானால் எங்கள் வகுப்பு ஆண்கள் சார்பாக நாடகம் போடலாம் என்று முடிவெடுத்தோம். அதுவும் வகுப்பில் உள்ள 35 பசங்களும் சேர்ந்து நடிப்பதென.

இந்த இடத்தில் என்னை பற்றிய ஒரு சுய விளம்பரம் அவசியமாகிறது. பள்ளியில் நடந்த 'ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்' என்ற நாடகத்தில் ஏழு குள்ளர்களின் தலைமைக் குள்ளனாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு, உதடு ஒட்டி வசனம் பேசினால் லிப்ஸ்டிக் அழிந்து விடுமென உதடு ஒட்டாமலேயே பேசி நடித்தவன் நான். ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்லலாமா, "மாப்ள! நான்லாம் ஸ்கூல்லயே நெறைய நாடகம் நடிச்சிருக்கேன். ப்ரைஸ்லாம் கூட வாங்கிருகேன். நாம நாடகம் கெத்தா பண்றோம்" என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டேன். அப்பாவிகள் நம்பி விட்டார்கள்.

முதலில் நாடகத்திற்கான கதை வேண்டும். அதற்காக ஒரு சிறு குழு ஒன்று கதையும் வசனமும் தயாரிப்பது என்றும், அவை முடிவான பின் எல்லோரும் சேர்ந்து ஒத்திகை பார்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. சரி கதை எழுத யாரை தேர்ந்தெடுப்பது? இங்கிலீஷ்காரன் படத்தில் வடிவேலு கிரிக்கெட் விளையாட ஆள் எடுத்தது போல, "மாப்ள, இவன் போன டெஸ்ட்ல 20 பக்கமும் நிரப்பி 4 மார்க் தாண்டா வாங்கிருந்தான். செமயா கதை எழுதுவான் போல, இவன எடுத்துக்கலாம்" என்று ஒருவனையும், "இவன் ரொம்ப நேரம் பொண்ணுங்க கூட கடலை போடுறாண்டா, இவனையும் எடுத்துக்கலாம்" (உண்மையில் அவன் பெண்களோடு பேசுவதால் எங்களுக்கு ஏற்பட்ட புகைச்சல். எங்களோடு வந்தால் அந்த சமயத்தில் பெண்களோடு பேச முடியாது அல்லவா) என்றும் ஆட்களை சல்லடை போட்டு எடுத்துக் கொண்டிருந்தோம்.

விடுதியின் மற்ற அறைகளிலெல்லாம் குத்துப்பாட்டு போட்டு அதற்கு நடன அசைவுகளை பழகிக்கொண்டிருந்தார்கள் மற்ற துறை மாணவர்கள். நாங்கள் மட்டும் அமைதியாக ஒரு அறையில் அமர்ந்து மிகத் தீவிரமாக கதை யோசித்துக் கொண்டிருந்தோம். "வாத்தியாரே பசிக்குது, சாப்டு சாயந்திரமா யோசிப்போமா" என்ற மண்ட கசாயங்களின் நப்பாசையைத் தாண்டி யோசித்துக் கொண்டிருந்தோம். நாங்களெல்லாம் அப்போது மிகப் பெரிய புரட்சியாளர்கள் அல்லவா அதனால் நாடகத்தில் தெறிக்க தெறிக்க புரட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

"மச்சி, நம்ம காலேஜ்லயே ஏகப்பட்ட தப்பு நடக்குது, நாம அத வெச்சு ஒரு நாடகம் போடுவோமா?"

"வேணாம் மச்சி, அரியர் போட்ருவாங்க. நாம ஏன் நம்ம நாட்டை சீரழிச்சுகிட்டு இருக்கிற மத்திய அரச கலாய்ச்சு ஒரு நாடகம் போடக்கூடாது" (பாருங்களேன் இந்த ஸ்டேட்மென்ட் எந்த கவர்மெண்ட் ஆட்சி பண்ணாலும் ஒத்து போகுது, நாங்க இந்த ஸ்டேட்மெண்ட் சொன்னது 12 வருஷத்துக்கு முன்னால)

"வேணாம்டா, ஆளும் கட்சி புரபொசர் யாராவது இருந்தா அரியர் வெச்சிடுவாங்க"

"அதுவும் சரி தான், எதிர்கட்சிய கலாய்ச்சாலும் அரியர் விழலாம். அப்போ என்ன தாண்டா பண்றது? பேசாம நாமளும் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டத்தை போட்ருக்கலாமோ"

"முன் வெச்ச கால பின் வாங்க கூடாதுடா. அரியர் போட முடியாதபடி ஒரு கான்செப்ட் ரெடி பண்ணுவோம்"

இப்படியாக எங்களது புரட்சி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. கடைசியாக கடவுள் பூமிக்கு வந்து இந்த உலகத்தை பார்த்து பின்பு வெறுத்து திரும்பி போவதாக ஒரு நாடகத்தை தயார் செய்தோம். அதிலேயே அரசியல், விளையாட்டு, கல்வி, மருத்துவம், இலவசங்கள் என்று அந்த காலத்தில் நடந்த சூடான கருப்பொருள்களை வைத்து ஒரு மாதிரியாக கலந்து கட்டி தயார் செய்து விட்டோம். கடவுளை கேலி செய்வது போல வந்தால் அரியர் விழுமா என்று யோசிக்க தனியாக ஒருவனை நியமித்திருந்தோம்.

நாடகம் தயார். நாடகத்திற்கு தலைப்பு என்ன வைக்கலாம் என்று ஆளாளுக்கு விட்டத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தோம். இந்த இடத்தில் கோவிந்தனைப் பற்றி சொல்ல வேண்டும். கோவிந்தன் - ஆள் கோட் அடிப்பதில் புலி. ஆனால் வாத்சாயனாரின் ஒன்று விட்ட பேரன் போலவே இருப்பான். எந்த விஷயம் எடுத்தாலும் அதை ஒரு காமக் கலைக் கண்ணோடு தான் அணுகுவான். எங்களுக்கெல்லாம் தமிழில் கிடைத்தற்கரிய புத்தகங்களை கொடுத்து (அப்போது கணினி பரவலாக இல்லை) எங்களை வாழ வைத்துக் கொண்டிருந்தான். ஆனால் விதி பாருங்கள், அவனும் இந்த நாடகத் தயாரிப்பு குழுவில் இருந்தான்.

"சிம்பிளா கடவுள்னு பேர் வைக்கலாமா". இது நான்.

"வேணாம்டா, ஏதாவது catchy யா இருக்கனும்" என்றான் குமார்.

பங்க் பெட்டின் இரண்டாவது அடுக்கில் விட்டதைப் பார்த்து மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நமது திருவாளர் கோவிந்தனார், திடீரென்று புரண்டு எழுந்து

"ஓடி வந்த சாமிக்கு மூடு ஏத்துன பூமி - எப்படி இருக்கு இந்த டைட்டில்" என்றான் வாயெல்லாம் பல்லாக.

"டேய் காண்டு ஏத்தாதடா கண்......." என்றான் முருகேஷ்.

"போங்கடா!"என்று திரும்பவும் தனது சயன நிலைக்கு சென்று விட்டான்.

வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டது, எனவே சீக்கிரம் தலைப்பை முடிவு பண்ணியாக வேண்டும் என்று வேகமாக யோசித்து ஒவ்வொரு தலைப்பாக சொல்லிக் கொண்டிருந்தோம்.

"கும்முனு சாமி, ஜம்முனு காமி" இது எப்டிறா இருக்கு. கடவுளுக்கு பூமிய காட்டுறோம்ல கதைப்படி, செட் ஆகும்டா, வைங்கடா" என்றான் அதே கோவிந்தன்.

அரியர் விழுமா என்று யோசிக்க ஒருவனை இரண்டு பத்திக்கு முன்னால் நியமித்திருந்தோம் அல்லவா, அவன் வந்து - "டேய் கான்செப்டுக்காகலாம் அரியர் விழாதுடா. ஆனா இவன் சொல்ற டைட்டில வெச்சா கண்டிப்பா விழும்" என்றான். இது சரிப்படாது என்று பூமிக்கு வந்த சாமி என்று தலைப்பை முடிவு பண்ணி, ஒத்திகை ஆரம்பித்து விட்டோம்.

35 மாணவர்கள். சமத்துவத்தை நிலை நாட்டுவதாய்க் கூறிக் கொண்டு, எல்லோருக்கும் ஒரு வரியாவது வசனம் வருமாறு செய்தோம். ஒத்திகை எல்லாம் ஒரு மாதிரியாக முடிந்து நாடகம் அரங்கேற்றும் அந்த பொன்னாளும் வந்தது. ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா நண்பர்களே, அது தன் வேலையைக் காட்ட துவங்கியது. வழக்கம் போல நிகழ்ச்சி தாமதமாய் துவங்க ஒவ்வொருவரும் வந்து அவசர அவசராமாக கையை காலை அசைத்து நடனம் என பெயரிட்டு சென்று கொண்டிருந்தார்கள். கூட்டமோ தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கை தட்டி விசிலடிப்பதும் மற்ற துறை மாணவர்கள் நடனம் ஆடும் பொழுது சத்தம் போட்டு கேலி கிண்டல் செய்து கொண்டும் இருந்தார்கள். முதலில் நடனங்கள் முடியட்டும். நாடகம் கடைசியாக இருக்கட்டும் என்று ஏதோ ஒரு அதி புத்திசாலி ஆசிரியர் முடிவு எடுத்து எல்லோரையும் அவசர அவசரமாக மேடையேற்றிக் கொண்டிருந்தார். ஏற்கனவே மணி 7 ஆகி விட்டது. 6 மணி வரை தான் பிரின்சிபாலிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம், அதனால் நாடகம் வேண்டாம் என்று ஆசிரியர்கள் மத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி 10 நிமிடங்கள் மட்டும் கொடுங்கள் என்று கேட்டு மேடை ஏறி விட்டோம்.

முதலில் எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. சில இடங்களில் எல்லாம் கைதட்டு கூட கிடைத்தது. ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் என்பது போல நாங்களும் நடித்துக் கொண்டிருந்தோம். 10 நிமிடங்கள் தான் கேட்டோம். ஆனால் நாடகம் 20 நிமிடங்களைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்து விட்டார்கள். ஆசிரியர்கள் முகமும் மாற ஆரம்பித்து விட்டது. அப்போது தான் ஒரு பிச்சைக்காரன் எவ்வித உழைப்பும் இன்றி அரசு கொடுக்கு இலவசங்களை வைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாய் ஒரு காட்சி நடந்து கொண்டிருந்தது.ஆசிரியர் ஒருவர் அமைதி இழந்து "சைலன்ஸ்! எல்லாம் போதும்" என்று சொல்ல மொத்த அரங்கமுமே அமைதி ஆகி விட்டது. ஆனால் நாங்கள் தான் சிவாஜியின் ஒன்று விட்ட பேரன்கள் அல்லவா, தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தோம். மொத்த அரங்கமும் அமைதி ஆன பொழுது அந்த பிச்சைக்கார கதாபாத்திரம்

"சும்மா இருக்கற நேரத்துல அவளை அம்மா ஆக்கிட்டேனு வைங்க அதுக்கும் காசு கிடைக்கும்" என்று கடவுளிடம் சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தான். ஆசிரியருக்கோ கனகோபம். மொத்த அரங்கமும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசிரியர் மேடைக்கே ஏறி வந்து, வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா என்று வாஞ்சையுடன் கேட்டுக் கொண்டார்.

முதல் நாடகமே தோல்வி அடைந்ததை எண்ணி வருந்திக் கொண்டிருந்தோம். பின்பு விடுதி அறையில் அமர்ந்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

"அந்த டயலாக் யாருடா எழுதுனா, அதுனால தாண்டா பிரச்சனை" என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது

"டேய், ஹாரிபாட்டரும் ஹெர்மாயினின் இன்பவெறியும் அப்படினு ஒரு செம புக் வந்திருக்கு பார்த்தீங்களா!" என்றபடி உள்ளே நுழைந்தான் கோவிந்தன். இவன் தாண்டா எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்லி எங்கள் கோபத்தை எல்லாம் கோவிந்தன் மீது தணித்துக் கொண்டோம். பயலுக்கு அன்று செம அடி. 

முதல் நாடகம் தோல்வி அடைந்தாலும் நாடகம் போடும் ஆசை மட்டும் அடங்கவில்லை. இரண்டாம் ஆண்டு எங்கள் துறையின் சார்பாக தேசிய அளவிலான பல்தொழில்நுட்ப கருத்தரங்கில், மாலை கலை நிகழ்ச்சிகளில் நாடகம் போடுவதென முடிவெடுத்தோம். இந்த முறை சென்ற தவறுகளை எல்லாம் களைந்து விட்டு, இந்த புரட்சி வெங்காயத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மொத்தமே 10 நிமிடங்களுக்குள் இருக்குமாறும், பத்தே பத்து மாணவர்களைக் கொண்டு கல்லூரி வாழ்வை மையமாக வைத்து ஒரு நாடகம் தயாரித்தோம். இந்த முறை வசனங்களை மேடையில் பேசாமல், முன்பே பதிவு செய்து ஒலிக்கவிட்டு மேடையில் அதற்கேற்றவாறு நடிக்கலாம் என முடிவு எடுத்தோம். பதிவு செய்யப்பட்ட வசனங்களோடு கலை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் நான்காம் ஆண்டு சீனியர் அண்ணாவின் அறைக்கு சென்றோம். ஏற்கனவே முதலாம் ஆண்டில் நாங்கள் செய்த வீர தீர ப்ரஸ்தாபங்களை அவரும் கேள்விப்பட்டு இருந்ததால் ஒரு சந்தேகத்தோடே தான் எங்களை அணுகினார். வசனங்களை கேட்டு விட்டு இந்த நாடகம் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லையே என்று இழுத்தார். நாங்களும் வழக்கம் போல கெஞ்சி கூத்தாடி அவரை ஒப்புகொள்ள செய்தோம். இந்த முறையும் இரண்டு நாட்கள் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு நாடகம் மட்டுமே. எங்களுடையது தான். கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

நாடகம் தொடங்கியதில் இருந்து கைதட்டல். வழக்கமாக பின்வரிசையில் இருந்து கிண்டல் அடிக்கும் குழுவும் இம்முறை கைதட்டியது. நாடகம் முடியும் போது அரங்கத்தில் ஒரு பகுதியினர் 'ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்' என்று கத்தினர். எங்கள் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. சீனியர்கள் மத்தியில் ஓவர் நைட்டில் ஒபாமாக்கள் ஆகி விட்டோம். "அந்த நாடகம் போட்ட பசங்கள கூப்பிடு பேசணும்" என்று சீனியர் ஒருவர் எங்கள் எல்லோரயும் கூப்பிட்டு தனியே பாராட்டினார். எங்கள் யாரையும் கையில் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் பாருங்கள் மகாஜனங்களே பெண்கள் மத்தியிலும் இந்த நாடகத்துக்கு வரவேற்பு இருந்தாலும் அதன் பிறகும் இதயம் முரளிகளாத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம். அது ஒரு சோக கிளைக் கதை.

ஒரு நாடகத்தை வெற்றியடையச் செய்யும் சூட்சமம் ஓரளவு புலப்பட ஆரம்பித்தது. அதன் பிறகு கல்லூரிக்குள் நடக்கும் மற்ற கலை நிகழ்ச்சிகளிலும் சென்று நாடகம் போட ஆரம்பித்தோம். மூன்றாம் ஆண்டு கலை நிகழ்ச்சிக்கு 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை தழுவி கல்லூரியைக் கழுவி ஊற்றும் ஒரு புரட்சி நாடகம் போட்டோம். 

விடுதி குழாயைத் திறந்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும் A) தண்ணீர்  B) காற்று C) பல்பு D) பிம்பிளிக்கி பிளாப்பி போன்ற கேள்விகள். இப்போது இந்த கேள்விகள் மிக சுமாராக தெரியலாம். ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்கின்ற எங்களைப் போன்ற விடுதி மாணவர்கள் மத்தியில் பலத்த ஆராவாரம். கல்லூரிக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி நாடகம் முடியும் முன்னரே மீண்டும் மேடையில் இருந்து இறக்கி விடப்பட்டோம். ஆனால் இந்த முறை இதை தோல்வியாக கருதவில்லை. மாணவர்கள் மத்தியில் எங்களுக்கு பலத்த கைதட்டல்கள்.

அதன் பிறகு எங்களைப் போலவே மற்ற துறையில் நாடகம் போடும் மற்ற மாணவர்களோடு இணைந்து நாடகம் போட ஆரம்பித்தோம். ஏகலைவர்கள் என்று எங்கள் குழுவிற்கு பெயர் வைத்தோம். எங்கள் சீனியர்களின் உதவியோடு மற்ற கல்லூரிகளுக்கும் சென்று நாடகம் போட ஆரம்பித்தோம். அங்கேயும் தோல்விகளும், அவமானங்களும் தாராளமாக கிடைத்தன. அவ்வப்போது வெற்றியும் :) தொடர்ந்து ஏகலைவர்கள் குழுவை வளர்க்க ஆரம்பித்தோம். எங்கள் ஜீனியர்களையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களிடமும் கற்றுக் கொண்டு என ஏகலைவர்கள் ஒரு தனி பிராண்டாக வளர ஆரம்பித்தது கல்லூரியில். கல்லூரிக் காலம் நான்கு ஆண்டுகள் தானே. அதனால் நாங்கள் வெளி வந்து விட்டோம். பல்வேறு வேலைகளில் இருந்தாலும் சென்னையில் ஒரு நாடகக் குழு ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து ஒரு சில நாடகங்களும் போட்டோம். ஆனால் நாடகம் சோறு போடாது, கோட் அடித்தால் சோறு கிடைக்கும் என்பதை வெகு சீக்கிரமாக உணர்ந்ததால் அதனைத் தொடர முடியவில்லை. ஆனால் கல்லூரியில் ஏகலைவர்கள் குழு சிறப்பாக செயல்பட்டு வந்தது நாங்கள் வெளியே வந்த பிறகும். கிட்டதட்ட 10 வருடங்கள் ஓடி விட்டன. இன்று ஏகலைவர்கள் குழு அடைந்திருக்கும் இடம் மிக முக்கியமானது. திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை ஐஐடி போன்ற மிகப் பெரிய கல்லூரிகளில் எல்லாம் சென்று தங்கள் முத்திரையை பதித்து விட்டு வந்தார்கள். இப்போதும் தமிழக அளவிலான கல்லூரிப் போட்டிகளில் ஏகலைவர்கள் கலந்து கொண்டால் ஒரு பரிசாவது வாங்காமல் வரமாட்டார்கள் எனலாம். கோவையில் அரசு சார்பாக நடக்கும் விழாக்களிலும் கூட ஒரு சில விழிப்புணர்வு நாடகங்களும் போட்டுள்ளனர். ஆனால் இந்த வளர்ச்சி எதையும் அருகில் இருந்து பார்க்க நாங்கள் யாரும் இல்லை. ஆனால் விதை....... :)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக