திங்கள், 6 பிப்ரவரி, 2012

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்"எழுந்திரு மஹா, மணி 7 ஆயிடுச்சு."
 மல்லிகா படுக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தாள். நான் மஹாதேவன், மல்லிகாவின் நண்பன், காதலன், கணவன்...இன்னும் எல்லாம்.
"ஒரே ஒரு முத்தம் கொடு, எழுந்திருக்கேன். "
"ஆமா சாருக்கு இளமை திரும்புது, முத்தம்லாம் கேட்குறார். இன்னையோட நமக்கு கல்யாணம் ஆகி 32 வருஷம் ஆகுது. தெரியும்ல,சீக்கிரம் எழுந்திரு, இன்னைக்கு ஆசிரமத்துக்கு போகணும் நியாபகம் இருக்குல்ல. "
"வயசுங்கறது உடம்புக்கு தான்டி, மனசுக்கு இல்ல.சரி முத்தம்லாம் வேண்டாம் என்னை ஒரு தடவ கொஞ்சு, நான் எழுந்திருக்கேன். "

எனக்கு மல்லிகா என்னை கொஞ்சுவது ரொம்ப பிடிக்கும். ஆனா சரியான கல்நெஞ்சக்காரி, அவ்வளவு லேசில் கொஞ்சிவிட மாட்டாள். நான் எதிர்பார்க்காத சமயம் திடீரென்று கொஞ்சுவாள். இந்த 36 வருஷத்தில் (காதலித்த 4 வருஷங்களையும் சேர்த்த்து) இந்த கொஞ்சல் விளையாட்டு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இருவருக்குமே அது பிடித்தும் இருந்தது.

"கொஞ்சலாம் முடியாது. நீ தூங்கிக்கிட்டே இரு, நான் ஆசிரமத்திற்கு போறேன். "
சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

மல்லிகா, சின்ன வயதிலிருந்தே தெரியும். பக்கத்து வீடு தான். பி.யூ.சி முடித்து விட்டு ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். என்னதான் சின்ன வயதிலிருந்தே தெரியும் என்றாலும் எங்களுக்குள் ஒத்து போகாது. நாங்கள் இருவரும் அப்போதைய சோவியத்- அமெரிக்கா போலத்தான். ஒரே வகுப்பு, அடுத்தடுத்த வரிசை எண் கல்லூரியில். கேட்கவா வேணும். எப்போதும் எங்களுக்குள் பிரச்சனை தான். ஆனால் இந்த சண்டையிலும் மெலிதான ஒரு நட்பு இருந்தது. எங்கள் இருவருக்கும் பிடித்த பொதுவான ஒரே விஷயம் தமிழ் மட்டும் தான். இருவருக்குமே அதன் மேல் ஒரு ஈர்ப்பு. தமிழில் கூட எங்கள் ரசனை வேறு வேறு. அவள் தீவிர இடதுசாரி. பெரும்பாலான நேரங்களில் கம்யூனிஸ்ட் புத்தகங்கள் தான் படிப்பாள்.  ஆம் என் மல்லிகா வித்தியாசமானவள். 70 களில் ஒரு பெண் கல்லூரிக்கு வருவதே அரிது, அதிலும் இவள் இடதுசாரி, அதனினும் அரிது. எனக்கு புதுமைப்பித்தனும் மௌனியுமே போதுமானதாய் இருந்தது வாசிப்பதற்கு. இப்பொழுதும் கூட சீனா செய்வதெல்லாம் சரி என்று வாதாடுபவள்.

"மகா, ப்ரீத்தி பேசறா, கல்யாண வாழ்த்து சொல்றா."
 போனுடன் அருகில் வந்தாள். நான் படுக்கையில் இருந்து எழுந்திருந்தேன். ப்ரீத்தி என் மகள், மல்லிகாவுக்கு உயிர். அவளுடனும் பேரனுடனும் அரை மணி நேரம் கதைத்து விட்டு எழுந்தேன்.
"டி என்னோட துண்டு எங்க? காணோம்"
"எத்தனை தடவ சொல்றது டி சொல்லி கூப்பிடாத, இனிமேல் கூப்பிட்ட உதை விழும்"
"டி க்கு அர்த்தம் டியர், டார்லிங் தெரியுமா, வெறும் பெண்பாலை குறிப்பிடற‌து மட்டும் இல்ல"
"ஆமா இதுக்கு ஒரு விளக்கம் வேற,இந்த வாய் மட்டும் இல்லேனா உன்னை நாய் தூக்கிட்டுப் போய்டும். "கையில் துண்டை திணித்தாள்.

மேலே குறிப்பிட்ட உரையாடல் 32 வருஷ வாழ்க்கையில் பல தடவை நடந்திருக்கிறது.அவளுக்கு நான் அப்படி கூப்பிடுவது பிடிக்கும், ஆனாலும் வெளிக்காட்டுவதில்லை. இது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்பவர்களுக்கு என் பதில், கல்யாணத்திற்க்குப் பிறகும் காதலித்துப்பார் தெரியும் (உன் மனைவியை மட்டும் ;))

"மஹா டிபன் ரெடி, சீக்கிரம் வா, ஏற்கனவே லேட்."
"வந்தாச்சு, மஹாராணி இன்னைக்கு என்ன சமைச்சிருக்கீங்க, பொங்கலா"
சாப்பிட ஆரம்பித்தேன்.
"எப்படி இருக்கு என் பொங்கல்?"
"பொங்கல்ல, 'பொங்' இல்ல ஆனா கல் மட்டும் நிறைய இருக்கு"
"அப்போ ஏன் இன்னும் சாப்பிடுக்கிட்டு இருக்க, கைகழுவ வேண்டியது தானே. என் சாப்பாட குறை சொல்லலேனா பொழுது போகாதே."

நாங்கள் இப்படித்தான்.அவள் சமையலை நான் கேலி பண்ணாத நாளில்லை. அவளும் பொய்க்கோபம் காட்டாத நாளில்லை. என் அம்மா சமையலுக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்தது அவள் சமையல் தான். இது அவளுக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு தடவையாவது அதை என் வாயால் சொல்லி விட வேண்டும் என்று முயன்று கொண்டிருப்பவள். பொய் சண்டைகளும் நிறைய வரும். எல்லா முறையும் இதில் ஜெயிப்பது நான் தான். (பின்குறிப்பு : இதில் மட்டும் தான் ).
"இப்படியே கடைசி வரைக்கும் உன் கூட வாழனும்டி."
"சார் ரொமான்ஸ்லாம் போதும். உன்கூட தான் கடைசி வரைக்கும் இருப்பேன். முதல்ல‌ கிளம்புங்க."

திடீரென்று கதவு திறக்கும் சத்தம்.
"மஹா யாரோ வந்திருக்காங்க, யாருனு பாரு, "
உள்ளேயிருந்து அவள் குரல்.எட்டிப்பார்த்தேன்,
"உன் தம்பி தான்டி வந்திருக்கான்."
கைகழுவி விட்டு எழுந்தேன்.
"வா துரை, சாப்பிடுறியா"
"இல்லை இருக்கட்டும் அத்தான்."
"சொல்லு என்ன விஷயம்"
"மல்லிகாவுக்கு 16ஆம் நாள் காரியம் அடுத்த வாரம், அதைப்பத்தி பேசலாம்னு......" என்று இழுத்தான்.
நான் உள்ளே மல்லிகாவைப் பார்த்தேன், எனக்கு மட்டும் கேட்கும் குரலில் அவள் என்னைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.