வெள்ளி, 9 மார்ச், 2018

ஒரு கதை சொல்லட்டா


(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஆறாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இன்று நான் உங்களுக்கு சொல்லப் போவது ஒரு கதையல்ல. இது ரத்த சரித்திரம். மனதைப் பிழியும் ஒரு டாகுமெண்டரி. படித்து முடித்தவுடன் உங்கள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வரும். எழுந்து நின்று பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் ஒரு வீர வணக்கம் வைப்பீர்கள். இது போன்ற தியாகிகள் மத்தியிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தோன்றும். அடுத்த வருட வீர தீர பராக்கிரம செயலுக்காக மத்திய அரசு வழங்கும் விருது இந்த மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைப்பீர்கள். போதும்டா மேல சொல்லு என்கிறீர்களா?

ஒரே ஒரு பத்திக்கே உங்களுக்கு போர் அடிக்கிறது அல்லவா? இதே போல பத்தி பத்தியாக 4 வருடங்கள் எழுதி பொறியியல் படிப்பில் நாங்கள் கடைத்தேறிய கதை தான் உங்களுக்கு நான் இன்று சொல்லப் போவது. நான் பள்ளி படிப்பு படித்தது தென் தமிழகத்தின் ஒரு கோடியில். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பொறியியல் தான் என்று முடிவு செய்து விட்டேன். படிக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம் என்ற பராசக்தியின் வாக்குக்கிணங்க தமிழகத்தின் மிகச் சிறந்த பொறியியல் கல்லூரிகள் எதுவும் எங்கள் ஊரில் இல்லை. அதனால் எப்படியும் விடுதியில் தங்கி தான் படிக்க வேண்டும் என என் மனதை அப்போதே தயார் செய்து கொண்டேன். பணிரெண்டாம் வகுப்பில் தீயாக வேலை செய்ததன் விளைவாக ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த இடத்தில் எங்கள் கல்லூரியைப் பற்றி கொஞ்சம் பெருமை பீற்ற வேண்டி இருக்கிறது. தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொறியியல் கல்வி வழங்கும் நிறுவனங்களில் எங்கள் அரசு கல்லூரியும் ஒன்று. என்ன நம்பிக்கையோ தெரியவில்லை, எனது தந்தை, பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக கிட்டதட்ட ஒரு ஐம்பதாயிரம் கடன் வாங்க முடிவு செய்திருந்தார்கள். கல்லூரி கட்டணம் எவ்வளவு என்று என்னிடம் கேட்டார்கள். நான் ஏழாயிரத்து சொச்சம் வருகிறது என்றேன். “, மாசம் அவ்வளவு கட்டணுமா, இன்னும் ஒரு இருவதாயிரம் இடிக்கும். பாத்துக்கலாம், நான் ஏற்பாடு பண்றேன்என்றார். “ஒரு வருஷத்துக்கே அவ்வளவு தாம்பாஎன்றேன். நிச்சயமாக என்னை நம்பவில்லை. “டேய் நல்லா விசாரிச்சியா? பணம்லாம் பிரச்சனை இல்லைடா, கட்டிடலாம்என்றார். உண்மையாகவே அவ்வளவு தான் என்று நம்ப வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. விடுதி கட்டணம் பற்றி சொல்ல மறந்து விட்டேனே, விடுதி அறை கட்டணம் 302 ரூபாய், அதுவும் ஒரு வருடத்திற்கு!

ஒரு பக்கம் பெரிய செலவில்லாமல் பையனை சேர்த்து விட்டோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், பையனை பிரிய வேண்டுமே என்ற கவலை இருந்தது எனது அப்பாவிற்கு. கிட்டதட்ட 2 வருடங்களாக எனது மனதை நான் சரி செய்து வைத்திருந்ததால், இந்த பிரிவு பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை. ஆனால் இது வரைக்கும் விடுதியில் தங்கி பழக்கமே இல்லை. பள்ளி படிக்கும் போதும் ஒரு துரும்பை கூட அசைத்துப் போட்டதில்லை. அதுவும் கடைக்குட்டி பையன் என்பதால் ஏகப்பட்ட செல்லம் வேறு. ஆனால் விடுதி உலகம் வேறல்லவா. இனிமேல் வாழ்க்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்து ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்ய வேண்டும் என அட்டவணை எல்லாம் போட்டு வைத்திருந்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், விடுதியில் சேர்ந்து முதல் ஒரு வாரம் தினம் தினம் துவைத்துக் கொண்டிருந்தேன். வர வர மாமியா கழுதை போல போனாளாம் என்ற சொலவடைக்கு இணங்க நான்காம் ஆண்டு படிக்கும் போது விடுதியில் துவைப்பதெல்லாம் இரண்டு மாதங்களுக்கோ அல்லது மூன்று மாதங்களுக்கோ ஒரு முறை என்றாகி விட்டது. அதுவும் ஊருக்கு போகும் போது அழுக்கு மூட்டையை கொண்டு சென்றால் வீட்டில் துவைத்து தேய்த்து கொடுத்து விடுவார்கள்.

இந்த மாமியா சொலவடை படிப்பிற்கும் பொருந்தும். முதலாம் ஆண்டில் வரும் முதல் பருவத்தேர்வுக்கு கிட்டதட்ட விடுதியில் எல்லோருமே பொறுப்பாக தான் படித்தார்கள். பனிரெண்டாம் வகுப்பின் தாக்கம் அது. முதலாம் ஆண்டின் இரண்டாவது பருவத்தேர்வில் தான் ஆரம்பித்தது எங்கள் கதை சொல்லும் படலம். அந்தத் தேர்வில், “Object Oriented Methodologies” என்றொரு தேர்வு இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பிரிவு மாணவர்களுக்கானது. ஒரு மென்பொருளைக் கட்டமைக்கும் போது இந்த Object oriented நுட்பத்தை பயன்படுத்தி கட்டமைக்கலாம். இது தான் அதன் சாராம்சம். அந்த தேர்விற்கு படிக்க கிராடி பூச் (Grady Booch) என்றொருவர் எழுதிய புத்தகத்தை பரிந்துரைத்திருந்தார்கள் கல்லூரியில். நாங்களும் பொறுப்பாக அந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தோம். தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. “பூவை பூ என்றும் சொல்லலாம், புய்பம் என்றும் சொல்லலாம். நீங்கள் சொல்வது போலவும் சொல்லலாம். நான் சொல்வது போலவும் சொல்லலாம். ஏன் சொல்லாமலே கூட இருக்கலாம். சொல்லாம இருப்பதால் பூ என்ற ஒன்று இல்லாமல் போய்விடுமா, இல்லை பூவிற்கு தான் பூ என்ற பெயர் இருப்பது தெரியுமா? பூ என்ற பெயர் இல்லாவிட்டாலும் பூ என்பது பூக்கக்கூடியது தானே. பூத்தல் தான் அதன் இயல்பே, அதைப்போல மென்பொருள் தொழில்நுட்பத்தில்…….” இப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல 300 பக்கங்கள். படிக்க படிக்க கடுப்பு தான் ஆகியது. இது தொழில்நுட்பம் பற்றிய பரீட்சையா அல்லது தத்துவ பரீட்சையா என்றுஎங்களுக்கே குழப்பம். இது வேலைக்கு ஆகாது, அதனால் ஒவ்வொருவரும் ஒரு ஒரு பாடம் படிப்போம் அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்போம் என்று பஞ்சாயத்தில் முடிவானது. இந்த தருணம் தான் எங்கள் பொறியியல் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம். அடுத்து வந்த 3 வருடங்களுக்கு இந்த தருணம் தான் வழிகாட்டியது. 

ஒரு வழியாக அந்த தேர்வில் கதை சொல்லி கேட்டு வகுப்பில் அனைவருமே தேர்ச்சி அடைந்து விட்டோம். அட! இவ்வளவு தானா, இதையே இனிமேல் கடைபிடிப்போம் என்று முடிவாகியது. பனிரெண்டாம் வகுப்பின் படிப்பாளி பிம்பம் இன்னும் கொஞ்சமேனும் எல்லோர் மீதும் ஒட்டி இருந்ததால், இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் பரீட்சைக்கு ஒரு பாடம் தவிர மற்ற எல்லாவற்றையும் படித்து விட்டு, அந்த ஒரு பாடத்தை கதை கேட்டு ஒப்பேற்றி விடுவோம். வகுப்பில் இருக்கும் பெண்களெல்லாம் விரலுக்கு ஒரு பேனா என வானவில் வண்ணங்களில் பேனாக்களைக் கொண்டு விடைத் தாள் முழுதும் கோலமிட்டு கொண்டிருக்க, நாங்களோ,” டேய் கட்டிலுக்கு அடில பேனா இல்லாம ஒரு ரீபில் மட்டும் இருந்துச்சு பாத்தியாஎன்று கடைசி நிமிடத்தில் தேடி, அதை வைத்தே எழுதி தேர்ச்சியும் அடைந்து கொண்டிருந்தோம்.

மூன்றாம் ஆண்டு வரும் போது கொஞ்சம் குளிர் விட்டு போய் விட்டது. மேலும் எப்படி எழுதினால் தேர்ச்சி அடையலாம் என்ற சூட்சமமும் பிடிபட்டு விட்டது. ஒருவர் மொத்தமுள்ள 5 பாடங்களில் (யூனிட்) ஒன்றை மட்டும் படித்து விட்டு, மற்ற 4 பாடங்களை கதை கேட்டு ஒப்பேற்றி விடலாம் என்ற நிலைமை வந்திருந்தது. ஒவ்வொரு யூனிட்டுக்கும் மேல நீ படிக்கிற இன்னொரு யூனிட் மத்தவனோடது என்ற கம்யூனிச சித்தாந்தத்தில் மிகத் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது. பரீட்சைக்கு முந்தின நாள் எல்லோரும் அவரவர்க்கு ஒதுக்கபட்ட அந்த ஒற்றைப் பாடத்தை படித்து விட்டு, இரவு சாப்பாட்டுக்கு மேல் கதை சொல்ல ஆரம்பிப்போம். கதை சொல்லி முடிக்க 10-11 மணி ஆகி விடும். அதன் பிறகு அப்படியே பரீட்சை எழுத முடியாதல்லவா, அதனால் கேட்ட கதையை ஒரு முறை திருப்பி பார்த்து விட்டு தூங்கி விடுவோம். காலையில் ஒற்றை ரீபிலை எடுத்துக் கொண்டு சிங்கம் ஒன்று புறப்பட்டதே பிண்ணனி இசையோடு சென்று 40 பக்கங்களை நிரப்பி விட்டு வந்தால் பாஸ். இவ்வளவு தான் செய்முறை. மேலும் ஒரு விடைக்கு வரைபடம் (diagram)  இருந்தால் நாங்கள் எல்லாம் குஷியாகி விடுவோம். வரைபடத்திற்கு பொம்மை என்று பெயரிட்டிருந்தோம். ஒரு பாடத்தை படித்து மற்றவர்க கதை சொல்லும் போதேடேய் இந்த கொஸ்டின்ல பொம்மை இருக்கு பார்த்துக்கோங்கஎன்று குறிப்பிட்டு விடுவோம். ஏனென்றால் பொம்மை போட்டு விடை எழுதும் போது, பொம்மைக்கே ஒரு அரை பக்கம் சென்று விடும். மேலும் பொம்மையின் பாகம் குறித்து, இந்த பொம்மையில் இது தான் இது, அது தான் அது என மேலும் ஒரு அரை பக்கம் ஓட்டி விடலாம். ஆக 3-4 பக்கங்கள் எழுத வேண்டிய விடையில் ஒரு பக்கம் இப்படியே சென்று விடுவோம். அதானால் பொம்மை பட கேள்விகளுக்கு எங்கள் மத்தியில் மவுசு அதிகம்.

இந்த கதை கேட்கும் படலத்தில் சில குறிப்பிட்ட விசித்திர ஜீவன்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு முறை எங்கள் வகுப்பில் இருந்த லக்‌ஷ்மணன் மற்றொரு வகுப்பு கதை கேட்கும் அமர்வில் அமர்ந்திருந்தான். “டேய் அந்த டிபார்மெண்ட் பசங்க கதைய நீ ஏண்டா கேக்குறஎன்றால், “யாருக்குடா தெரியும், கதை நல்லா இருந்துச்சு, அதான் இங்கயே உக்கார்ந்துட்டேன்என்றான். அப்படி என்றால் நாங்கள் படித்த லட்சணம் உங்களுக்கே விளங்கி இருக்கும்.

நான்காம் ஆண்டு படிக்கும் போது ஒரு விநோதமான சோதனை வந்தது. எல்லா பரீட்சைகளிலும் நான்காவது பாடம் மட்டும் மிகக் கடினமாக இருந்தது. அந்த பாடத்தை படித்து கதை சொல்ல யாருமில்லை. கடைசியாக ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல குமாரிடம் நான்காவது பாடத்தை தள்ளி விட்டு விடுவோம். (அடி வாங்க என்றே ஒரு ஜீவன் இருந்ததாக ஏற்கனவே ஒரு கதையில் கூறி இருந்தேன் அல்லவா, அதே குமார் தான்). வழக்கம் போல அவன் அந்த ஒரு பாடத்தையே படிக்க மாட்டான். அதையும் அரை குறையாக படித்து விட்டு கதை சொல்வான். “டேய் ஏண்டா எப்பவும் 4th யூனிட்ட என்கிட்டயே தள்ளி விடுறீங்கஎன்று புலம்புவான். எப்படியும் நான்காம் பாடத்திற்கான கேள்விகளை மட்டும் சரியாக எழுதி இருக்க மாட்டோம், “உன்னால தான் நாயே, நாங்க சரியா பரீட்சை எழுதலஎன்று நான்கு அடி போடுவோம். “இல்லாட்டா மட்டும் கோல்ட் மெடல் வாங்குற அளவுக்கு எழுதி கிழிச்சுருவீங்க பாருஎன்பான். “ஆமாடா எழுதி கிழிச்சிருப்போம்டாஎன்று மேலும் இரண்டு அடி விழும்.

இவன் இப்படி என்றால் மலை மாடு இன்னொரு ரகம். அநேகமாக அவனுக்கு அவர்கள் அம்மா அப்பா இட்ட பெயர் ராஜராஜன் என்று நினைக்கிறேன். ஆனால் அதெல்லாம் ஞாபகம் இல்லை. நினைவு தெரிந்த நாள் முதல் அவன் பெயர் மலைமாடு தான். இராச்சாப்பாட்டுக்கு மேல் கதை கேட்க வரும் போது நன்றாக குளித்து விட்டு, பட்டையும் விபூதியுமாக கையில் ஒரு வாட்டர் பாட்டிலோடு கதை கேட்கும் அறைக்கு வந்து விடுவான். நன்றாக ஒரு சுவர் ஓரமாக உட்கார்ந்து கதை கேட்டு விட்டு, 11 மணிவாக்கில் திருப்பி பார்க்க ஆரம்பிப்பான். பயல் 10 மணியே பார்த்ததில்லை. 11-12 எல்லாம் ரொம்ப கஷ்டம். ஆனாலும் அடுத்த நாள் பரீட்சை அல்லவா தூங்கவும் மனது வராது. “டேய் நான் ஒரு 3 மணிக்கு அலாரம் வெச்சிருக்கேன். என்னை எழுப்பி விட்ருங்கஎன்பான். 3 மணிக்கு எழுப்பி விட்டதும் கட்டிலில் ஜம்மென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு, புத்தகத்தை முன்னால் வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விடுவான். எழுப்பி விடலாம் என்று நாம் அருகில் சென்றால் உட்கார்ந்து தூங்கியவாறேயாரும் என்ன எழுப்ப வேண்டாம், ஏன்னா நான் தூங்கல. நான் தூங்கல.. ஒரு 5 நிமிஷம் ரெஸ்ட்என்பான். இந்த 5 நிமிஷம் ரெஸ்ட் அப்படியே 8 மணி வரை சென்று விடும். அப்புறம் என்ன முந்தின நாள் கேட்ட கதையை வைத்து எழுத வேண்டியது தான்.

இப்படி கதை கேட்டு எழுதியதால் நாங்கள் யாரும் பொறியியல் வல்லுநர்கள் அல்ல என்று தவறான கணக்கு போட்டு விடக் கூடாது வாசக அன்பர்களே. கிட்டதட்ட என்னுடன் படித்த எல்லோருமே இன்று நல்ல வேலையில், பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். இப்போதும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் அறிவு வேறு, பரீட்சை வேறு என்ற விதிமுறைக்கு எங்கள் பொறியியல் கல்வியும் விதிவிலக்கல்ல. எல்லா கல்லூரி பரீட்சையிலும் தேர்ச்சி அடைய ஒரு சூட்சமம் உண்டு, எங்கள் கல்லூரி பரீட்சைக்கான சூட்சமத்தை நாங்கள் கண்டு கொண்டோம். அதை நாங்கள் மட்டும் பயன்படுத்தாமல் மற்ற எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து பயன் பெற செய்தோம். அவ்வளவு தான்.

ஆனால் இந்த கதை கேட்கும் படலம் மூலம் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களோடு ஒரு ஒட்டுதல் உருவாகியது. ஒரு பாடத்தை படிப்பதை விட அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் சொல்பவர் கேட்பவர் இருவருமே பயன்பெறுவார்கள் என்கிற உண்மை உரைத்தது. எல்லாவற்றையும் விட எனது நான்கு ஆண்டு கல்லூரி வாழ்வில் எனது மனம் கவர்ந்த ஆசிரியர் யார் என்று என்னிடம் இப்போது கேட்டால் எனது நண்பர்கள் தான் என்ற பதிலே எஞ்சி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக