(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஏழாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால், Well, it depends....)
முதலாம் ஆண்டு கல்லூரி மற்றும் விடுதியில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஆனால் இரண்டாம் ஆண்டில் அதற்கு நேர் எதிர். அவிழ்த்து விட்ட கழுதைகள் நாங்கள். பரீட்சைக்கு முந்தின நாள் படித்தாலே பாஸ் ஆகி விடலாம் என்று தெரிய ஆரம்பித்ததால் படிக்கிற பழக்கம் மறைந்து விட்டது. ஆனால் 5 மணியிலிருந்து இரவு வரை பொழுது போக வேண்டுமே, அதற்கு என்ன செய்ய? அப்போது தான் விடுதியில் சில அறைகளில் கணினி வர ஆரம்பித்தது. எதோ கோட் அடித்து பில்கேட்ஸை மூலையில் உட்கார வைக்கிற அளவுக்கு பேசி ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து அடம் பிடித்து கணிணி வாங்கிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல கோட் அடிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் அது பயன்பட்டது. விளையாட, படம் பார்க்க (பக்தி படங்கள் உட்பட) என அதில் கொஞ்சம் பொழுது போனது. இருந்தாலும் ஏதாவது உபயோகமாக செய்யலாமே என்ற குற்ற உணர்வு குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. சரி ஏதேனும் விளையாட்டுகளில் சேரலாம் என்று முடிவு செய்து நானும் சில நண்பர்களும் முடிவு எடுத்தோம்.
சரி தேசிய விளையாட்டான ஹாக்கியில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என முடிவு செய்து, புதிய ஷூ எல்லாம் வாங்கி முதல் நாள் பயிற்சிக்கு சென்றோம். சென்ற உடனே ஹாக்கி மட்டையை கையில் கொடுத்து கோல் அடித்து, அப்படியே இந்திய அணியில் இடம் பிடித்து, ஒரு உலக கோப்பை வாங்கி, அப்படியே ஒரு பாரத் ரத்னா வாங்கி விடலாம் என்று கனவு கண்டிருந்த போது, அதில் மண்ணள்ளி போட்டு, 'போய் கிரவுண்ட நாலு ரவுண்டு சுத்திட்டு வாங்க, அப்புறம் பாக்கலாம்' என்றார் சீனியர் அண்ணண் என்கிற எங்கள் பயிற்சியாளர். என்னைப் பற்றி தெரியாதவர்களுக்காக, நான் எப்படி இருப்பேன் என்று கூறுவது இந்த இடத்தில் அவசியம். ஒரு 2HB பென்சிலை எடுத்து முழு நீள வெள்ளைத் தாளில் ஒரு கோடு வரைந்தால் எவ்வளவு ஒல்லியாக இருக்குமோ அதை விட ஒல்லியாக இருந்தேன் கல்லூரி படிக்கும் போது. யாராவது கேட்டால், காந்தியே ஒல்லியா தாண்டா இருந்தார், நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கலியா என்று வாய் விட்டுக் கொண்டிருந்தேன். நமக்கு வாய் தானே எமன். சரி பயிற்சிக்கு வருவோம், 4 ரவுண்டு தான, முடிச்சுட்டு ஹாக்கி மட்டையை தூக்குறோம், பாரத் ரத்னா வாங்குறோம் என்று ஓட ஆரம்பித்தேன். 2 ரவுண்டுக்கு மேல் நாக்கு தள்ளியது. இருந்தாலும் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்கிற பெரியோரின் வாக்குக்கிணங்க ஓடி முடித்து மேலும் சில பல உடற்பயிற்சிகளையும் செய்து முடித்தேன். இப்படியாக ஓட்டம், உடற்பயிற்சி என்று சில வாரங்கள் எங்களுக்கு தண்ணி காட்டி விட்டு, கடைசியாக தான் ஹாக்கி மட்டையைக் கையில் கொடுத்தார்கள். சரி இனிமேலாவது வாழ்க்கையில் நட்சத்திர ஜன்னலில் பாட்டு வந்து விடும் என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது தான், ராங் சைடில் சென்று சீனியர் அண்ணாவிடம் ஹாக்கி மட்டையில் ஒரு அடி வாங்கினேன். வாழ்க்கைனா சில பல அடிகள் விழத்தான் செய்யும் என்று கடந்து போக முடியவில்லை, என்னா வலி!
இருந்தாலும் பாரத் ரத்னா கனவு கலையக்கூடாது என்பதால் தொடர்ந்து பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தோம். வருடாந்திர விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி சாம்பியன் பட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டிலிருந்தும் ஒவ்வொரு அணி, மற்ற அணியுடன் மோத வேண்டும். இரண்டாம் ஆண்டு அணியில் வேற ஆள் கிடைக்காததால் நானும் என் நண்பர்கள் சிலரும் அணியில் சேர்க்கப் பட்டோம். எங்களுக்கான முதல் ஆட்டம் நான்காம் ஆண்டு சீனியர்கள் அணியுடன். ஆட்டத்திற்கு முந்தின நாள் எங்கள் அணியின் சின்னையா எங்களிடம் வந்து 'டேய் மச்சி ஒரு வேளை நாம நாளைக்கு ஜெயிச்சுட்டோம்னா, சீனியர்லாம் நம்மளைஅடிக்க மாட்டாங்கல்ல" என்றான் அப்பாவியாக. எங்கள் அணியின் கோல் கீப்பரிடம் சென்று "மச்சி ஒருவேளை பெனால்டி வரைக்கும் வந்திடுச்சுனா, அதுக்குலாம் பிராக்டிஸ் பண்ணிட்டல" என்றான். இதே போல பேசுவதற்கு தமிழில் ..... கொழுப்பு என்று ஒரு அருமையான பதம் உள்ளது. சரி ஆட்டத்திற்கு வருவோம், ஆட்டம் தொடங்கியதிலிருந்து மரண அடி, வேறு யாருக்கு எங்களுக்கு தான். ஒவ்வொருத்தனும் ராங் சைடில் சென்று அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல எங்கள் சின்னையா D பாக்ஸ்க்கு வெளியே நின்று கோல் அடித்து விட்டு கோல் கோல் என்று கத்திக் கொண்டிருந்தான். (D பாக்ஸ்க்கு வெளியே நின்று கோல் அடித்தால் அது செல்லாது. எங்களுக்கு அது கூட தெரியவில்லை). ஒரு வலியாக (வலி - பிழையன்று) 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினோம். சரி இனிமேல் ஹாக்கி நமக்கு ஒத்து வராது, பாரத் ரத்னா வேறு வழியாகவும் சென்று வாங்கலாம் என்று முடிவெடுத்தேன்.
அப்போது தான் கல்லூரியில் தமிழ் மன்றம் துளிர் விட ஆரம்பித்தது. ஒவ்வொரு செவ்வாயும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட சீனியர்கள் 5 மணிக்கு தமிழ் மன்ற கூட்டம் நடத்தினார்கள். சரி நமக்கு தான் தமிழ் மீது கொஞ்சம் ஆர்வம் உள்ளதே என செல்ல ஆரம்பித்தேன். புதுமைப்பித்தன் கதை வாசிப்பு, இலக்கிய விவாதம் என பிரமாதமாக நடத்திக் கொண்டிருந்தார்கள். நம்ம பாடிக்கு இது தாண்டா சரி என்ற முடிவோடு தொடர்ந்து கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலைகழகத்திலும், பிப்ரவரி மாதம் தஞ்சை சாஸ்திரா பல்கலை கழகத்திலும் கலை இலக்கிய போட்டிகள் நடத்துவார்கள். கல்லூரியில் இருந்து தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், நுண்கலை மன்றம் சார்பாக மாணவர்கள் சென்று வருவார்கள். அப்படியாக மூன்றாம் ஆண்டு திருச்சி சென்ற ஜோதியில் நானும் ஐக்கியமானேன்.
அனுமதி கட்டணம், போய் வர பேருந்து செலவு, தங்குவதற்கான கட்டணம் என்று ஒரு செலவு வரும். சிங்கிள் டீக்கே சிங்கி அடித்துக் கொண்டிருந்த காலம் அது. கல்லூரியில் இருந்து ஒரு சிறு துரும்பை கூட அசைக்க மாட்டார்கள். போட்டிகளுக்குக் கூட OD (On-Duty) கிடைக்காது. விடுப்பு எடுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். ஊமை நாடகத்தில் நடிக்க அனவரும் ஒரே மாதிரி ஆடை அணிய வேண்டும் என்பது விதி. அதற்கு டீ. ஷர்ட் அடிக்க கூட காசில்லாததால், அனைவரிடமும்் இருக்கிற கருப்பு டீ ஷர்டை (அதில் எந்த டிசைன் போட்டிருந்தாலும்) உள் வெளியாக திருப்பி அதை அணிந்து நடித்துக் கொண்டிருந்தோம் என்றால் எங்கள் பட்ஜெட்டை பார்த்துக் கொள்ளுங்கள். எனவே இப்படியாக செல்லும் போட்டிகளில் எப்படியாவது வென்று போட்ட காசை எடுக்க வேண்டும் என்ற வெறி இருக்கும்.
செப்டம்பர் மாத திருச்சி போட்டிக்கு எப்படியோ வீட்டில் கெஞ்சி கூத்தாடி காசு ஏற்பாடு செய்து போய் விட்டு வந்தேன். கொடுத்த காசுக்கு எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வது என்ற விதிமுறை எங்களுக்கு உண்டு. ஆனால் விதி பாருங்கள், அந்த வருடம் நடந்த எந்த போட்டியிலும் எனக்கு பரிசு கிடைக்கவில்லை. ராமசாமிக்கு கொடுத்த காசு ஊஊ என்பது போல போட்ட காசு எல்லாம் கோவிந்தா. என்னுடன் வந்த சீனியர்கள் பலர் பரிசு பெற்றிருந்தார்கள். "கவலைப்படாதடா, முதல் தடவ தான உனக்கு, எனக்கும் முதல் தடவலாம் ஒண்ணும் கிடைக்கல, அடுத்த போட்டில பார்த்துக்கலாம்" என்று ஆறுதல் கூறினார்கள். ஹாக்கியைப் போல இதிலும் முதல் தோல்வி கண்டவுடன் ஓடி விட விருப்பம் இல்லை. உண்மையாகவே இந்த மன்றமும் அதன் செயல்பாடுகளும் பிடித்து இருந்ததால், தொடர்ந்து கூட்டங்களுக்கு சென்று கொண்டிருந்தேன்.
அடுத்ததாக பிப்ரவரி மாதம் சாஸ்திரா பல்கலைகழகத்தில் நடைபெறும் போட்டிகள். இம்முறையும் போன் செய்து வீட்டில் பணம் கேட்க, நல்ல அர்ச்சனை கிடைத்தது. நல்ல வேளை போனிலேயே செருப்பால் அடிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் இன்னும் வரவில்லை. "அவன படிக்கிறதுக்கு அனுப்புனோமா இல்ல இப்படி ஊர் ஊரா போட்டி போட்டினு திரிய அனுப்புனோமா, ஒழுங்கா படிச்சு கேம்பஸ் இண்டர்வியூல செலெக்ட் ஆக சொல்லு, இந்த போட்டிலாம் அப்புறம் பார்த்துகலாம்" என்று அப்பாவிடமிருந்து உத்தரவு. இள ரத்தம் அல்லவா, நானும் சூடாகி அம்மாவிடம் போன் செய்து, "சும்மாலாம் காசு தர வேணாம், அப்பாவ கடனா கொடுக்க சொல்லுங்க, நான் போட்டில ஜெயிச்சுட்டு வந்து காச திருப்பி கொடுத்துடறேன்" என்றேன். வாய் வாய், இந்த வாய் இருக்கிறதே! போன தடவையே ஒண்ணும் கிடைக்கல, இந்த தடவ வீட்ல வாய் வேற விட்டுட்டோம் என்று நொந்து கொண்டேன். அம்மா ஒரு வழியாக தலைமையிடம் பேசி காசு அனுப்பி விட்டார்கள். எடுத்துக் கொண்டு நானும் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்று கிளம்பி விட்டேன்.
போட்டி 3 நாட்கள் நடைபெறும். வழக்கம் போல நானும் எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டேன். கவிதை போட்டியில் எல்லாம் கலந்து கொண்டு வானமோ நீலம் நீதான் என் பாலம் போன்ற அரிய கவிதைகளை எல்லாம் எழுதி வைத்து விட்டு வந்தேன். பேச்சுப் போட்டி, தமிழ் வினாடி வினா, கற்பனை, கட்டுரைப் போட்டி என முதல் 2 நாட்கள் கலந்து கொண்ட எந்த போட்டியிலும் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. லேசாக பயம் வர ஆரம்பித்தது. கூட வந்த எல்லாரும், எனது ஜூனியர் உட்பட ஒரு பரிசாவது வாங்கி விட்டார்கள். வீட்டில் வேறு வாய் விட்டு வந்தோமே, என்கிற கவலை எனக்கு. மூன்றாம் நாள். இறுதி நாள்....
(தொடரும்)
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக