புதன், 18 ஜூலை, 2018

பாரத் ரத்னா - பகுதி 2

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஏழாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

பகுதி ஒன்றைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முன்கதை சுருக்கம்:

(ஹாக்கியில் சேர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து பாரத் ரத்னா வாங்கி விடலாம் என்கிற பாதை மிகக் கடினமாக இருந்ததால், கல்லூரி தமிழ் மன்றத்தில் சேர்ந்து பிற கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தேன். வீட்டில் சண்டை போட்டு காசு வாங்கி தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள சென்றேன். 3 நாட்கள் நடைபெறும் போட்டியில் முதல் 2 நாட்கள் எந்த பரிசும் கிடைக்கவில்லை. வீட்டிலோ போட்டியில் ஜெயித்து உங்கள் காசை கொடுத்து விடுகிறேன் என்கிற என் வாய்ச்சவடால் ஞாபகம் வந்தது)

மூன்றாம் நாள். இறுதி நாள். 2 போட்டிகள். குறும்பட போட்டி ஒன்று, மேலும் மௌன மொழி என்று சொல்லபடுகிற Dumb Charades. இதில் குறும்பட போட்டிக்கு ஒரு படம் தயாரித்து இருந்தோம். அதை அனுப்பி வைத்தோம். அது ஒரு தனி கிளைக் கதை. பிறகு சொல்கிறேன். இந்த மௌன மொழி போட்டி மிக சாதரணமாக இருக்காது. வெறும் திரைப்பட தலைப்புகள் மட்டுமல்லாது பழமொழிகள், அரசியல் ஆளுமைகள், இலக்கிய புத்தகங்களின் பெயர்கள் என்று வித்தியாசமாக இருக்கும். அதை ஒருவர்  பேசாமல் நடிக்க, அணியில் இருக்கும் மற்ற இருவர் கண்டுபிடிக்க வேண்டும். இது பல்வேறு சுற்றுகளாக ஒவ்வொரு சுற்றுகளிலும் வித்தியாசமான விதிகளோடு இருக்கும். இதற்கு அணியில் இருக்கும் மூவருக்குள்ளும் ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களும் மிகுந்த தயாரிப்பிற்கு பிறகு வந்திருப்பார்கள். ஒவ்வொரு அணியும் அவர்களுக்குள்ளாகவே சைகை மொழி வைத்திருப்பார்கள். எனவே இது ஒரு சாதாரண போட்டி என்று கடந்து விட முடியாது.     

நானும் என்னோடு சண்முகன், திலீபன் என்ற இருவரும் ஒரு அணியாக உள்நுழைந்தோம். நாங்களும் சைகை மொழி, மற்ற தயாரிப்புகள் என தயாரக தான் சென்றோம். இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அணிகளில் எங்கள் அணியும் ஒன்று. மொத்தம் 2 பரிசுகள் தான். இது தான் கடைசி போட்டி கூட. இதில் வென்றால் தான் உண்டு. ஒவ்வொரு சுற்றாக நடந்து வந்தது. நாங்களும் சளைக்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கண்டுபிடித்துக் கொண்டு வந்திருந்தோம். ஒரு சுற்றில் ஒரு கேள்வியைத் தவற விட்டு, இரண்டாம் இடம் வந்து விட்டோம். எங்களைப் போலவே இன்னொரு அணியும் இரண்டாம் இடத்தில் வந்திருந்தார்கள். இறுதியாக பழமொழி சுற்று வந்தது. அணியில் இருக்கும் ஒருவரிடம் பழமொழி ஒன்றை காண்பிப்பார்கள். அவர் அங்கிருக்கும் கரும்பலகையயில் அந்த பழமொழியை வரைய வேண்டும். எண்களோ, எழுத்துகளோ பயன்படுத்தக் கூடாது. 3 நிமிடத்தில் 2 பழமொழிகளை வரைந்து விட்டு அவர் சென்று விட வேண்டும். அணியில் இருக்கும் மற்ற இருவர் அதன் பிறகு வந்து அவர் வரைந்திருக்கும் பழமொழி என்ன என்று சொல்ல வேண்டும். இதில் ஒரே ஒரு வாய்ப்பு தான். வரைந்தவர், ஒரே முறை வரைந்த பின் சென்று விடுவார். அணியில் மற்ற இருவரும் பதில் சொல்லும் வரை அவரைக் காண இயலாது. 

எங்களோடு இரண்டாம் இடத்தில் இருந்த அந்த அணி முதலில் சென்றது. அந்த அணியின் நபர் வரைந்து கொண்டிருக்கும் போதே பார்வையாளர்களில் இருந்த அந்த அணியின் நண்பர்கள் சிலர் அது என்ன பழமொழி என யூகித்து அவர்கள் அணியில் இருந்த மற்ற இருவருக்கும் ரகசியமாக சொல்லி விட்டார்கள். இதை நாங்கள் மற்றும் பார்வையாளர்களில் சிலர் பார்த்து விட்டோம். போட்டி நடத்துபவரிடம் சென்று இது முறையல்ல, அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என முறையிட்டோம். ஆனால் அந்த அணியோ எங்களைப் பார்த்து, இவர்களும் இரண்டாம் இடத்தில் இருப்பதால் எங்களை வீழ்த்த பொய் சொல்கிறார்கள் என சாதிக்க ஆரம்பித்தார்கள். அடப்பாவிகளா, இப்படி அபாண்டமா பொய் சொல்றாங்களே, உலகத்துல எல்லாருமே உன்ன மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்கடா சிவா என மனதிற்குள் நொந்து கொண்டேன். ஆனால் போட்டியை நடத்தும் நடுவர்கள், இது தேவையில்லாத பிரச்சனை, அதனால் கண்டுகொள்ள வேண்டாம். போட்டி தொடர்ந்து நடக்கும் என அறிவித்தார்கள். எதிர்பார்த்தது போலவே அந்த அணி பழமொழி சுற்றில் 2 பழமொழிகளையும் கண்டறிந்து விட்டார்கள். எங்களுடைய முறை வந்தது. நண்பன் திலீபன் வரைந்து விட்டு சென்றான். நானும் சண்முகனும் வெகு சுலபமாகவே அந்த 2 பழமொழிகளையும் கண்டறிந்து விட்டோம்.

இறுதி சுற்று முடிந்த பின்பும் இரண்டாம் இடத்தில் 2 அணிகள் இருப்பதால் மேலும் ஒரு டை-பிரேக்கர் சுற்று வைப்பது என நடுவர்கள் முடிவெடுத்தார்கள். ஒரே கேள்வி இரு அணிகளுக்கும். யார் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். இரண்டு அணிகளுக்கும் ஒரே கேள்வி ஆதலால், முதலில் ஒரு அணிக்கு கேள்வி தரப்படும். அப்பொழுது மற்ற அணி வேறு ஒரு நடுவரின் கண்காணிப்பில் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும். (கைப்பேசிகள் எதுவும் இல்லாமல், போட்டியாளர்கள் தவிர வேறு யாரும் இல்லாமல் என்று கெடுபிடி). ஏற்கனவே இன்னொரு அணியின் மீது பிராது இருந்ததால் அவர்களே முதலில் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் நடுவரின் கண்காணிப்பில் வேறொரு இடத்தில் நேர்மையாக இருந்து கொள்கிறோம் என்றோம். நடுவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். நாங்கள் வெளியில் சென்று விட்டோம். சில நிமிடங்கள் கழித்து எங்கள் அணியை அழைத்தார்கள். முதல் அணி எவ்வளவு நேரத்தில் கண்டறிந்தார்கள் என்று கூட தெரியாது. மேடை நோக்கி சென்றோம். மொத்த அரங்கமும் அமைதியாக எங்கள் அணியையே பார்த்துக் கொண்டிருந்தது. எங்களுக்குள் லேசான பதற்றம். சண்முகன் நன்றாக நடிப்பான். நான் நன்றாக யூகிப்பேன் என்பதால், அவனே நடிப்பது என முடிவானது. போட்டி ஆரம்பம் ஆனது. சண்முகன் முதலில் தன் மொத்த உடம்பையும் விரலால் காட்டினான். எங்கள் சைகை மொழியில் அதற்கு இந்தியா என்று பொருள். நான் இந்தியா என்று கத்தினேன். அப்படியே விரலை எடுத்து தனது இடது காலுக்கு கீழே காட்டினான். தமிழ்நாடா என்றேன். அதற்கும் கீழே என சைகையால் காண்பித்தான். இலங்கையா என்றேன். ஆம் என தலையசைத்து, துப்பாக்கி போல விரல்களை காண்பித்தான். விடுதலைப் புலிகள் பிரபாகரன் என்றேன். இல்லை என தலையசத்து அறிவு என குறிப்பிடும் விதமாக மூளையைக் காட்டினான். ஆண்டன் பாலசிங்கம் என்று கத்தினேன். ஆம் என ஓடி வந்து என்னை அப்படியே அலேக்காக தூக்கி இருமல் மருந்து பாட்டிலை குலுக்குவது போல குலுக்கினான். மொத்த அரங்கமும் எழுந்து நின்று கை தட்டியது. அந்த அணி 1 நிமிடம் 30 விநாடிகள் கண்டுபிடிக்க எடுத்துக் கொண்டதை நாங்கள் 25 வினாடிகளில் கண்டறிந்து விட்டோம். வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி போல மொத்த அரங்கமும் எங்களுக்காக கை தட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

போட்டியை முடித்து விட்டு ஆனந்த கண்ணீரோடு வெளி வந்த போது என் நண்பன் ஒருவன் ஓடி வந்து, 'டேய் நீங்க எடுத்த ஷார்ட் பிலிமுக்கு இரண்டாவது இடம் கிடைச்சிருக்குடா என்றான். Icing on the cake என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதை அன்று தான் உணர்ந்தேன். (அந்த குறும்படம் யூட்யூபில் உள்ளது. ஒரு வேளை உங்கள் உயிர் மீது ஆசை இல்லை என்றால் தைரியமாக லிங்க கேட்கவும். கொடுக்கிறேன்) ஒரு வழியாக பரிசு வாங்கி விட்டேன். இனிமேல் வீட்டில் இன்னும் தைரியமாக வாய்ச்சவடால் விடலாம். சும்மாவே என் வாய் நீளம் இனி கேட்க வேண்டுமா :)

மௌன மொழி போட்டிக்கு இரண்டாம் பரிசாக 2000 ரூபாய் கிடைத்தது. ஆளுக்கு 700 ரூபாய். இது ஒலிம்பிக்கும் இல்லை. நான் வென்றது தங்கமும் இல்லை. ஆனால் பரிசின் மதிப்பை ரூபாயில் கணக்கிட முடியுமா என்ன. ஒரு வேளை எனது அந்திம காலத்தில் என் வாழ்வில் நடந்த மிகுந்த மகிழ்ச்சியான தருணங்களை அசை போடும் பொழுது, இந்த 700 ரூபாய் பரிசும் நிச்சயமாக அதில் இருக்கும். என்னைப் பொறுத்த வரை அது தான் எனக்கு பாரத் ரத்னா :) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக