வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ஆர்குட் கணக்கு

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் இரண்டாவது பகுதி இது. முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இப்போது முகநூல் எவ்வளவு பிரபலமோ அதே அளவு ஆர்குட் வலைதளம் பிரபலம் நான் கல்லூரி படிக்கையில். முகநூல் வந்து மற்ற நாடுகளில் மிகப் பிரபலமாக ஆன பின்னும் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் ஆர்குட்டைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருந்தன. கல்லூரியின் முதலாம் ஆண்டில் கணிணியும் கிடையாது, இணையதள வசதியும் கிடையாது. எப்போ தாவது கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்று கொஞ்ச நேரம் இணையத்தில் மேய்ந்து விட்டு வருவோம். அப்படி மேயும் போது பெரும்பாலான நேரம் ஆர்குட்டில் தான் இருப்போம்.

ஆர்குட்டில் முகநூலை விட சில நல்ல விஷயங்கள் இருந்தன. இப்போது போல அப்போது எல்லோரிடமும் புகைப்பட வசதி கூடிய கைப்பேசியோ, ஏன் ஒரு நல்ல புகைப்படக் கருவியோ கூட இருக்காது. மேலும் இப்போது நாம் எடுக்கும் புகைப்படங்களை வடிகட்டிகள் இல்லாமல் (ஃபில்டர்ஸ்) நம்மால் கூட பார்க்க சகிக்காது. அப்போது புகைப்படம் எடுத்து அதை போட்டோஷாப் போன்ற கிடைத்தற்கரிய மென்பொருள் கொண்டு வடிகட்டி, கைப்பேசியோ அல்லது கருவியையோ கணினியுடன் இணைத்து வடிகட்டிய புகைப்படத்தை மாற்றி..... படிக்கும் உங்களுக்கே மூச்சு வாங்குகிறதா? அப்படியானால் யோசித்து பாருங்கள் ஒரு புகைப்படம் மாற்றுவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிடும். எனவே பெரும்பாலும் யாரும் தங்கள் புகைப்படத்தை வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் அதை அடிக்கடி மாற்றுவதில்லை. நல்ல விஷயம் தானே முகநூலோடு ஒப்பிடும் போது? மேலும் சதா தோள்பட்டையை தூக்கிக்கொண்டு இணையத்திலேயே புரட்சி நடத்தும் விசைப்பலகை வீரர்களும் இல்லை ஆர்குட்டில். இது போக நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை  குழு கூட அங்கு இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அளவான வசதிகளோடு போதுமான முறையில் ஒரு நல்ல வலைதளமாக இயங்கி வந்தது.

ஆனால் இது எல்லாவற்றையும் விட, ஆர்குட்டில் இருக்கும் ஒரு மிக மிக முக்கியமான வசதி இப்போது வரைக்கும் கூட முகநூலில் கிடையாது. ஒவ்வொரு முறை ஆர்குட்டில் நீங்கள் உள்நுழையும் போதும் உங்களுடைய சுயவிவரத்தை (புரொபைல்) யார் யாரெல்லாம் பார்வையிட்டுள்ளார்கள் என்ற விவரம் இருக்கும். அதில் ஒரே ஒரு பெண்ணின் பெயர் வந்து விட்டால் கூட ஒரே கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் சோகம் என்னவென்றால் அப்படியொன்றும் நடந்து விடாது. கூடவே இருக்கும் செவ்வாழைகள் தான் நமது சுய விவரத்தை சுற்றி சுற்றி வந்தார்கள் என்று ஆர்குட்டே கழுவி ஊத்தும். நம்மள பார்க்கும் பொண்ண விட, நாமளே ஒரு பொண்ண பார்க்குறது தான் சிறந்தது என்ற கொள்கை முடிவோடு ஒரு சுயவிவரம் விடாமல் எல்லா பெண்களின் சுயவிவரத்தையும் பார்த்து விடுவோம். ஏனென்றால் அவர்கள் அடுத்த முறை ஆர்குட்டில் உள்நுழையும் போது நமது பேர் அவர்கள் முன் வருமல்லவா, அப்போதாவது யார் இந்த பையன், நம்மளையே சுத்தி சுத்தி வர்ரான் என்ற கேள்வியோடு நமது சுயவிவரத்தை பார்த்து விட மாட்டார்களா என்ற நப்பாசை தான். ஆனால் பாருங்கள் மகாஜனங்களே, இந்த விதி தான் எத்தனை வலியது. சொல்லி வைத்தாற் போல ஒரு பெண்ணும் யார் இவன் என்று தெரிந்து கொள்ளகூட நமது சுயவிவரத்தில் எட்டி பார்க்க மாட்டார்கள். எங்கிருந்து தான் இவ்வளவு மன உறுதியோ! ஆனால் அதற்காக நமது முயற்சியைக் கைவிட முடியுமா, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்களாக நாங்களும் சீனியர், ஜூனியர் என்ற பாரபட்சம் கூட இல்லாமல் ஒவ்வொரு சுயவிவரத்திலும் எங்கள் முத்திரையை இட்டு விட்டு வருவோம்.

இப்படியாக ஆர்குட் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. முதலாம் ஆண்டு கடைகளுக்கு சென்று இணையத்தை மேய்ந்த நாங்கள், இந்திய தொழில்தொடர்புத் துறையின் அபார வளர்ச்சியினால் கல்லூரியின் இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் விடுதியில் இருந்தே சொந்தக் கணினி மூலம் கன்னியரின் சுயவிவரத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். 

எங்கள் வகுப்பில் முத்து ராமன் என்றொருவன் இருந்தான். கல்லூரியில் சேரும் பொழுது மிக அமைதியாக இருந்தான். பருவத்தேர்வுக்கு முதல் நாள் நாங்கெளல்லாம் உருண்டு புரண்டு படித்துக் கொண்டு இருப்போம். அவனிடம் கேட்டால் எல்லாத்தையும் படிச்சுட்டேன் மச்சி, கடைசியா ஒரு தடவ ரிவைஸ் பண்ணிட்டு இருக்கேன் என்று வயித்தெரிச்சலைக் கிளப்புவான் .முதல் இரண்டு ஆண்டுகள் வரை இப்படி தான் இருந்தான். மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் எங்களிடம் வந்து, மச்சி இந்த வருஷம் நான் உங்ககூட ரூம் எடுத்துகிடட்டா என்றான். சரி நாம தான் படிக்காம சுத்திக்கிட்டு இருக்கோம், நம்ம கூட படிக்கிற பையன் ஒருத்தன் இருந்தா நல்லது தானே என்று நாங்களும் சரி என்றோம். ஆனால் பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமல்லவா, அது போல மூன்றாம் ஆண்டு பருவத்தேர்வுக்கு முதல் நாள் அவனிடம் படிச்சிட்டியா என்றால், 5 யூனிட்ல 4 படிச்சிட்டேன், அநேகமா 1 ஐ சாய்ஸ்ல விட்டிருவேனு நினைக்கிறேன் என்றான். நல்ல முன்னேற்றம். இதே கேள்வியை நான்காம் ஆண்டு பருவத்தேர்வுக்கு முன்னால் கேட்ட போது, என்னது நாளைக்கு பரீட்சையா என்றான். இப்படியாக வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருந்தோம்.

ஒரு நாள் அவன் அறையில் உட்கார்ந்து ஆர்குட்டில் உலவிக் கொண்டிருந்தான். திடீரென்று இயற்கை அழைத்தது போல, அதை அப்படியே விட்டு விட்டு வெளியில் சென்று விட்டான். உடனே நாங்கள் இது தான் சாக்கு என்று அவனது கணக்கினுள் நுழைந்து அவன் இது வரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத எங்கள் வகுப்பு பெண் ஒருத்தியின் ஆர்குட் ஸ்கிரேப்புக் இல் சென்று (முகநூலில் உங்கள் நண்பரின் சுவரில் இடுகை இடுவது போல) பின் வரும் இடுகையை இட்டோம்

"வாழ்க்கையில் பெரும்பாலான சிக்கல்களுக்கு காரணம் 'ஆம்' என சீக்கிரமே சொல்லி விடுவது அல்லது 'இல்லை' என மிக தாமதமாக சொல்லி விடுவது. நீ இல்லை என ஒரு தடவை சொல்வதற்கு முன் ஒரு முறை என்னைப் பற்றியும் யோசி". 

கீழே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் வரும் என்ன சொல்லப் போகிறாய் பாடலின் வீடியோ சுட்டி, இவற்றை இணைத்து விட்டோம். 

இவன் வந்து இதைப் பார்த்து விட்டால் அழித்து விடக்கூடும் என எண்ணி அதை அப்படியே திரைச்சொட்டு எடுத்து (ஸ்கீரீன் ஷாட்) வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் அனுப்பி, பாருங்க முத்து ராமன் என்ன வேலையெல்லாம் பாக்குறான் என்று பரப்பி விட்டாயிற்று. எங்களோடு சேர்ந்து இருந்ததால் இவனுக்கு சூடு சொரணை எதுவும் இல்லை. அவன் இதை கண்டு கொண்டது போல தெரியவில்லை. ஆனால் அந்த பெண் அப்படி இருக்க மாட்டாள் அல்லவா, அவளுக்கு ஒரே குழப்பம். இவன் கூட நாம ஒரு தடவை கூட பேசினது இல்ல, எதுக்கு இவன் லூசு மாதிரி இப்படி நம்மளுக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கான் என்ற குழப்பத்தில் இவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். நாங்கள் எது நடக்க கூடாது என எதிர்பார்த்தோமோ அது நடந்து விட்டது. பதிலுக்கு இவனும் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப, ஏர்டெல் நிறுவனம் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்தி கொடுக்க, இவன் அந்த 100 ஐயும் அவளுக்கே அனுப்ப, கடைசி வரை யில் நாங்கள் பெண்களின் ஆர்குட் சுயவிவரத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். என்னடா இது இவனை கோர்த்து விட பார்த்தா இவன் வாழ்க்கைய அனுபவிச்சு வாழ்ந்திட்டு இருக்கான் என்று எங்கள் எல்லோர் காதிலும் புகை.

ஆனால் ஏற்கனவே கூறியது போல விதி வலியது அல்லவா, மீண்டும் ஒரு முறை இவன் ஆர்குட்டில் உள்நுழைந்து விட்டு அப்படியே விட்டு விட்டு ஊர் மேய சென்று விட்டான். இந்த சந்தர்ப்பத்தை விடக் கூடாது என எண்ணி இருந்தோம். இம்முறை இவன் தப்ப முடியாத படி கோர்த்து விட வேண்டும் என எண்ணினோம். அதனால் இம்முறை வேறொரு பெண்ணின் சுய விவரத்திற்கு சென்றோம். அங்கு சென்று,

பெண்ணே,
பொங்கலுக்கு மட்டும் தானே வெள்ளை அடிப்பார்கள்,
நீ என்ன
தினம் தினம் வெள்ளை அடிக்கிறாய்
உன் முகத்திற்கு!

என பதிவிட்டு வழக்கம் போல அதை திரைச்சொட்டு எடுத்து எல்லோருக்கும் அனுப்பியாற்று. இம்முறையும் அவன் இந்த பெண்ணிடம் பேசியது கூட இல்லை. இந்த முறை நாங்கள் எதிர்பார்த்த வெற்றிக்கும் மேலே கிடைத்தது. குறுஞ்செய்தியெல்லாம் இல்லை, அவனுக்கு நேரே அழைப்பே வந்தது. எடுத்து காதில் வைத்து ஹலோ சொன்னது தான் தாமதம், அந்த முனையில் இருந்து அந்த பெண் கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்தாள், முதலில் ஹி ஹி என்று சிரித்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல இவனின் சிரிப்பைக் கேட்டு அந்த பெண் உக்கிரமடைந்திருப்பாள் போல, நிறுத்தவே இல்லை. இவன் காதிலிருந்து அலைபேசியை எடுத்து கீழே வைத்து விட்டான்.

அப்பப்பா எந்த ஊர்காரிடா இவ, என்னா கிழி கிழிக்கிறா, காதுல இரத்தம் வருது. அப்படி என்னடா எழுதினீங்க?

என்ன எழுதினோம்னு கூட தெரியாதா?

தெரிலடா, வழக்கம் போல எதாவது எழுதி இருப்பீங்க, அந்த பொண்ணு மெசேஜ் பண்ணுவானு நினைச்சேன், இப்படி திட்டுறா, பாரு நான் போனை கீழ வெச்சு 5 நிமிஷம் ஆச்சு, எதிர் சைட்ல இருக்கிறவன் என்ன ஆனானு தெரியாம கூட திட்டிட்டு இருக்கா. 

யாராவது போன் வாங்கி அப்பபோ ஒரு உம் மட்டும் கொட்ட முடியுமா என்று போனை கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தான். அந்த பெண் இன்னும் திட்டி முடிக்கவில்லை. இருப்பு தீர்ந்து விட்டதோ அல்லது அலுத்து விட்டதோ தெரியவில்லை, புயலடித்து ஓய்ந்தது போல அந்தப் பெண் கடைசியாக நிறுத்தினாள். இவனும் மன்னிப்பு கேட்டு விட்டு போனை வைத்து விட்டான். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் முதலில் குறிப்பிட்ட பெண்ணும் இவனுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தி விட்டாள். அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு என்று நாங்கள் எல்லோரும் பெருமூச்சு விட்டோம். ஆனால் இத்தனை நடந்த பிறகும் அவன் அந்தப் பதிவை எழுதியது நான் இல்லை, எனது நண்பர்கள் தான் என்று ஒரு வார்த்தை கூட அந்தப் பெண்ணிடம் சொல்லவில்லை. முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்தகநக நட்பதல்லவா நட்பு :)

இந்த இரு சம்பவங்களும் அரசல் புரசலாக மற்ற துறை மாணவர்களிடம் பரவியது. ஒருவர் மாற்றி ஒருவரிடம் சென்று கடைசியில், "டேய் ஐ.டி டிப்பார்ட்மெண்ட் பசங்க ஆர்குட் அக்கவுண்டையே ஹேக் பண்றாங்களாமாடா" என்று முடிந்தது. ஒரு நாள் மின்னியல் துறையில் இருந்து ஒருவன் வந்து முத்து ராமனிடமே, மச்சி உங்க கிளாஸ் பசங்க ஆர்குட் அக்கவுண்ட ஹேக் பண்றாங்களாமா, அது எப்படினு சொல்ல முடியுமா என்று கேட்டான். இவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே என்னிடம் அனுப்பி வைத்தான்.  அவனிடம் விபரங்களையெல்லாம் கேட்ட பிறகு, யார் அக்கவுண்ட ஹேக் பண்ணனும் என்றேன். அவனுடைய ரூம் மேட் அக்கவுண்ட் தான் என்றான். அப்படியென்றால் இன்னும் வசதியாக போயிற்று எனக் கூறி அவனோடு அவனது அறைக்கு சென்றேன். அப்போது அவனது ரூம் மேட் ஆர்குட்டில் மேய்ந்து கொண்டிருந்தான். நான் அப்படியே எதேச்சையாக இவனிடம் பேசுவது போல, டேய் இந்த வாரத்துல இருந்து திங்கட்கிழமைக்கு பதிலா, இன்னைக்கே மெஸ்ல வடை போடுறாங்களாம் என்றேன். இதைக் கேட்ட அவனது ரூம் மேட், தட்டை தூக்கிக்கொண்டு மெஸ் நோக்கி ஓடினான். நான் உடனே, சீக்கிரம் சீக்கிரம் கதவை பூட்டு என்றேன். எதுக்குடா என்று அவன் குழப்பமாக கேட்க, இந்தா அவசரத்துல ஆர்குட்ல லாக் அவுட் பண்ணாம அவன் போயிருக்கானா, நாம உடனே கபால்னு அந்த அக்கவுண்ட்குள்ள நுழைஞ்சிடனும். அவ்வளவு தான் ஹேக்கிங் என்றேன். அவன் கீழே ஏதோ விழுந்தது போல சுற்றி சுற்றி தேடிக் கொண்டிருந்தான். காறி துப்ப தான் அப்படி பார்க்கிறான் எனப் புரிந்து கொண்டேன். இவர்களாகவும் சொந்தமாக யோசிக்க மாட்டார்கள், நாம் புத்திசாலித்தனமாக யோசித்தாலும் மதிக்க மாட்டார்கள் என்ற கவலையோடு அந்த அறைய விட்டு வெளியே வந்தேன். கவனிக்க - நடந்து தான் வந்தேன், ஓடி வரவில்லை :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக