எதுக்கு இப்போ தேவை இல்லாம கத்துற மல்லிகா?
யாரு, நான் கத்துறேனா? நான் பேசினாலே உனக்கு கத்துற மாதிரி தான இருக்கும்.
மறுபடியும் இன்னொரு சண்டை வேணாம். நாளைக்கு காலைல பேசிக்கலாம் மல்லிகா.
இங்க பாரு மஹா, நான் சண்டைலாம் போடல, நார்மலாத்தான் பேசறேன், நீ தான் பிரச்சனைய பெரிசு பண்ற.
சரி பெரிசு பண்ணல. நான் போய் தூங்கறேன் போதுமா. வார்த்தைகள் வாக்குவாதமாய் மாறுவதற்குள் முடிக்கப் பார்த்தான் மஹாதேவன்.
ஏன் இப்படி ஹார்ஷா பேசற, கொஞ்சமாவது என்னை மதிக்கறயா, பொண்ணுங்கனாலே ஆம்பிளைங்களுக்கு இளக்காரம் தானே
ஆமா உன்னை மதிக்காம தான் பெண்கள் தினம் அன்னைக்கு உனக்கு புடவை வாங்கி கொடுத்தேனாக்கும்.
ஒண்ணு செஞ்சா அதையேதான் சொல்லிக்கிட்டு இருப்பீங்க இந்த ஆம்பிளைங்க,அது என்ன பெண்கள் தினம்னு நீங்க எங்களுக்கு ஒதுக்கறது, பெண்கள் தினம்ங்கறதே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான்.
அம்மா தாயே என்னை விட்டுரு, நாளைக்கு நான் ஆபீஸ் போகனும், தூங்கறேன். கடுப்புடன் தூங்கப் போனான் மஹாதேவன். மல்லிகாவும் கோபத்தில் படுத்திருந்தாள். எதற்காக சண்டை ஆரம்பித்தது என்று இருவருக்குமே நினைவில் இல்லை.
புரண்டு புரண்டு படுத்தாலும் மல்லிகாவிற்கு தூக்கம் வரவில்லை. கல்யாணத்திற்கு முந்தைய காதலிலும் தான் சண்டை போட்டோம். ஆனா அது எவ்வளோ நல்லா இருந்தது. இப்போ ஏன் இவ்ளோ வித்தியாசமா இருக்கு, மஹா மாறிட்டானா, இல்லை எல்லா ஆம்பிளைங்களும் இப்படியா?
அவனுக்காக நான் எவ்வளோ செய்யறேன். ஏன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குறான், குடும்பத்துக்காக எவ்வளோ கஷ்டப்பட்டு உழைக்கிறேன். இவனை நல்லா பாத்துக்கனும், இவனுக்கு நல்லா சமைச்சு போடனும்னு தானே நான் வேலைக்கு கூட போகலை. வீட்ல எல்லார் எதிர்ப்பையும் மீறி கட்டினா இவனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நின்னேன். போன மாசம் உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல்ல இருந்தப்போ எப்படி பாத்துக்கிட்டேன். கொஞ்சமாவது யோசிச்சு பாக்கறனா. எப்போ பாத்தாலும் சண்டை போடுற மாதிரியே பேசுறான். மல்லிகாவின் தலையணை நனைந்திருந்தது. எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. விழித்து பார்த்தால் மணி 6.45 காட்டியது. மஹா அப்போது தான் எழுந்திருந்திருக்க வேண்டும். பல் துலக்கிக் கொண்டிருந்தான்.
7.30 மணிக்குள் ரவை உப்புமா செய்து வைத்திருந்தாள். எதுவுமே சொல்லாமல் சாப்பிடாமல் 8 மணிக்கு ஆபீஸ் கிளம்பி விட்டான் மஹாதேவன்.
எவ்வளவு திமிரு இவனுக்கு கோவம் கோவமாய் வந்தது மல்லிகாவிற்கு.
மஹா ஆபீஸ் போய் சேர 9 ஆகி இருந்தது. அன்று அவனுக்கு வேலை அவ்வளவாக இல்லை ஆபீஸில். வேறு வேலை எதுவும் இல்லாத சமயங்களில் தான் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க ஆரம்பிப்பார்கள் ஆண்கள் பலர்.
எவ்வளோ திமிர் அவளுக்கு, எவ்வளோ கஷ்டப்பட்டு உழைக்கிறேன் குடும்பத்திற்காக, கொஞ்சமாவது மதிக்கிறாளா. எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்கா. ஆபீஸ்ல தான் டென்ஷன், வீட்லயாவது கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாம்னா முடியுதா?
கல்யாணத்திற்கு முந்தைய காதலிலும் தான் சண்டை போடுவோம், ஆனா அது எவ்வளோ நல்லா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் மல்லிகா மாறிட்டாளா, இல்லை எல்லா பெண்களும் இப்படித்தானா. வீட்ல எவ்வளோ எதிர்ப்பையும் மீறி இவளை கட்டிக்கிட்டேன், கொஞ்சமாவது யோசிக்கிறளா. நிச்சயத்தன்மை இல்லாத வரைக்கும் தான் ஒரு உறவு நல்லா இருக்குமா?
இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே மதிய உணவு இடைவேள வந்தது. ஆபீஸ் கேபிடேரியாவிற்கு கிளம்பினான் மஹா.
வீட்டில் மல்லிகாவிற்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. திருமணத்திற்கு முன் அவன் அவளுக்கு எழுதிய கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தாள். இருவருக்கு உள்ள மிக சில ஒற்றுமையான விஷயங்களில் இதுவும் ஒன்று. எப்போது சண்டை வந்தாலும் ஒருவர் மற்றவருக்கு எழுதிய கடிதங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். உங்களுக்கும் காதலனோ காதலியோ இருந்தால் போனில் பேசுவதை விட கடிதம் எழுதிப் பாருங்கள். சில வருடங்கள் கழித்துப் படிக்க நன்றாக இருக்கும். (மனைவிக்கும் கடிதம் எழுதலாம் அது உங்கள் மனைவியாய் இருந்தால் :)). கடிதம் படிக்க படிக்க மல்லிகாவின் கோவம் தணிந்தது.
நான் நேத்து அப்படி கோவமா பேசி இருக்க கூடாது. பாவம் மஹா, நமக்காகத்தானே கஷ்டப்பட்டு உழைக்கிறான். ஆபீஸ் டென்ஷன்ல வீட்டுக்கு வர்றான். நாமளும் ஏன் அவன்கிட்ட சண்டை போடுற மாதிரி பேசனும். காலைல வேற சாப்பிடாம கிளம்பிட்டான். பசி தாங்க மாட்டான்.என் தப்பு தான். வந்ததும் சாரி கேட்கனும். இனிமேல் சண்டையே போடக்கூடது. சாயந்திரம் அவன் வரும் போது அவனுக்கு பிடிச்ச ப்ளூ கலர் புடவை கட்டி, அவனுக்குப் பிடிச்ச சின்ன செயின் போட்டுக்கனும். முடிஞ்சா கோவிலுக்கு போவோம். நைட் டின்னர்க்கு அவனுக்குப் பிடிச்ச இடியாப்பம் பண்ணுவோம். யோசித்துக் கொண்டே மணியைப் பார்த்தாள், மணி 3.30 காட்டியது. ஐயயோ லேட் ஆயிடுச்சு, கிளம்பனும் எனப் பறந்தாள் மல்லிகா பழைய கோவம் அனைத்தையும் மறந்தவளாக.
சாப்பிட்டு விட்டு கேபினுக்கு வந்தான் மஹாதேவன். எப்போதும் அவன் ஷெல்பில் மல்லிகா அவனுக்கு எழுதிய கடிதங்கள் சில இருக்கும். எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.மஹா யோசிக்க ஆரம்பித்தான். நாள் பூரா வீட்ல தனியா இருக்கறா. எனக்காக வாய்க்கு ருசியா சமைச்சு போடறா. கொஞ்ச நேரம் தான் அவ கூட ஒரு நாள்ல நேரம் செலவழிக்கறேன். அதுல கூட நான் ஏன் கோவப்படனும்.காலைல வேற சாப்பிடாம வந்துட்டேன். பாவம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அவளை சந்தோஷமா வச்சிக்கனும்.போய்ட்டு அவகிட்ட சாரி கேட்கனும். இன்னைக்கு சீக்கிரமே கிளம்பிடலாம். போகும் போது புக் வாங்கிட்டு போகனும்.அப்படியே அவளை வெளில எங்கேயாவது கூட்டிட்டிப் போகனும்.
சண்டை முடிந்து சமாதானம் ஆகும் போது ஒரு புக் வாங்கி தரனும். இது அவர்களுக்குள் இருக்கும் எழுதப்படாத விதி. வீட்டில் ஒரு லைப்ரரி அளவுக்கு புத்தகங்கள் இருக்கு இப்போ அவர்களிடம். மணி 4.30 காட்டியது. கிளம்பினான் மஹா.
மஹா சீக்கிரமே வந்தது மல்லிகாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதை விட ஆச்சர்யம் மஹாவுக்கு மல்லிகா கட்டியிருந்த ப்ளூ புடவை. கழுத்தில் தொங்கிய சின்ன செயின் அவளை இன்னும் அழகாக காட்டியது. இருவருக்குமே சாரி கேட்கனும் என்று தோணியது. ஆனாலும் மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்த ஈகோ தடுத்தது. இருவரும் ஒரே நேரத்தில் சாரி என்றனர் , அன்பு ஈகோவை சுத்தமாகத் துடைத்துப் போட்டது. சிரித்துக் கொண்டே மல்லிகா அவன் தோளில் சாய்ந்தாள். காலேஜ் படிக்கிறப்போ அடிக்கடி போவோமே அந்த பிள்ளையார் கோவிலுக்குப் போலாமா? மஹா கேட்டான்.
சந்தோஷமாக தலையசைத்தாள் மல்லிகா.
பழைய நினைவுகளை அசை போட்டபடி வந்தனர். .Life is Short d மல்லிகா, இருக்கற இந்த சின்ன gapலயாவது நாம சந்தோஷமா இருப்போமே. இனிமேல் நமக்குள்ள சண்டை வேணாம். அதை ஆமோதிக்கும் விதமாக புன்னகைத்தாள் மல்லிகா.
இன்னைக்கு நைட் உனக்குப் பிடிச்ச இடியாப்பம்,
Soo sweet d நீ. இப்படியே உன்னை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குடி
Sight அடிச்சதெல்லாம் போதும், முதல்ல சாப்பிடுங்க சார்
ஊட்டி விடு சாப்பிடறேன்
ஆசைய பார்றா. இருவரும் ஊட்டி விட்டு பழைய கதைகளை பேசி முடிக்க 10 மணி ஆகி இருந்தது.
ரொம்ப தூக்கம் வருதுடா. நான் படுக்கறேன்.
எனக்கும் தான், டி வாசல் கதவு பூட்டினேனானு மறந்துட்டேன். போய் பாத்திட்டு வந்திடேன்.
செம டையர்ட் டா, படுத்திட்டேன். நீயே போய் பாத்திடேன்.
என்னால முடியலனு தானே உன்ன சொல்றேன் மல்லிகா. போயேன்.
வீட்ல தினமும் எல்லா வேலையும் நான் தானே செய்யறேன். கதவு தானே, நீயே பூட்டிடேன்
நான் மட்டும் என்ன ஆபீஸ்ல சும்மாவா இருக்கேன். சின்ன வேலை தானே. செஞ்சா என்னவாம்?
ஏன் மஹா இப்படி என்னைப் படுத்துற, குரலை உயர்த்தினாள் மல்லிகா,
எதுக்கு இப்போ தேவை இல்லாம கத்துற மல்லிகா?
யாரு, நான் கத்துறேனா? நான் பேசினாலே உனக்கு கத்துற மாதிரி தான இருக்கும்.
மறுபடியும் இன்னொரு சண்டை வேணாம். நாளைக்கு காலைல பேசிக்கலாம் மல்லிகா.
இங்க பாரு மஹா, நான் சண்டைலாம் போடல, நார்மலாத்தான் பேசறேன், நீ தான் பிரச்சனைய பெரிசு பண்ற.................................................................................................
மீண்டும் முதல் பத்தியில் இருந்து கதையைப் படிக்கவும்.
(சுஜாதா எழுதிய 'மன்னிக்கவும் இது கதையின் ஆரம்பம் அல்ல' என்ற cyclic கதையை உள்ளூக்கமாகக் கொண்டு, என்னாலான ஒரு சாதாரண சிறிய முயற்சி. படித்து பின்னூட்டம் அளித்தால் மகிழ்வேன் )