"ஏல ராமகிருஷ்ணன் பெப்ஸி வச்சிருக்கானாம்ல. தினமும் மத்யானம் வ்ளாட போம்போது பெப்சி குடிச்சிட்டு தாம்ல வாரான்". சங்கர் ரிப்போர்ட் செய்வது போல் ஒப்பித்தான்.
"பெப்ஸினா என்னல" - இது கணேசன். அவனும் எங்க செட் தான்.
"யோல் டொரினோ மாரி கலர்ல. புதுசா வந்திருக்காம் வெளிநாட்டுல இருந்து" என்றான் சங்கர்.
"பெப்ஸி அவனே தயாரிக்கானாம்ல" கண்ணனின் வார்த்தைகளில் ஆச்சர்யமும் குழப்பமும் கலந்து இருந்தது.
"கோட்டி மாரி பேசாதல. அவனே எப்படில பெப்ஸி தயாரிக்க முடியும்" என்றேன் நான்.
"டெய்லி தண்ணி பாட்டில்ல மதியம் பெப்ஸி இருக்குல. ஆனா காலைல வெறும் தண்ணி தான் வெச்சிருக்கான். எப்படில பெப்ஸினு கேட்டதுக்கு தான் நானே தயாரிக்கேம்லனான்".
"யோல் அவன் ரொம்ப பந்தா பண்ணுதான். அவன் எப்படி பெப்ஸி தயாரிக்கான்னு கண்டுபிடிப்போம்". ரகசிய திட்டம் தீட்டினோம் எங்கள் கேங்கில். இதுவரை யாருமே பெப்ஸி குடித்திராததால் ராமகிருஷ்ணனின் பானத்தை பெப்ஸி என்றே நம்பினோம்.
------ ----------- ------------- --------------- ------------------- ------------------ ---------------------
"சார் விழுப்புரம் எப்போ வரும்?" நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெவேலியில் இருந்து கிளம்பி 10 நிமிடங்கள் இருக்கும்.
"சரியா தெரில சார். அதிகாலைல வரும் . நீங்க வேற யார்கிட்டயாவது கேளுங்க". மறுபடியும் ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டேன்.
தனிமையான ரயில் பயணங்கள் மிகவும் இனிமையானவை. ஆனால் இந்த தடவை தனிமை சுகமில்லை. சுமை தான். காரணம் அவள். பர்ஸில் இருந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன். இதுவரை 100 தடவைக்கு மேலேயாவது அதைப் படித்திருப்பேன்.
டேய் புருஷா,
இன்னையோட நீ என்னை விட்டு டெல்லி போய் 3 நாள் ஆச்சு. என்னை தனியா விட்டிட்டு போய்ட்டேல :( பாரு வீட்டுக்கு வந்து உன்ட பேசமாட்டேன் :(
ஆஹா இம்சை ஒழிஞ்சதுனு சந்தோஷப்படுவியே, தெரியும்டா உன்னை பத்தி. கேடி.
டேய் நான் என்ன தான் இங்க அப்பா, அம்மா கூட இருந்தாலும் ரொம்ப தனியா இருக்கற மாதிரி இருக்கு. சீக்கிரம் அங்க வேலையை முடிச்சிட்டு வந்திடு. செல்லம்ல :)
உனக்கு ஒரு நல்ல செய்தி கெட்ட செய்தி :)
இங்க கோயில்ல ஒரு விசேஷம்னு நான் புடவை கட்டினேனே. அதுவும் உனக்குப் பிடிச்ச கலர்ல. தலை நிறைய பூ வச்சிருந்தேன். இதான் நல்ல செய்தி. உனக்கு தான் நான் சேலை கட்டினா ரொம்ப பிடிக்குமே. பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கேன்னு அம்மா சொன்னங்களே :)
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுடினு தான மனசுக்குள்ள நினைச்ச. எப்புடி கண்டுபிடிச்சேன். ஒத்துக்க மாட்டியே. தெரியும்டா. அதான் உனக்கு கெட்ட செய்தி.
போட்டோ எடுத்திருக்கேன் நான் புடவைல இருக்கறத. ஆனா உனக்கு காண்பிக்க மாட்டேனே.
அடுத்த தடவை வேலை விஷயமா வெளியூர் போன என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லு. நான் காண்பிக்கறேன். டீலா? :)
சீக்கிரம் வந்திடுடா. நம்ம வீட்டுக்கே போய்டலாம். 2 புது டிஷ் கத்துருக்கேன் உனக்கு சமைச்சு போட. உடனே நான் என்ன experiment எலியானு சீன் போடாத. அப்புறம் எதுவும் செய்ய மாட்டேன் :)
-------- ------------- ------------------- ------------------- ---------------- ----------
"சார் விழுப்புரம் வந்திருச்சா", தூக்கத்தில் இருந்து எழுந்து கேட்டான்.
"இல்ல சார். இப்போ தான் மதுரை தாண்டி 1 மணி நேரம் ஆகுது".
"இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்"?
"தெரில சார்".
"வந்தா கொஞ்சம் சொல்றீங்களா", இந்த தடவை வெட்கத்தை விட்டே கேட்டு விட்டார்.
"சரி சார்".
"சார் கொஞ்சம் லைட்ட அணைச்சிருங்களேன்."
மறுபடியும் லெட்டரைத் தொடர மனமில்லை. லைட்டை அணைத்தேன். இவ்ளோ பாசமா இருக்கா, அப்புறம் ஏன் கோவிச்சுகிட்டு போனா.
சண்டை எப்போது எதில் ஆரம்பித்தது. இந்த தடவையும் நினைவில்லை. கடைசியாக வியாழக்கிழமை பேசினது. இப்போது சித்தி வீட்டில் இருக்கா.
நான் ஏன் அவள பத்தி யோசிக்கனும்? அவளே என்னைப் பத்தி யோசிக்கல. இனிமேல் அவள பத்தி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ண கூடாது. அவளுக்கு தோணினா அவளா வந்து பேசட்டும். நானும் விட்டுக் கொடுக்கறதா இல்ல..
வேற எதை பத்தியாவது யோசிப்போம். கடைசியா எத பத்தி யோசிச்சோம்....
.....
....
....
---------------------------------------------------------------------------------------------
"இன்னைக்கு மத்தியானம் நாம லேட்டா சாப்பிடுவோம்ல. மறஞ்சிருந்து அவன் பின்னாடியே போய் என்ன பண்ணுதான்னு பாப்போம்". திட்டத்தை நான் சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.
மதியம் பெல் அடித்ததும் ராமகிருஷ்ணன் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு தனியாக போனான்.
சுத்தி முத்தி பாத்து விட்டு, நேராக மிட்டாய் பாட்டியிடம் போனான்.
"சாப்பிடதுக்கு முன்னாலயே ஏம்ல அவன் அங்க நிக்கான்"?
"சத்தம் போடதல அவன் காதுல கேட்டுற போவுது".
"ஆச்சி 10 பாக்கு முட்டாய் கொடுங்க" - ராமகிருஷ்ணன் 50 பைசாவை நீட்டினான்.
யாரும் பார்க்கும் முன்னரே 10 பாக்கு முட்டாயையும் பாட்டிலில் போட்டு குலுக்கினான். பின் யாருக்கும் தெரியாதவாறு மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினான்.
மிட்டாய் கரைந்து தண்ணீர் சிவப்பு நிறமாக காட்சியளிக்க துவங்கியது.
"பாக்கு முட்டாய தண்ணில போட்டு பெப்ஸினு ஊர ஏமாத்துதாம்ல, இன்னைக்கி எல்லார்ட்டயும் சொல்லிருவோம்". எங்கள் கேங்க் ஓடியது.
விளையாடிவிட்டு பந்தா பண்ணுவதற்கென்றே பெப்ஸியை எடுத்தான். உடனே நான் பெஞ்ச் மீதேறி, "பாக்கு முட்டாய தண்ணில போட்டு பெப்ஸினு ஏமாத்துதாம்ல, ஏமாத்து பையன் ராமா, ஏமாத்து பையன் ராமா". கூடவே எங்கள கேங்கும் கோரஸ் பாடியது.
"ஏமாத்து பையன் ராமா , ஏமாத்து பையன் ராமா"
----------------------------------------------------------------------------------------------
சார் விழுப்புரம் வந்திருச்சா?
டேய்ய்ய்ய்ய்ய்!!! வெளியில் கத்த முடியவில்லை. இப்போ தான் திருச்சி வந்திருக்கு. தூங்குங்க.
மெசேஜ் வந்ததற்கு அறிகுறியாக வைப்ரேட் ஆகியது செல்போன். ஒரு வேளை அவளாக இருக்குமோ. அவளா தான் இருக்கும். எவ்ளோ பாசமா இருப்பா என் மேல. சாரி கேட்க மெஸேஜ் பண்ணிருப்பாளா இல்ல மிஸ் யூ அனுப்பிருப்பாளா
ஆர்வத்துடன் திறந்து பார்த்தால் லவ் பெயிலியர் நண்பனிடம் இருந்து வழக்கமான ஃபீலிங் மெசேஜ். ஏமாற்றம் - கடுப்பு facebook, twitter, cinema song எங்க பாத்தாலும் இவனுக தொல்ல தாங்க முடியல.
அவ மெஸேஜ் அனுப்பினா என்ன அனுப்பலேனா என்ன, நான் எதுக்கு இப்போ அவள பத்தி யோசிச்சேன். அவளே மெசேஜ் பண்ணிருந்தாலும் ரிப்ளை பண்ண கூடாது.
முதல்ல அவள பத்தியே யோசிக்க கூடாது. அவளா வந்து பேசற வரைக்கும் அவள பத்தியே நினைக்க கூடாது.
------------------------------------------------------------------------------------
"ராமகிருஷ்ணன் ரொம்ப அழுதாம்ல. உன்கூட சண்டையாம். எதுக்குல அப்படி பண்ண"
"போல, அவன் நடிக்கான். அவன் பேசலேனா எனக்கு என்ன."
2 ஆம் வகுப்பில் நடந்த சம்பவம். அதன் பிறகு 4 ஆம் வகுப்பு வரை ராமகிருஷ்ணன் என்னிடம் பேசவில்லை. நான் வேறு ஸ்கூலுக்கு வந்து விட்டேன்.
இப்போ அந்த பெப்ஸி ராமகிருஷ்ணனும் ஏதோ ஒரு இடத்துல சாப்ட்வேர் இஞ்சினியராகத்தான் இருப்பான்.
--------------------------------------------------------------------------------------
"சார் விழுப்புரம் வந்திடுச்சா"?
இந்த தடவை நான் பதிலளிக்கும் முன்பே, சென்னை எக்மோரே வந்திடுச்சு சார் என்றார் இன்னொருவர்.
அந்த ஆள் என்னை பரிதாபமாக பார்த்தான். நான் எவ்வளவு வேகமாக பையை எடுத்து கீழே இறங்க முடியுமோ, அவ்வளவு வேகமாக இறங்கி கொண்டிருந்தேன்.
இனிமேல் பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் பிடிச்சு விழுப்புரம் போகனும். சார் பஸ் ஸ்டாண்ட்க்கு எப்படி போகனும்? புலம்பிக் கொண்டிருந்த அவர் இந்த தடவை என்னிடம் கேட்க வில்லை.
ஒரு சாரியாவது கேட்டிருக்கலாமோ? சரி விடு, தப்பு அந்த ஆள் மேல தான். அவர் தான விழுப்புரம் போகனும், நானா போகனும். எப்போ தூங்கினேன்னே தெரிலயே நைட்.
கால் வருவதன் அறிகுறியாக செல்போன் வைப்ரேட் செய்ய ஆரம்பித்தது.
ஒரு வேளை அவளா இருக்குமோ?
(படமளித்து உதவிய அபினவ்க்கு நன்றி)