வெள்ளி, 27 டிசம்பர், 2013

அன்பின் அலகு


இன்றோடு அப்பா எங்களை விட்டுப் பிரிந்து 3 மாதங்கள் ஓடி விட்டன. அம்மா இறக்கும் வரை அப்பா நன்றாக தான் இருந்தார். அதன் பின்பு மிகவும் தளர்ந்து விட்டார். வயதும் காரணமாய் இருக்கலாம். 72 வயதில் துணையை இழப்பது கடினம் தான். அம்மா இறக்கும் வரை, தன் அறையிலேயே எப்போதும் ஒரு நீல நிற ட்ரங் பெட்டி வைத்திருப்பாள். அதில் என்ன இருக்கிறது என்று இதுவரை எங்களுக்கு தெரிந்ததில்லை. அம்மாவிற்கு பிறகு அப்பா அந்த பெட்டியை தன்னோடு வைத்துக் கொண்டார். அப்பாவின் நினைவுகளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விற்கவோ அல்லது குப்பையில் போட அப்புறப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அப்போது தான் கண்ணில் பட்டது அந்த நீல நிற ட்ரங் பெட்டி. உள்ளே சில கடிதங்கள் மட்டும் இருந்தன. ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்பா, அம்மாவிற்கு எப்போதோ எழுதியது.

கண்ணம்மா,
இன்றோடு உன்னைப் பிரிந்து 3 வாரங்கள் ஆகிவிட்டன. ஒளியின் வேகத்தில் சென்றால் காலம் நின்று விடும் என்கிறது அறிவியல். ஒளியின் வேகத்தில் செல்லும் உன் நினைவுகளாலோ என்னவோ, இந்த 3 வார காலம், எனக்கு பல யுகங்கள் கடந்தது போல் உள்ளது.

என்னை நீ வழியனுப்ப வந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. அப்பா, அம்மா, அண்ணன், மதினி, பெரியப்பா என் ஒவ்வொருவரிடமும் விடைபெற்று வந்தால் மிட்டாய்க்காக ஏங்கி நிற்கும் குழந்தை போல வரிசையின் கடைசியில் எனக்கு பிடித்த ஆடையில் நீ. அவ்வளவு தான், தாயைக் கண்ட குழந்தை போல சிலிர்த்துக் கொண்டது மனது. நிலவில்லா தெளிந்த இரவில் ஒளி உமிழும் ஒற்றை நட்சத்திரம் போல உன் நெற்றிப் பொட்டு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. இமைகளுக்குள் கண்ணீரை விடுத்து உன்னை கண்ட கணத்தினை பதிவு செய்து கொண்டேன். அன்பினைக் காட்டும் கருவி இல்லை என உலகம் ஏமாந்து கொண்டிருக்கிறது. உன் விழியோரத்தில் வழிந்த இரு சொட்டு கண்ணீரை அவர்கள் கண்டதில்லை போலும்.

நாம் இருவரும் முதன் முதலில் வெளியே சென்றது நினைவு இருக்கிறதா ? மிகச்சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய ஞாயிறு அது. உன்னால் நினைவு பெட்டகத்தில் தனி இடம் பிடித்துக் கொண்டது. சுற்றி இருக்கும் உலகமெல்லாம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, நீயும் நானும் உறைந்து போன தருணங்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டது போல இருந்தது. தனியாக சாப்பிட்டால் வயிறு மட்டும் நிறையும். உன்னுடன் சேர்ந்து சாப்பிடும் போதெல்லாம் மனதும் சேர்ந்து நிறைகிறது. ஒரு சொட்டு அமிர்தம் கலந்தாலும் ஒட்டு மொத்த உணவும் அமிர்தம் ஆகி விடுமாம். அது போல மிகசாதாரண தருணங்களைக் கூட அசாதாரண தருணங்களாக மாற்றி விடுகிறது உன்னுடன் அருந்தும் தேநீரும் உன் வெட்கம் கலந்த புன்னகையும். உன்னோடு குடிக்கும் போது மட்டுமே தேநீர் குடிப்பது அனுபவமாகி விடுகிறது. தேநீரா இல்லை தேன் நீரா என குழம்பி விடுகிறது மனம். கடற்கரை ஓரத்தில் குடித்த தேநீர், பெருமழைக்காலம் ஒன்றில் வீட்டு முற்றத்தில் நீயும் நானும் அருந்திய தேநீர், யதேச்சையாக சாலை ஓரத்தில் சந்தித்த பொழுது அருந்திய தேநீர்.. இன்னும் இன்னும்…. உலகில் உள்ள எல்லா வகை தேநீரையும் ருசி பார்க்கவாது நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும்.

அன்பை செலவழித்து நீ எனக்கு கொடுத்திருக்கும் பிறந்த நாள் பரிசு எல்லாம் என்னைச் சுற்றிக் கிடக்க, கண நேரம் ஊமை ஆனது போல் உணர்வு. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். நிஜம் தான்? ஒற்றைப் படகில், வானம் பருகி கிடக்கும் கடலின் நடுவில் இருப்பதைப் போல உன் அன்பெனும் கடலின் நடுவில் நான். திரும்பி வர மனமில்லை. வரவும் தேவையில்லை. இங்கே தொலைவது தான் சுகம். எனக்கு எழுதும் பேனாவில் மை ஊற்றி நீ எழுதுவதில்லை. அன்பு ஊற்றி தானே எழுதுகிறாய்? நீ பரிசாக எனக்கு கொடுத்த பொருள் ஒவ்வொன்றும் ஒரு அட்சய பாத்திரம். அள்ள அள்ளக் குறையாமல் உன் அன்பை பெற்றுக் கொண்டே இருக்கிறேன். காலடியில் இருக்கும் மணலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் அலைகள் போல, காலம் என்னிடமிருந்து எல்லா நினைவுகளை எடுத்துச் சென்றாலும் உன் அன்பின் நினைவலைகள் எப்போதும் என் மனதின் அடியில் பத்திரமாக இருக்கும்.

கண்ணம்மாவைப் பற்றி கவிதைகள் எழுதலாம். கண்ணம்மாவே கவிதைகள் எழுதினால், அதுவும் எனக்காக… அதை விட இன்பம் வேறேதும் இல்லை. பாத்திரத்தின் குளிர்ச்சியை வெளியில் காட்டும் நீர்த்திவலைகள் போல, உன் அன்பை உன் எழுத்துக்கள் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. உன் கடிதங்களையும் கவிதைகளையும் வாசிக்கும் பொழுதெல்லாம், நிகழ்காலத்தில் துளையிட்டு, உன் நினைவுகள் இருக்கும் கடந்தகாலமும், உனக்கான என் கனவுகள் இருக்கும் எதிர்காலமும் சந்திக்கும் வெளியில் மிதப்பது போன்ற உணர்வு. தொடர்ந்து எழுது நமக்காக. ‘கண்ணம்மா பாரதி’ என்று உன் கனவுகள் அனைத்தையும் சுருக்கி கையெழுத்தென இரண்டு பெயர்களில் அடைத்து விட்டாய். கனவுகளின் கதிர்வீச்சில் மீளமுடியாமல் சொக்கிக் கிடக்கிறேன் நான்.

அன்பை அளக்க அலகுகள் இல்லை. ஆனால் அதன் வீரியத்தை உணர்த்த கடிதங்கள் போதுமான‌தாய் இருக்கிறது. இந்த கடிதமும் அப்படித்தான். என் கண்ணம்மாவுக்காக‌

கண்ணம்மாவின் துணைவன்,
பாரதி

கடிதத்தின் பாரம் தாங்காமால் இதயம் கசிந்த துளிகள் கண்ணில் வெளிப்பட்டது. அப்பா நல்ல மனிதர் மட்டும் இல்லை, நல்ல ரசிகரும் கூட. முதல் முறையாக கதறி அழுதேன் அப்பா இறந்ததற்காக‌…………..

ஞாயிறு, 3 நவம்பர், 2013

ஆல் இன் ஆல் அழகு ராஜா விமர்சனம்


சில படங்கள் நன்றாக இருக்கும். சில படங்கள் சுமாராக இருக்கும். சில படங்கள் மொக்கையாக இருக்கும். ஆனால் வெகு சில படங்களே கண்றாவியாக இருக்கும். ஆல் இன் ஆல் அழகு ராஜா இதில் கடைசி வகை. [தமிழக அரசின் வரி விலக்குக்காக இனி அழகு ராஜா என்று மட்டும் படிக்கவும்]. என் 25 வருஷ சர்வீஸில் இதுவரை எந்த படங்களுக்கும் விமர்சனம் எழுதியது இல்லை. தியேட்டரை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என 45 நிமிடங்களுக்கு முன்னால் ஓடி வந்தது இல்லை. இதையெல்லாம் மாற்றியது இந்த அழகு ராஜா படம்.

நான் எதோ மொக்கை படங்களே பார்க்காதவன் என்று எண்ணி விட வேண்டாம். பில்லா 2 வும் வேலாயுதமும் இது போன்ற இன்னும் சில தரமான (!) படங்களையும் எண்ட் கார்ட் போடும் வரை தியேட்டரில் பார்த்து விட்டு காறி துப்பி வந்திருக்கிறேன். ஆனால் எந்த படத்திலேயும் பாதியில் வந்தது இல்லை.

வக்கீல் வண்டு முருகன் பாஷையில் இந்த படத்தைப் பற்றி சொல்வதென்றால் "இது போன்ற கண்றாவியான படத்தை எங்காவது பார்த்ததுண்டா யுவர் ஆனர். அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்தியது போல் இருக்கிறது என் கட்சிக்காரரின் படம்" .

ப்ளீஸ் ராஜேஷ் சார். ஒரு படம் எடுத்தீங்க சிரிச்சோம். 2 ஆவது படமும் எடுத்தீங்க சிரிச்சோம்.இப்படி எல்லா படத்திலயும் ஒரே கதையையும் சட்டை, ஜட்டி கலர் மட்டும் மாத்தின சந்தானத்தை வச்சு இன்னும் எத்தனை படம் எடுப்பீங்க ? எப்பவாச்சுனா பரவா இல்லை. எப்பவுமேனா ??? ஆடியன்ஸ் பாவம்ல. 3 மணி நேரம் விளம்பர இடைவேளை இல்லாம தியேட்டர்ல ஆதித்யா டிவி போட்டுக்காட்டறது  நீங்க தான். இதுக்கு முன்னாடி வந்த படம் எல்லாம் கதை இல்லேனாலும் சந்தானத்தை வச்சு வண்டி ஓடுச்சு. இந்த படத்துல சந்தானம் வர்ற சீன்ல தியேட்டர்ல மயான அமைதி. ஏன்டா வந்தார்னு. இந்த கோவம் வர்ற மாதிரி காமெடினு வடிவேலு சார் சொல்வாரே அந்த டைப் காமெடி எல்லாமே. அதுவும் ஃபிளாஷ்பேக்னு 1980ல நடக்குற மாதிரி வர்ற ஸீன்ல, சந்தானம் வர்ற ஒவ்வொரு ஸீனுக்கும் கொலைவெறில ஆடியன்ஸ் சைட்ல இருந்து வருது பாருங்க கெட்ட வார்த்தை !@#$ அட அட அட, சும்மாவா சொன்னார் பாரதியார் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

படு மொக்கையான கதைக்களன். கேனைத்தனமான காதல். அதே அம்மா கேரக்டரில் சரண்யா. தமிழ் சினிமாவில் 80 -90 களில் அழுவதற்கென்றே ஒரு அம்மா கேரக்டர் இருக்கும். விசு படங்களில் கூட நடித்திருப்பார். அவர் பெயர் மறந்து போயிற்று. பெரும்பாலும் ரேப் செய்யப்பட்ட ஹீரோயினின் அம்மாவாகவோ, அல்லது வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட நாயகியின் அம்மா கேரக்டரோ தான் அவருக்கு. அது போலத் தான் இப்போது தமிழ் சினிமாவின் தறுதலை பிள்ளைகளின் அம்மா இந்த சரண்யா. நீங்க நல்ல ஆக்டர் தான் சரண்யா மேடம், விருதுலாம் வாங்கி இருக்கீங்க. ஆனா இந்த படத்துல எங்களாலயே முடியல :(

அப்புற‌ம் வழக்கம் போல லூசு மாதிரியான ஹீரோயினாக காஜல் அகர்வால். இதற்கு முந்தைய 1675 படங்களிம் எப்படி சிரித்தாரோ, எப்படி கண்ணை சுருக்கி கோபப்பட்டாரோ அதே ரியாக்ஷன். அப்பப்பபா. டைரக்டர் சார் பொண்ணுங்கலாம் இப்பொ ரொம்ப விவரம். லைலா மாதிரியான லூசு ஹீரோயின் கேரக்டர் எல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சு போயாச்சு. நீங்க இன்னும் விடல. ஆல் இன் ஆல் அழகு ராஜானு டைட்டில் வச்சதுக்கு பதிலா ஆல் இன் ஆல் நேவல் ராஜானு பேர் வச்சிருக்கலாம். ஹீரோயின் முகத்தை விட தொப்புள் தான் ஸ்கிரீன்ல அடிக்கடி தெரியுது.

இப்போ நம்ம செல்லாக்குட்டி சந்தானத்துக்கு வருவோம். பாஸ் என்கிற பாஸ்கரன் பொன்ற 546 படங்கள்ல பண்ண அதே கேரக்டர். இந்த படத்துக்குனு ஒரு மாடுலேஷன் வாய்ஸ்ல. பக்கத்து ஸீட்ல இருந்தவருக்கு ரத்த கொதிப்பே வந்துடுச்சு அதை கேட்டு. இவர் வர்ற சீன்லலாம், பெரிய வில்லனை பார்த்தா தலை குனிஞ்சு நிக்கிற ஊர் மக்கள் மாதிரி எல்லாரும் வாயடைச்சு போயிடறங்க. சந்தானம் எப்போ தறுதலை ஹீரோவுக்கு ஃபிரெண்டா வர்றத நிறுத்துராறோ அன்னைக்கு தான்டா இந்தியா வல்லரசு ஆகும், எழுதி வச்சிக்கோங்க பொது மக்களே.

சசிகுமார் ஸ்டைல்ல சொல்லனும்னா, "தீபாவளி அன்னைக்கு டிவியை விட்டுட்டு தியேட்டர்ல படம் பார்க்க வர்றதே நீங்கலாம் இருக்கீங்க, நல்ல படம் கொடுப்பீங்க அப்படிங்கற நம்பிக்கைல தானடா, பழகுன நீங்களே இப்படி பண்ணா நாங்க எப்படி நம்புறது இனிமே ?" ஒழுங்கா மூடிட்டு துரை சிங்கம் தம்பி சன் டிவில சொல்ற பஞ்ச் டயலாக்குக்கு விசில் அடிச்சிட்டு உட்கார்ந்திருக்கலாம். விதி யாரை விட்டது.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இந்த படத்தை ஃபிரண்ட்ஸோட இல்லாம தனியா தியேட்டர்ல முழு படத்தையும் பாக்கறவங்களுக்கு நான் ஒரு சிக்கன் பிரியாணி ஸ்பான்சர் பண்றேன். சவாலுக்கு தயாரா ? இன்னும் இந்த படத்தில் நடித்த கார்த்தி, ராஜேஷ் போன்ற பலரை திட்டிக்கொண்டே போகலாம். ஆன்லைனில் இதுக்காகலாம் சில KB களை வேஸ்ட் பண்ணனுமா என்ன.

என்னடா திரை விமர்சனம்னு சொல்லிட்டு கதை பத்தி ஒரு வரி கூட சொல்லாம போறானேனு பாக்கறீங்களா ? படத்துல தான் கதை இருக்கும். குப்பைல இருக்குமா என்ன.

பின்குறிப்பு : படத்தின் கடைசி 45 நிமிடங்களை நான் பார்க்கவில்லை. அதுக்கே இவ்வளோ பெரிய விமர்சனம். முழுசா பார்த்திருந்தேன்............. !@#$%^&*()

புதன், 31 ஜூலை, 2013

The universal language

Have you ever put your ears in silent mode ? Sounds a crazy question, right ? The gadgets of today all have silent mode. Right from mobiles, TVs, computers you can choose to turn off the sound when some irritating ad plays in youtube ad for the zillionth time, or you can mute your TV to answer your boss over phone that, you are working on that issue. But have you tried muting your ears ? Imagine a world without sounds. No car honks in signals, no screams when India wins a match, no need of worrying about scoldings that you may get from your girl friend for coming late and more importantly you can watch trailers of singam 2[for bollywood readers, insert any hifi multi masala-mix movie trailer] without any worries. You call it as 'peace'. Some call it as 'life'. Yes, I am speaking about people who cannot hear any sounds from birth. They are meant to be deaf, but we label them as deaf and dumb.



Recently I had an opportunity to see a video in youtube. Rume Roka of Noida Deaf Society delivered a speech in TEDx Gateway Mumbai in 2012. Franklin Templeton Investments partnered the TEDxGateway Mumbai in December 2012.

You can watch the video here :




Her speech made me to think on the question, how will we learn a new language if we cannot hear ? Hearing forms an integral part of language. And unfortunately for the kids who are born deaf, they continue to grow up as illiterate as they don't know any language. So, no language -> no school education -> no admission in engineering colleges -> no MNC placements. Life becomes a hell for them, as no one is ready to employ the deaf people. We cannot also blame entirely on the companies. When there are dumb employees who turn deaf to the problems of the company, how can the management be convinced to employ people who are actually deaf but not dumb ?

Ruma Roka saw this problem from a different perspective. She didn't posted the photos of deaf people in facebook and asking for 1 Like = 1 salute, 1 share = 1 prayer. Instead she really wanted to solve the problem. If you want to solve the problem of any system, you have to be a part of that system, said a famous blogger (its me only :P ) Ruma Roka entered into the world of silence, where she learnt sign languages. She was amazed by the talents that these people possess. Language is just a tool invented by man, and why should these people with special abilities be deprived of opportunities, just because of this man made tool. She educated them to be employable and as no good deeds fail, her years of toiling produced results. She is proud to say that many of her kids are now working in MNCs like Mphasis, Axis Bank, RBS. And she has transformed the lives of many deaf people through Noida Deaf Society.

Paulo Coelho, one of my favorite authors, says in the book Alchemist that, there is a universal language that every living thing can understand. I strongly feel that the language is love. Through love, you connect to every soul in this universe. Through love, you become complete. Through love, you become a revolutionary. Ruma Roka had learnt the universal language - love, the love for deaf people. We don't need to explore mars. The world will be a better place if we all learn this universal language.

Before you start learning this language, let me remember the words of Swami Vivekanandha


Take up one idea. Make that one idea your life - think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success. Words are secondary.Thoughts live. They travel far. 

Sometimes all it takes to change the world is, a little idea that sparks in your mind.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கடிகார அடிமைகள்


சாயந்திர நேரம், வெயில் அவ்வளவா இல்ல. சொல்ல முடியாது, மழை கூட பெய்யலாம். இப்போ எலக்ட்ரிக் டிரெயின்ல போனா எப்படி இருக்கும்? பின்னாடி திரும்பி பார்த்தா தண்டவாளம். நினைச்ச மாதிரியியே ஒரு டிரெயின் வருது. கூட்டமே இல்ல. கம்பி பிடிச்சு தொங்கிட்டே போகலாம். காத்து அடிக்கும் போது தலைமுடி ஆடும். ஜாலியா இருக்கும். அப்படியே பீச் ஸ்டேஷன் வரைக்கும் போகலாம். ஒரு வேடிக்கை பாருங்க, அந்த ஸ்டேஷனுக்கு பக்கத்துல பீச்சே கிடையாது, ஆனா அந்த ஸ்டேஷனுக்கு பேர் பீச் ஸ்டேஷன். மின்சார வாரியம் மாதிரி.  ஊருக்கு புதுசா வர்றவங்க நிறைய பேர் ஏமாந்துருவாங்க. இதோ மழை பெய்யற மாதிரி இருக்கு. இருட்டி கிடக்கு. நல்லா காத்து அடிக்குது.

நான் யாருன்னு கேட்கறீங்களா? இதோ இந்த பாய்ல தூங்கிட்டு இருக்கானே மாரிமுத்து. 8த் படிக்கிறான் அவனோட கனவு நான். அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். சமயத்துல நான் தான் மாரிமுத்தோனு எனக்கே சந்தேகம் வரும்.

"தம்பி மணி எத்தனை?" யாரோ ஒரு பெரியவர் கேட்கிறார்.

காலைல ஸ்கூலுக்கு போகும்போது ரோட்டுல நின்னுகிட்டு இருந்த ஒத்தைக்கால் தாத்தா மாதிரியே இருக்கார். இவர் எப்படி இங்க??

" மணி தெரியலை தாத்தா." கத்தி சொல்றேன். ஆனா அவர் என்னை கண்டுக்கவே இல்லை.

"மணி தெரியலை தாத்தா" இன்னும் கத்தி சொல்றேன். கம்பார்ட்மெண்ட்ல எல்லாரும் என்னையே பாக்குறங்க அந்த தாத்தாவ தவிர‌., எனக்கு ஒரு மாதிரி இருக்கு.

"தாத்தா எனக்கு மணி தெரியலை." நான் இன்னும் கத்தறேன். தாத்தாவ காணோம். எங்க போனார்?

சே! என்ன மனுஷன் இவரு. மணி கேட்டுட்டு காணாம போயிட்டாரு. ஏன் இந்த மனுஷங்க இப்படி இருக்காங்க. எப்போ பார்த்தாலும் டைம் டைம்னு அது பின்னாடியே ஓடிட்டு இருக்காங்க. நான் மட்டும் என்னவாம். 9 மணிக்கு ஸ்கூல் போகனும். 1 மணிக்கு சாப்பிடனும். 5 மணிக்கு விளையாட ஆரம்பிக்கணும். 9 மணிக்கு அப்பாட்ட அடி வாங்கனும். சே இது என்ன ஜெயிலா? ஒரு வேளை எல்லா பயல்களும் ஜெயில் வாழ்க்கை தான் வாழறங்களோ? அப்போ எல்லாருமே கடிகார அடிமைகள் தானா?

உலகத்துல இருக்கற எல்லா கடிகாரமும் ஒரு நாள் காணாம போயிடனும். இரவு பகல் வித்தியாசம் கூட தெரியக்கூடாது. ஆமா அது தான் சரி. இப்பவே அப்படி பண்ணிடுவோம். இப்போ எப்படி வாழறாங்கனு பார்ப்போம்.

ஹையா, அங்க பாரு எந்த கடிகாரமும் இல்லை உலகத்துல. இருட்டா இருக்கு. ஆனா சூரியன் மட்டும் தெரியுது. அந்த ஒத்தை கால் தாத்தா மாதிரியே எல்லாரும் மணி என்ன மணி என்னனு கேட்கறாங்க. யாருக்குமே தெரியலை. ஒரே ஜாலி. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். நினைக்கும் போது பெருமையா இருக்கு.

அப்படியே ஸ்கூல் பக்கம் போனா, அங்க யாருக்கும் எப்போ ஸ்கூல் ஆரம்பிக்க, முடிக்கனு தெரியலை. பசங்க தோணுறப்போ வர்றாங்க, தோணுறப்போ போறாங்க. ஒரே குழப்பமா இருக்கு எல்லா இடத்துலையும். நம்ம எதிர் வீடு கணேஷ் அண்ணன் பசிக்கோ இல்லையோ டாண்ணு காலைல 8 மணி, மதியம் 1 மணி, நைட் 8 மணிக்கு சாப்பிட்டுருவாரு. அவருக்கு இப்போ எப்போ சாப்பிடனே தெரியலை. பசிக்கு சாப்பிடாம மணிக்கு சாப்பிட்ட இப்படிதான்.

அப்பா இனி சாயந்திரம் மட்டும் இல்லை. தோணுறப்போலாம் குடிக்க போயிடும். சும்மாவே நேரம் காலம் தெரியாம குடிப்பாரு, இப்போ என்ன பண்ண போறாரோ. ஆமா நான் தினமும் நைட் 9 மணிக்கு அடி வாங்குவேன். இப்போ என்னாகும்? அம்மா இனிமேல் சோர்ந்து போற வரைக்கும் வேலை பார்க்கும். எதிர்ல முத்து லெட்சுமி வர்றா. என் கிளாஸ் தான். தினமும் சாயந்திரம் ஆனா பூ வச்சிட்டு வாசல்ல அகல்விளக்கு வச்சிட்டு போவா. இப்போ பூவும் இல்ல விளக்கும் இல்ல. ஆனாலும் அழகாத்தான் இருக்கா.

ஐயோ ஒருவேளை இது நிஜம் ஆகிட்டோ? அடிக்கடி மாரிமுத்துக்கும் எனக்கும் இந்த சந்தேகம் வரும். அப்போலாம் அப்பாட்ட போய் பேசுவேன். அப்பா என்னை கொஞ்சினா அது கனவு, அடிச்சா அது நனவு. ஆனா பக்கத்துல அப்பாவ காணோமே.

கலைஞர் டிவி ஓடிட்டு இருக்கு எங்கயோ. டிவில லாம் ஒரே பரபரப்பு. இனிமே நாள், கிழமை, வாரம், வருஷம் எதுவும் கிடையாது. தூக்கம் வரும்போது தூங்கலாம். பசிக்கும் போது சாப்பிடலாம். தோணும் போது ஸ்கூல் போகலாம். ஹைய்யா ஜாலி. ஊரே மணி பாக்காமா சோகமா இருக்கு. மணி பாக்காமா எவனாலயும் இருக்க முடியலை. எனக்கு மட்டும் புரியற மாதிரி ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டேன். இப்படி பண்ணதே நான் தானா...

ஆமா அப்போ நிஜமாவே காலம்னா என்ன? இந்த 60 நொடி, 24 மணி நேரம், சனி, ஞாயிறு,365 நாள் இதெல்லாம் நாமளா உருவாக்கிட்டது தான. அப்போ காலம்ங்கறது?? ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிபடி காலம் மாறிலி இல்ல (கான்ஸ்டன்ட் இல்ல) அப்படினு சொல்லிருக்கார். அப்போ  என்னோட 1 மணி நேரமும் மாரிமுத்தோட ஒரு மணி நேரமும் வேற வேறவா?  இப்படி பார்த்தா காலம்ங்கறது வெறும் சேஞ்ச் ஆப் ஸ்டேட் தான் இல்லையா. ஒரு பொருள் ஒரு நிலைல இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது தான் காலம்ங்கறது தேவைப்படுது. அப்போ இந்த பிரபஞ்சத்துல எதுவுமே மாறாம இருந்துட்டா, உலகமே ஒரு நாள் உறைஞ்சு போயி, பூமியும் சுத்தாமா, எந்த பொருளும் தன் நிலை மாறாம இருந்தா, காலத்துக்கு அர்த்தமே இல்லையா ?? அப்போ காலமே உறைஞ்சு போயிடும் இல்லையா? காலம் நின்னுடும் !!


"தம்பி, தம்பீ...." எதோ ஒரு குரல்.
"சே எங்க இருக்கேன் நான். என்னலாமோ யோசிச்சிட்டேன்."
மறுபடியும் அதே குரல் "தம்பி"
அந்த ஒத்தை கால் தாத்தா தான் கூப்பிடறாரு.
"தம்பி எல்லா கடிகாரத்தையும் திருப்பு கொடுத்திருப்பா. மக்கள் பாவம்."
"போ தாத்தா. இவங்க எல்லாம் மக்கள் இல்லை. கடிகார அடிமைகள். நான் இவங்களை விடுவிக்க வந்தவன்."
"தம்பி இருட்டு பகல் கூட தெரியலை. தயவு செஞ்சு எல்லாத்தையும் மாத்திடுப்பா. ரொம்ப நாளா இப்படித்தான் இருக்கோம்."
"நாளா???" எனக்கு ஒரே சிரிப்பாகா வந்தது." தாத்தா இனிமேல் நொடி, நாள், வாரம்னு எதுவும் கிடையாது. யாருக்கும் பொறந்த நாளும் இல்லை, இறந்த நாளும் இல்லை. பகலிரவு கிடையாது. இந்த பூமியில நாமளும் ஒரு ஜீவ ராசி. அவ்வளோ தான். இது தான் உண்மையான வாழ்க்கை. இதுவரை நீங்க வாழ்ந்தது போலி வாழ்க்கை. போய் என்ஜாய் பண்ணு தாத்தா"

"தம்பி நீ கனவுல தான் எல்லாத்தையும் மாத்தின. ஆனா அது எல்லாமே இப்போ நிஜம் ஆகிடுச்சு."

"என்ன சொல்றீங்க தாத்தா? நான் கனவு கண்டுட்டு இருக்கேன்.. நீங்க , நான் எல்லாம் கனவு தான். அதோ பாருங்க மாரிமுத்து கூட பாய்ல படுத்து இருக்கான்" என்று கையை நீட்டிய இடத்தில் மாரிமுத்து இல்லை

"தம்பி புரிஞ்சிக்கோ, இது நிஜம். தயவு செஞ்சு எதாவது பண்ணி எல்லாத்தையும் பழையபடியே மாத்திடு."

இருங்க , அதோ அப்பா வர்றாரு, அவர்ட்ட பேசி நிரூபிக்கிறேன் இது கனவுனு. அப்பா வழக்கம் போல இன்னைக்கும் குடித்து இருந்தார். அப்பா என்னிடம் வந்து எதுவுமே பேசவில்லை. அடி அடியென்று அடிக்க ஆரம்பித்தார். ஆனால் இன்று சுத்தமாக வலியே இல்லை. அழ கூட இல்லை நான். இது கனவா இல்லை நிஜமா?


பின்குறிப்பு : காலம் பற்றிய இந்த பதிவை (http://myscienceacademy.org/2013/01/14/is-time-disappearing-from-the-universe/) படித்துவிட்டு, ஒரு பின்னிரவுப் பொழுதில் நட்சத்திரங்களின் அடியில் படுத்து யோசித்த பொழுது தோன்றிய கதை. படித்து பின்னூட்டம் அளித்தால் மகிழ்வேன்