ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கடிகார அடிமைகள்


சாயந்திர நேரம், வெயில் அவ்வளவா இல்ல. சொல்ல முடியாது, மழை கூட பெய்யலாம். இப்போ எலக்ட்ரிக் டிரெயின்ல போனா எப்படி இருக்கும்? பின்னாடி திரும்பி பார்த்தா தண்டவாளம். நினைச்ச மாதிரியியே ஒரு டிரெயின் வருது. கூட்டமே இல்ல. கம்பி பிடிச்சு தொங்கிட்டே போகலாம். காத்து அடிக்கும் போது தலைமுடி ஆடும். ஜாலியா இருக்கும். அப்படியே பீச் ஸ்டேஷன் வரைக்கும் போகலாம். ஒரு வேடிக்கை பாருங்க, அந்த ஸ்டேஷனுக்கு பக்கத்துல பீச்சே கிடையாது, ஆனா அந்த ஸ்டேஷனுக்கு பேர் பீச் ஸ்டேஷன். மின்சார வாரியம் மாதிரி.  ஊருக்கு புதுசா வர்றவங்க நிறைய பேர் ஏமாந்துருவாங்க. இதோ மழை பெய்யற மாதிரி இருக்கு. இருட்டி கிடக்கு. நல்லா காத்து அடிக்குது.

நான் யாருன்னு கேட்கறீங்களா? இதோ இந்த பாய்ல தூங்கிட்டு இருக்கானே மாரிமுத்து. 8த் படிக்கிறான் அவனோட கனவு நான். அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். சமயத்துல நான் தான் மாரிமுத்தோனு எனக்கே சந்தேகம் வரும்.

"தம்பி மணி எத்தனை?" யாரோ ஒரு பெரியவர் கேட்கிறார்.

காலைல ஸ்கூலுக்கு போகும்போது ரோட்டுல நின்னுகிட்டு இருந்த ஒத்தைக்கால் தாத்தா மாதிரியே இருக்கார். இவர் எப்படி இங்க??

" மணி தெரியலை தாத்தா." கத்தி சொல்றேன். ஆனா அவர் என்னை கண்டுக்கவே இல்லை.

"மணி தெரியலை தாத்தா" இன்னும் கத்தி சொல்றேன். கம்பார்ட்மெண்ட்ல எல்லாரும் என்னையே பாக்குறங்க அந்த தாத்தாவ தவிர‌., எனக்கு ஒரு மாதிரி இருக்கு.

"தாத்தா எனக்கு மணி தெரியலை." நான் இன்னும் கத்தறேன். தாத்தாவ காணோம். எங்க போனார்?

சே! என்ன மனுஷன் இவரு. மணி கேட்டுட்டு காணாம போயிட்டாரு. ஏன் இந்த மனுஷங்க இப்படி இருக்காங்க. எப்போ பார்த்தாலும் டைம் டைம்னு அது பின்னாடியே ஓடிட்டு இருக்காங்க. நான் மட்டும் என்னவாம். 9 மணிக்கு ஸ்கூல் போகனும். 1 மணிக்கு சாப்பிடனும். 5 மணிக்கு விளையாட ஆரம்பிக்கணும். 9 மணிக்கு அப்பாட்ட அடி வாங்கனும். சே இது என்ன ஜெயிலா? ஒரு வேளை எல்லா பயல்களும் ஜெயில் வாழ்க்கை தான் வாழறங்களோ? அப்போ எல்லாருமே கடிகார அடிமைகள் தானா?

உலகத்துல இருக்கற எல்லா கடிகாரமும் ஒரு நாள் காணாம போயிடனும். இரவு பகல் வித்தியாசம் கூட தெரியக்கூடாது. ஆமா அது தான் சரி. இப்பவே அப்படி பண்ணிடுவோம். இப்போ எப்படி வாழறாங்கனு பார்ப்போம்.

ஹையா, அங்க பாரு எந்த கடிகாரமும் இல்லை உலகத்துல. இருட்டா இருக்கு. ஆனா சூரியன் மட்டும் தெரியுது. அந்த ஒத்தை கால் தாத்தா மாதிரியே எல்லாரும் மணி என்ன மணி என்னனு கேட்கறாங்க. யாருக்குமே தெரியலை. ஒரே ஜாலி. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். நினைக்கும் போது பெருமையா இருக்கு.

அப்படியே ஸ்கூல் பக்கம் போனா, அங்க யாருக்கும் எப்போ ஸ்கூல் ஆரம்பிக்க, முடிக்கனு தெரியலை. பசங்க தோணுறப்போ வர்றாங்க, தோணுறப்போ போறாங்க. ஒரே குழப்பமா இருக்கு எல்லா இடத்துலையும். நம்ம எதிர் வீடு கணேஷ் அண்ணன் பசிக்கோ இல்லையோ டாண்ணு காலைல 8 மணி, மதியம் 1 மணி, நைட் 8 மணிக்கு சாப்பிட்டுருவாரு. அவருக்கு இப்போ எப்போ சாப்பிடனே தெரியலை. பசிக்கு சாப்பிடாம மணிக்கு சாப்பிட்ட இப்படிதான்.

அப்பா இனி சாயந்திரம் மட்டும் இல்லை. தோணுறப்போலாம் குடிக்க போயிடும். சும்மாவே நேரம் காலம் தெரியாம குடிப்பாரு, இப்போ என்ன பண்ண போறாரோ. ஆமா நான் தினமும் நைட் 9 மணிக்கு அடி வாங்குவேன். இப்போ என்னாகும்? அம்மா இனிமேல் சோர்ந்து போற வரைக்கும் வேலை பார்க்கும். எதிர்ல முத்து லெட்சுமி வர்றா. என் கிளாஸ் தான். தினமும் சாயந்திரம் ஆனா பூ வச்சிட்டு வாசல்ல அகல்விளக்கு வச்சிட்டு போவா. இப்போ பூவும் இல்ல விளக்கும் இல்ல. ஆனாலும் அழகாத்தான் இருக்கா.

ஐயோ ஒருவேளை இது நிஜம் ஆகிட்டோ? அடிக்கடி மாரிமுத்துக்கும் எனக்கும் இந்த சந்தேகம் வரும். அப்போலாம் அப்பாட்ட போய் பேசுவேன். அப்பா என்னை கொஞ்சினா அது கனவு, அடிச்சா அது நனவு. ஆனா பக்கத்துல அப்பாவ காணோமே.

கலைஞர் டிவி ஓடிட்டு இருக்கு எங்கயோ. டிவில லாம் ஒரே பரபரப்பு. இனிமே நாள், கிழமை, வாரம், வருஷம் எதுவும் கிடையாது. தூக்கம் வரும்போது தூங்கலாம். பசிக்கும் போது சாப்பிடலாம். தோணும் போது ஸ்கூல் போகலாம். ஹைய்யா ஜாலி. ஊரே மணி பாக்காமா சோகமா இருக்கு. மணி பாக்காமா எவனாலயும் இருக்க முடியலை. எனக்கு மட்டும் புரியற மாதிரி ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டேன். இப்படி பண்ணதே நான் தானா...

ஆமா அப்போ நிஜமாவே காலம்னா என்ன? இந்த 60 நொடி, 24 மணி நேரம், சனி, ஞாயிறு,365 நாள் இதெல்லாம் நாமளா உருவாக்கிட்டது தான. அப்போ காலம்ங்கறது?? ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிபடி காலம் மாறிலி இல்ல (கான்ஸ்டன்ட் இல்ல) அப்படினு சொல்லிருக்கார். அப்போ  என்னோட 1 மணி நேரமும் மாரிமுத்தோட ஒரு மணி நேரமும் வேற வேறவா?  இப்படி பார்த்தா காலம்ங்கறது வெறும் சேஞ்ச் ஆப் ஸ்டேட் தான் இல்லையா. ஒரு பொருள் ஒரு நிலைல இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது தான் காலம்ங்கறது தேவைப்படுது. அப்போ இந்த பிரபஞ்சத்துல எதுவுமே மாறாம இருந்துட்டா, உலகமே ஒரு நாள் உறைஞ்சு போயி, பூமியும் சுத்தாமா, எந்த பொருளும் தன் நிலை மாறாம இருந்தா, காலத்துக்கு அர்த்தமே இல்லையா ?? அப்போ காலமே உறைஞ்சு போயிடும் இல்லையா? காலம் நின்னுடும் !!


"தம்பி, தம்பீ...." எதோ ஒரு குரல்.
"சே எங்க இருக்கேன் நான். என்னலாமோ யோசிச்சிட்டேன்."
மறுபடியும் அதே குரல் "தம்பி"
அந்த ஒத்தை கால் தாத்தா தான் கூப்பிடறாரு.
"தம்பி எல்லா கடிகாரத்தையும் திருப்பு கொடுத்திருப்பா. மக்கள் பாவம்."
"போ தாத்தா. இவங்க எல்லாம் மக்கள் இல்லை. கடிகார அடிமைகள். நான் இவங்களை விடுவிக்க வந்தவன்."
"தம்பி இருட்டு பகல் கூட தெரியலை. தயவு செஞ்சு எல்லாத்தையும் மாத்திடுப்பா. ரொம்ப நாளா இப்படித்தான் இருக்கோம்."
"நாளா???" எனக்கு ஒரே சிரிப்பாகா வந்தது." தாத்தா இனிமேல் நொடி, நாள், வாரம்னு எதுவும் கிடையாது. யாருக்கும் பொறந்த நாளும் இல்லை, இறந்த நாளும் இல்லை. பகலிரவு கிடையாது. இந்த பூமியில நாமளும் ஒரு ஜீவ ராசி. அவ்வளோ தான். இது தான் உண்மையான வாழ்க்கை. இதுவரை நீங்க வாழ்ந்தது போலி வாழ்க்கை. போய் என்ஜாய் பண்ணு தாத்தா"

"தம்பி நீ கனவுல தான் எல்லாத்தையும் மாத்தின. ஆனா அது எல்லாமே இப்போ நிஜம் ஆகிடுச்சு."

"என்ன சொல்றீங்க தாத்தா? நான் கனவு கண்டுட்டு இருக்கேன்.. நீங்க , நான் எல்லாம் கனவு தான். அதோ பாருங்க மாரிமுத்து கூட பாய்ல படுத்து இருக்கான்" என்று கையை நீட்டிய இடத்தில் மாரிமுத்து இல்லை

"தம்பி புரிஞ்சிக்கோ, இது நிஜம். தயவு செஞ்சு எதாவது பண்ணி எல்லாத்தையும் பழையபடியே மாத்திடு."

இருங்க , அதோ அப்பா வர்றாரு, அவர்ட்ட பேசி நிரூபிக்கிறேன் இது கனவுனு. அப்பா வழக்கம் போல இன்னைக்கும் குடித்து இருந்தார். அப்பா என்னிடம் வந்து எதுவுமே பேசவில்லை. அடி அடியென்று அடிக்க ஆரம்பித்தார். ஆனால் இன்று சுத்தமாக வலியே இல்லை. அழ கூட இல்லை நான். இது கனவா இல்லை நிஜமா?


பின்குறிப்பு : காலம் பற்றிய இந்த பதிவை (http://myscienceacademy.org/2013/01/14/is-time-disappearing-from-the-universe/) படித்துவிட்டு, ஒரு பின்னிரவுப் பொழுதில் நட்சத்திரங்களின் அடியில் படுத்து யோசித்த பொழுது தோன்றிய கதை. படித்து பின்னூட்டம் அளித்தால் மகிழ்வேன்