இன்றோடு அப்பா எங்களை விட்டுப் பிரிந்து 3 மாதங்கள் ஓடி விட்டன. அம்மா இறக்கும் வரை அப்பா நன்றாக தான் இருந்தார். அதன் பின்பு மிகவும் தளர்ந்து விட்டார். வயதும் காரணமாய் இருக்கலாம். 72 வயதில் துணையை இழப்பது கடினம் தான். அம்மா இறக்கும் வரை, தன் அறையிலேயே எப்போதும் ஒரு நீல நிற ட்ரங் பெட்டி வைத்திருப்பாள். அதில் என்ன இருக்கிறது என்று இதுவரை எங்களுக்கு தெரிந்ததில்லை. அம்மாவிற்கு பிறகு அப்பா அந்த பெட்டியை தன்னோடு வைத்துக் கொண்டார். அப்பாவின் நினைவுகளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விற்கவோ அல்லது குப்பையில் போட அப்புறப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அப்போது தான் கண்ணில் பட்டது அந்த நீல நிற ட்ரங் பெட்டி. உள்ளே சில கடிதங்கள் மட்டும் இருந்தன. ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்பா, அம்மாவிற்கு எப்போதோ எழுதியது.
கண்ணம்மா,
இன்றோடு உன்னைப் பிரிந்து 3 வாரங்கள் ஆகிவிட்டன. ஒளியின் வேகத்தில் சென்றால் காலம் நின்று விடும் என்கிறது அறிவியல். ஒளியின் வேகத்தில் செல்லும் உன் நினைவுகளாலோ என்னவோ, இந்த 3 வார காலம், எனக்கு பல யுகங்கள் கடந்தது போல் உள்ளது.
என்னை நீ வழியனுப்ப வந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. அப்பா, அம்மா, அண்ணன், மதினி, பெரியப்பா என் ஒவ்வொருவரிடமும் விடைபெற்று வந்தால் மிட்டாய்க்காக ஏங்கி நிற்கும் குழந்தை போல வரிசையின் கடைசியில் எனக்கு பிடித்த ஆடையில் நீ. அவ்வளவு தான், தாயைக் கண்ட குழந்தை போல சிலிர்த்துக் கொண்டது மனது. நிலவில்லா தெளிந்த இரவில் ஒளி உமிழும் ஒற்றை நட்சத்திரம் போல உன் நெற்றிப் பொட்டு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. இமைகளுக்குள் கண்ணீரை விடுத்து உன்னை கண்ட கணத்தினை பதிவு செய்து கொண்டேன். அன்பினைக் காட்டும் கருவி இல்லை என உலகம் ஏமாந்து கொண்டிருக்கிறது. உன் விழியோரத்தில் வழிந்த இரு சொட்டு கண்ணீரை அவர்கள் கண்டதில்லை போலும்.
நாம் இருவரும் முதன் முதலில் வெளியே சென்றது நினைவு இருக்கிறதா ? மிகச்சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய ஞாயிறு அது. உன்னால் நினைவு பெட்டகத்தில் தனி இடம் பிடித்துக் கொண்டது. சுற்றி இருக்கும் உலகமெல்லாம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, நீயும் நானும் உறைந்து போன தருணங்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டது போல இருந்தது. தனியாக சாப்பிட்டால் வயிறு மட்டும் நிறையும். உன்னுடன் சேர்ந்து சாப்பிடும் போதெல்லாம் மனதும் சேர்ந்து நிறைகிறது. ஒரு சொட்டு அமிர்தம் கலந்தாலும் ஒட்டு மொத்த உணவும் அமிர்தம் ஆகி விடுமாம். அது போல மிகசாதாரண தருணங்களைக் கூட அசாதாரண தருணங்களாக மாற்றி விடுகிறது உன்னுடன் அருந்தும் தேநீரும் உன் வெட்கம் கலந்த புன்னகையும். உன்னோடு குடிக்கும் போது மட்டுமே தேநீர் குடிப்பது அனுபவமாகி விடுகிறது. தேநீரா இல்லை தேன் நீரா என குழம்பி விடுகிறது மனம். கடற்கரை ஓரத்தில் குடித்த தேநீர், பெருமழைக்காலம் ஒன்றில் வீட்டு முற்றத்தில் நீயும் நானும் அருந்திய தேநீர், யதேச்சையாக சாலை ஓரத்தில் சந்தித்த பொழுது அருந்திய தேநீர்.. இன்னும் இன்னும்…. உலகில் உள்ள எல்லா வகை தேநீரையும் ருசி பார்க்கவாது நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும்.
அன்பை செலவழித்து நீ எனக்கு கொடுத்திருக்கும் பிறந்த நாள் பரிசு எல்லாம் என்னைச் சுற்றிக் கிடக்க, கண நேரம் ஊமை ஆனது போல் உணர்வு. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். நிஜம் தான்? ஒற்றைப் படகில், வானம் பருகி கிடக்கும் கடலின் நடுவில் இருப்பதைப் போல உன் அன்பெனும் கடலின் நடுவில் நான். திரும்பி வர மனமில்லை. வரவும் தேவையில்லை. இங்கே தொலைவது தான் சுகம். எனக்கு எழுதும் பேனாவில் மை ஊற்றி நீ எழுதுவதில்லை. அன்பு ஊற்றி தானே எழுதுகிறாய்? நீ பரிசாக எனக்கு கொடுத்த பொருள் ஒவ்வொன்றும் ஒரு அட்சய பாத்திரம். அள்ள அள்ளக் குறையாமல் உன் அன்பை பெற்றுக் கொண்டே இருக்கிறேன். காலடியில் இருக்கும் மணலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் அலைகள் போல, காலம் என்னிடமிருந்து எல்லா நினைவுகளை எடுத்துச் சென்றாலும் உன் அன்பின் நினைவலைகள் எப்போதும் என் மனதின் அடியில் பத்திரமாக இருக்கும்.
கண்ணம்மாவைப் பற்றி கவிதைகள் எழுதலாம். கண்ணம்மாவே கவிதைகள் எழுதினால், அதுவும் எனக்காக… அதை விட இன்பம் வேறேதும் இல்லை. பாத்திரத்தின் குளிர்ச்சியை வெளியில் காட்டும் நீர்த்திவலைகள் போல, உன் அன்பை உன் எழுத்துக்கள் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. உன் கடிதங்களையும் கவிதைகளையும் வாசிக்கும் பொழுதெல்லாம், நிகழ்காலத்தில் துளையிட்டு, உன் நினைவுகள் இருக்கும் கடந்தகாலமும், உனக்கான என் கனவுகள் இருக்கும் எதிர்காலமும் சந்திக்கும் வெளியில் மிதப்பது போன்ற உணர்வு. தொடர்ந்து எழுது நமக்காக. ‘கண்ணம்மா பாரதி’ என்று உன் கனவுகள் அனைத்தையும் சுருக்கி கையெழுத்தென இரண்டு பெயர்களில் அடைத்து விட்டாய். கனவுகளின் கதிர்வீச்சில் மீளமுடியாமல் சொக்கிக் கிடக்கிறேன் நான்.
அன்பை அளக்க அலகுகள் இல்லை. ஆனால் அதன் வீரியத்தை உணர்த்த கடிதங்கள் போதுமானதாய் இருக்கிறது. இந்த கடிதமும் அப்படித்தான். என் கண்ணம்மாவுக்காக
கண்ணம்மாவின் துணைவன்,
பாரதி
கடிதத்தின் பாரம் தாங்காமால் இதயம் கசிந்த துளிகள் கண்ணில் வெளிப்பட்டது. அப்பா நல்ல மனிதர் மட்டும் இல்லை, நல்ல ரசிகரும் கூட. முதல் முறையாக கதறி அழுதேன் அப்பா இறந்ததற்காக…………..