புதன், 28 டிசம்பர், 2011

எல்லாம் 'என்' நேரம் பகுதி - 2


இதுவரை..
வெறுமையாக சென்று கொண்டிருந்த என் வாழ்வில் ஒரு நாள் என் விதி புத்தகம் என் கையில் கிடைக்கிறது.

இனி...

எனது பிறந்த தேதியில் இருந்து ஆரம்பித்தது. ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினேன். இதுவரை என் வாழ்வில் நடந்த எல்லா சம்பவங்களும் தேதி மாறாமல் இருந்தது. 2 ஆம் வகுப்பில் மிட்டாய் பாட்டியை ஏமாற்றி நான் திருடிய‌ சுத்து மிட்டாய், 5 ஆம் வகுப்பு அங்கயற்கண்ணி முதல் கல்லூரியில் நான் சைட் அடித்த எனது சீனியர் ப்ரீத்தி வரை எல்லா விஷயங்களும் இருந்தது. எல்லோருக்கும் உண்மையான குணம் என்று ஒன்று இருக்கும். எனக்குத் தெரிந்து அந்த குணத்தை மாறாமல் அப்படியே வெளிக்காட்டியவர் என்று எவரும் இல்லை. எல்லோருமே புற வேஷங்கள் போடுபவர்கள் தான். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அந்த குணத்தை மட்டுமே புற உலகிற்கு காட்டுவோம். இதில் மனித தவறு எதுவும் இல்லை. ஏனென்றால் சமுதாய‌ம் எதை எதிர்பார்க்கிறதோ அந்த குணத்தை தான் நாம் காட்ட விரும்புகிறோம். நானும் மேற்சொன்ன விதிக்கு விதிவிலக்கல்ல. நான் இதுவரை எனக்கு மட்டுமே காட்டிக் கொண்டிருந்த உண்மையான் குணம் அந்த புத்தகத்தில் விலாவாரியாக எழுதப்பட்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. ஏனென்றால் உண்மை எப்போதும் கசக்கும்.

இப்படியே பல பக்கங்களைத் திருப்பினேன். லக்கிமேன், அறை எண் 305 இல் கடவுள், ப்ரூஸ் ஆல்மைட்டி என்று பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அதைப் போன்ற சம்பவம் என் வாழ்விலும் நடக்கும் என்று வகுப்பில் தூங்கும் போது வரும் கனவில் கூட கண்டதில்லை. சரி, எந்தவித முட்டாள்தனமான காரியங்களையும் பண்ண வேண்டாம். நம்முடைய வருங்காலம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று வேகவேகமாக ஜூலை 2011 க்கு புத்தகத்தைத் திருப்பினேன். ஆஆஆஆஆஆ!!!!! உலகில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும் என் வாயில் வந்தது.

ஜூலை 12 2011 உடன் விதி முற்றிற்று.

என்று பெரியதாக எழுதி இருந்தது.. பயத்துடன் அடுத்தடுத்த பக்கங்களைத் திருப்பினேன். அத்தனையும் வெற்று காகிதங்கள். அந்த பளபளப்பு கூட இல்லை. இன்று தான் ஜூலை 12, இன்றுடன் என் விதி முடிந்தா?? சாகப் போகிறேனா?? எனக்கு அழுகை வந்தது. இதுநாள் வரை கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. சிறுவயதில் தசரா அப்போது தொடர்ந்து 10 நாட்களுக்கு பக்கத்தில் உள்ள கோவிலில் சுண்டல் தருவார்கள். அதற்காக மட்டும் கோவிலுக்குப் போயிருக்கிறேன். 4 ஆம் வகுப்பில் அரையாண்டு கணித தேர்வு விடைத்தாள் தரும் அன்று எப்படியாவது பாசாகிவிட்டால் உண்டியலில் 50 பைசா போடுகிறேன் என்று வேண்டி இருந்தேன். அவ்வளவு தான் எனக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு. அந்த 50 பைசா இன்று வரை உண்டியலில் போடவில்லை. ஒருவேளை அதனால் தான் கடவுள் கோபமாகி என் உயிரைப் பறிக்கிறாறரோ என்று சந்தேகம் எழுந்தது, இல்லை இல்லை அவ்வளவு சீப்பானவர் இல்லை கடவுள் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன். இப்போது கடவுள் நம்பிக்கை அதிகம் ஆகியது. கடவுளே என்னைக் காப்பாற்று. இதுவரை நான் செய்த பாவங்களை மன்னித்து விடு, என் தவறை உணர்ந்து விட்டேன் என்று அழுதேன். இல்லை இல்லை உளறினேன். என்னைப் போலத் தான் எல்லோருமா? இறந்து விடுவோம் என்று தெரிந்து விட்டால் கடவுள் நம்பிக்கை வந்து விடுமா? செய்த பாவங்களை மறந்து நல்லவனாக மாறிவிடுவோமா? எனக்கு அந்த அவகாசம் கூட இல்லையே. மணியைப் பார்த்தேன், 10.45 காட்டியது. இன்னும் 1.15 மணி நேரம் தான் என் வாழ்க்கை. நினைக்க நினைக்க அழுகை மேலோங்கியது. இறப்பு என்று ஒன்று இருப்பதால் தான் உலகம் இன்னும் வாழ தகுதியாய் இருப்பதாகத் தோன்றியது. சாகும் நேரத்தில் மட்டும் ஏன் இத்தனை தத்துவங்கள் தோன்றுகிறது? எண்ணங்கள் இலக்கற்ற பட்டங்கள் போல எல்லா திசையிலும் பறந்தது

கூடாது, நான் வாழ வேண்டும். இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டும். சில மணி நேரம் முன் வரை வெறுமையாய் தோன்றிய என் வாழ்க்கை இப்போது மிகுந்த அர்த்தத்துடன் இருப்பதாய் தோன்றியது. வாழ வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. ஆசை இல்லை வெறி. வாழவேண்டும் என்ற வெறி. யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று தோன்றியது. இல்லை வேண்டாம். தன் கையே தனக்கு உதவி. யாரிடமாவது உதவி கேட்க போய் அவர்களே என் சாவுக்கு காரணமாகி விட்டால்??? வேண்டாம். விதியை மதியால் வெல்லலாம் என்று படித்ததுண்டு. ஆனால் மதிக்கு எங்கே போவது? அவன் சென்னையில் அல்லவா இருக்கிறான்? சாகும் நேரத்தில் கூட இந்த மொக்கைபோடும் பழக்கம் என்னை விட்டு போகவில்லை. நான் அப்படித்தான்.

மீண்டும் ஒரு முறை புத்தகத்தைத் திருப்பினேன். ஜூலை 12 2011  உடன் விதி முற்றிற்று என்று எழுதி இருந்ததைப் படித்தேன். எப்படி சாகப் போகிறேன் என்று எழுதி இருக்கிறதா என்று பார்த்தேன். சே! இல்லை. என்னைப் பற்றி எல்லாம் இருக்கிற புத்தகத்தில் இது மட்டும் இல்லை. ஒரு வேளை இந்த புத்தகத்தை அப்படித்தான் எழுதி இருப்பார்களோ?
மணி இப்பொழுது 11. இன்னும் 1 மணி நேரம் தான் என் வாழ்க்கை. எனது அழுகை இன்னும் அடங்கவில்லை. சாகுற நாள் தெரிஞ்சு போச்சுனா வாழுற நாள் நரகம் ஆயிடும் என்று தலைவர் சொன்னது எவ்வளவு உண்மை! அழுகையைக் கட்டுப்படுத்தினேன். கண்டிப்பாக இந்த விதியை என்னால் வெல்ல முடியும். எனது சாவு இன்று இல்லை என்று எனக்கு நானே தைரியம் அளித்தேன். ஒரு பக்க மனது அந்த நம்பிக்கையை ஏற்க மறுத்தது. அதை நான் கண்டுகொள்ளவில்லை. என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். தூக்கு தண்டனைக் கைதியைத் தவிர வேறு எவருக்கும் அவர்களது இறக்கும் நாள் தெரிந்ததில்லை இதுவரை உலகத்தில். ஆனால் எனக்கு தெரிகிறது இப்போது.

தண்ணீர் தாகம் எடுத்தது. அழுது அழுது நா வறண்டு போய் இருந்தது. தண்ணீர் குடிக்கலாம் என்று எழுந்தேன். வேண்டாம். தண்ணீரில் ஒரு வேளை விஷம் இருந்தால்?? காலையில் அதே தண்ணீரைக் குடித்து விட்டு தான் ஆபிஸிற்குப் போனேன். ஒன்றும் ஆகவில்லையே?? இருந்தாலும் வேண்டாம். சாவின் விளிம்பில் இருப்பவனுக்கு எந்த லாஜிக்கும் உறைக்காது. அது போலத் தான் நானும்.ஒருவேளை பூகம்பம் வந்தால்??? அப்படி யோசித்த உடனே அருகில் இருந்த டேபிளுக்கு அடியில் சென்று புத்தகத்துடன் உட்கார்ந்து கொண்டேன். டேபிளுக்கு அடியில் ஏதாவது பூச்சி பாம்பு கடித்து இறந்தால்?? உடனே அருகில் இருந்த கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டேன்.. கடவுளுக்குக் கூட இப்படியெல்லாம் ஒரு மனிதனை சாகடிக்க முடியுமா என்று தோன்றி இருக்காது. அத்தனை விதங்களில் நான் சாவதை நானே கற்பனை செய்து பார்த்தேன். மணி இப்போழுது 11.30. இன்னும் அரை மணி நேரம் தான். எனது வியர்வை அந்த புத்தகத்தை நனைத்திருந்தது. ஆனாலும் அதன் பளபளப்பு போக வில்லை. இன்னும் அரை மணி நேரத்திற்கு சாவு என்னை அண்டா விட்டால், உலகில் சாவை வென்ற முதல் ஆள் நான் தான். இப்படி நினைக்க மனதில் ஒரு ஓரம் நம்பிக்கை துளிர்த்தது. Final Destination படத்தின் அனைத்து பாகங்களும் பார்த்திருக்கிறேன். அதில் தான் விதம் விதமாக மக்கள் சாவார்கள். அதில் உள்ள எந்த முறையும் எனக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். பயத்தில் வயிறு கலக்கியது. இருப்பிடத்தை விட்டு எழ மனமில்லை. அடக்கிக் கொண்டேன். நேரம் கடந்தது.

11.56
11.57
11.58
11.59

திடீரென்று ஒட்டு மொத்த உடலும் குலுங்கியது. கண்கள் இருண்டது. மூச்சு தடைப்பட்டது. இது தான் சாவோ என்று தோன்றியது.
12.00

மூச்சு சீராக இயங்க ஆரம்பித்தது. என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. செல்போனில் தேதி பார்த்தேன். ஜூலை 13 என்று காட்டியது. எனக்கு சந்தோஷத்தில் கத்த வேண்டும் போலத் தோன்றியது. இல்லை வேண்டாம். எனது கடிகாரம் ஒரு வேளை வேகமாக ஓடி இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் பொறுப்போம் எனத் தோன்றியது.குளியலறையில் மூடாத டேப் சொட்டிக் கொண்டிருந்த சத்தம் மட்டுமே கேட்டது. 12.05 காட்டியது கடிகாரம். இன்னும் கொஞ்சம் பொறுக்கலாம் என்று தோன்றியது.
12.30
1.00
1.30
2.00 மணி ஆகியது. ஒவ்வொரு நிமிடம் கழியக் கழிய என் பயம் சந்தோஷமாக மாறிக் கொண்டிருந்தது. நான் மரணத்தை வென்று விட்டதாகவே தோன்றியது. ஆம் வென்று விட்டேன். உலகத்தில் மரணத்தை வென்ற முதல் மனிதன் நான் தான்.

-தொடரும்

பின்குறிப்பு : அடுத்த பாகத்துடன் கதை முற்றும்.

திங்கள், 19 டிசம்பர், 2011

எல்லாம் 'என்' நேரம் பகுதி - 1

பெங்களூருவிற்கு வந்து 6 மாதம் ஆயிற்று, அதற்குள் வாழ்க்கையே தீர்ந்துவிட்டதோ என எண்ணத் தோன்றியது எனக்கு. தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை. பின்பு சாப்பாடு, தூக்கம். சனி  ஞாயிறுகளிலும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. நீண்ட தூக்கம், 1 வேளை மூக்கு பிடிக்க சாப்பாடு, பின்பு தூக்கம், இப்படியே பொழுது கழியும். கல்லூரி வளாகத் தேர்வில், பெங்களூர் நிறுவனத்திற்கு தேர்வான போது நண்பர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, "மச்சி, பெங்களூர்ல வேலைடா உனக்கு, கொடுத்து வெச்சவன்டா நீ, அது பெங்களூர் இல்லைடா, பெண்களூர். இந்தியால எல்லா ஸ்டேட்ல இருக்கிற அழகான பொண்ணுங்க எல்லாம் அங்க தான்டா இருப்பாங்க, அங்கயாவது போய் எதாவது ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிடுடா".அங்கயாவது என்று அவர்கள் சொன்னதுக்கு அர்த்தம் இருக்கிறது, கல்லூரியில் கடலை போடாத கண்ணியவான்களுள் நானும் ஒருவன். நானாக எதையும் வேண்டாம் என்று சொல்லவில்லை, எனக்கு அப்படித்தான் அமைந்தது. நண்பர்கள் பெங்களூரைப் பற்றி சொன்னது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் பெங்களூர் வந்து பார்த்த பின்பு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், நான் எதிர்பார்ப்பதோ, சிவாஜி படத்தில் ரஜினி தேடுவதைப் போன்ற‌ ஒரு மங்களாவை, ஆனால் பெங்களூரில் சல்லடை போட்டுத் தேடினாலும் அந்த மாதிரி ஒரு பெண் கிடைக்காது. சரி நமக்கெல்லாம் வீட்டில் பார்த்து வைத்தா தான் கல்யாணம், இந்த லவ்வெல்லாம் ஒத்து வராது என சமாதானப் படுத்திக்கொண்டேன். நாட்டில் இருக்கும் பெரும்பாலான பேச்சிலர்கள் இப்படித்தான். கிடைத்தால் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள், ஆனால் அவர்களுக்கென்று யாரும் கிடைப்பதில்லை, அது தான் உண்மை.

பெங்களூரில் மறக்க முடியாத சம்பவங்கள் பல நடந்தது எனக்கு,  என் நண்பர்கள் வட்டத்தில் ஓரளவுக்கு ஹிந்தி பேசத் தெரிந்தது நான் மட்டும் தான், ஒருமுறை நண்பர்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ப்ளாட்பாரக் கடையில் ஏதோ வாங்க வேண்டி இருந்தது, என்ன பொருள் என்று சரியாக ஞாபகம் இல்லை. நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன், "மச்சி உனக்கு தான் ஹிந்தி நல்லா பேசத் தெரியுமே, அதை பேரம் பேசி வாங்கிக்கொடுடா" என்றான்.மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள். எனக்குப் பெருமை தாங்கவில்லை. கண்களில் பெருமை பொங்க கடைக்காரரிடம், "ஏ கித்னா ஹை?" என்றேன். அவர், "தம்பி அது இருபது ரூவாப்பா" என்றார், சுற்றி இருந்த நண்பர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.கடைக்காரருக்கோ ஒன்றும் புரியவில்லை. எனக்கு பெருத்த அவமானம் ஆயிற்று. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று தோன்ற ஆரம்பித்தது. உலகில் உள்ள எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் தங்களையே கேட்டுக்கொள்ளும் கேள்வி, "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?". யாரும் இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவில்லை இதுவரை. வாழ்க்கை வெறுமையானால் தத்துவங்கள் நிரம்பி வழியும். எனக்கும் அப்படித்தான். வாழ்க்கை வெறுமை ஆகிவிட்டது. ஆங்கிலப்படங்களில் ஸோம்பி என்று சொல்வார்களே அதைப் போன்று, பணம் பணம் என்று எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, நானும் அந்த கூட்டத்தில் சேர்ந்து விட்டதாகத் தோன்றியது. 

அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது, ஜூலை 12, 2011 என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நாள். அன்று அவ்வளவாக வேலை இல்லை, இரவு 8 மணி இருக்கும். வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். வீட்டின் அருகே ஓடும் சாக்கடைக்குப் பக்கத்தில் ஒரு குப்பை மேடு இருக்கும். எதேச்சையாக அதன் மீது என் பார்வை போனது. எதோ ஒரு பொருள் பள பள என்று மின்னியது. எதோ ஒரு குப்பை என்று எண்ணி வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை. ம்ணி 9.50 காட்டியது. ஏனோ என் மனது குப்பைமேட்டில் இருக்கும் பள பள பொருளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. சரி என்னவென்று பார்க்கலாம் என்று எழுந்து கைலியை சரி செய்துகொண்டு, அந்த குப்பை மேட்டை நெருங்கினேன். நல்ல வேளை இன்று தெருவில் நாய்கள் தொந்தரவில்லை. இல்லை என்றால் அவை எப்பொழுதும் இந்த குப்பை மேட்டை சுற்றிக்கொண்டே தான் இருக்கும். அந்த பொருள் இன்னும் மின்னியது. யார் கண்ணுக்கும் படாத பொருள் ஏன் என் கண்ணில் பட்டது என எண்ணிக் கொண்டே அதன் அருகில் சென்றேன். அது பொருள் இல்லை, அது ஒரு புத்தகம்.குப்பைமேட்டில் இருந்தாலும் புத்தம் புதிதாக இருந்தது. கையில் எடுத்தவுடன் இன்னும் மின்னியது. குப்பைமேட்டில் கையில் இப்படி ஒரு புத்தகத்தோடு இருந்தால் யாரேனும் சந்தேகப்படக் கூடும் என எண்ணி விரைவாக வீட்டிற்கு வந்தேன். நெஞ்சு படபடத்தது. புத்தகத்தின் முகப்பில் பெரியதாக விதி என்று எழுதி இருந்தது. 



புத்தகத்தைத் திறந்த உடனேயே அதன் வெளிச்சம், பள்ளத்தைக் கண்ட வெள்ளத்தைப் போல அறை முழுவது நிரப்பியது. நல்லவேளை ரூம்மேட் ஊருக்குப் போய்விட்டான். இல்லாவிட்டால், ஏன்டா லைட்டைப் போட்ட என்று இந்நேரம் புலம்ப ஆரம்பித்திருப்பான். உலகில் எல்லாருக்குமே இதைப்போல இரவில் லைட்டைப்போட்டால் தூக்கத்தில் புலம்பும் ரூம்மேட் இருப்பார்களோ என்று பல நாள் எண்ணியதுண்டு. ஆனால் இன்று என் கவனம் முழுதும் அந்த புத்தகத்தின் மீதே இருந்தது.  மூச்சை இழுத்துக்கொண்டு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். யாருமே படிக்காமல், ஆனாலும் வலுக்கட்டயாமாக எல்லா புத்தகத்திலும் இருக்கும் முன்னுரை, அணிந்துரை என்று எந்தப் பகுதிகளும் இந்தப் புத்தகத்தில் இல்லை. முதல் பக்கதிலேயே
 "மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை கணிக்கும் புத்தகம்" 
என்று எழுதி இருந்தது. அதனடியில் என் பெயர் எழுதி இருந்தது. ஆம், என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. அது என் பெயரே தான். ஒரு வித நடுக்கத்துடன் புத்தகத்தைத் திருப்ப ஆரம்பித்தேன்.......

 - தொடரும்

திங்கள், 3 ஜனவரி, 2011

த்ரிஷா போனா திவ்யா-(A naive attempt by a first time blogger)

விலைவாசி உயர்வு,2ஜி, வெங்காயம்,தக்காளி விலை எதை பற்றியும் கவலைபடாமல் அன்று நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தேன். திடீரென்று மெசேஜ் ஒலி என் செல்போனில். தூக்க கலக்கத்தில் மெசேஜை படித்துவிட்டு தூக்கத்தை தொடர்ந்தேன். 4 மணி நேரம் கழித்து ஒரு கால் பண்ணலாம் என போனை எடுத்த பொழுது,பேலன்ஸைக் காணோம், "அடபாவிகளா! கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச 100 ரூ பேலன்சை காணோம். பேலன்ஸ் இப்போ 0.00.கஷ்(ஸ்)டமர் கேர்க்கு கூப்பிட்டு விசாரிக்கலம் என்று அழைத்தேன். அப்பொழுது நிறைய க்ராஸ் டாக் வந்தது. அதில் சில உங்கள் பார்வைக்கு.

வட்ட செயலாளர் வண்டு முருகன்: ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் : தமிழகத்தில் பா.ம.க துணை இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது, தமிழகத்தின் அடுத்த சக்தி பா.ம.க‌

வட்ட செயலாளர் வண்டு முருகன்: இந்த ஊர் இன்னமுமா உங்களை நம்பிகிட்டு இருக்கு, அந்த வெங்காயமெல்லாம் இருக்கட்டும், முதல்ல நான் சொல்றத கெளுங்க‌

ராமதாஸ்: நான் யாரை கை காட்டுகிறேனோ அவர்தான் அடுத்த முதல்வர்


வண்டு முருகன்: அந்த கைய என் பக்கம் காண்பிக்கிறது, சரி வேணாம் உங்க பக்கம் காண்பிக்கிறது, அடச்சே உங்க கூட பேசி நான் சொல்ல வந்ததை மறக்க போறேன், முதல்ல நான் சொல்றத கேளுங்க‌


ராமதாஸ்: ஜப்பானில் ஜாக்கி சான் கூப்டாக, அண்டார்டிக்காவில் அமெரிக்க அதிபர் கூப்டாக ஆட்சி அமைக்க, ஆனால் தமிழ் மக்களின் நலனுக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க‌

வண்டு முருகன்: யோவ் உனக்கு இவளோதான் மரியாதை, நான் சொல்ல வர்றத கேளு

ராமதாஸ்: நாங்கள் தி.மு.க வுடன் கூட்டணியா, அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டணியா என்று நீங்கள் கேட்கலாம்

வண்டு முருகன்: நான் கேட்கவே இல்லையேயா

ராமதாஸ் : நீங்கள் கேட்கலாம், எங்களை விட சிறந்த கட்சி ஏதேனும் இருந்தால் எங்கள் கட்சியை கலைத்துவிட்டு அவர்களுடன் சேர தயார். இப்பொழுது புரிந்திருக்கும் நாங்கள் யாருடன் கூட்டணி என்று..

வண்டு முருகன்: விட்டா நீ பேசிக்கிட்டே இருப்ப,நான் சொல்றத கேளு, காமெடி பண்றது என் வேலை, அரசியல் பண்றது உன் வேலை, கொஞ்ச நாளா நீ அதிகமா காமெடி பண்றத பார்த்து சன் பிக்சர்ஸ் ல இருந்து கிளவுட் நைன் வரைக்கும் படத்துல காமெடி பண்றதுக்கு உன்ன புக் பண்றதா கேள்விப்பட்டேன், மரியாதையா என் பொழப்ப பார்க்க விடு...

ராமதாஸ் : 2016 ல் நாங்கள் ஆட்சியை பிடிப்பது உறுதி

வண்டு முருகன்: ரைட் டா, ஒரு முடிவோட தான்டா இருக்கீங்க, வரேன், நெக்ஸ்ட் டைம் மீட் பண்றேன்.

கால் முடிகிறது, ஆனால் அதற்குள் இன்னொரு கால் க்ராஸ் ஆகிறது.

ரிக்கி பாண்டிங் : ஐயோ பரமா! அவிங்கள போடனும் பரமா, எனக்கு சாவு பயத்தை காட்டிடாங்க பரமா

பரமன் : பொறுடா ரிக்கி!!

ரிக்கி பாண்டிங் : ஐயோ பரமா! இங்கிலாந்து கால்ல என்ன விழவச்சிடாங்க பரமா! அவிங்க டீமையே போடனும் பரமா!

பரமன்: சொன்னா கேளுடா, அதெல்லாம் இப்பொ முடியாதுடா

ரிக்கி பாண்டிங்: ஐயோ பரமா! முடியாதுடா, அவிங்கள போடனும்

பரமன் : ஒரே ஒரு வழி தான் இருக்கு, வேர்ல்டு கப் வருது, அதுல நெதர்லாந்து டீம் ஆடுது, இப்பொ இருக்கற இங்கிலாந்து டீம் பரம்பரைக்கும், நெதர்லாந்து டீம் பரம்பரைக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்த‌தா நம்ம சுப்பிரமணிய சுவாமியே சொல்லி இருக்கார், அதனால அவிங்க கூட ஒரு 15 மேட்ச் போட்டு மூச்சு திணற திணற அவிங்கள அடிக்கிறோம், நம்ம வெறியை தீத்துக்கறோம்!

ரிக்கி பாண்டிங்: ஐயோ பரமா!! அவிங்கள போட....(குரல் மங்குகிறது, பேக்கிரவுண்டில் பாட்டு சத்தம் அதிகரிக்கிறது)
வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி, தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி!!!

கால் முடிகிறது,அடுத்த க்ராஸ்டாக் கலைஞர் வீட்டுக்கு போகிறது

கலைஞரின் உதவியாளர் : சார் பத்திரிக்கைகாரங்க வந்திருகாங்க, அவங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சே ஆகனுமாம்,
அந்த 1.76 லட்சம் கோடி எங்கனு கேட்கிறாங்க?

கலைஞர் : அவங்கள உள்ள வரவிடாத, போன்லயே உனக்கு பதில் சொல்றேன், அத அவங்க கிட்ட சொல்லிடு,
(சற்று யோசித்துவிட்டு) "15 ரூ மதிப்புள்ள அரிசியை கழக அரசு 1 ரூ க்கு தருகிறது, 1000 மதிப்புள்ள இலவச தொலைக்காட்சியை இலவசமாக தருகிறது, குறைந்த விலையில் சரக்கு விற்பனை செய்கிறது, அதே போல் 2ஜி அலைகற்றையை மக்களின் நலன் கருதி குறைந்த விலைக்கு நல்ல நிறுவனங்களிடம் கொடுத்திருக்கிறது" அப்படினு சொல்லிடு

கலைஞரின் உதவியாளர் : சரிங்க சார்,( சிறிது நேரம் கழித்து லைனில் வருகிறார்) சார் சொன்னேன், ஒத்துக்க மாட்டேங்குறாங்க, அதெல்லாம் மக்கள் பணம் தான், அவங்களுக்கெ திருப்பி கொடுத்து ஏமாத்திறீங்களாம், அந்த 1.76 லட்சம் கோடி எங்கனு கேட்கிறாங்க?

கலைஞர் :(சற்று யோசித்துவிட்டு) 2009 ல் கோவிந்தா அறிக்கையின் படி இந்த 1.76 லட்சம் கோடி என்பது ஒரு மூலதனம் தான், இதைப்போட்டு இன்னும் நான்கு ஆண்டுகளில் 40 லட்சம் கோடி வருவாய் வரும்"னு சொல்லு

கலைஞரின் உதவியாளர் : யாருக்குனு அவங்க கேட்டா என்ன சொல்லனும்?உங்களுக்கா அல்லது உங்க குடும்பத்திற்கா?

கலைஞர் : அடேய், உனக்கும் வாய் நீளம் ஆயிடுச்சு, அது மத்திய மற்றும் மாநில அரசுக்குனு சொல்லு,

கலைஞரின் உதவியாளர் :சரிங்க சார்,( சிறிது நேரம் கழித்து லைனில் வருகிறார்)சார் சொன்னேன், இதையும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க, அந்த 1.76 லட்சம் கோடி எங்கனு கேட்கிறாங்க?

கலைஞர் :(சற்று யோசித்துவிட்டு)" என் உடலும் உயிரும் துடிப்பது தமிழுக்கே! நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன், நாணயத்துக்கு 2 பக்கம், தலை இல்லாமல் பூ இல்லை, பூ இல்லாமல் தலை இல்லை, அதே போல் நாணயத்துக்கு மறுபெயர் இந்த கழக அரசு" அப்படினு சொல்லு

கலைஞரின் உதவியாளர் : சரிங்க சார்,( சிறிது நேரம் கழித்து லைனில் வருகிறார்)சார் சொன்னேன்.

கலைஞர்:(ஆர்வமுடன்) என்னுடைய பதிலை கேட்டு வாயடைச்சு போயிடாங்களா எல்லாரும்?

கலைஞரின் உதவியாளர் :காறி துப்பாத குறை, இனிமேல் கேள்வியே கேட்க வரமாட்டோம்னு சொல்லிட்டாங்க, அதுல ஒருத்தன் தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கான் இந்த பதில் கேட்டு ..

கலைஞர்: பார்த்தாயடா என் ராஜ தந்திரத்தை!!!!

கால் முடிகிறது.ஒருவழியாக கால் க‌ஸ்டமர்கேர்க்கு போகிறது,(கதை மறந்து போனவர்கள் முதல் பத்தியை படிக்கவும்)

க‌ஸ்டமர்கேர் அதிகாரி : வணக்கம், உங்களுக்கு நான் எப்படி உதவலாம்?

நான்: யோவ், தூங்கற‌துக்கு முன்னாடி 100 ரூ பேலன்ஸ் இருந்தது, தூங்கி எழுந்தா 100 ரூ காணோம், என்ன ஆச்சு?

க‌ஸ்டமர்கேர் அதிகாரி : ஒரு நிமிஷம் சார். (சில நிமிடங்கள் கழித்து வருகிறார்) சார், உங்களுக்கு ஒரு புஷ் மெசேஜ் வந்திருக்கு கொஞ்ச நேரதுக்கு முன்னாடி, அதுல ஓகே ப்ரெஸ் பண்ணி நமீதா பேக்குக்கு நீங்க சப்ஸ்கிரைப் பண்ணிருக்கீங்க‌

நான்: என்னது நான் நமீதா பேக்குக்கு சப்ஸ்கிரைப் பண்ணிருக்கேனா? சார் நான் நல்ல குடும்பத்துல பொறந்தவன் தப்பா பேசாதீங்க‌

க‌ஸ்டமர்கேர் அதிகாரி : சார் அது பேக் p a c k,இனிமேல் நீங்க 1 மாசத்துக்கு நமீதா வால்பேப்பர் படத்தை ப்ரீயா டவுன்லோடு பண்ணலாம்,

நான்: நாசமா போக, தூக்க கலக்கத்துல 100 ரூ ஆட்டய போட்டிங்களா, அத விடுங்க, கால் பண்ணும் போது நிற‌ய க்ராஸ் டாக் வருதே, ஏன்?

க‌ஸ்டமர்கேர் அதிகாரி : சார் 2ஜி ஸ்பெக்ட்ரமை குறைஞ்ச விலைக்கு வாங்கினதால அப்படி தான் இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க‌

நான்: விளங்கும் டா!

க‌ஸ்டமர்கேர் அதிகாரி :சார் , உங்களுக்கு STD,ISD ல இருந்து கால் க்ராஸ் ஆகிருக்கு, அதனால உங்களுக்கு அதற்க்கான கட்டணம் 48 ரூ, இப்போ உங்க பேலன்ஸ் ‍‍‍-48, உடனடியா நீங்க ரீசார்ஜ் பண்ணாதான் நான் உங்க கூட பேசுவேன், பை சார்

நான்: ஹலோ, ஹலோ, அடப்பாவி வச்சுட்டான்,டீ குடிக்க 5 ரூ மட்டும் தான் டா நான் வச்சிருக்கேன், எங்க டா அவளோ ரூபாக்கு போவேன்

அப்போது ரோட்டோரத்தில் ஒரு குரல் கேட்கிறது

சார் டொகொமோ சிம் , 5 ரூ தான், 50 ரூ டாக்டைம், லைப்டைம் வேலிடிடி, 200 மெசேஜ் தினமும் ப்ரீ,ப்ரூப் ,1 போட்டோ மட்டும் கொடுங்க சார்,

நான் என் 5 ரூ யை பார்த்து சிரித்தேன், த்ரிசா போனா திவ்யா,ஏர்டெல் போனா டொகோமோ!!!!

பின்குறிப்பு: மேலே உள்ள உரையாடலில் கலைஞர் பகுதியை இன்று ஜெயா டி.வி. செய்தியில் ஒளிபரப்ப போவதாக தகவல்.