புதன், 28 டிசம்பர், 2011

எல்லாம் 'என்' நேரம் பகுதி - 2


இதுவரை..
வெறுமையாக சென்று கொண்டிருந்த என் வாழ்வில் ஒரு நாள் என் விதி புத்தகம் என் கையில் கிடைக்கிறது.

இனி...

எனது பிறந்த தேதியில் இருந்து ஆரம்பித்தது. ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினேன். இதுவரை என் வாழ்வில் நடந்த எல்லா சம்பவங்களும் தேதி மாறாமல் இருந்தது. 2 ஆம் வகுப்பில் மிட்டாய் பாட்டியை ஏமாற்றி நான் திருடிய‌ சுத்து மிட்டாய், 5 ஆம் வகுப்பு அங்கயற்கண்ணி முதல் கல்லூரியில் நான் சைட் அடித்த எனது சீனியர் ப்ரீத்தி வரை எல்லா விஷயங்களும் இருந்தது. எல்லோருக்கும் உண்மையான குணம் என்று ஒன்று இருக்கும். எனக்குத் தெரிந்து அந்த குணத்தை மாறாமல் அப்படியே வெளிக்காட்டியவர் என்று எவரும் இல்லை. எல்லோருமே புற வேஷங்கள் போடுபவர்கள் தான். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோமோ அந்த குணத்தை மட்டுமே புற உலகிற்கு காட்டுவோம். இதில் மனித தவறு எதுவும் இல்லை. ஏனென்றால் சமுதாய‌ம் எதை எதிர்பார்க்கிறதோ அந்த குணத்தை தான் நாம் காட்ட விரும்புகிறோம். நானும் மேற்சொன்ன விதிக்கு விதிவிலக்கல்ல. நான் இதுவரை எனக்கு மட்டுமே காட்டிக் கொண்டிருந்த உண்மையான் குணம் அந்த புத்தகத்தில் விலாவாரியாக எழுதப்பட்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. ஏனென்றால் உண்மை எப்போதும் கசக்கும்.

இப்படியே பல பக்கங்களைத் திருப்பினேன். லக்கிமேன், அறை எண் 305 இல் கடவுள், ப்ரூஸ் ஆல்மைட்டி என்று பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அதைப் போன்ற சம்பவம் என் வாழ்விலும் நடக்கும் என்று வகுப்பில் தூங்கும் போது வரும் கனவில் கூட கண்டதில்லை. சரி, எந்தவித முட்டாள்தனமான காரியங்களையும் பண்ண வேண்டாம். நம்முடைய வருங்காலம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று வேகவேகமாக ஜூலை 2011 க்கு புத்தகத்தைத் திருப்பினேன். ஆஆஆஆஆஆ!!!!! உலகில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும் என் வாயில் வந்தது.

ஜூலை 12 2011 உடன் விதி முற்றிற்று.

என்று பெரியதாக எழுதி இருந்தது.. பயத்துடன் அடுத்தடுத்த பக்கங்களைத் திருப்பினேன். அத்தனையும் வெற்று காகிதங்கள். அந்த பளபளப்பு கூட இல்லை. இன்று தான் ஜூலை 12, இன்றுடன் என் விதி முடிந்தா?? சாகப் போகிறேனா?? எனக்கு அழுகை வந்தது. இதுநாள் வரை கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. சிறுவயதில் தசரா அப்போது தொடர்ந்து 10 நாட்களுக்கு பக்கத்தில் உள்ள கோவிலில் சுண்டல் தருவார்கள். அதற்காக மட்டும் கோவிலுக்குப் போயிருக்கிறேன். 4 ஆம் வகுப்பில் அரையாண்டு கணித தேர்வு விடைத்தாள் தரும் அன்று எப்படியாவது பாசாகிவிட்டால் உண்டியலில் 50 பைசா போடுகிறேன் என்று வேண்டி இருந்தேன். அவ்வளவு தான் எனக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு. அந்த 50 பைசா இன்று வரை உண்டியலில் போடவில்லை. ஒருவேளை அதனால் தான் கடவுள் கோபமாகி என் உயிரைப் பறிக்கிறாறரோ என்று சந்தேகம் எழுந்தது, இல்லை இல்லை அவ்வளவு சீப்பானவர் இல்லை கடவுள் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன். இப்போது கடவுள் நம்பிக்கை அதிகம் ஆகியது. கடவுளே என்னைக் காப்பாற்று. இதுவரை நான் செய்த பாவங்களை மன்னித்து விடு, என் தவறை உணர்ந்து விட்டேன் என்று அழுதேன். இல்லை இல்லை உளறினேன். என்னைப் போலத் தான் எல்லோருமா? இறந்து விடுவோம் என்று தெரிந்து விட்டால் கடவுள் நம்பிக்கை வந்து விடுமா? செய்த பாவங்களை மறந்து நல்லவனாக மாறிவிடுவோமா? எனக்கு அந்த அவகாசம் கூட இல்லையே. மணியைப் பார்த்தேன், 10.45 காட்டியது. இன்னும் 1.15 மணி நேரம் தான் என் வாழ்க்கை. நினைக்க நினைக்க அழுகை மேலோங்கியது. இறப்பு என்று ஒன்று இருப்பதால் தான் உலகம் இன்னும் வாழ தகுதியாய் இருப்பதாகத் தோன்றியது. சாகும் நேரத்தில் மட்டும் ஏன் இத்தனை தத்துவங்கள் தோன்றுகிறது? எண்ணங்கள் இலக்கற்ற பட்டங்கள் போல எல்லா திசையிலும் பறந்தது

கூடாது, நான் வாழ வேண்டும். இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டும். சில மணி நேரம் முன் வரை வெறுமையாய் தோன்றிய என் வாழ்க்கை இப்போது மிகுந்த அர்த்தத்துடன் இருப்பதாய் தோன்றியது. வாழ வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது. ஆசை இல்லை வெறி. வாழவேண்டும் என்ற வெறி. யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று தோன்றியது. இல்லை வேண்டாம். தன் கையே தனக்கு உதவி. யாரிடமாவது உதவி கேட்க போய் அவர்களே என் சாவுக்கு காரணமாகி விட்டால்??? வேண்டாம். விதியை மதியால் வெல்லலாம் என்று படித்ததுண்டு. ஆனால் மதிக்கு எங்கே போவது? அவன் சென்னையில் அல்லவா இருக்கிறான்? சாகும் நேரத்தில் கூட இந்த மொக்கைபோடும் பழக்கம் என்னை விட்டு போகவில்லை. நான் அப்படித்தான்.

மீண்டும் ஒரு முறை புத்தகத்தைத் திருப்பினேன். ஜூலை 12 2011  உடன் விதி முற்றிற்று என்று எழுதி இருந்ததைப் படித்தேன். எப்படி சாகப் போகிறேன் என்று எழுதி இருக்கிறதா என்று பார்த்தேன். சே! இல்லை. என்னைப் பற்றி எல்லாம் இருக்கிற புத்தகத்தில் இது மட்டும் இல்லை. ஒரு வேளை இந்த புத்தகத்தை அப்படித்தான் எழுதி இருப்பார்களோ?
மணி இப்பொழுது 11. இன்னும் 1 மணி நேரம் தான் என் வாழ்க்கை. எனது அழுகை இன்னும் அடங்கவில்லை. சாகுற நாள் தெரிஞ்சு போச்சுனா வாழுற நாள் நரகம் ஆயிடும் என்று தலைவர் சொன்னது எவ்வளவு உண்மை! அழுகையைக் கட்டுப்படுத்தினேன். கண்டிப்பாக இந்த விதியை என்னால் வெல்ல முடியும். எனது சாவு இன்று இல்லை என்று எனக்கு நானே தைரியம் அளித்தேன். ஒரு பக்க மனது அந்த நம்பிக்கையை ஏற்க மறுத்தது. அதை நான் கண்டுகொள்ளவில்லை. என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். தூக்கு தண்டனைக் கைதியைத் தவிர வேறு எவருக்கும் அவர்களது இறக்கும் நாள் தெரிந்ததில்லை இதுவரை உலகத்தில். ஆனால் எனக்கு தெரிகிறது இப்போது.

தண்ணீர் தாகம் எடுத்தது. அழுது அழுது நா வறண்டு போய் இருந்தது. தண்ணீர் குடிக்கலாம் என்று எழுந்தேன். வேண்டாம். தண்ணீரில் ஒரு வேளை விஷம் இருந்தால்?? காலையில் அதே தண்ணீரைக் குடித்து விட்டு தான் ஆபிஸிற்குப் போனேன். ஒன்றும் ஆகவில்லையே?? இருந்தாலும் வேண்டாம். சாவின் விளிம்பில் இருப்பவனுக்கு எந்த லாஜிக்கும் உறைக்காது. அது போலத் தான் நானும்.ஒருவேளை பூகம்பம் வந்தால்??? அப்படி யோசித்த உடனே அருகில் இருந்த டேபிளுக்கு அடியில் சென்று புத்தகத்துடன் உட்கார்ந்து கொண்டேன். டேபிளுக்கு அடியில் ஏதாவது பூச்சி பாம்பு கடித்து இறந்தால்?? உடனே அருகில் இருந்த கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டேன்.. கடவுளுக்குக் கூட இப்படியெல்லாம் ஒரு மனிதனை சாகடிக்க முடியுமா என்று தோன்றி இருக்காது. அத்தனை விதங்களில் நான் சாவதை நானே கற்பனை செய்து பார்த்தேன். மணி இப்போழுது 11.30. இன்னும் அரை மணி நேரம் தான். எனது வியர்வை அந்த புத்தகத்தை நனைத்திருந்தது. ஆனாலும் அதன் பளபளப்பு போக வில்லை. இன்னும் அரை மணி நேரத்திற்கு சாவு என்னை அண்டா விட்டால், உலகில் சாவை வென்ற முதல் ஆள் நான் தான். இப்படி நினைக்க மனதில் ஒரு ஓரம் நம்பிக்கை துளிர்த்தது. Final Destination படத்தின் அனைத்து பாகங்களும் பார்த்திருக்கிறேன். அதில் தான் விதம் விதமாக மக்கள் சாவார்கள். அதில் உள்ள எந்த முறையும் எனக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். பயத்தில் வயிறு கலக்கியது. இருப்பிடத்தை விட்டு எழ மனமில்லை. அடக்கிக் கொண்டேன். நேரம் கடந்தது.

11.56
11.57
11.58
11.59

திடீரென்று ஒட்டு மொத்த உடலும் குலுங்கியது. கண்கள் இருண்டது. மூச்சு தடைப்பட்டது. இது தான் சாவோ என்று தோன்றியது.
12.00

மூச்சு சீராக இயங்க ஆரம்பித்தது. என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. செல்போனில் தேதி பார்த்தேன். ஜூலை 13 என்று காட்டியது. எனக்கு சந்தோஷத்தில் கத்த வேண்டும் போலத் தோன்றியது. இல்லை வேண்டாம். எனது கடிகாரம் ஒரு வேளை வேகமாக ஓடி இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் பொறுப்போம் எனத் தோன்றியது.குளியலறையில் மூடாத டேப் சொட்டிக் கொண்டிருந்த சத்தம் மட்டுமே கேட்டது. 12.05 காட்டியது கடிகாரம். இன்னும் கொஞ்சம் பொறுக்கலாம் என்று தோன்றியது.
12.30
1.00
1.30
2.00 மணி ஆகியது. ஒவ்வொரு நிமிடம் கழியக் கழிய என் பயம் சந்தோஷமாக மாறிக் கொண்டிருந்தது. நான் மரணத்தை வென்று விட்டதாகவே தோன்றியது. ஆம் வென்று விட்டேன். உலகத்தில் மரணத்தை வென்ற முதல் மனிதன் நான் தான்.

-தொடரும்

பின்குறிப்பு : அடுத்த பாகத்துடன் கதை முற்றும்.

11 கருத்துகள்:

  1. மிகவும் சுவாரசியமான படைப்பு.. அடுத்த பாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்!!!!

    பதிலளிநீக்கு
  2. விறுவிறுப்பான சிறு தொடர் ! முடிவைத் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டுகிறது. ஃபேஸ்புக் டைம்லைன் தான் அந்தப் புத்தகமோ என்று ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகித்தேன் :-)

    பதிலளிநீக்கு
  3. super ah iruku........... mokka ah ethathu climax irunthuchu....sethuruva......

    பதிலளிநீக்கு
  4. Nice Plot Shiva.. Second part has increased the expectations.. Eagerly awaiting the final part! Good going!! :)

    பதிலளிநீக்கு
  5. "விதியை மதியால் வெல்லலாம் என்று படித்ததுண்டு. ஆனால் மதிக்கு எங்கே போவது? அவன் சென்னையில் அல்லவா இருக்கிறான்? சாகும் நேரத்தில் கூட இந்த மொக்கைபோடும் பழக்கம் என்னை விட்டு போகவில்லை. நான் அப்படித்தான்."

    "மனுஷனா பொறந்தா எப்பவும் ஒரே மாறி இருக்கனும்..இது உங்களால மட்டும் தான் முடியும்.." ;) ;P

    me too eagerly waiting for the next one :)

    பதிலளிநீக்கு
  6. Writer sujatha inum saagala!!!! Banglore la than irukaaru!!! Eager to read ur 3rd part machi!!!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் அடுத்த பாகம் பூர்த்தி செய்யுமா என்று தெரியவில்லை. தொடர்ந்து இணைந்திருங்கள்

    @shobi, @GS, @lakshman, @paramesh வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

    @GS நல்லவேளை நீங்கள் எதிர்பார்த்த டைம்லைன் திருப்பம் இல்லை கதையில்.

    @priya எல்லாப் புகழும் GCT க்கே

    @saravanan அவ்வளோ பெரிய ஆள் இல்லீங்க நான், அடுத்த பகுதி படிச்சிட்டு சொல்லுங்க ;)

    பதிலளிநீக்கு
  8. விதியை மதியால் வெல்லலாம் என்று படித்ததுண்டு. ஆனால் மதிக்கு எங்கே போவது? அவன் சென்னையில் அல்லவா இருக்கிறான்? சாகும் நேரத்தில் கூட இந்த மொக்கைபோடும் பழக்கம் என்னை விட்டு போகவில்லை. நான் அப்படித்தான்.....

    Super na.... :):)

    பதிலளிநீக்கு
  9. விதியை மதியால் வெல்லலாம் என்று படித்ததுண்டு. ஆனால் மதிக்கு எங்கே போவது? அவன் சென்னையில் அல்லவா இருக்கிறான்? சாகும் நேரத்தில் கூட இந்த மொக்கைபோடும் பழக்கம் என்னை விட்டு போகவில்லை. நான் அப்படித்தான்.tis s superb da~Prabhu

    பதிலளிநீக்கு
  10. Nice da siva. Pona episodela mokka poda maarandhuteeyaennu nenachaen, but u ve fulfilled it here, good starting in blogging da. 2nd episode has unexpected twist from 1st episode, hope 3rd ll also be more twisted.

    பதிலளிநீக்கு