(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் எட்டாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால், Well, it depends....)
"இங்க பார்றா தம்பி, பத்தாவது தான் வாழ்க்கையிலேயே முக்கியமான கட்டம். இதுல மட்டும் ஒழுங்கா படிச்சிட்டேனு வை, அதுக்கு அப்புறம் உன் லைப் செட்டில்டு. ஜாலியா இருக்கலாம்." இப்படி உங்ககிட்ட சொன்னாங்களா? என் கிட்டயும் சொன்னானுவளே. சரினு நாமளும் நல்லபடியா பத்தாவது முடிச்சிட்டு வந்தா, "இங்க பார்றா தம்பி, 12 ஆவது தான் உன் வாழ்க்கையிலேயே முக்கியமான கட்டம். இதுல மட்டும் ஒழுங்கா படிச்சிட்டேனு வை, அதுக்கு அப்புறம் உன் லைப் செட்டில்டு, ஜாலியா இருக்கலாம்" அப்படினு சொன்னாங்க. சரிதான் கழுதை அதையும் படிச்சிட்டு காலேஜுக்கு வந்தா, "இங்க பார்றா தம்பி.... போதும் நிறுத்துங்க, காலேஜுல படிச்சு கேம்பஸ் இண்டர்வியூல வேலை வாங்கிட்டா லைப் செட்டில்டு, அதானே என்று திருப்பி கேட்க தோணியது. நாம் தான் அப்பிராணி ஆயிற்றே, மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். இவங்க சொல்ற லைப் செட்டில்டுங்கறது வண்டி இழுக்குற குதிரைக்கு முன்னால காட்டுற சாப்பாடு மாதிரி. இந்தா கிடைச்சுரும், அந்தா கிடைச்சுரும்னு பாவம் அந்த குதிரை வண்டிய இழுத்துகிட்டே ஓடும். இந்த உலக ஞானம்லாம் கிடைக்க போதி மரம்லாம் தேவை இல்லை. சரி நாம கல்லூரி வாழ்க்கைக்கு வருவோம். ஒரு வழியா ஒரு காலேஜுல சேர்ந்துட்டோம், இனிமே கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு, கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டுனு தமிழ் சினிமாவ நம்பி ஜாலியா இருக்கலாம்னு உள்ள வந்தா, வாங்க தம்பி, மொத்தம் 8 செமஸ்டர், செமஸ்டருக்கு 6 பரீட்சை, 3 யூனிட் டெஸ்ட், 2 பிராக்டிக்கல், இது போக அப்பப்போ அசைமெண்டுனு பொடனிலேயே அடிச்சு உட்கார வெச்சாங்க. நாம தான் எவ்வளவோ பாத்துட்டோமே, இதை பாக்க மாட்டோமானு வண்டி இழுக்க ஆரம்பிச்சோம்.
இதே போல காய்ந்து கருவாடாக போன வாழ்க்கையில கொஞ்சமாவது மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவர்கள் நண்பர்கள் தான். அதே போலத் தான் என்னிடம் 2 அடிமைகள் சிக்கினார்கள். (இல்லை நான் அவர்களிடம் சிக்கிக் கொண்டேன் அப்படினும் சொல்லலாம்). ஒருத்தன் பெயர் ஜெகன். அந்த பெயர் காலேஜிற்காக. எங்களுக்கு பும்பா. (நீங்கள் 90ஸ் கிட்சாக இருந்தால் பும்பா என்கிற கார்ட்டூன் காட்டுப்பன்னியைத் தெரிந்திருக்கும்.) கடவுள் ஒவ்வொருவரையும் படைக்கும் போதும் ஒரு மனிதனை 2 பிரிவில் ஏதாவது ஒரு பிரிவில் போடுவார். ஒன்று அடி கொடுக்கக் கூடிய பிரிவு, மற்றொன்று அடி வாங்கக் கூடிய பிரிவு. நானெல்லாம் 2 வது பிரிவு. ஆனால் கடவுளே குழம்பிப் போய் இந்த பும்பா மாதிரியான ஜந்துக்களை 2 பிரிவுக்கும் பொதுவாக போட்டு விடுவார். எப்படி என்று விளக்குகிறேன்.
எங்கள் கல்லூரியில் பொதுமாத்து என்றொரு கலாச்சாரம் உண்டு. எந்த நல்ல விஷயம் நடந்தாலும் பெரும்பாலும் அந்த நல்ல விஷயத்திற்கு காரணமானவனை குனிய வைத்து ஊரே முதுகில் தர்ம அடி கொடுக்கும். அதில் அடி கொடுப்பவர்களுக்கு ஒரு ஆனந்தம். அடி வாங்குபவன் தான் ஏற்கனவே எதோ ஒரு நல்ல விஷயத்தால் ஆனந்தமாக இருக்கிறான் தானே. இதை ஏன் செய்கிறோம் என்றெல்லாம் தெரியாது. எங்கள் சீனியர்கள் செய்தார்கள். அவர்களுக்கு முன் அவர்கள் சீனியர்கள் செய்தார்கள். நாங்களும் மத வழிபாடு போல தொடர்ந்து அடி கொடுத்துக் கொண்டிருந்தோம். (நீங்கள் நினைப்பது போல கொடூர அடியெல்லாம் இல்லை. செல்லமாக அடிப்பது தான், ஆனாலும் வலிக்கும் :( சில விநாடிகள் தான். குற்றால அருவி முதுகில் பலமாக விழுவது போல தப் தப் தப் என்று. ஆனால் அதற்குள்ளாகவே அண்ட சராசரங்களின் மொத்த ரகசியங்களும் நெற்றிப் பொட்டில் எட்டிப் பார்த்து சென்றிருக்கும். எத்தனை தடவை வாங்கிருக்கேன், சரி அது வலி வேற டிபார்ட்மெண்ட், கதைக்குள்ள போவோம்). பிறந்த நாள் வந்தாலோ, பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்தாலோ, பெண்ணிடம் கைப்பேசி எண் வாங்கினாலோ என எது எதெற்கெல்லாமோ அடி விழும். இதில் க்ராத்தே பழகியது போல ஒன்றிரண்டு பேர் போடும் அடி மட்டும், தனியாக வலிக்கும். அடி கொடுப்பதெற்கென்றே பிறந்த காட்டு மாடுகள் அவர்கள். நான் சொன்ன கடவுள் படைத்த முதல் வகை. முதல் இரண்டு வருடங்கள் எங்கள் பும்பா அந்த அடி கொடுக்கும் பிரிவில் தான் இருந்தான். ஆனால் ஊரில் ஒருத்தரை விடாமல் எல்லோரிடம் வம்பு இழுத்து வைத்திருந்ததனால், மூன்றாம் நான்காம் ஆண்டில் அடி வாங்கும் இரண்டாம் பிரிவுக்கு வந்திருந்தான். லாலா கடையில் அல்வா சாப்பிட்டு விட்டு கடைசியாக மிக்சர் கொசுறு வாங்குவது போல, ஊரில் எவனுக்கு பொது மாத்து விழுந்தாலும், முடிக்கும் போது கடைசியாக நமது பும்பாவையும் உள்ளே இழுத்துப் போட்டு சில அடிகள் போட்டு விட்டு செல்வார்கள். அது வரைக்கும் குதித்து குதித்து அடித்து கொண்டிருந்தவன், அடி வாங்கியவுடன் "டேய் சம்பந்தமே இல்லாம என்னை ஏண்டா அடிக்கிறீங்க" என்பான். ஆனால் எவனுமே அவனை மனுஷனாக மதிக்காததால் ஒருவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவனும் எல்லா பொது மாத்திலும் கொசுறு அடி வாங்கிக் கொண்டிருந்தான்.
இப்படி ஒரு நண்பன் என்றால், இன்னொரு நண்பன் செல்வம் மற்றொரு வகை. இந்த ஊமைக் குசும்பு என்று சொல்வார்களே, அதற்கு Thesarus இல் தேடிப் பார்த்தால் செல்வம் என்று இருக்கலாம் என்று நினைக்கிறேன். அநியாயம் நடக்கும் இடங்களிலெல்லாம் நான் இருப்பேன் என்னும் கிருஷ்ண பரமாத்மா போல, அநியாயம் நடக்கும் இடங்களிலெல்லாம் இவனும் இருப்பான். என்ன கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அநியாயம் நடப்பதற்கே இவன் தான் காரணமாக இருப்பான். ஆனால் அதைக் கண்டு பிடிப்பதற்குள் எப்படியோ தப்பி இருப்பான். இந்த இரண்டு பேரிடம் தான் நான் 3 வருடங்கள் ரூம் மேட்டாக குப்பை கொட்டினேன்.
மன்மத லீலையை வென்ற சிலர் முதலாம் ஆண்டிலேயே பெண்களின் எண் வாங்கி, "ஏய் இன்னைக்கு எங்க மெஸ் சாம்பார்ல உப்பே இல்லை தெரியுமா" என்று நாட்டிற்கு தேவையான கருத்துக்களை இரா முழுக்க பேசும் வித்தைக்காரர்களாக இருந்தார்கள். இந்த பும்பாவையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு நானென்ன கமலஹாசனாகவா ஆகி விட முடியும், இல்லை என்னை வைத்துக் கொண்டு அவர்கள் தான் ஜேம்ஸ் பாண்ட் ஆகி விட முடியுமா? கடைசி வரை "செய் அல்லது செத்து மடி என்றார் நேதாஜி, படி அல்லது பன்னி மேய் என்கிறார் என் பிதாஜி! ஹி ஹி ஹி" என்பன போன்ற மொக்கை ஜோக்குகளை எங்களுக்குள் பார்வார்ட் செய்து கொண்டிக்கும் படியான வாழ்க்கையைத் தான் கல்லூரியின் முதல் இரண்டு ஆண்டுகளில் வாழ முடிந்தது.
ஆனால் முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும், முயலாமை தான் வெல்வது என்பது பழமொழி அல்லவா. அதனால் நாங்களும் முயற்சி செய்ய ஆரம்பித்தோம். ஒரு நாள் விடுதியில் நானும் செல்வமும் எப்படிடா பயப்படாம ஒரு பொண்ணுகிட்ட காதலை சொல்வது என்கிற தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். (காதலிப்பதற்கு பெண்ணெல்லாம் தயாராக இல்லை. இருந்தாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் என்ன செய்ய என்பதான மேம்பட்ட சிந்தனைகள் ஓடிய காலம் அது) பல்வேறு முத்தான சிந்தனைகளை உதிர்த்து ஆழ்ந்த யோசனையில் இருந்த போது, நமது திருவாளர் பும்பா அரக்க பரக்க ஓடி வந்தான். மச்சி டேய், உங்களுக்கு ஒண்ணு தெரியுமாடா என்று மூச்சிரைக்க நின்றான். சரி நாங்களும் பெண்களிடம் பயப்படாமல் பழகுவதற்கு எதோ புதிதாக யோசனை கண்டுபிடித்து விட்டான் போல என்று நினைத்து, சரிடா, பதட்டப்படாம சொல்லு என்றோம். "மெஸ்ல உருளைக்கிழங்கு சிப்ஸ் எல்லாருக்கும் ஒரு தடவ தான கொடுப்பாங்க, நான் இன்னைக்கு ஏமாத்தி 2 தடவை வாங்கிட்டேனே, எப்படி பாத்தியா" என்றான் வாயெல்லாம் பல்லாக. எங்களுக்கோ செம காண்டு, "உங்க வாழ்க்கைக்கும் சேர்த்து தான் யோசிச்சுட்டு இருக்கோம் சென்றாயன். இப்படி சோறு சோறுனு அலையறீங்களே" என்று கோவமாக அடிக்க முற்பட்டோம். காட்டுப்பன்னி அல்லவா, கடைசியில் அவன் தான் எங்களைப் போட்டு அடித்தான்.
ஒரு வழியாக பல்வேறு யோசனைகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பில் ஜெபா மிஸ் சொல்லிய 4 பசுக்களும் ஒரு சிங்கமும் நீதிக் கதை தான் எங்களுக்கு கை கொடுத்தது. (எனவே தான் மாணவர்களே நீதிக் கதைகளை நீங்கள் கருத்தூன்றி படிக்க வேண்டும்) தனியாக ஒரு பெண்ணிடம் சென்று காதலை சொல்வதால் தானே பயம். மூன்று பேரும் மொத்தமாக சென்று "வீ லவ் யூ" என்று சொன்னால் தைரியம் வந்து விடும் அல்லவா என்கிற முத்தான யோசனை உதித்தது. உலகத்திலேயே வேறு எவருக்கு இப்படி ஒரு யோசனை தோன்றி இருக்காது. நம் எல்லோருக்கும் பிடித்த பெண்ணிடம் சென்று மொத்தமாக "வீ லவ் யூ" என்று சொல்லுவோம். அந்த பெண் யாரை ஒத்துக் கொள்கிறாளோ மற்றவர்கள் விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்கிற கண்றாவியான ஜெண்டில்மேன் ஒப்பந்தம் வேறு. சரி எல்லாம் தயராகி விட்டது. இவ்வளவு விஷயங்கள் பார்த்து பார்த்து யோசித்த நாங்கள், ஒரு சின்ன விஷயத்தை மட்டும் மறந்து விட்டோம். எங்கள் காதலை சொல்ல ஒரு பெண் இல்லை. கிடைத்திருந்தால் அன்றே எங்கள் வாழ்வில் வசந்தம் மலர்ந்திருக்கும். (இப்படியெல்லாம் எங்களை நாங்களே தேற்றிக் கொள்வது தான், வாசகர்கள் கண்டு கொள்ளக் கூடாது). காதலைச் சொல்லும் பெண்ணை மூன்று பேருக்கும் பிடித்திருத்திருக்க வேண்டும் என்பது தான் ஒரே விதி. அப்படிப்பட்ட பெண்ணிற்கு நாங்கள் எங்கே போவது. வடிவேலு காத்து காத்து, காத்துக்கு நான் எங்கடா போவேன் என்று தேடுவதைப் போல, நாங்களும் எங்கள் கல்லூரியிலேயே சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தோம். கடவுள் இருக்கிறான் குமார் என்பதைப் போல தான் அந்த சம்பவம் நடந்தது......
(தொடரும்)
கதையின் இறுதிப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.