(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஒன்பதாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால், Well, it depends....)
----------
ஒவ்வொரு துறைக்கும் ஒரு விழா வருடத்தில் நடக்கும். ஆட்டம் பாட்டம் என 3 நாட்கள் செல்வதே தெரியாது. எங்கள் துறைக்கான விழாவும் வந்தது. வழக்கம் போல நாங்களும் கூத்தடிக்க ஆரம்பித்தோம். அப்பொழுது இரண்டாம் ஆண்டு துறை மாணவிகளின் நடனம் என்ற அறிவிப்பு வந்தது. இந்த மாதிரி விழாக்களில் நடக்கும் நடனம் எல்லாமே மிக சுமாராக தான் இருக்கும். ஆனால் அங்கே யார் மேடையைப் பார்ப்பது. நாங்கள் நண்பர்களாக சேர்ந்து மேடைக்கு கீழே நின்று தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருப்போம்.
வழக்கம் போல இந்த இரண்டாம் ஆண்டு மாணவிகளின் நடனமும் சுமார் தான். ஆனால் சேற்றில் மலர்ந்த மல்லிகையாய் (தாமரை மலராது) ஒரு மாணவியின் நடனம் மட்டும் தனியாக தெரிந்தது. பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். விடுவோமா, மூளையின் ஒரு ஓரத்தில் ஒரு ரிமைண்டர் போட்டு வைத்திருந்தேன். ஆட்டம் முடிந்து அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்தோம்.
“டேய், இன்னைக்கு ஆடுனதுல அந்த செகண்ட் இயர்…” என நான் ஆரம்பிக்க, செல்வமோ “ஆமாண்டா அந்த செகண்ட் இயர் பொண்ணு” என தொடர, பும்பா “எனக்கும் பிடிச்சிருந்ததுடா” என முடிக்க எங்கள் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டதை அறிந்தோம். அப்புறம் என்ன, ரா, சிஐஏ, எம்.ஐ.5 வேலைகளை ஆரம்பித்தோம். அந்தப் பெண்ணுடைய மொத்த டீடெய்லும் 24 மணி நேரத்துக்குள் எங்கள் கைகளில் வந்தாக வேண்டும் என வேலைகளை ஆரம்பித்தோம். பருவத்தேர்வுக்குக் கூட இவ்வளவு கடினமாக உழைத்ததில்லை. முயற்சி தன் மெய் வருத்த கூலி கிடைத்தது. அந்த பெண் பெயர் கலா. எங்களது துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். ஊர் தேனி. வீட்டிற்கு ஒரே பெண். அவளது விடுதி அறை எண் 204. மாதம் ஒரு முறை தேனிக்கு சிங்காநல்லூர் பேருந்தி நிலையத்தில் இருந்து செல்வாள். அவள் வீட்டில் ஒரு லேபரடார் நாய் உள்ளது. அதற்கு வயது 4. மாநிறம். அதன் பெயர் ஜேக்கி என ஆதி முதல் அந்தம் வரையிலான அனைத்து தகவலையும் திரட்டி விட்டோம். இனி ஒரு நல்ல நாள் பார்த்து ‘வீ லவ் யூ’ சொல்ல வேண்டியது மட்டும் தான் பாக்கி.
எங்கே எப்போது சொல்லலாம் என ஸ்கெட்ச் போடுவதற்காக எங்களுக்கு ஒரு அடிமை தேவையாயிருந்தது. அவளது வகுப்பில் படிக்கும் எங்கள் ஜீனியர் ஒருவனிடம் எங்களுக்க நல்ல பழக்கம். அவனை வைத்தே ஸ்கெட்ச் போடுவோம் என முடிவாகியது. அவனிடம் சென்று விவரத்தைக் கூறியவுடன் எங்களை மேலும் கீழும் ஒரு முறை பார்த்தான். “அண்ணே, நிச்சயமா கலா தானா அது? தெரியுமா” என்றான். “டேய் அவளோட ஜாதகமே எங்ககிட்ட இருக்கு. கலா தாண்டா எங்க ஆளு” என்றோம். மிக அதிர்ச்சியுடன், “ஏண்ணா உங்க டேஸ்ட் இவ்வளோ மட்டமா இருக்கு” என்றான். இது ஒரு நல்ல டெக்னிக் பாருங்கள் மக்களே. எங்கள் சீனியருக்கும் நாங்கள் இதைத் தான் செய்தோம். ஏதாவது ஒரு அழகான பெண்ணை பற்றி ஒரு சீனியர் விசாரிக்க ஆரம்பித்தால், ஏண்ணா உங்க டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு என்போம். சீனியரும் தன்னுடைய கெத்தை காப்பற்றுவதற்காக, இல்லடா சும்மா விசாரிச்சேன் என்பார். சில பெண்கள் தான் பார்க்கவும் அழகாக இருப்பார்கள், அவர்களையும் சீனியர்கள் கொத்திக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது, அதைத் தடுக்க தான் இப்படி ஒரு யுக்தி. சரி நம் கலா கதைக்கு வருவோம். வழக்கம் போல இந்த ஜூனியரும் எங்களை ஏமாற்ற தான் இப்படி சொல்கிறான் எனத் தெரிந்தது. “டேய் நாங்களும் உங்க வேலையெல்லாம் பண்ணிட்டு தான் வந்திருக்கோம். நீ ஸ்கெட்ச் மட்டும் போட்டுக் கொடு மத்ததை நாங்க பாத்துக்கறோம்” என்றோம். சரி அப்புறம் உங்க இஷ்டம் என அவனும் ஒப்புக் கொண்டான்.
முக்கியமான நாளுக்காக நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தோம். மூன்று பேருமே கைப்பேசியின் அழைப்புப் பாடலாக “ஏ கலா கலா கண்ணடிச்சா கலக்கலா’ என்ற முத்தான அரிய தத்துவபாடலை வைத்திருந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆளுக்கு ஒரு ரோஜாப்பூ, ஒரு வாழ்த்து அட்டை, ஒரு கேட்பரீஸ் டைரி மில்க் மிட்டாய் வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். “குறைந்தது 50 ரூபாயாவது செலவாகும். எதிரில் உள்ள எம்.எஸ் பேக்கரியில் அந்த காசுக்கு ஆளுக்கு 12 பஜ்ஜி திங்கலாம்டா” என்றான் பும்பா. பஜ்ஜி எப்போது வேண்டுமானாலும் திங்கலாம். ஒரு லட்சிய பயணத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் போது இது போல சிற்றின்பங்களுக்கு எல்லாம் இடம் கொடுக்கக் கூடாது என அவனை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம்.
அந்த நாளும் வந்தது. ஜூனியர் அழைத்தான். அண்ணே வர்ற வெள்ளிக்கிழமை கடசி பாட வேளை ரத்தாகி விட்டது. எங்கள் வகுப்பில் இருந்து அவள் விடுதிக்கு போகும் வழியில் பெற்றோர் மாணவர் சந்திப்பு கூடத்து அருகில் சந்திக்கலாம். அப்போது யாரும் அங்கே இருக்க மாட்டார்கள் என பக்காவாக ஒரு ஸ்கெட்ச் தயார் செய்து கொடுத்தான். நாங்களும் சகல தயாரிப்புகளுடன் இருந்தோம். “வெள்ளிக்கிழமை கடைசி பீரியட்ல சொல்றதும் நல்லது தான். சனி,ஞாயிறு யோசிச்சு ஒரு முடிவு சொல்வால” என்று நினைத்தோம். ஏற்கனவே கூறியபடி யாருக்கு அவள் சரி சொன்னாலும் மற்ற இருவரும் விட்டு கொடுத்து விட வேண்டும் என்கிற ஒப்பந்தத்தையும் நினைவில் கொண்டு வந்தோம். வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் குளிப்பதில்லை. அதான் சனி, ஞாயிறு வருதுல்ல, ஒரேடியா அப்போ குளிச்சுக்கலாம் என்ற சோம்பலில் இருந்து விடுவோம். ஆனால் இன்று சாதாரண் நாளா! தலைக்கு குளித்து, ஒரு பாட்டில் ஆக்ஸ் செண்ட் அடித்து, இருப்பதிலேயே மிகக் குறைவாக அழுக்கடைந்த ஒரு சட்டையை எடுத்துப் போட்டு, மூன்று பேரின் ரோஜா, வாழ்த்து அட்டை, மிட்டாயெல்லாம் ஒரு பையில் எடுத்து போட்டு சென்று விட்டோம். கடைசி பாட வேளையும் வந்தது. நாங்கள் குறிப்பிட்டிருந்த இடத்தில் சென்று காக்க ஆரம்பித்தோம். ஒவ்வொருத்தராக வர ஆரம்பித்தார்கள். ஆனால் எங்கள் கலாவை மட்டும் காணவில்லை. நாங்களும் தேடிக் கொண்டிருந்தோம். திடீரென்று ஜூனியரிடமிருந்து ஒரு குறுந்தகவல். அண்ணே அந்த பொண்ணுட்ட உன் கூட சீனியர்ஸ் பேசணுமாம்னு சொல்லி காக்க வெச்சிருக்கேன். உங்க பக்கத்துல தான் நிக்குறா, ஏன் இன்னும் எதுவும் பேச மாட்டேங்கறீங்க” என்ற செய்தி. என்னது, நம்ம பக்கத்துலயா! என்ற ஆர்வத்துடம் பக்கத்தில் பார்த்தால் வேறு ஏதோ ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். இது நம்ம கலா இல்லையே என்ற குழப்பத்தோடு ஜூனியருக்கு, “தக்காளி டேய், கலாவ வெய்ட் பண்ண சொல்ல சொன்னா வேற ஏதோ ஒரு சுமாரான பொண்ண நிப்பாட்டிருக்க, கைல கிடச்சா செத்தாடா நீ” என்று தகவல் அனுப்பினோம். “நான் தான் அப்பவே சொன்னேன்லணா, சத்தியமா அது கலா தான். கல்ச்சுரல்ஸ் அப்போ மேக்கப் போட்டிருந்தா. எங்களுக்கே முதல்ல ஆச்சர்யம் தான். ஆனா எங்க க்ளாஸ் தான், அதனால எங்களுக்கு தெரியும். நீங்க தான் ஏமாந்தீங்க” என்ற செய்தி வந்து விழுந்தது. மீண்டும் ஒரு முறை எங்கள் அருகில் நிற அந்த பெண்ணை உற்றுப் பார்த்தோம். மேக்கப் போடாத கலா தான் அது என்று எங்களுக்கு விளங்குவதற்கு வெகு நேரம் எடுக்கவில்லை. எங்கள் மனக் கோட்டை இடிந்த சத்தம் ஒரு வேளை அருகில் நின்ற கலாவுக்கே கேட்டிருக்கலாம். (காற்று அடிக்காமல் மரங்கள் அசையாமல் நிற்கும், அலைகள் பாறைகளில் மோதி உறைந்து நிற்கும், பறவைகள் வானத்தில் பறக்காமல் இருக்கும் தமிழ் சினிமாவின் காட்சிகளை ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்). இதற்குள் கலா எங்கள் அருகில் வந்து “அண்ணா எதோ எங்கிட்ட பேசணும்னு சொன்னீங்களா’ என கேட்க, மொத்த துயரத்தையும் உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு, ‘ஓ, சாரிமா அது நீ இல்லை, அந்த பையன் தப்பா சொல்லிட்டான். நீ போ” என அனுப்பி விட்டோம்.
நானும் செல்வமும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு விட்டோம். ஆனால் பும்பாவிற்கு தான் இன்னும் கோவம். “12 பஜ்ஜிடா, மொத்தம் 12 பஜ்ஜி. கலாக்காக நான் இழந்தது. மனசு வலிக்குதுடா” என்றான். “டேய் நாங்க எதுக்கு பீல் பண்ணிட்டு இருந்தா நீ எதுக்கு பீல் பண்ணிட்டு இருக்க” என எங்களுக்கும் கடும் கோபம். “இன்னைக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எம்.எஸ் பேக்கரி போறோம், கைல கிடைச்சத தின்னு கோவத்தை தணிச்சுக்குறோம்” என பும்பா முன்னால் நடக்க ஆரம்பித்தான். நாங்களும் பின் தொடர்தோம். பேக்கரியில் சாப்பிடும் போது எதோ ஒரு கைப்பேசியிலிருந்து, ‘ஏ கலா கலா கண்ணடிச்சா கலக்கலா’ என்ற பாட்டு ஒலித்தது. “முதல்ல இந்த ரிங்க்டோன் எழவ மாத்தணும்டா” என செல்வம் தன் கைப்பேசியை எடுத்து பார்த்தால், அது அவனுக்கு வந்த அழைப்பு இல்லை. எங்கள் இருவரின் கைப்பேசியும் இல்லை. அபோது தான் எங்கள் அருகில் பில் கொடுத்துக் கொண்டிருந்த எங்கள் வகுப்பு முருகேசனின் கைப்பேசி அது என்று தெரிந்தது. எங்களைப் பார்த்து, “என்ன பாக்குறீங்க, இப்போ கொஞ்ச நாளா தான் இந்த ரிங்க்டோன். இனிமேல் இப்படி தான்” என வெட்கப்பட்டு ஓடிக் கொண்டிருந்தான். எங்கள் பும்பா அவனிடம் “டேய் நீ நினைக்குற மாதிரி” என்று பேச ஆரம்பிக்க, நான் அவனது கையை பிடித்து அமர்த்தி இதே தான் அந்த ஜூனியரும் நம்ம கிட்ட சொன்னான். விடு. பஜ்ஜி சாப்பிடு என்றேன்.