வெள்ளி, 9 மார்ச், 2018

ஒரு கதை சொல்லட்டா


(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஆறாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இன்று நான் உங்களுக்கு சொல்லப் போவது ஒரு கதையல்ல. இது ரத்த சரித்திரம். மனதைப் பிழியும் ஒரு டாகுமெண்டரி. படித்து முடித்தவுடன் உங்கள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வரும். எழுந்து நின்று பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் ஒரு வீர வணக்கம் வைப்பீர்கள். இது போன்ற தியாகிகள் மத்தியிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தோன்றும். அடுத்த வருட வீர தீர பராக்கிரம செயலுக்காக மத்திய அரசு வழங்கும் விருது இந்த மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைப்பீர்கள். போதும்டா மேல சொல்லு என்கிறீர்களா?

ஒரே ஒரு பத்திக்கே உங்களுக்கு போர் அடிக்கிறது அல்லவா? இதே போல பத்தி பத்தியாக 4 வருடங்கள் எழுதி பொறியியல் படிப்பில் நாங்கள் கடைத்தேறிய கதை தான் உங்களுக்கு நான் இன்று சொல்லப் போவது. நான் பள்ளி படிப்பு படித்தது தென் தமிழகத்தின் ஒரு கோடியில். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பொறியியல் தான் என்று முடிவு செய்து விட்டேன். படிக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம் என்ற பராசக்தியின் வாக்குக்கிணங்க தமிழகத்தின் மிகச் சிறந்த பொறியியல் கல்லூரிகள் எதுவும் எங்கள் ஊரில் இல்லை. அதனால் எப்படியும் விடுதியில் தங்கி தான் படிக்க வேண்டும் என என் மனதை அப்போதே தயார் செய்து கொண்டேன். பணிரெண்டாம் வகுப்பில் தீயாக வேலை செய்ததன் விளைவாக ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த இடத்தில் எங்கள் கல்லூரியைப் பற்றி கொஞ்சம் பெருமை பீற்ற வேண்டி இருக்கிறது. தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொறியியல் கல்வி வழங்கும் நிறுவனங்களில் எங்கள் அரசு கல்லூரியும் ஒன்று. என்ன நம்பிக்கையோ தெரியவில்லை, எனது தந்தை, பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக கிட்டதட்ட ஒரு ஐம்பதாயிரம் கடன் வாங்க முடிவு செய்திருந்தார்கள். கல்லூரி கட்டணம் எவ்வளவு என்று என்னிடம் கேட்டார்கள். நான் ஏழாயிரத்து சொச்சம் வருகிறது என்றேன். “ஓ, மாசம் அவ்வளவு கட்டணுமா, இன்னும் ஒரு இருவதாயிரம் இடிக்கும். பாத்துக்கலாம், நான் ஏற்பாடு பண்றேன்” என்றார். “ஒரு வருஷத்துக்கே அவ்வளவு தாம்பா” என்றேன். நிச்சயமாக என்னை நம்பவில்லை. “டேய் நல்லா விசாரிச்சியா? பணம்லாம் பிரச்சனை இல்லைடா, கட்டிடலாம்” என்றார். உண்மையாகவே அவ்வளவு தான் என்று நம்ப வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. விடுதி கட்டணம் பற்றி சொல்ல மறந்து விட்டேனே, விடுதி அறை கட்டணம் 302 ரூபாய், அதுவும் ஒரு வருடத்திற்கு!

ஒரு பக்கம் பெரிய செலவில்லாமல் பையனை சேர்த்து விட்டோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், பையனை பிரிய வேண்டுமே என்ற கவலை இருந்தது எனது அப்பாவிற்கு. கிட்டதட்ட 2 வருடங்களாக எனது மனதை நான் சரி செய்து வைத்திருந்ததால், இந்த பிரிவு பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை. ஆனால் இது வரைக்கும் விடுதியில் தங்கி பழக்கமே இல்லை. பள்ளி படிக்கும் போதும் ஒரு துரும்பை கூட அசைத்துப் போட்டதில்லை. அதுவும் கடைக்குட்டி பையன் என்பதால் ஏகப்பட்ட செல்லம் வேறு. ஆனால் விடுதி உலகம் வேறல்லவா. இனிமேல் வாழ்க்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்து ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்ய வேண்டும் என அட்டவணை எல்லாம் போட்டு வைத்திருந்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், விடுதியில் சேர்ந்து முதல் ஒரு வாரம் தினம் தினம் துவைத்துக் கொண்டிருந்தேன். வர வர மாமியா கழுதை போல போனாளாம் என்ற சொலவடைக்கு இணங்க நான்காம் ஆண்டு படிக்கும் போது விடுதியில் துவைப்பதெல்லாம் இரண்டு மாதங்களுக்கோ அல்லது மூன்று மாதங்களுக்கோ ஒரு முறை என்றாகி விட்டது. அதுவும் ஊருக்கு போகும் போது அழுக்கு மூட்டையை கொண்டு சென்றால் வீட்டில் துவைத்து தேய்த்து கொடுத்து விடுவார்கள்.

இந்த மாமியா சொலவடை படிப்பிற்கும் பொருந்தும். முதலாம் ஆண்டில் வரும் முதல் பருவத்தேர்வுக்கு கிட்டதட்ட விடுதியில் எல்லோருமே பொறுப்பாக தான் படித்தார்கள். பனிரெண்டாம் வகுப்பின் தாக்கம் அது. முதலாம் ஆண்டின் இரண்டாவது பருவத்தேர்வில் தான் ஆரம்பித்தது எங்கள் கதை சொல்லும் படலம். அந்தத் தேர்வில், “Object Oriented Methodologies” என்றொரு தேர்வு இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பிரிவு மாணவர்களுக்கானது. ஒரு மென்பொருளைக் கட்டமைக்கும் போது இந்த Object oriented நுட்பத்தை பயன்படுத்தி கட்டமைக்கலாம். இது தான் அதன் சாராம்சம். அந்த தேர்விற்கு படிக்க கிராடி பூச் (Grady Booch) என்றொருவர் எழுதிய புத்தகத்தை பரிந்துரைத்திருந்தார்கள் கல்லூரியில். நாங்களும் பொறுப்பாக அந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தோம். தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. “பூவை பூ என்றும் சொல்லலாம், புய்பம் என்றும் சொல்லலாம். நீங்கள் சொல்வது போலவும் சொல்லலாம். நான் சொல்வது போலவும் சொல்லலாம். ஏன் சொல்லாமலே கூட இருக்கலாம். சொல்லாம இருப்பதால் பூ என்ற ஒன்று இல்லாமல் போய்விடுமா, இல்லை பூவிற்கு தான் பூ என்ற பெயர் இருப்பது தெரியுமா? பூ என்ற பெயர் இல்லாவிட்டாலும் பூ என்பது பூக்கக்கூடியது தானே. பூத்தல் தான் அதன் இயல்பே, அதைப்போல மென்பொருள் தொழில்நுட்பத்தில்…….” இப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல 300 பக்கங்கள். படிக்க படிக்க கடுப்பு தான் ஆகியது. இது தொழில்நுட்பம் பற்றிய பரீட்சையா அல்லது தத்துவ பரீட்சையா என்றுஎங்களுக்கே குழப்பம். இது வேலைக்கு ஆகாது, அதனால் ஒவ்வொருவரும் ஒரு ஒரு பாடம் படிப்போம் அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்போம் என்று பஞ்சாயத்தில் முடிவானது. இந்த தருணம் தான் எங்கள் பொறியியல் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம். அடுத்து வந்த 3 வருடங்களுக்கு இந்த தருணம் தான் வழிகாட்டியது. 

ஒரு வழியாக அந்த தேர்வில் கதை சொல்லி கேட்டு வகுப்பில் அனைவருமே தேர்ச்சி அடைந்து விட்டோம். அட! இவ்வளவு தானா, இதையே இனிமேல் கடைபிடிப்போம் என்று முடிவாகியது. பனிரெண்டாம் வகுப்பின் படிப்பாளி பிம்பம் இன்னும் கொஞ்சமேனும் எல்லோர் மீதும் ஒட்டி இருந்ததால், இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் பரீட்சைக்கு ஒரு பாடம் தவிர மற்ற எல்லாவற்றையும் படித்து விட்டு, அந்த ஒரு பாடத்தை கதை கேட்டு ஒப்பேற்றி விடுவோம். வகுப்பில் இருக்கும் பெண்களெல்லாம் விரலுக்கு ஒரு பேனா என வானவில் வண்ணங்களில் பேனாக்களைக் கொண்டு விடைத் தாள் முழுதும் கோலமிட்டு கொண்டிருக்க, நாங்களோ,” டேய் கட்டிலுக்கு அடில பேனா இல்லாம ஒரு ரீபில் மட்டும் இருந்துச்சு பாத்தியா” என்று கடைசி நிமிடத்தில் தேடி, அதை வைத்தே எழுதி தேர்ச்சியும் அடைந்து கொண்டிருந்தோம்.

மூன்றாம் ஆண்டு வரும் போது கொஞ்சம் குளிர் விட்டு போய் விட்டது. மேலும் எப்படி எழுதினால் தேர்ச்சி அடையலாம் என்ற சூட்சமமும் பிடிபட்டு விட்டது. ஒருவர் மொத்தமுள்ள 5 பாடங்களில் (யூனிட்) ஒன்றை மட்டும் படித்து விட்டு, மற்ற 4 பாடங்களை கதை கேட்டு ஒப்பேற்றி விடலாம் என்ற நிலைமை வந்திருந்தது. ஒவ்வொரு யூனிட்டுக்கும் மேல நீ படிக்கிற இன்னொரு யூனிட் மத்தவனோடது என்ற கம்யூனிச சித்தாந்தத்தில் மிகத் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது. பரீட்சைக்கு முந்தின நாள் எல்லோரும் அவரவர்க்கு ஒதுக்கபட்ட அந்த ஒற்றைப் பாடத்தை படித்து விட்டு, இரவு சாப்பாட்டுக்கு மேல் கதை சொல்ல ஆரம்பிப்போம். கதை சொல்லி முடிக்க 10-11 மணி ஆகி விடும். அதன் பிறகு அப்படியே பரீட்சை எழுத முடியாதல்லவா, அதனால் கேட்ட கதையை ஒரு முறை திருப்பி பார்த்து விட்டு தூங்கி விடுவோம். காலையில் ஒற்றை ரீபிலை எடுத்துக் கொண்டு சிங்கம் ஒன்று புறப்பட்டதே பிண்ணனி இசையோடு சென்று 40 பக்கங்களை நிரப்பி விட்டு வந்தால் பாஸ். இவ்வளவு தான் செய்முறை. மேலும் ஒரு விடைக்கு வரைபடம் (diagram)  இருந்தால் நாங்கள் எல்லாம் குஷியாகி விடுவோம். வரைபடத்திற்கு பொம்மை என்று பெயரிட்டிருந்தோம். ஒரு பாடத்தை படித்து மற்றவர்க கதை சொல்லும் போதே “டேய் இந்த கொஸ்டின்ல பொம்மை இருக்கு பார்த்துக்கோங்க” என்று குறிப்பிட்டு விடுவோம். ஏனென்றால் பொம்மை போட்டு விடை எழுதும் போது, பொம்மைக்கே ஒரு அரை பக்கம் சென்று விடும். மேலும் பொம்மையின் பாகம் குறித்து, இந்த பொம்மையில் இது தான் இது, அது தான் அது என மேலும் ஒரு அரை பக்கம் ஓட்டி விடலாம். ஆக 3-4 பக்கங்கள் எழுத வேண்டிய விடையில் ஒரு பக்கம் இப்படியே சென்று விடுவோம். அதானால் பொம்மை பட கேள்விகளுக்கு எங்கள் மத்தியில் மவுசு அதிகம்.

இந்த கதை கேட்கும் படலத்தில் சில குறிப்பிட்ட விசித்திர ஜீவன்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு முறை எங்கள் வகுப்பில் இருந்த லக்‌ஷ்மணன் மற்றொரு வகுப்பு கதை கேட்கும் அமர்வில் அமர்ந்திருந்தான். “டேய் அந்த டிபார்மெண்ட் பசங்க கதைய நீ ஏண்டா கேக்குற” என்றால், “யாருக்குடா தெரியும், கதை நல்லா இருந்துச்சு, அதான் இங்கயே உக்கார்ந்துட்டேன்” என்றான். அப்படி என்றால் நாங்கள் படித்த லட்சணம் உங்களுக்கே விளங்கி இருக்கும்.

நான்காம் ஆண்டு படிக்கும் போது ஒரு விநோதமான சோதனை வந்தது. எல்லா பரீட்சைகளிலும் நான்காவது பாடம் மட்டும் மிகக் கடினமாக இருந்தது. அந்த பாடத்தை படித்து கதை சொல்ல யாருமில்லை. கடைசியாக ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல குமாரிடம் நான்காவது பாடத்தை தள்ளி விட்டு விடுவோம். (அடி வாங்க என்றே ஒரு ஜீவன் இருந்ததாக ஏற்கனவே ஒரு கதையில் கூறி இருந்தேன் அல்லவா, அதே குமார் தான்). வழக்கம் போல அவன் அந்த ஒரு பாடத்தையே படிக்க மாட்டான். அதையும் அரை குறையாக படித்து விட்டு கதை சொல்வான். “டேய் ஏண்டா எப்பவும் 4th யூனிட்ட என்கிட்டயே தள்ளி விடுறீங்க” என்று புலம்புவான். எப்படியும் நான்காம் பாடத்திற்கான கேள்விகளை மட்டும் சரியாக எழுதி இருக்க மாட்டோம், “உன்னால தான் நாயே, நாங்க சரியா பரீட்சை எழுதல” என்று நான்கு அடி போடுவோம். “இல்லாட்டா மட்டும் கோல்ட் மெடல் வாங்குற அளவுக்கு எழுதி கிழிச்சுருவீங்க பாரு” என்பான். “ஆமாடா எழுதி கிழிச்சிருப்போம்டா” என்று மேலும் இரண்டு அடி விழும்.

இவன் இப்படி என்றால் மலை மாடு இன்னொரு ரகம். அநேகமாக அவனுக்கு அவர்கள் அம்மா அப்பா இட்ட பெயர் ராஜராஜன் என்று நினைக்கிறேன். ஆனால் அதெல்லாம் ஞாபகம் இல்லை. நினைவு தெரிந்த நாள் முதல் அவன் பெயர் மலைமாடு தான். இராச்சாப்பாட்டுக்கு மேல் கதை கேட்க வரும் போது நன்றாக குளித்து விட்டு, பட்டையும் விபூதியுமாக கையில் ஒரு வாட்டர் பாட்டிலோடு கதை கேட்கும் அறைக்கு வந்து விடுவான். நன்றாக ஒரு சுவர் ஓரமாக உட்கார்ந்து கதை கேட்டு விட்டு, 11 மணிவாக்கில் திருப்பி பார்க்க ஆரம்பிப்பான். பயல் 10 மணியே பார்த்ததில்லை. 11-12 எல்லாம் ரொம்ப கஷ்டம். ஆனாலும் அடுத்த நாள் பரீட்சை அல்லவா தூங்கவும் மனது வராது. “டேய் நான் ஒரு 3 மணிக்கு அலாரம் வெச்சிருக்கேன். என்னை எழுப்பி விட்ருங்க” என்பான். 3 மணிக்கு எழுப்பி விட்டதும் கட்டிலில் ஜம்மென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு, புத்தகத்தை முன்னால் வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விடுவான். எழுப்பி விடலாம் என்று நாம் அருகில் சென்றால் உட்கார்ந்து தூங்கியவாறே “யாரும் என்ன எழுப்ப வேண்டாம், ஏன்னா நான் தூங்கல. நான் தூங்கல.. ஒரு 5 நிமிஷம் ரெஸ்ட்” என்பான். இந்த 5 நிமிஷம் ரெஸ்ட் அப்படியே 8 மணி வரை சென்று விடும். அப்புறம் என்ன முந்தின நாள் கேட்ட கதையை வைத்து எழுத வேண்டியது தான்.

இப்படி கதை கேட்டு எழுதியதால் நாங்கள் யாரும் பொறியியல் வல்லுநர்கள் அல்ல என்று தவறான கணக்கு போட்டு விடக் கூடாது வாசக அன்பர்களே. கிட்டதட்ட என்னுடன் படித்த எல்லோருமே இன்று நல்ல வேலையில், பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். இப்போதும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் அறிவு வேறு, பரீட்சை வேறு என்ற விதிமுறைக்கு எங்கள் பொறியியல் கல்வியும் விதிவிலக்கல்ல. எல்லா கல்லூரி பரீட்சையிலும் தேர்ச்சி அடைய ஒரு சூட்சமம் உண்டு, எங்கள் கல்லூரி பரீட்சைக்கான சூட்சமத்தை நாங்கள் கண்டு கொண்டோம். அதை நாங்கள் மட்டும் பயன்படுத்தாமல் மற்ற எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து பயன் பெற செய்தோம். அவ்வளவு தான்.

ஆனால் இந்த கதை கேட்கும் படலம் மூலம் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களோடு ஒரு ஒட்டுதல் உருவாகியது. ஒரு பாடத்தை படிப்பதை விட அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் சொல்பவர் கேட்பவர் இருவருமே பயன்பெறுவார்கள் என்கிற உண்மை உரைத்தது. எல்லாவற்றையும் விட எனது நான்கு ஆண்டு கல்லூரி வாழ்வில் எனது மனம் கவர்ந்த ஆசிரியர் யார் என்று என்னிடம் இப்போது கேட்டால் எனது நண்பர்கள் தான் என்ற பதிலே எஞ்சி இருக்கிறது.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஏகலைவர்கள்

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஐந்தாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

என்னதான் நாங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தாலும் அது என்னவோ வண்ண ஆடைகள் போட்டு பள்ளிக்கு செல்லும் பதிமூன்றாம் வகுப்பு போல தான் இருந்தது. அவ்வளவு கட்டுப்பாடுகள் முதலாம் ஆண்டில். ஆனால் இரண்டாம் ஆண்டில் எல்லோரும் அவிழ்த்து விட்ட கழுதைகள் தான். எப்போது வேண்டுமானாலும் கல்லூரிக்கோ விடுதிக்கோ வரலாம், போகலாம். பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை (ஆண்களுக்கு மட்டும்). ஆனால் என்ன செய்ய முதலாம் ஆண்டு முடித்து விட்டு தான் இரண்டாம் ஆண்டு போக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அதனால் அந்த வித்தியாசமான பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தோம். 

பிப்ரவரி மார்ச் மாதங்களில் கல்லூரியே களை கட்டி விடும். ஏனென்றால் அந்த மாதங்களில் தான் ஒவ்வொரு துறையும் தங்கள் துறை சார்பாக தேசிய அளவிலான பல்தொழில்நுட்ப கருத்தரங்களும் போட்டிகளும் நடத்துவார்கள். ஆனால் உண்மையில் அவற்றில் தேசியமும், பல்தொழில்நுட்பமும் போனால் போகிறதென்று பேரளவுக்கு தான் இருக்கும். இரண்டும் நாட்கள் நடக்கும் இந்த விழாவில், இரண்டு நாளும் மதியம் 3 மணிக்கு மேல் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்வு தான் மிக முக்கியமான நிகழ்வாக எல்லோராலும் பார்க்கப்படும். கிட்டதட்ட 2-3 மாதங்களுக்கு முன்பாகவே அதற்கான வேலையை ஒவ்வொரு துறையும் தொடங்கி விடுவார்கள். ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இத்தகைய விழாக்களை நடத்துவதால், பிப்ரவரி மார்ச் மாதம் முழுதுமே கல்லூரி வண்ணமயமாக இருக்கும். நிற்க, இது எல்லாமே இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் தான். முதலாம் ஆண்டு மாணவர்களால் இந்நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராகக் கூட செல்ல முடியாது. அதனால் நாங்கள் எல்லோரும் கெஞ்சி கேட்டதற்கு இணங்க, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஒரு அறிவியல் கருத்தரங்க விழாவை நடத்தினார்கள் கல்லூரியில் இருந்து. வழக்கம் போல இதில் அறிவியலும் கிடையாது, கருத்தரங்கமும் கிடையாது. முழுக்க முழுக்க ஆடல் பாடல் தான்.

ஒரு நாள் மட்டுமே இந்த விழா நடத்த வேண்டும். 6 மணிக்குள் முடிக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட வேண்டும்கள். எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டோம். ஒவ்வொரு வகுப்பும் ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும். அது ஆடலோ அல்லது பாடலோ அல்லது நாடகமாகவோ இருக்கலாம். எங்கள் வகுப்புக்கான பஞ்சாயத்து கூடியது. பெண்கள் சார்பாக ஒரு நடனம் ஆடுவதென முடிவெடுத்தார்கள். மற்ற எல்லா வகுப்புகளிலும் நடனம் மட்டுமே இருந்தது. நமக்கு தான் மூக்கு புடைப்பாக இருக்குமல்லவா, அதானால் எங்கள் வகுப்பு ஆண்கள் சார்பாக நாடகம் போடலாம் என்று முடிவெடுத்தோம். அதுவும் வகுப்பில் உள்ள 35 பசங்களும் சேர்ந்து நடிப்பதென.

இந்த இடத்தில் என்னை பற்றிய ஒரு சுய விளம்பரம் அவசியமாகிறது. பள்ளியில் நடந்த 'ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்' என்ற நாடகத்தில் ஏழு குள்ளர்களின் தலைமைக் குள்ளனாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு, உதடு ஒட்டி வசனம் பேசினால் லிப்ஸ்டிக் அழிந்து விடுமென உதடு ஒட்டாமலேயே பேசி நடித்தவன் நான். ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்லலாமா, "மாப்ள! நான்லாம் ஸ்கூல்லயே நெறைய நாடகம் நடிச்சிருக்கேன். ப்ரைஸ்லாம் கூட வாங்கிருகேன். நாம நாடகம் கெத்தா பண்றோம்" என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டேன். அப்பாவிகள் நம்பி விட்டார்கள்.

முதலில் நாடகத்திற்கான கதை வேண்டும். அதற்காக ஒரு சிறு குழு ஒன்று கதையும் வசனமும் தயாரிப்பது என்றும், அவை முடிவான பின் எல்லோரும் சேர்ந்து ஒத்திகை பார்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. சரி கதை எழுத யாரை தேர்ந்தெடுப்பது? இங்கிலீஷ்காரன் படத்தில் வடிவேலு கிரிக்கெட் விளையாட ஆள் எடுத்தது போல, "மாப்ள, இவன் போன டெஸ்ட்ல 20 பக்கமும் நிரப்பி 4 மார்க் தாண்டா வாங்கிருந்தான். செமயா கதை எழுதுவான் போல, இவன எடுத்துக்கலாம்" என்று ஒருவனையும், "இவன் ரொம்ப நேரம் பொண்ணுங்க கூட கடலை போடுறாண்டா, இவனையும் எடுத்துக்கலாம்" (உண்மையில் அவன் பெண்களோடு பேசுவதால் எங்களுக்கு ஏற்பட்ட புகைச்சல். எங்களோடு வந்தால் அந்த சமயத்தில் பெண்களோடு பேச முடியாது அல்லவா) என்றும் ஆட்களை சல்லடை போட்டு எடுத்துக் கொண்டிருந்தோம்.

விடுதியின் மற்ற அறைகளிலெல்லாம் குத்துப்பாட்டு போட்டு அதற்கு நடன அசைவுகளை பழகிக்கொண்டிருந்தார்கள் மற்ற துறை மாணவர்கள். நாங்கள் மட்டும் அமைதியாக ஒரு அறையில் அமர்ந்து மிகத் தீவிரமாக கதை யோசித்துக் கொண்டிருந்தோம். "வாத்தியாரே பசிக்குது, சாப்டு சாயந்திரமா யோசிப்போமா" என்ற மண்ட கசாயங்களின் நப்பாசையைத் தாண்டி யோசித்துக் கொண்டிருந்தோம். நாங்களெல்லாம் அப்போது மிகப் பெரிய புரட்சியாளர்கள் அல்லவா அதனால் நாடகத்தில் தெறிக்க தெறிக்க புரட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

"மச்சி, நம்ம காலேஜ்லயே ஏகப்பட்ட தப்பு நடக்குது, நாம அத வெச்சு ஒரு நாடகம் போடுவோமா?"

"வேணாம் மச்சி, அரியர் போட்ருவாங்க. நாம ஏன் நம்ம நாட்டை சீரழிச்சுகிட்டு இருக்கிற மத்திய அரச கலாய்ச்சு ஒரு நாடகம் போடக்கூடாது" (பாருங்களேன் இந்த ஸ்டேட்மென்ட் எந்த கவர்மெண்ட் ஆட்சி பண்ணாலும் ஒத்து போகுது, நாங்க இந்த ஸ்டேட்மெண்ட் சொன்னது 12 வருஷத்துக்கு முன்னால)

"வேணாம்டா, ஆளும் கட்சி புரபொசர் யாராவது இருந்தா அரியர் வெச்சிடுவாங்க"

"அதுவும் சரி தான், எதிர்கட்சிய கலாய்ச்சாலும் அரியர் விழலாம். அப்போ என்ன தாண்டா பண்றது? பேசாம நாமளும் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டத்தை போட்ருக்கலாமோ"

"முன் வெச்ச கால பின் வாங்க கூடாதுடா. அரியர் போட முடியாதபடி ஒரு கான்செப்ட் ரெடி பண்ணுவோம்"

இப்படியாக எங்களது புரட்சி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. கடைசியாக கடவுள் பூமிக்கு வந்து இந்த உலகத்தை பார்த்து பின்பு வெறுத்து திரும்பி போவதாக ஒரு நாடகத்தை தயார் செய்தோம். அதிலேயே அரசியல், விளையாட்டு, கல்வி, மருத்துவம், இலவசங்கள் என்று அந்த காலத்தில் நடந்த சூடான கருப்பொருள்களை வைத்து ஒரு மாதிரியாக கலந்து கட்டி தயார் செய்து விட்டோம். கடவுளை கேலி செய்வது போல வந்தால் அரியர் விழுமா என்று யோசிக்க தனியாக ஒருவனை நியமித்திருந்தோம்.

நாடகம் தயார். நாடகத்திற்கு தலைப்பு என்ன வைக்கலாம் என்று ஆளாளுக்கு விட்டத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தோம். இந்த இடத்தில் கோவிந்தனைப் பற்றி சொல்ல வேண்டும். கோவிந்தன் - ஆள் கோட் அடிப்பதில் புலி. ஆனால் வாத்சாயனாரின் ஒன்று விட்ட பேரன் போலவே இருப்பான். எந்த விஷயம் எடுத்தாலும் அதை ஒரு காமக் கலைக் கண்ணோடு தான் அணுகுவான். எங்களுக்கெல்லாம் தமிழில் கிடைத்தற்கரிய புத்தகங்களை கொடுத்து (அப்போது கணினி பரவலாக இல்லை) எங்களை வாழ வைத்துக் கொண்டிருந்தான். ஆனால் விதி பாருங்கள், அவனும் இந்த நாடகத் தயாரிப்பு குழுவில் இருந்தான்.

"சிம்பிளா கடவுள்னு பேர் வைக்கலாமா". இது நான்.

"வேணாம்டா, ஏதாவது catchy யா இருக்கனும்" என்றான் குமார்.

பங்க் பெட்டின் இரண்டாவது அடுக்கில் விட்டதைப் பார்த்து மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நமது திருவாளர் கோவிந்தனார், திடீரென்று புரண்டு எழுந்து

"ஓடி வந்த சாமிக்கு மூடு ஏத்துன பூமி - எப்படி இருக்கு இந்த டைட்டில்" என்றான் வாயெல்லாம் பல்லாக.

"டேய் காண்டு ஏத்தாதடா கண்......." என்றான் முருகேஷ்.

"போங்கடா!"என்று திரும்பவும் தனது சயன நிலைக்கு சென்று விட்டான்.

வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டது, எனவே சீக்கிரம் தலைப்பை முடிவு பண்ணியாக வேண்டும் என்று வேகமாக யோசித்து ஒவ்வொரு தலைப்பாக சொல்லிக் கொண்டிருந்தோம்.

"கும்முனு சாமி, ஜம்முனு காமி" இது எப்டிறா இருக்கு. கடவுளுக்கு பூமிய காட்டுறோம்ல கதைப்படி, செட் ஆகும்டா, வைங்கடா" என்றான் அதே கோவிந்தன்.

அரியர் விழுமா என்று யோசிக்க ஒருவனை இரண்டு பத்திக்கு முன்னால் நியமித்திருந்தோம் அல்லவா, அவன் வந்து - "டேய் கான்செப்டுக்காகலாம் அரியர் விழாதுடா. ஆனா இவன் சொல்ற டைட்டில வெச்சா கண்டிப்பா விழும்" என்றான். இது சரிப்படாது என்று பூமிக்கு வந்த சாமி என்று தலைப்பை முடிவு பண்ணி, ஒத்திகை ஆரம்பித்து விட்டோம்.

35 மாணவர்கள். சமத்துவத்தை நிலை நாட்டுவதாய்க் கூறிக் கொண்டு, எல்லோருக்கும் ஒரு வரியாவது வசனம் வருமாறு செய்தோம். ஒத்திகை எல்லாம் ஒரு மாதிரியாக முடிந்து நாடகம் அரங்கேற்றும் அந்த பொன்னாளும் வந்தது. ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா நண்பர்களே, அது தன் வேலையைக் காட்ட துவங்கியது. வழக்கம் போல நிகழ்ச்சி தாமதமாய் துவங்க ஒவ்வொருவரும் வந்து அவசர அவசராமாக கையை காலை அசைத்து நடனம் என பெயரிட்டு சென்று கொண்டிருந்தார்கள். கூட்டமோ தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கை தட்டி விசிலடிப்பதும் மற்ற துறை மாணவர்கள் நடனம் ஆடும் பொழுது சத்தம் போட்டு கேலி கிண்டல் செய்து கொண்டும் இருந்தார்கள். முதலில் நடனங்கள் முடியட்டும். நாடகம் கடைசியாக இருக்கட்டும் என்று ஏதோ ஒரு அதி புத்திசாலி ஆசிரியர் முடிவு எடுத்து எல்லோரையும் அவசர அவசரமாக மேடையேற்றிக் கொண்டிருந்தார். ஏற்கனவே மணி 7 ஆகி விட்டது. 6 மணி வரை தான் பிரின்சிபாலிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம், அதனால் நாடகம் வேண்டாம் என்று ஆசிரியர்கள் மத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி 10 நிமிடங்கள் மட்டும் கொடுங்கள் என்று கேட்டு மேடை ஏறி விட்டோம்.

முதலில் எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. சில இடங்களில் எல்லாம் கைதட்டு கூட கிடைத்தது. ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் என்பது போல நாங்களும் நடித்துக் கொண்டிருந்தோம். 10 நிமிடங்கள் தான் கேட்டோம். ஆனால் நாடகம் 20 நிமிடங்களைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்து விட்டார்கள். ஆசிரியர்கள் முகமும் மாற ஆரம்பித்து விட்டது. அப்போது தான் ஒரு பிச்சைக்காரன் எவ்வித உழைப்பும் இன்றி அரசு கொடுக்கு இலவசங்களை வைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாய் ஒரு காட்சி நடந்து கொண்டிருந்தது.ஆசிரியர் ஒருவர் அமைதி இழந்து "சைலன்ஸ்! எல்லாம் போதும்" என்று சொல்ல மொத்த அரங்கமுமே அமைதி ஆகி விட்டது. ஆனால் நாங்கள் தான் சிவாஜியின் ஒன்று விட்ட பேரன்கள் அல்லவா, தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தோம். மொத்த அரங்கமும் அமைதி ஆன பொழுது அந்த பிச்சைக்கார கதாபாத்திரம்

"சும்மா இருக்கற நேரத்துல அவளை அம்மா ஆக்கிட்டேனு வைங்க அதுக்கும் காசு கிடைக்கும்" என்று கடவுளிடம் சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தான். ஆசிரியருக்கோ கனகோபம். மொத்த அரங்கமும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசிரியர் மேடைக்கே ஏறி வந்து, வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா என்று வாஞ்சையுடன் கேட்டுக் கொண்டார்.

முதல் நாடகமே தோல்வி அடைந்ததை எண்ணி வருந்திக் கொண்டிருந்தோம். பின்பு விடுதி அறையில் அமர்ந்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

"அந்த டயலாக் யாருடா எழுதுனா, அதுனால தாண்டா பிரச்சனை" என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது

"டேய், ஹாரிபாட்டரும் ஹெர்மாயினின் இன்பவெறியும் அப்படினு ஒரு செம புக் வந்திருக்கு பார்த்தீங்களா!" என்றபடி உள்ளே நுழைந்தான் கோவிந்தன். இவன் தாண்டா எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்லி எங்கள் கோபத்தை எல்லாம் கோவிந்தன் மீது தணித்துக் கொண்டோம். பயலுக்கு அன்று செம அடி. 

முதல் நாடகம் தோல்வி அடைந்தாலும் நாடகம் போடும் ஆசை மட்டும் அடங்கவில்லை. இரண்டாம் ஆண்டு எங்கள் துறையின் சார்பாக தேசிய அளவிலான பல்தொழில்நுட்ப கருத்தரங்கில், மாலை கலை நிகழ்ச்சிகளில் நாடகம் போடுவதென முடிவெடுத்தோம். இந்த முறை சென்ற தவறுகளை எல்லாம் களைந்து விட்டு, இந்த புரட்சி வெங்காயத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மொத்தமே 10 நிமிடங்களுக்குள் இருக்குமாறும், பத்தே பத்து மாணவர்களைக் கொண்டு கல்லூரி வாழ்வை மையமாக வைத்து ஒரு நாடகம் தயாரித்தோம். இந்த முறை வசனங்களை மேடையில் பேசாமல், முன்பே பதிவு செய்து ஒலிக்கவிட்டு மேடையில் அதற்கேற்றவாறு நடிக்கலாம் என முடிவு எடுத்தோம். பதிவு செய்யப்பட்ட வசனங்களோடு கலை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் நான்காம் ஆண்டு சீனியர் அண்ணாவின் அறைக்கு சென்றோம். ஏற்கனவே முதலாம் ஆண்டில் நாங்கள் செய்த வீர தீர ப்ரஸ்தாபங்களை அவரும் கேள்விப்பட்டு இருந்ததால் ஒரு சந்தேகத்தோடே தான் எங்களை அணுகினார். வசனங்களை கேட்டு விட்டு இந்த நாடகம் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லையே என்று இழுத்தார். நாங்களும் வழக்கம் போல கெஞ்சி கூத்தாடி அவரை ஒப்புகொள்ள செய்தோம். இந்த முறையும் இரண்டு நாட்கள் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு நாடகம் மட்டுமே. எங்களுடையது தான். கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

நாடகம் தொடங்கியதில் இருந்து கைதட்டல். வழக்கமாக பின்வரிசையில் இருந்து கிண்டல் அடிக்கும் குழுவும் இம்முறை கைதட்டியது. நாடகம் முடியும் போது அரங்கத்தில் ஒரு பகுதியினர் 'ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்' என்று கத்தினர். எங்கள் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. சீனியர்கள் மத்தியில் ஓவர் நைட்டில் ஒபாமாக்கள் ஆகி விட்டோம். "அந்த நாடகம் போட்ட பசங்கள கூப்பிடு பேசணும்" என்று சீனியர் ஒருவர் எங்கள் எல்லோரயும் கூப்பிட்டு தனியே பாராட்டினார். எங்கள் யாரையும் கையில் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் பாருங்கள் மகாஜனங்களே பெண்கள் மத்தியிலும் இந்த நாடகத்துக்கு வரவேற்பு இருந்தாலும் அதன் பிறகும் இதயம் முரளிகளாத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம். அது ஒரு சோக கிளைக் கதை.

ஒரு நாடகத்தை வெற்றியடையச் செய்யும் சூட்சமம் ஓரளவு புலப்பட ஆரம்பித்தது. அதன் பிறகு கல்லூரிக்குள் நடக்கும் மற்ற கலை நிகழ்ச்சிகளிலும் சென்று நாடகம் போட ஆரம்பித்தோம். மூன்றாம் ஆண்டு கலை நிகழ்ச்சிக்கு 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை தழுவி கல்லூரியைக் கழுவி ஊற்றும் ஒரு புரட்சி நாடகம் போட்டோம். 

விடுதி குழாயைத் திறந்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும் A) தண்ணீர்  B) காற்று C) பல்பு D) பிம்பிளிக்கி பிளாப்பி போன்ற கேள்விகள். இப்போது இந்த கேள்விகள் மிக சுமாராக தெரியலாம். ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்கின்ற எங்களைப் போன்ற விடுதி மாணவர்கள் மத்தியில் பலத்த ஆராவாரம். கல்லூரிக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி நாடகம் முடியும் முன்னரே மீண்டும் மேடையில் இருந்து இறக்கி விடப்பட்டோம். ஆனால் இந்த முறை இதை தோல்வியாக கருதவில்லை. மாணவர்கள் மத்தியில் எங்களுக்கு பலத்த கைதட்டல்கள்.

அதன் பிறகு எங்களைப் போலவே மற்ற துறையில் நாடகம் போடும் மற்ற மாணவர்களோடு இணைந்து நாடகம் போட ஆரம்பித்தோம். ஏகலைவர்கள் என்று எங்கள் குழுவிற்கு பெயர் வைத்தோம். எங்கள் சீனியர்களின் உதவியோடு மற்ற கல்லூரிகளுக்கும் சென்று நாடகம் போட ஆரம்பித்தோம். அங்கேயும் தோல்விகளும், அவமானங்களும் தாராளமாக கிடைத்தன. அவ்வப்போது வெற்றியும் :) தொடர்ந்து ஏகலைவர்கள் குழுவை வளர்க்க ஆரம்பித்தோம். எங்கள் ஜீனியர்களையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களிடமும் கற்றுக் கொண்டு என ஏகலைவர்கள் ஒரு தனி பிராண்டாக வளர ஆரம்பித்தது கல்லூரியில். கல்லூரிக் காலம் நான்கு ஆண்டுகள் தானே. அதனால் நாங்கள் வெளி வந்து விட்டோம். பல்வேறு வேலைகளில் இருந்தாலும் சென்னையில் ஒரு நாடகக் குழு ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து ஒரு சில நாடகங்களும் போட்டோம். ஆனால் நாடகம் சோறு போடாது, கோட் அடித்தால் சோறு கிடைக்கும் என்பதை வெகு சீக்கிரமாக உணர்ந்ததால் அதனைத் தொடர முடியவில்லை. ஆனால் கல்லூரியில் ஏகலைவர்கள் குழு சிறப்பாக செயல்பட்டு வந்தது நாங்கள் வெளியே வந்த பிறகும். கிட்டதட்ட 10 வருடங்கள் ஓடி விட்டன. இன்று ஏகலைவர்கள் குழு அடைந்திருக்கும் இடம் மிக முக்கியமானது. திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை ஐஐடி போன்ற மிகப் பெரிய கல்லூரிகளில் எல்லாம் சென்று தங்கள் முத்திரையை பதித்து விட்டு வந்தார்கள். இப்போதும் தமிழக அளவிலான கல்லூரிப் போட்டிகளில் ஏகலைவர்கள் கலந்து கொண்டால் ஒரு பரிசாவது வாங்காமல் வரமாட்டார்கள் எனலாம். கோவையில் அரசு சார்பாக நடக்கும் விழாக்களிலும் கூட ஒரு சில விழிப்புணர்வு நாடகங்களும் போட்டுள்ளனர். ஆனால் இந்த வளர்ச்சி எதையும் அருகில் இருந்து பார்க்க நாங்கள் யாரும் இல்லை. ஆனால் விதை....... :)





செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

முலாம் பழ ஜீஸா? சாத்துக்குடி ஜூஸா?

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் நான்காவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

எல்லா வகுப்புகளிலும் பின்வரும் வகையில் மாணவர்கள் இருப்பார்கள். முதல் வகை கடலை, காதல், குடும்பம் என ஏகபோகமாக வாழ்பவர்கள். இரண்டாவது வகை விக்கிரமாதித்தன்கள் வகை, எப்படியும் நம்மளிடமும் ஒரு பெண் பேசி விடுவாள் என்ற நம்பிக்கையில் நடமாடும் இதயம் முரளிகளாக இருப்பார்கள். மூன்றாவது வகை, சீ சீ இந்த பழம் புளிக்கும் என எந்த பெண்களிடமும் பேச மாட்டோம் என விரதம் இருப்பார்கள். இதில் முதல் மற்றும் இரண்டாவது வகையைக் கூட நம்பி விடலாம். ஆனால் இந்த மூன்றாவது வகை இருக்கிறார்களே எமகாதகர்கள். நாங்களாம் பொண்ணுங்க கூடயே பேச மாட்டோம், மாஸ்டா நாங்க என்று கம்பு சுற்றுவார்கள். ஆனால் உண்மையில் "பொண்ணுங்க கூட பேசவே மாட்டோம் (வாய்ப்பு கிடைக்கும் வரை)" என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் நாம். அப்படிபட்ட கதை தான் இன்று நான் உங்களுக்கு சொல்லப் போவது.

எல்லா வகுப்பையும் போலவே எங்கள் வகுப்பிலும் ஒரு குழு இருந்தார்கள். பொண்ணுங்க கூடவே பேச மாட்டோம் என்பது தான் அவர்களது கொள்கை. அவர்களாகவே அவர்களுக்கு கெத்து கேங் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நானெல்லாம் இதயம் முரளி குழு என்பதால் அவர்களோடு பெரிய ஒட்டுதல் இல்லை. என்னுடைய எதிரிகளெல்லாம் நான் முதல் வகையைச் சார்ந்தவன் என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள் மக்களே, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டும். கடமை, கண்ணியம், தட்டுப்பாடு கட்டுப்பாடு என்று வாழ்ந்தவன் நான். நானுண்டு, என் வேலையுண்டு என்று வாழ்ந்து உலக மாணாக்கர்களுக்கெல்லாம் ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவன் என்பதை இந்த இடத்திலே மிகுந்த தன்னடக்கத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். (இந்த எபிசோடுக்கு இந்த பில்டப் போதும்னு நினைக்கிறேன். இனிமேல் கதைக்குள்ள போயிடலாம்)

மூன்றாம் ஆண்டு பருவத் தேர்வு நெருங்கி வரும் சமயம் அது. வழக்கம் போல நாங்களெல்லாம் படிப்போம் என்று நம்பி ஸ்டடி ஹாலிடேஸ் அறிவித்திருந்தார்கள். ஸ்டடிக்கு ஹாலிடேஸ் விடுவது தாம்லே ஸ்டடி ஹாலிடேஸ் என்ற முன்னோர்களின் மொக்கைக்கு இணங்க விடுதியில் இருக்கும் விட்டத்தைப் பார்த்து, ஊர் கதை பேசி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட ஒரு மங்களகரமான நன்னாளில், திடீரென்று எனது அறைக்கு மூன்று நான்கு தடிமாட்டு நண்பர்கள் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் கையில் ஒரு கைப்பேசி.

"டேய் சிவா, சீக்கிரம் இந்த போனை வாங்கி பொண்ணு குரல்ல பேசுடா."

"எதுக்குடா, புரியல.."

"டேய் அதெல்லாம் அப்புறம் சொல்றோம். அவன் லைன்ல இருக்கான். நீ பொண்ணு குரல்ல மட்டும் பேசு, மிச்ச கதையை நாங்க அப்புறம் சொல்கிறோம்."

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு முன்கதை சுருக்கம் (அதாம்பா பிளாஷ் பேக்)  சொல்லியாக வேண்டும் மக்களே, இரண்டாம் ஆண்டு படிக்கும் போது நண்பன் ஒருவனை பெண் குரலில் பேசி ஏமாற்றி இருக்கிறேன். அதுவும் ஒன்றிரண்டு நாட்கள் அல்ல, 2-3 மாதங்கள். அதைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவு எழுத இருப்பதால், இப்போதைக்கு அந்த கதைக்குள் முழுதாக செல்ல வேண்டாம்.

சரி பெண் குரலில் தானே பேச வேண்டும் என நான் போனை வாங்கி, ஹலோ என்றேன் பெண் குரலில். அந்த முனையில் ஒரு ஆண் குரல்.

"ஹலோ, ரஞ்சனாவா?"

(நாம எந்த கேரக்டர்னே தெரியலயே, சும்மா போனை கொடுத்திட்டானுங்க தடிமாட்டு பசங்க, சரி சமாளிப்போம்)

"ஹலோ, யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க. இனிமேல்லாம் எனக்கு போன் பண்ணாதீங்க" என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

அந்த தடிமாட்டு நண்பர் கூட்டம், தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

"டேய், நல்லா மாட்டி விடலாம்னு நினைச்சோம், இப்படி சொதப்பிட்டியேடா" என்றார்கள்.

"அடேய்களா, முதல்ல இந்த கதையில் நான் யாரு, ரஞ்சனா யாருனு சொல்லுங்க. அப்புறம் தான் தெளிவா பேச முடியும்" என்றேன்.

"டேய் நம்ம சுந்தரம் இருக்கான்ல, அதாண்ட அந்த கெத்து கேங்ல இருப்பான்ல, அவன் ரொம்ப ஓவரா போறான்னு, நாங்க தான் அவன் போனல இவன் நம்பர நம்ம கிளாஸ் ரஞ்சனானு பேர் மாத்தி வெச்சிட்டோம். அப்புறம் அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினொம். அவனும் ரஞ்சனா தான் மெசேஜ் பண்றானு நினைச்சு ரிப்ளை பண்ண ஆரம்பிச்சுட்டான். சரி நமக்கு தான் ஸ்டடி ஹாலிடேஸ்ல பொழுது போக மாட்டேங்குதுல, அதான் இவன் கூட ரஞ்சனா பேர்ல கடலை போட ஆரம்பிச்சோம். சும்ம சொல்ல கூடாது, பய வறு வறுனு வறுத்து கடலையே தீஞ்சு போற அளவுக்கு பண்ணிட்டான். இது இப்படியே ஒரு வாரமா ஓடிட்டு இருந்ததா, இன்னைக்கு பயபுள்ள தீடீர்னு கால் பண்ணிட்டான். எங்களுக்கு என்ன பண்றதுனு தெரில. உன்னோட செகண்ட் இயர் மேட்டர் நியாபகம் வந்துச்சு, அதான் ஓடி வந்து போனை உங்கிட்ட கொடுத்தோம், இப்படி சொதப்பிட்டியேடா, இனிமே எப்படிடா நம்புவான் அவன்" என்று இவர்கள் ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னார்கள்.

நான் எனது கண்ணாடியை கழற்றி துடைத்துக்கொண்டே, "கொஞ்சம் கிரிட்டிக்கலான கேஸ் தான். ஆனா புராஜெக்ட் இண்டெரெஸ்டிங்கா இருக்கதால நான் எடுத்து பண்றேன்" என்றேன்

"ஆமா. பெரியா இஸ்ரோ சயிண்டிஸ்ட் இவரு, நாயே மூடிட்டு இப்போ என்ன பண்றதுனு" சொல்லு என்று ரொம்ப கெஞ்சி கேட்டுக் கொண்டார்கள்.

"மக்களே, நம்மள மாதிரி பசங்கள பத்தி எனக்கு தெரியும். எவ்வளோ பெரிய முட்டாளுங்க நாமனு, பொண்ணு பேசுதுனு சொன்னா, மெஸ் உப்புமாவை கூட ருசியா இருக்குதேனு திம்போம். அதானால கூல் டவுன். அந்த பயலுக்கு மறுபடியும் போன் போட்டுக் கொடுங்க, இந்த புராஜெக்ட கண்டினியூ பண்ணுவோம்" என்றேன். பெண் குரலில் பேசலாம் என்று முடிவு எடுத்து விட்டேன். கிட்டதட்ட ஒரு வருடத்துக்கு பிறகு, பழைய சிவாவா பேக்ரவுண்ட் மியூசிக்லாம் போட்டு,

"ஹலோ சுந்தரமா?"

"ஆமா, நீங்க ரஞ்சனா தான?"

"ஹேய் ஆமாபா, சாரி, அப்போ போன் என் பிரெண்டு கைல இருந்துச்சா, அப்போ போன்ல வித்தியாசமா ஒரு பேர்ல கால் வந்த உடனே, என்னை கலாய்க்கிறேன்னு அவ அப்படி பேசிட்டா, சாரிப்பா" என்றேன்.

"அது பரவாயில்ல, விடு, என்ன பேர்ல ஸ்டோர் பண்ணிருக்க என் பேர?"

(மீன் கொக்கிக்குள் மாட்டி விட்டது மக்களே. இனி பயபுள்ள என்ன சொன்னாலும் கேட்கும். இப்போது போய் அவன்கிட்ட கைமாற்றாக 100 ரூபாய் கேட்டு பாருங்களேன், உடனே கிடைத்து விடும்)

"ஆங், அஸ்கு புஸ்கு, அதெல்லாம் சொல்ல முடியாது, போ"

"ஏய், சொல்லுபா, பிளீஸ்"

"போ, அதெல்லாம் சொல்ல முடியாது"

... இப்படியே ஒரு 5 நிமிடங்கள் கடலை வறுத்து தீய்வதற்குள் முடித்து விட்டேன். போனை வைத்து விட்டு திரும்பி பார்த்தால், போனை என்னிடம் கொண்டு வந்து கொடுத்த நண்பர் கூட்டத்தில் ஒருவனையும் காணோம். குருநாதா என்று காலுக்கு கீழிருந்து ஒரு குரல். எழுப்பி விட்டு பார்த்தால், எல்லாரும் கண்ணில் தண்ணி வச்சுண்டா. டேய், இதுக்கெல்லாமா கலங்குவீங்க, கிறுக்கு பயபுள்ளகளா ,போங்க போய் புராஜெக்ட கண்டினியூ பண்ணுங்க என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. 

அதன் பிறகு இதுவே வாடிக்கையாகிப் போனது. மெசேஜில் கடலை போடுவதெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அழைப்பு வந்தால் மட்டும் ஓடி வந்து என்னிடம் கொடுத்து விடுவார்கள். நானும் சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா என்று அவனோடு ஆராய்ந்து கொண்டிருந்தேன் இரவெல்லாம்.

இந்த மெசேஜ் கடலை ஒருவரிடமும், கால் பண்ணும் கடலை டிப்பார்ட்மெண்ட் என்னிடமும் இருப்பதால் சில சிக்கல்களை சந்தித்தோம். சுந்தரமோ பேசும் போது, "ஹேய் இன்னைக்கு காலைல நான் அந்த மெசேஜ் பண்ணேன்ல, நீ ஏன் அதுக்கு அப்படி ரிப்ளை பண்ண" என்பான். அடப்பாவிகளா, என்னத்தடா மெசேஜ்ல கடலை போட்டு தொலச்சீங்க, வரலாறாவது சொல்லிட்டுப் போங்களேண்டா என்று அவர்களை மனதிற்குள் திட்டி விட்டு நானும் பொதுவாகவே அந்த கேள்விக்கு பதிலளிப்பேன். கொஞ்சம் கோவம் கலந்த குரலோடு "ஏன் நான் அப்படி ரிப்ளை பண்ண கூடாதா, எனக்கு அந்த உரிமை இல்லையா" என்பேன். நமக்கு தான் பெண்களின் கோபமோ அழுகையோ பொறுக்க முடியாது அல்லவா, அவன் பம்மிவிடுவான். "ஹேய் விடுப்பா, சும்மா தான் கேட்டேன்" என்று வேறு டாபிக் போய்விடுவான். நானும் தப்பிச்சோம்டா சாமி என்று பெருமூச்சு விடுவேன்.

ஒருநாள் கல்லூரிக்கு அருகிலுள்ள கடையில் ஜீஸ் குடிக்கலாம் என்று சுந்தரத்தையும் அழைத்தோம். அப்போதும் அவன் ரொம்ப பிஸியாக ரஞ்சனாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தான். (அதாவது ரஞ்சனா என்று அவன் நம்பிக் கொண்டிருந்த எண்ணிடம் அல்லது என்னிடம்)

"டேய் படிச்சுகிட்டு இருக்கேன், இப்போ போய் டிஸ்டர்ப் பண்றீங்களேடா"

சுற்றி இருந்த எங்கள் எல்லோர் காதிலும் புகை என்று நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் அதையெல்லாம் அடக்கிக் கொண்டு, அவனை தாஜா செய்து அழைத்துச் சென்றோம். அப்போதும் அவன் கையில் போனோடு தான் கடைக்கு வந்தான். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு தேவையான ஜீஸ் சொல்லி வாங்கி குடிக்க ஆரம்பித்து விட்டோம். இவன் மட்டும் எதுவும் சொல்லவில்லை. அப்போது தான் எங்களுக்கு உரைத்தது. சில மணித்துளிகளாக நாங்கள் ரஞ்சனாவின் போனை பார்க்க மறந்து விட்டிருந்தோம். அவனுக்கு தெரியாமல் எடுத்து பார்த்தோம். எதிர்பார்த்தது போலவே அவனுடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.

"ஹேய், ஜீஸ் கடைக்கு வந்திருக்கேன். முலாம் பழ ஜீஸ் குடிக்காவா, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவா?" என்றொரு குறுஞ்செய்தி.

கூட இருந்த நண்பன் ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு "தக்காளி, இன்னைக்கு அவன் செத்தாண்டா, கடைக்கு கூட்டி வந்தது நாம, இங்க இவன் அவகிட்ட கேக்குறானா", என்று பாய்ந்தான். கதை இப்படி முடியக் கூடாது அல்லவா, அதனால் அவனை அடக்கி வைத்து, அவனுக்கு புரிய வைத்தோம். 

சரி பதில் அனுப்பலாம் என்று யோசித்து, "ஹேய் அந்த கடைல முலாம் பழம், சாத்துக்குடி ரெண்டுமே நல்லா இருக்காது, ஷார்ஜா ஜீஸ்னு ஒண்ணு ஒருக்கும். அது செமயா இருக்கும். உடம்புக்கும் ரொம்ப நல்லது" என்ற பதிலை தட்டி விட்டோம். உண்மையில் அந்த கடையில் இருப்பதிலேயே மகா மட்டமான ஜீஸ் இந்த ஷார்ஜா ஜீஸ் தான். விலையும் அதிகம். மற்ற ஜீஸ் எல்லாம் 15-20 ரூபாய் என்றால், ஷார்ஜா 45 ரூபாய். இது எங்கள் எல்லோருக்குமே தெரியும். ஏன் நம்ம சுந்தரத்திற்கும் தெரியும். ஆனால் கன்னி ஒருத்தி சொல்லி விட்டாள் கண்டதையும் தின்பவர்கள் அல்லவா நம் இனம், அதனால் அவன் ஷார்ஜா ஜீஸ் தான் வாங்கி குடித்தான்.

"just had sharjaha juice. Really nice pa. Thanks for the suggestion :)" என்று குறுஞ்செய்தி வேறு. இந்த கதையைப் படிக்கும் பெண்களே, உண்மையாக சொல்கிறேன்.  ஒரு பெண்ணாக இருப்பதன் பெரும் கஷ்டத்தை அன்று தான் உணர்ந்தேன். (சில நிமிடங்கள் விக்கி விக்கி அழுகிறேன். மூக்கைத் துடைத்துக் கொண்டு..) உங்கள் எல்லோருக்கும் என் சார்பாக வீர வணக்கம் தோழிகளே!

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த கண்றாவி கடலை வளர்ந்து வந்தது. கூடவே அந்த பருவத்திற்கான தேர்வுகள் ஒவ்வொன்றாக வந்து சென்று கொண்டிருந்தது. இதற்கு மேல் இதை வளரவிட்டால் எனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதி இறுதித் தேர்வு அன்று கதைக்கு சுபம் போட்டு விடலாம் என்று பஞ்சாயத்தில் தீர்மானம் ஆனது.

உண்மையை ஒரு நல்ல ஹோட்டலில் வைத்து சொல்லலாம், அப்படியே நாங்களும் அன்றைய பாடு கழித்த மாதிரி ஆயிற்று என்று, இறுதித் தேர்வு முடிந்த அன்று சந்திக்கலாமா என்று கேட்டேன். ஓரளவுக்கு நல்ல விலையுயர்ந்த ஹோட்டலில் மதிய உணவுக்கு சந்திக்கலாம் என்றேன். (ஏனென்றால் இந்த மாதிரி ஹோட்டலில் நாங்கள் இப்படி சாப்பிட்டால் தான் உண்டு.)  பயலுக்கு ஏக குஷி. "வரும் போது நீ நம்ம காலேஜ் டூர் அப்போ போட்டிருந்தியே அந்த கருப்பு டிரெஸ், அதுல நீ நல்லா இருந்த, அதுல வரணும்" என்று மெசேஜ் வேறு. சனீஸ்வரா! 

கலர் கலர் கனவுகளோடு இறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டு அந்த ஹோட்டலுக்கு வந்து விட்டான். நாங்களும் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்து தயாராக இருந்தோம் வேட்டைக்கு. எல்லோரும் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தோம். எங்களை அவன் எதிர்பார்க்கவில்லை. சிவ பூஜையில் இந்த கரடிகள் எதற்கு என்று அவன் நினைத்திருக்கக் கூடும். ஏற்கனவே சொல்லி வைத்திருந்த படி நான் முதலில் செல்லவில்லை. மற்ற நண்பர்கள் சென்றிருந்தார்கள்.

"என்னடா இந்த பக்கம்? எங்க கிட்ட வேற எங்கயோ போறேனு சொன்ன"

"இல்லடா, இன்னையோட பரீட்சை முடியுதுல்ல, அதான் அப்படியே பிரெண்ட பார்த்துட்டு போலாம்னு..." என்று நெளிந்தான்.

ரஞ்சனாவாகிய நான் அவனை அலைவேசியில் அழைத்தேன்.

"ஏய் எங்க இருக்க, சாரிப்பா, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, வந்துட்டே இருக்கேன்".

"பரவாயில்லை, பொறுமையாவே வா, நாம நிச்சயமா இந்த ஹோட்டல்ல தான் சாப்பிடணுமா?" என்றான்.

"ஏய், அது என் பேவரிட் ஹோட்டல்பா, அங்க தான் சாப்பிடணும், ஏன்?"

"இல்லை நம்ம கிளாஸ் பசங்களாம் இங்க இருக்காங்க, அதான்" என்று இழுத்தான்.

அப்படியே நான் போன் பேசிக்கொண்டே ஹோட்டலுக்குள் நுழைந்தேன் அவன் அமர்ந்திருந்த டேபிள் அருகில் சென்றேன்.

"ஏன், தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது, என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் தெரியப் போறது தானே. சர்வர் அண்ணா ஒரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க" என்று இந்த வாக்கியத்தை சொல்லி விட்டு அப்படியே அவன் முன்னால் போய் அமர்ந்தேன். ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்தில் மிக சந்தோஷமான செய்தியும், மிக சோகமான செய்தியும் சொன்னால், எப்படி இருக்கும் என்று அன்று தான் கண்டு கொண்டேன். பயலுக்கு ஒரு நிமிஷம் தலை கால புரியவில்லை. லேசா சிரிக்க ஆரம்பித்தவன், நான் அவன் டேபிளில் கருப்பு சட்டையோடும் போனோடும் போய் உட்கார்ந்ததைப் பார்த்ததும் புரிந்து கொண்டான். ஹோட்டலில் இருந்த நண்பர்கள் எல்லோரும் இந்த சமயத்தில் ஹே! என்று கத்திக் கொண்டே எங்கள் டேபிள் அருகில் வந்து விட்டார்கள். ஒட்டு மொத்த ஹோட்டலும் எங்களையே பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவனை கலாய்க்க ஆரம்பித்து விட்டோம். அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

"தக்காளி டேய், இன்னைக்கு நீ தான் எங்க எல்லாருக்கும் பில் கட்டுற, அண்ணா ஒரு மட்டன் பிரியாணி" என்று ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். முதலில் அதிர்ச்சியானவன், பின்பு அவனும் எங்களைப் போல சூடு சொரணை இல்லாத ஜந்து என்பதால் அவனும் அசடு வழிய சிரிக்க ஆரம்பித்து விட்டான். இந்த ஒட்டு மொத்த நிகழ்வையும் பிற்கால சந்ததியருக்காக வீடியோ வேறு எடுத்து வைத்தோம். 

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, சுந்தரத்தின் நெருங்கிய நண்பன், "டேய் எத வேணாலும் பொறுத்துப்பேண்டா, ஆன நாங்க கடைக்கு கூட்டி போனப்புறம் முலாம் பழ ஜீஸா, சாத்துக்குடி ஜீஸானு கேட்ட பாரு, அத மட்டும் மன்னிக்கவே மாட்டேண்டா, இதுக்காகவே, இரு... சர்வர் அண்னா இன்னொரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க. தின்னே இவன் சொத்த அழிச்சிடறோம்" என்றான். கலாய்த்து சிரித்து சாப்பிட்டு முடித்து பில் வந்தது. பயல் கிட்டதட்ட 2000 ரூபாய் தண்டம் அழுதான் அன்று மட்டும். இந்த சம்பவம் உண்மையான ரஞ்சனாவிற்கு தெரிந்து, ஏற்கனவே பெண்கள் மத்தியில் என் தலைக்கு பல லட்சங்களாக இருந்த எனது Bounty, மேலும் கூடியது. ஆனால் பொது வாழ்வு என்று வந்து விட்டால், இதையெல்லாம் பார்க்க முடியுமா.

இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்து விட்டன. கல்லூரி முடித்து நாங்கள் வேலைக்கு சேர்ந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போதும் அந்த கெத்து கேங்கில் சிலர் கெத்தாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தி அவளுக்கு கல்யாணம் என எல்லோருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள். அப்படியே கெத்து கேங்கில் உள்ள அபிலாஷ்க்கும் போன் செய்தாள். அவன் போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

10 நிமிடங்கள் கழித்து அறைக்குள் வந்து "மாப்ள, ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனுஷன கடிச்ச கதையா இந்த சிவா நம்ம கிட்டயே வாலாட்டுறான். தக்காளி 10 நிமிஷம் எனக்கு தெரிஞ்ச எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு திட்டிட்டேன். இனிமே நம்ம வழிக்கே வரமாட்டான்" என்றான் பெருமிதம் பொங்க. அவனது அறைத் தோழர்கள் எல்லா ம் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்கள். "டேய், அது உண்மையாவே நம்ம கிளாஸ் பொண்ணு தாண்டா" என்று அவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. அதன் பிறகு அவளுடைய கல்யா ண விஷயத்தை சொல்லி, உண்மையாகவே அவள் தான் போன் செய்தாள் என்று இவனை நம்ப வைத்து, அதன் பிறகு இவன் அசடு வழிந்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு, என அந்தக் கதை மிக சுவாரசியாமாக சென்றது. 

ஆக இந்த கதை சொல்லும் நீதி என்னவென்றால், ஒரு பெண் நமக்கு போன் செய்தால் அது பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அது உண்மையாக ஒரு பெண்ணாகக் கூட இருக்கலாம் :)